Search This Blog

சனி, 9 ஏப்ரல், 2011

இந்த ஒற்றுமை நன்மைக்கா?

இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சியான தருணம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கடந்த 2007ல் எந்த எதிர்பார்ப்பும் ஏற்படாத வகையில் முதல் சுற்றிலேயே நாம் வெளியேறி வந்து விட்டோம். 2003ல் பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் ஆஸ்திரேலியா நமக்கு ஆப்பு வைத்தது. ஆனால் 2011ஐ பொறுத்தவரை லீக் மேட்ச் வரை மெகா சீரியல் போல் சென்றுகொண்டிருந்த இந்திய அணியின் ஆட்டம், நாக் அவுட் சுற்றில் நச் என்று மூன்றே ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று கோப்பையைக் கைப் பற்றியது. எந்த நேரமும் பரபரப்பாக இயங்கும் நாட்டின் முக்கிய நகரங்களில் இதயம் போன்ற சாலைகள் கூட வெறிச்சோடிப்போயின.

இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதிய அரையிறுதி ஆட்டம் துவங்கும் நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டது. அன்று முழுவது இப்படித்தான் ஏறத்தாழ ஒண்ணரை மணி நேரம் பவர் கட். உடனே திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கிரிக்கெட் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அந்தப் பக்கமாக சென்ற நாகை கலெக்டருடைய காரை வழிமறித்து சாலை மறியல் போராட்டம் செய்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்தன.

கிரிக்கெட் மீது வெறித்தனமாக இருக்கும் பலர் சொல்லும் சப்பைக்கட்டு காரணம், இந்த ஒரு விஷயத்தில் நம் நாட்டு மக்களின் தேசப்பற்று தெரிகிறது என்பதுதான்.

போட்டி நடக்கும்போது மைதானத்திலோ அல்லது வீட்டிலோ இருந்து ஆரவாரத்துடன் நேரிலோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ போட்டியைப் பார்ப்பதுடன் இவர்களின் ஒற்றுமை முடிந்து விடும்.

மின்வெட்டு காரணமாக பல தொழில்கள் முழுமையாகவோ,பகுதியாகவோ முற்றிலும் நசிந்து விட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து கொண்டிருக்கின்றனர். அதுதான் வருடம் தோறும் மென்பொருள் துறையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கிறதே என்று சப்பையாக ஒரு காரணம் சொல்வார்கள்.

நாங்கள் குடியிருந்த பகுதியிலேயே இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லையே என்று தெருவில் குடியிருக்கும் கட்சி பிரதிநிதியிடம் சண்டை போட்டு வாங்கிய மக்கள், சாக்கடை எந்த நேரமும் நிரம்பி வழிவதைப் பற்றி நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க முன்வருவதில்லை. அவ்வளவு ஏன், நான் மனு எழுதினால் கூட தெருவாசிகள் என்ற முறையில் கையெழுத்து போடக்கூட மிகவும் தயங்குகிறார்கள்.அது வெறும் கோரிக்கை மனுதான். அதற்கே இப்படி.

இவர்கள் எங்கே ஒரு அநீதி என்றால் பொது நல மனு மூலம் நீதிமன்றத்தில் கேள்வி கேட்கப்போகிறார்கள்.?

சமுதாயத்திற்கு நல்லது செய்யும் விஷயத்தில் இல்லாத ஒற்றுமை ஒரு கேளிக்கையை ரசிக்கும்போது மட்டும் இருப்பது வரமா சாபமா?

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வி முறையை கொண்டு வந்து மனப்பாடம் செய்வதில் வல்லவர்களுக்கு மட்டும் நல்ல கல்வி என்ற முறையை கச்சிதமாக செய்து விட்டுப் போனார்கள். நாம் கொஞ்சம் முன்னேறி மனப்பாடம் செய்ய முடியவில்லை என்றால் என்ன, கருப்போ, வெள்ளையோ...உன்னிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்தால் உயர்கல்வி உண்டு. பிறகு அதை நீ இந்த சமுதாயத்திடம் எப்படி சுரண்டினாலும் ஓ.கே என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டோம்.

இப்போது அதையும் தாண்டி, நூறு நாள் வேலைத்திட்டம், இலவசம் அது இது என்று கொண்டு வந்து குறிப்பிட்ட சாரரை மேலும் சோம்பேறிகளாக்கி மிகச்சில முதலாளிகளிடம் மட்டுமே கருப்பு பணம் குவிய வழி செய்து கொண்டிருக்கிறார்கள்.

 சிறுதொழில்களையும் விவசாயத்தையும் நாம் அழிய விட்டுக்கொண்டிருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இந்தியாவில் வளர்ந்து நிற்கும். அதற்கு முக்கிய காரணம் நமது மக்கள் தொகை. இவ்வளவு மக்கள் தொகை இருக்கும் நம் நாட்டின் பலமும் பலவீனமும் இதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக