Search This Blog

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சாலை விபத்துக்களை தவிர்க்க என்ன வழி?

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பெரம்பலூர் பகுதி எப்போதுமே சாலை விபத்து என்ற பெயரில் உயிர்களைக் கொன்று குவிக்கும் பகுதிகளில் ஒன்றாகவே இருக்கிறது.

ஏனைய பகுதிகளில் விபத்தும் மரணமும் நிகழ்வதே இல்லையா என்று கேட்க கூடாது. சாலைகள் இருவழிப்பாதையாக இருக்கும்போதுதான் அஜாக்கிரதையால் வாகனங்கள் எதிர் எதிரே மோதிக்கொள்கின்றன என்று நான்கு வழிப்பாதைகளை அமைத்தார்கள். இப்போது வாகனங்கள் பெருகிய வேகத்தைவிட விபத்துக்கள் அதிகரித்திருக்கின்றன.

சாலைவிதிகளை மதிக்காத ஓட்டுனர்களின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் குறைந்த பட்ச வேகமே மணிக்கு 80 முதல் 140 கி.மீ என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பாதைகளில் வாகனங்களின் சக்கரங்கள் உருளுவதை விட பறக்கின்றன என்றே சொல்லலாம்.








ஏதாவது ஒரு கனரக வாகனம் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும். பின்னால் பறந்து வரும் வாகன ஓட்டுனருக்கு இந்த வண்டி ஓட வில்லை, நின்று கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொள்வதற்குள் அதன் மீது மோதி கடுமையான சேதம் ஏற்பட்டு விடுகிறது.

உலகத்தரத்தில் நாலுவழிச்சாலையைப் போட்டு இருக்கிறோம் என்று சொல்லி சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளை(?) அடிப்பதில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட இந்த சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க காட்டுவதில்லை.

ஏனெனில் நாலு வழிச்சாலைகளால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளும் விபத்து மிகவும் அரிதாகி விட்டது. ஆனால் இரவில், (சில நேரங்களில் பகலில் கூட) நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனம் மோதி அடிக்கடி உயிரிழப்பும், உடல் உறுப்பு இழப்பும் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

சாலையிலேயே இப்படி ஓரம் கட்டி நிறுத்தப்படும் வாகனம் பெரும்பாலும் லாரியாகத்தான் இருக்கும். இவை பழுதாகி நிற்பது என்பது அரிது. ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க, அதற்குரிய இடத்தில் நிறுத்தாமல் அலட்சியமாக நிறுத்திவிட்டு செல்வதுதான் இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம்.

சரியான காரணம் இன்றி இப்படி வாகனம் நிறுத்தப்படும்போது அந்த ஓட்டுனரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இந்த கொடுமைகள் குறையும்.

2005ம் ஆண்டு தமிழகத்தில் கன மழையின்போது மாநிலம் முழுவதும் வெள்ளச்சேதத்தால் கிட்டத்தட்ட எல்லா சாலைகளும் பஞ்சராகி விட்டன. அப்போது சுமார் ஒரு மாத காலம் சாலை விபத்துக்கள் மிக, மிக, மிக குறைவான அளவில்தான் நடந்தன. அந்த ஒரு மாதத்தின் நாளிதழ்களைப் பார்த்தாலே தெரியும்.

இதற்கு காரணம், சாலைகள் மோசமானதாக இருந்ததால் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றிருக்கின்றன.

ஆக மொத்தத்தில் வேகம்தான் முக்கிய வில்லன் என்பது புலனாகிறது.

இந்த பதிவில் நான் இணைத்திருக்கும் விபத்து படங்கள், திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் அரசு விரைவுப்பேருந்தும் தனியார் கல்லூரிப் பேருந்தும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியிருக்கும் காட்சி.

மூன்று கல்லூரிப் பேருந்துகள் போட்டி போட்டு அதி வேகமாக வந்தன. அதைப் பார்த்து நான் பேருந்தை நிறுத்தி விட்டேன். இரண்டு பேருந்துகள் நூலிழையில் ஒதுங்கிச் சென்றுவிட்டன, ஆனால் இந்தப் பேருந்து நான் ஓட்டி வந்த பேருந்தின் மீது மோதிவிட்டது என்று அரசு விரைவுப்பேருந்து ஓட்டுனர் சொன்னார்.

ஒரு நாளிதழின் நிருபர் ஒருவர் ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னது, விபத்துக்குள்ளான கல்லூரிப்பேருந்தை ஓட்டி வந்தது ஒரு கல்லூரி மாணவர்தானாம்.

இந்த புகைப்படங்களைப் பார்த்தால் கல்லூரிப்பேருந்தின் இடப்பக்கம் ஒரு பேருந்து செல்லும் அளவுக்கு இடம் இருப்பது தெரியும். அந்த பேருந்து கட்டுப்பாடில்லாமல் அலைபாய்ந்து வந்தது என்று அரசுப்பேருந்தின் ஓட்டுனர் சொன்னது உண்மையாக கூட இருக்கலாம்.

108 ஆம்புலன்ஸ் அந்த விபத்துக்குள்ளான பேருந்தின் பக்க வாட்டில் நிற்கிறது. சாலையின் மையத்தில் இருக்கும் வெள்ளைக் கோடு எல்லையை ஒழுங்காக கவனித்தாலே பாதி பிரச்சனை இருக்காது. என்ன செய்வது விதி வலியது.

இது உண்மையாக இருக்காது என்று நாம் முழுவதும் புறந்தள்ளி விட முடியாது.


என்னைப் பொறுத்தவரை நாலு வழிச்சாலையில் இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும், வாகனங்களும் வாகன ஓட்டிகளும் ஓய்வெடுக்க என்று பிரத்யேகமாக இருக்கும் இடம் தவிர வேறு எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நிறுத்தி ஏதாவது விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் வாகனத்தை அலட்சியமாக நிறுத்தியிருந்த ஓட்டுனர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த அலட்சியம் குறையும்.

எல்லா இடங்களிலும் இரட்டை வழி ரயில் பாதை அமைத்து பஸ் போக்குவரத்து போலவே ரயில் போக்குவரத்தும் பெருகினால் இத்தகைய விபத்துக்கள் கணிசமாக குறைந்துவிடும்.

அவ்வளவு எண்ணிக்கையில் ரயில்களை இயக்கத்தேவையான கட்டமைப்புகளை செய்வது மிகவும் கடினம் என்றும், இதனால் பேருந்து போக்குவரத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பலர் வேலையிழப்பார்கள் என்றும் சொல்வார்கள்.

உண்மையான காரணங்கள் இது இல்லை. டூரிஸ்ட் பஸ் என்று பர்மிட் வாங்கி வைத்து விட்டு தினமும் ஆம்னி பஸ் சர்வீஸ் நடத்தி கோடிகளில் புழங்கும் தொழிலதிபர்களின் ஆதரவு தேவைப்படும் அரசியல் வியாதிகளும் அவர்கள் நடத்தும் கேவலமான மோட்டல் வியாபாரம் பாதிக்கும் என்று பயப்படும் குண்டர்களும்தான் உண்மையான பிரச்சனை.

ஆனால் ரயில் போக்குவரத்து இரு வழிப்பாதையாக விஸ்தரிக்கப்பட்டால் பல வகையிலும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும். பெட்ரோலியப்பொருட்கள் இறக்குமதி இந்த அளவுக்கு தேவையிருக்காது. சுற்றுச்சூழலும் தப்பிக்கும். நாட்டு, வீட்டு பொருளாதாரமும் உருப்படும்.

ஆனால் மோட்டார் கம்பெனி முதலைகள் இதற்கெல்லாம் வழி விடுவார்களா?

அது சரி, நம் நாட்டில் எப்போதுமே சில லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான மக்களை பாதிக்கச்செய்வது வழக்கம்தானே.

2 கருத்துகள்:

  1. அது சரி, நம் நாட்டில் எப்போதுமே சில லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான மக்களை பாதிக்கச்செய்வது வழக்கம்தானே.


    ...... இதில் பல அரசியல்வாதிகளையும் சேர்த்து சொல்லலாம். உண்மை சுடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு, நல்ல யோசனை,

    பதிலளிநீக்கு