திங்கள், 22 ஆகஸ்ட், 2011

சிவகாசி தண்ணீர் அவ்வளவு மோசமா?

அப்படி இப்படி லேபரா இருந்து நானும் தொழிலதிபரா ஆயிட்டேன்னு முன்னாடி ஒரு பதிவுல எழுதியிருந்தேன்னு நினைக்கிறேன்.(ஞாபகமறதி இருந்தாதாதான் பெரிய தொழிலதிபர்னு உன்னைய யார் குழப்பி விட்டதுன்னு கேக்காதீங்கோ.)

போன வாரத்துல தொழில் நிமித்தப்பயணமா (அரசியல்வாதி போனா அது மரியாதை நிமித்தப்பயணம்) மதுரை, சிவகாசிக்கு போனேன். மதுரையில சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்குற நண்பரும் என்னோட சிவகாசிக்கு வந்தார்.

கிளம்பும்போது அவர் வீட்டுல இருந்து 2 லிட்டர் பாட்டில்ல தண்ணீரைக்கொண்டு வரவுமே எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்துச்சு.
"குடிக்கிறதுக்கு கூட மினரல் வாட்டர் வாங்கிடலாம். புழக்கத்துக்கு தண்ணீர் கிடைக்கிறதுதான் கஷ்டம். அந்த ஊர்ல நல்லா மழை பெய்தால்தான் புழங்குற தண்ணிக்கு பஞ்சம் இல்லாம இருக்கும்." அப்படின்னு சாப்ட்வேர் நண்பர் சொன்னது என்னை பெரிய அளவுல பாதிக்கலை. மிஞ்சிப்போனா அந்த ஊர்ல நாலு மணி நேரம் இருக்கப்போறோம். அதுக்குப் போய் இந்த பில்ட்அப்பான்னு நினைச்சேன். காலை டிபன் சாப்பிட்டப்ப ஒரு ஹோட்டல்ல தான் கொஞ்சம் தண்ணி குடிச்சேன். அப்ப எதுவும் தெரியலை.

ஆனா ஊருக்கு போயிட்டு திருவாரூருக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ஜலதோஷம், மூக்கடைப்பு, தலைவலி, ஜூரம்னு படுத்துது.

மதுரை, சிவகாசின்னு போனதுல அந்த தண்ணி ஒத்துக்கலைன்னு நான் சொன்னப்ப இங்க இன்னொரு நண்பர், "தம்பி, அவசரப்பட்டு முடிவெடுத்துடாத...அந்த ஊர்கள்ல நீ குடிச்சது உண்மையிலேயே நல்ல தண்ணியாக்கூட இருக்கலாம். நம்ம ஊரு தண்ணி கெட்டுப்போய் அதை தொடர்ந்து குடிச்சதால உனக்கு நல்ல தண்ணி ஒத்துக்காம கூட இருக்கலாம்." அப்படின்னு சொன்னாரு. இந்த இன்னொரு கோணத்தை கேட்டு நான் மிரண்டு போயிட்டேன்.

செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் மூலமா விளையிற காய்கறிகளை நம்ம உடம்பு ஏத்துக்குதுறது சாத்தியம்னா இதுவும் சாத்தியம்தான் அப்படின்னு தமிழ்ப்படத்துல துப்பறியும் போலீஸ் அதிகாரி சொல்றமாதிரி என்னைய குழப்பிவிட்டுட்டு அந்த நண்பர் போயிட்டார்.

நான்தான் சொல்பேச்சு கேட்காத உடம்போட நாலு நாளா அவஸ்தைப்படுறேன்.

சொந்தக்கதை இருக்கட்டும். தொழில் கதை என்னாச்சுன்னுதானே கேட்குறீங்க...

விசிட்டிங்கார்டு, அதே மாடல்ல 3மடங்கு பெரிய அளவு கார்டு இதுமாதிரியான சில மேட்டர் பிரிண்டிங் செய்ய வேண்டியிருந்தது. இதெல்லாம் பொதுவா 1000 கார்டுக்கு மேல அச்சடிக்க வாடிக்கையாளர்கள் தயங்குவாங்க. ஆனா இதையெல்லாம் சிவகாசி பிரஸ்ல கொடுத்து வாங்க முடியாது.

ஏன்னா குறிப்பிட்ட சில ரகங்களுக்குதான் மினிமம் 5000 எண்ணிக்கையில அச்சடிச்சு தர்றாங்க. அதனால குறைவான எண்ணிக்கை ஆர்டர்களுக்கு எல்லாம் கோயம்புத்தூர்தான் பெஸ்ட் அப்படின்னு சிவகாசியிலேயே பரிந்துரை செய்யுறாங்க.

நான் முக்கியமா போனது கோவில்கள்ல விபூதி பிரசாதம் கொடுக்க பயன்படும் கவர்கள் ஆர்டர் கொடுக்கத்தான். அதை பிரிண்ட் செய்து கட் பண்றது பெரிய வேலை இல்லை. பசை தடவி ஒட்டுறதுதான் பெரிய இம்சை. அந்த ஜாப்புக்குதான் காண்ட்ராக்ட் ஆளுங்க ரொம்ப குறைவா கிடைக்குறாங்க அப்படின்னு ஒரு பிரஸ் அதிபர் சொன்னார்.

தினமலர் நாளிதழ்ல பக்கம் வடிவமைச்சு இருந்தா கூட இது மாதிரி மல்டிகலர் ஜாப் ஒர்க் எடுத்து செய்யணும்னா எந்த அளவுல எந்த எண்ணிக்கையில ஆர்டர் எடுக்கணும். பொதுவா அங்க பயன்படுற பேப்பர் அளவு என்ன? அதுல க்ரிப்பர் ஏரியா, வேஸ்டேஜ் ஏரியா எல்லாம் எவ்வளவுன்னு தெளிவான விவரங்களை சிவகாசிக்கு போனதும்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

ஏட்டுப்படிப்பை விட செயல்வழிக்கல்வி எவ்வளவு முக்கியம்னு நான் உணர்ந்துகிட்டேன்.

பள்ளியில் என்னுடன் படிச்ச மூன்று நண்பர்கள் வழக்கறிஞரா பிராக்டீஸ் செய்யுறாங்க. அவங்களோட டைப்பிங் ஒர்க் ரொட்டீனா இருக்கு. அதை மீறி கிடைக்கிற நேரத்துல சில மல்டிகலர் ஆர்டர்கள் எடுத்து செய்துகிட்டு இருக்கேன்.

ஒண்ணு மட்டும் எனக்கு தெளிவா தெரியுதுங்க. இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். அதுக்கு இடைவிடா முயற்சியும் உழைப்பும் ரொம்ப அவசியம். இது எல்லாருக்குமே பொருந்தும்னு நினைச்சு செயல்பட்டா எல்லாம் ஜெயம்தான்.