Search This Blog

சனி, 23 ஏப்ரல், 2011

மின் வெட்டு - சில தீர்வுகள்

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவி வந்தாலும் கோடை காலங்களில் இந்த பற்றாக்குறை உச்சத்தை தொட்டுவிடுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே சென்னை தவிர்த்த பிற நகரங்களில் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டுமணி நேரம் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தினமும் மின்வெட்டு கட்டாயமாக்கப்பட்டதால் நடுத்தரக் குடும்பங்களில் கூட இன்வெர்ட்டர்களை மிக அதிகமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சுமார் 20 சதவீதம் வரை மின் நுகர்வு கூடுதலாகும் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதமே இந்த அளவு மின் பற்றாக்குறை ஏற்பட இது கூட  முக்கியக் காரணமாக இருக்கலாம். பொதுவாகவே புதிய மின்திட்டங்கள் பலன் தர குறைந்தது 5 வருடங்களாவது ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.

அதனால் ஆட்சியாளர்கள் எதிர் அணியினரை குறை கூறுவதை நிறுத்தி விட்டு நீண்டகால நோக்கில் பல முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.
முதல் காரியமாக வீடுகளில் முற்றிலுமாக குண்டு பல்ப் உபயோகத்தை தடுத்து நிறுத்துவது அவசியம். வசதியானவர்களும், நடுத்தர வருவாய் பிரிவினரும் குண்டு பல்ப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு குழல்விளக்கு, சி.எஃப்.எல் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

ஆனால் இன்னமும் கிராமங்களிலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும் நிறையவே குண்டு பல்ப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவது அரசுக்கு மிகவும் சுலபமான ஒன்றுதான்.

சி.எஃப்.எல் பல்ப்புகள் குறைவான மின்சக்தியைப் பெற்று குறைவான வெப்பத்துடன் அதிக ஒளியைத் தருவதாக சொல்லப்படுகிறது. அந்த பல்ப்புகள் செயலிழந்த பிறகு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படவில்லை என்றால் அவற்றிலிருக்கும் பாதரசத்தால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும்.

ஆனால் எல்.இ.டி வகை விளக்குகளில் இத்தகைய அபாயங்கள் குறைவுதான் என்று சொல்கிறார்கள். மேலும் அவற்றின் ஆயுளும் சி.எஃப்.எல் பல்ப்புகளை விட அதிகம். எனவே இவற்றை முழு அளவில் உற்பத்தி செய்து ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு இத்தனை என்று மானிய விலையில் விற்பனை செய்யலாம்.

ஒரு வேளை அவை முன்பே பழுதாகி விட்டால் அவற்றை அந்த விற்பனை நிலையத்தில் திரும்பக் கொடுத்துவிட்டு மீண்டும் மானிய விலையிலேயே புதிய எல்.இ.டி பல்ப் வாங்கிக் கொள்ளும் வகையில் வழிசெய்தால் அது மிகப்பெரிய அளவில் பலன் தரும்.

சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழி இதற்கும் பொருந்தும். நம் நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய அளவில் நாட்டின் பொருளாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரிய நன்மை தரும்.

இது தவிர அரசு அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றில் முழு அளவில் சூரியஒளி மின்சாரத்தின் உதவியுடன் சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தினால் மின் பற்றாக்குறைப் பிரச்சனையின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.

என் வீட்டிலேயே முன்பெல்லாம் இரண்டு மாதங்களுக்கு மின் நுகர்வு 120 முதல் 140 யூனிட் வரை இருந்தது. நான் கம்ப்யூட்டர் வாங்கிய நேரத்தில் வீட்டில் இருந்த குண்டு பல்ப்புகளை சுத்தமாக ஒழித்து விட்டு, சி.எஃஎல் பல்ப் உபயோகத்தை அதிகப்படுத்தினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இப்போது கம்ப்யூட்டர் உபயோகம் அதிகமான பிறகும் மின்சார நுகர்வின் அளவு இரண்டு மாதங்களுக்கு 150 என்ற அளவுக்குள்தான் பெரும்பாலும் இருக்கிறது. எல்.இ.டி பல்ப்புகள் பயன்படுத்தினால் இன்னமும் மின்சாரம் சிக்கனமாக செலவாகும் என்பது கண்கூடு.

என்னுடைய ஒரு வீட்டுக்கே இப்படி என்றால் நாடு முழுவதும் இப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் எத்தனையோ சதவீதம் மின்சார தேவை குறையும். முக்கியமாக மின்வெட்டே இல்லை என்ற நிலை வந்தால் இன்வெர்ட்டர் பயன்பாடு மிகவும் அத்தியாவசிய தேவையுள்ள இடங்கள் தவிர மற்ற இடங்களில் குறைந்து விடும். இதனாலும் 20 சதவீத அளவுக்கு மின்சாரம் விரயமாவது தடுக்கப்படும்.

இதில் தனிமனிதர்கள் ஆர்வம் காட்டினாலும் செய்து முடிக்க வேண்டிய திறன் அரசுக்குதான் உள்ளது.

அரசு இயந்திரம் செவி சாய்க்குமா?

மின் திருட்டைப் பற்றி இந்தப் பதிவில் எழுதவில்லை. ஏனெனில் அது பெரிய தொடர்கதை.

4 கருத்துகள்:

  1. மின் சிக்கனமும் தேவை எககணமும். நல்ல பதிவு சார்.

    பதிலளிநீக்கு
  2. இதில் தனிமனிதர்கள் ஆர்வம் காட்டினாலும் செய்து முடிக்க வேண்டிய திறன் அரசுக்குதான் உள்ளது.

    அரசு இயந்திரம் செவி சாய்க்குமா?

    மின் திருட்டைப் பற்றி இந்தப் பதிவில் எழுதவில்லை. ஏனெனில் அது பெரிய தொடர்கதை.


    .... சமூக அக்கறையுடன் - பல கோணங்களிலும் யோசித்து எழுதப்பட்ட பதிவு....

    பதிலளிநீக்கு
  3. தேர்தலில் எத்தனையோ இலவசங்களை அறிவித்தார்கள் .ஆனால் மக்களுக்கும் நாட்டுக்கும் பயன் தரும் LED BULB போன்றவற்றை இலவசமாக அளிப்பதாக அறிவித்திருந்தால் கொஞ்சம் பாராட்டியிருக்கலாம் ....

    பதிலளிநீக்கு
  4. ஒரு வேளை அவை முன்பே பழுதாகி விட்டால் அவற்றை அந்த விற்பனை நிலையத்தில் திரும்பக் கொடுத்துவிட்டு மீண்டும் மானிய விலையிலேயே புதிய எல்.இ.டி பல்ப் வாங்கிக் கொள்ளும் வகையில் வழிசெய்தால் அது மிகப்பெரிய அளவில் பலன் தரும்.

    ninga vera pa apram athulayum etha ulal than nadakum.....

    இதில் தனிமனிதர்கள் ஆர்வம் காட்டினாலும் செய்து முடிக்க வேண்டிய திறன் அரசுக்குதான் உள்ளது.

    no chnz namala veetla mathna than undu

    பதிலளிநீக்கு