Search This Blog

வியாழன், 21 ஏப்ரல், 2011

முகவரி

ஏப்ரல் 6ம் தேதி அனுப்பி வைத்த சிறுகதை தேவி வார இதழில் ஏப்ரல் 18ம் தேதிக்குள் அச்சாகி 19ம் தேதி (April 27.,2011) புத்தகமே என்னிடம் வந்தி சேர்ந்து விட்டது.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு கதை மாந்தர்கள் வருவதாக இரண்டு வரிகள் எழுதியிருந்தேன். அது கூட இவ்வளவு உடனடியாக இந்தக் கதை பிரசுரம் ஆனதற்கு காரணமாக இருக்கலாம்.

ஏற்கனவே தேவி வார இதழில் சில கதைகள் பிரசுரமாகியிருந்தாலும் பெரும்பாலும் கறுப்பு வெள்ளை நிறமாகத்தான் ஓவியங்கள் இடம்பெறும்.

ஆனால் இந்த கதைக்கு மிக அழகான வண்ண ஓவியத்துடன் கதை பிரசுரம் ஆகியிருக்கிறது. அந்த ஓவியருக்கு நன்றி.

மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பேருந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் வந்து நின்று இளைப்பாறியது.நிரம்பி வழிந்த பஸ்சில் இருந்து பிதுங்கிய வாழைப்பழமாக வெளியே வந்து உதிர்ந்த கூட்டத்தில் சிவபாலனும் காயத்ரியும் பளிச் சென்று தெரிந்தார்கள்.

உடைகள் கசங்கி கண்களில் தூக்கம் மிச்சமிருந்தாலும், மஞ்சள் நிறம் குறையாத புதுத்தாலிக்கயிறு காயத்ரிக்கு தனி அழகைக் கொடுத்தது.தலைப்பின்னலை முன்னால் கொண்டுவந்து கொஞ்சம் பூவுடன் இருந்த பூச்சரத்தை (?) எடுத்துக் கீழே போட்டதையே சிவபாலன் பார்த்துக்கொண்டிருந்தான்.

"ம்ப்ச்...என்னங்க...இது பப்ளிக் ப்ளேஸ்...கொஞ்சம் பார்வையை மாத்துங்க...''என்று கிசுகிசுப்பான குரலில் சொன்னாள் அவள்.
அப்போது சிவபாலன் இரண்டு விஷ­யங்களை உணர்ந்து திடுக்கிட்டான்.

சிவபாலனும் காயத்ரியும் பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது, எதிரே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்களின் பார்வை இவர்களின் மேல் விழுந்தது.

"டேய்... புதுஜோடி... காலையிலேயே சூரியோதயத்துக்கு முன்னால பிரமாதமான சவாரி...மச்சம்தான் போ...''என்று முதலாவது ஆட்டோவின் ஓட்டுநரை சக டிரைவர் உற்சாகப்படுத்தினான்.

ஆனால் அந்த தம்பதியர் ஆட்டோவின் அருகில் வராமல் நேரே நடந்தார்கள்.
"சார்...எங்க போகணும்...வண்டியில வந்து உட்காருங்க சார்...காலையில முதல் சவாரி...”

"சாரி நண்பா...நடக்கணும்போல இருக்கு...''என்ற அவன் நிற்கவில்லை.

"புது பொண்டாட்டியை நடக்க வெச்சே சாகடிக்கிறான். சரியான கஞ்சனா இருப்பானோ...''என்று அந்த ஆட்டோ டிரைவரிடமிருந்து ஏமாற்றத்தில் வார்த்தைகள் வெளிப்பட்டன.

சற்று தூரம் சென்ற சிவபாலன் பேப்பர் போடும் பையன் ஒருவனிடம்  வங்கி ஒன்றின் ஏ.டி.எம். எங்கே இருக்கிறது என்று விசாரித்தான். (அது அந்த வங்கி ஏ.டி.எம் மில் மட்டும் பயன்படுத்தக்கூடிய அட்டை.(டெபிட் கார்டு அல்ல.)

"சார்...அது காந்தி சாலையில ரவி தியேட்டருக்குப் பக்கத்துல இருக்கு...காசுக்கடைத்தெரு வழியா குறுக்கே போனா கூட ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்குமே...ஆட்டோல போங்கசார்...இல்லன்னா இளையான்குடி பஸ்ல போய் ஆத்துப்பாலத்துல இறங்கிடுங்க...பக்கமா இருக்கும்.”

"ரொம்ப நன்றிப்பா...''என்ற சிவபாலன், மனைவியைப் பார்த்து முறைத்தான். அவள் எதுவும் பேசாமல் அவன் பின்னே நடந்தாள். பசி காயத்ரியின் வயிற்றைப் புரட்டியது .ஏதாவது குடித்தால் தேவலாம்... ஆனால் சிவபாலனிடம் சொல்ல பயமாக இருந்ததால் சமாளித்துக் கொண்டு நடந்தாள்.

காந்தி சாலையில் ஏ.டி.எம் இருந்த இடத்தை அவர்கள் மெதுவாக சென்று அடைந்தபோது அரைமணிநேரம் ஆகி இருந்தது.

பூச்சியை விழுங்கி பல்லி ஏப்பம் விடுவது போல சிவபாலனின் ஏ.டி.எம் கார்டை அந்த இயந்திரம் முழுங்கி விட்டு தற்காலிகமாக பழுதாகிவிட்டேன் என்று சிரித்தது.

மெஷினும் சதி செய்யுதே என்று நொந்து போனான் அவன்.

"பேங்க் எப்போ திறப்பாங்க?...''என்று வங்கி பாதுகாவலரிடம் கேட்டபோது சிவபாலன் வியர்வையில் நனைந்திருந்தான்.

"இன்னைக்கி ஞாயிற்றுக்கிழமை லீவு...அப்படியே ஆள் இருந்தாலும் உங்க கார்டை அக்கவுண்ட் இருக்குற ஹோம் பிராஞ்ச்சுக்குதான் அனுப்புவாங்க...அங்க வேற கார்டுதான் கிடைக்கும்.இப்ப அந்த நோட்டுல புகார் எழுதி வெச்சுட்டுப் போறதை மட்டும்தான் நீங்க செய்ய முடியும்.''என்றார் செக்யூரிட்டி.

புகார் நோட்டைப் பிரித்த சிவபாலனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

"பயப்படாதீங்க சார்...தினமும் பத்து கார்டாவது மெஷின் ரிப்பேரால இப்படி மாட்டிக்குது. உங்களுக்கு புது கார்டு கொடுக்க பணம் கேட்க மாட்டாங்க...''என்ற செக்யூரிட்டி ஒரு தீக்குச்சியால் அவருடைய பல் இடுக்கில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

நோட்டில் எழுதி வைத்துவிட்டு தளர்ந்து போய் வெளியே வந்தான் அவன்.

"என்னங்க ஆச்சு?...''

"ம்...மெஷின் கூட சில நேரங்கள்ல ஆகாத மாமியாரா மாறிடுது...கார்டும் அவ்வளவுதான்.''

இப்போது காயத்ரியின் கண்களில் பயம்.

"பணத்துக்கு என்னங்க செய்யுறது?''

"அப்படியே ஏதாவது கோயில் வாசல்ல உட்கார வேண்டியதுதான்.''என்று சிவபாலன் சொன்னது, காயத்ரிக்கு பசிதரும் வேதனையை விட அதிக வலி தந்தது. சட்டென்று கண்ணீர் விட்டாள்.

"ஏய்...ஏன் அழுது மானத்தை வாங்குற?...என்பேர்லயும்தானே தப்பு இருக்கு...காலேஜ்ல படிச்ச என் நண்பன் சந்துரு வீடு இந்த ஏரியாவுலதான்னு நினைக்குறேன்...வா...''என்று நடந்தான்.

"அட்ரஸ் தெரியுமாங்க?''

"ரவி தியேட்டர்ல இருந்து கிழக்கே போனா முதல் ரைட்,கண்ணாரத்தெருன்னு சொல்லியிருக்கான்...நான் இது வரை வந்தது இல்லை.

பத்திரிகை வைக்க வந்தப்ப கூட அவனை வட்டாட்சியர் அலுவலகத்துல வேலை செய்யுற இடத்துல வெச்சிதான் பார்த்தேன்.கண்டுபிடிச்சிடலாம் வா...''என்று நம்பிக்கையுடன் மனைவியை அழைத்துச் சென்றான்.

காயத்ரிக்கும் சந்துருவை நன்றாக நினைவிருந்தது.பார்த்தவர் யாரும் மறக்க முடியாத ஆள் அவன்.

"பேசாம ஹனிமூன் புரோகிராம ஊட்டியிலேயே கொண்டாடி இருக்கலாம்...முக்கியமான உறவுக்காரங்க, நண்பர்களை பார்க்க இதைவிட்டா வேற நேரம் கிடைக்காதுன்னு கோயம்புத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம்னு திட்டம் போட்டோம்...எல்லாம் சொதப்பல்.
இங்க சந்துரு தவிர வேற யாருமே கிடையாது...அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு...''என்ற சிவபாலன், அருகில் இருந்த டீக்கடையில் கண்ணாரத் தெரு எங்கே என்று விசாரித்து விட்டான்.

மதுரைவரை பேருந்தில் உட்கார இடம் கிடைத்தது. ஆனால் அங்கிருந்து இராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள் எதிலுமே நிற்கக் கூட இடம் இல்லை. கூட்டத்தில் சிக்கி நசுங்கி பிதுங்கி வெளியே வந்ததுமே சிறிது நேரத்தில் பார்வையை மாத்துங்க என்று காயத்ரி சொன்னாள்.

தன் பர்ஸ், செல்போன் இரண்டுமே திருடு போயிருப்பதை அப்போதுதான் சிவபாலன் கவனித்தான். யாருக்காவது போன் செய்யலாம் என்றால் போனில் இருந்த மெமரியைத்தவிர வேறு எதிலும் எந்த நம்பரையும் குறித்துக் கொள்ளவில்லை.

"சரி...போகட்டும்...இந்த மாதிரி ஏதாச்சும் ஆனா தேவைப்படும்னுதான் உன்கிட்ட ஆயிரம் ரூபாயைக் கொடுத்து வெச்சேன்...அதை எடு...''என்று கணவன் கேட்டதும் அதிர்ந்து போன காயத்ரி தயங்கி நின்றாள்.

பிறகு மெதுவாக,"உங்களுக்கு நாளைக்கு பிறந்தநாள்...அதனால சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னு நேத்து மதியம் லாட்ஜ்ல நீங்க தூங்கும்போது வெளியில போய் உங்களுக்கு புது டிரஸ் எடுத்துட்டு வந்தேன்...''என்று கூறி முடிக்கும் முன்பே அந்த அதிகாலைக் குளிர்க்காற்றிலும் அவளுக்கு நன்கு வியர்த்திருந்தது.

திருமணமாகி நான்கைந்து ஆண்டுகளாகி இருந்தால் சிவபாலனின் ரியாக்­ன் வேறு விதமாக இருந்திருக்குமோ என்னவோ... தற்போது திருமணம் முடிந்து பதினைந்தே நாட்கள் ஆனதால் பெரிய அளவில் கோபப்படவில்லை.
"அழகான முட்டாள்தனம் பண்ணியிருக்கியா நீ...''என்று திட்டத் தெரியாமல் உளறினான் அவன்.

"முதல்ல போலீஸ் ஸ்டே­ன்ல கம்ப்ளைண்ட் கொடுப்போம்...''என்று காயத்ரி சொல்லவும் சிவபாலன் அவளை முறைத்தான்.

"உன்கிட்ட பணம் இருக்கா?''

காயத்ரி இடவலமாக தலையை ஆட்டினாள்.

"அங்க ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு வர சொன்னாக்கூட என்கிட்டயும் சுத்தமா காசு கிடையாது. முதல்ல ஏ.டி.எம் ல போய் பணத்தை எடுப்போம்
ஊருக்கு போன் பண்ணி சந்துருவோட நம்பரைக் கேட்கணும்னா நம்ம வீட்டு நம்பரை விட்டா வேற  யார் நம்பரும் தெரியாது.
வீட்டுல நிச்சயமா பதறிடுவாங்க...அதனால ஏ.டி.எம் ல பணம் எடுத்துட்டு சந்துரு வீட்டுக்கு வழி தேடுவோம்.''என்று கிளம்பினார்கள்.

கண்ணாரத் தெருவில் நிறைய பேரிடம் விசாரித்தும் சந்துருவின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

"மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் இங்க பிரபலம். அங்க கண்டிப்பா போயிட்டு வான்னு அம்மா சொன்னாங்க. அங்க தரிசனம் பண்ணப் போறதுக்குள்ள ஏன் இந்த சோதனை?''என்று சிவபாலன் புலம்பினான்.

"மதுரையில மாதிரியே இங்கேயும் அழகர் ஆத்துல இறங்குற திருவிழாவைப் பார்க்கலாம்னுதான் நானும் ஆசை ஆசையா வந்தேன். அதுக்கு இன்னமும் நாலு நாள்தானே இருக்கு?''என்று காயத்ரி மனதில் தோன்றியதை சொல்ல, சிவபாலன் விரக்தியாகச் சிரித்தான்.

"கல்யாணம் பண்ணி முதன்முதலா பொண்டாட்டி கூட தனியா வெளியில வந்து இப்படித்தானா அசிங்கப்படுறது?...''என்று வடிவேலு பாணியில் கணவன் பேசியதைக் கேட்டு காயத்ரியால் மனம் விட்டு சிரிக்கக் கூட முடியவில்லை.

"ஏங்க...நீங்க சந்துருவோட அடையாளத்தை சொல்லி வழிகேளுங்களேன்...கண்டிப்பா நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்...''என்றாள்.

"காயத்ரி...இனிமே தயவு செஞ்சு இப்படி சொல்லாத. காலேஜ்ல முதல்வரு­ம் படிக்கும்போது ஒரு விபத்துல சிக்குன அவன் ஒரு கையையும் ஒரு கண்ணையும் இழந்துட்டான்.

கண் இருக்க வேண்டிய இடத்துல தையல் இருந்ததைப் பார்த்து நீ எப்படி பயந்து போன?

ஆனா அவன் இந்த சிக்கல்களை எதிர்த்து, தமிழ்நாடு அரசுப்பணித்தேர்வுல பொதுப்போட்டியிலேயே வெற்றி பெற்று வேலைக்கு சேர்ந்துட்டான்.
இவ்வளவு திறமைசாலியான சந்துருவை அவன் உடலில் உள்ள குறைபாட்டை முகவரியாக்கி கண்டுபிடிக்க விரும்பலை. அதுதான் அவன் தகுதிக்கு நாம தர்ற மரியாதை.

தாசில்தார் அலுவலகத்துல முக்கியமான பதவி வகிக்கிற அவனை அந்த தெருவுல கூட ஊனத்தை சொல்லிதான் கண்டுபிடிக்கணும்னா அது எவ்வளவு வேதனையான வி­ஷயம் தெரியுமா?...அது போகட்டும்...என் விரல்ல உள்ள ஒரு மோதிரத்தை அடகு வெச்சுட்டா நிம்மதியா ஊர் போய்ச் சேரலாம்...''என்று வட்டிக்கடையைத் தேடி அலையும் முடிவுக்கு வந்துவிட்டான் சிவபாலன்.

ஞாயிற்றுக்கிழமையும் திறந்திருக்கக் கூடிய அடகுக்கடைக்கு ஒருவர் ஒன்பது மணிக்குதான் திறப்பார்கள் என்ற உபரித் தகவலுடன் வழிகாட்டினார்.

காயத்ரிக்கு, லேசாகக் காய்ந்திருந்த அந்த பிரட் பாக்கெட்டை தூக்கி எறியாமல் எடுத்து வந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்தது.
அந்த வட்டிக்கடை வாசலில் சிவபாலனும் காயத்ரியும் ஒன்பது மணி ஆவதற்காக காத்திருக்கத் தொடங்கினார்கள்.
***
இந்தக் கதையில் சில வரிகளை நீக்கி, அழகாக எடிட் செய்த உதவி ஆசிரியருக்கும் நன்றி.

4 கருத்துகள்:

  1. ஏப்ரல் 6ம் தேதி அனுப்பி வைத்த சிறுகதை தேவி வார இதழில் ஏப்ரல் 18ம் தேதிக்குள் அச்சாகி 19ம் தேதி (April 27.,2011) புத்தகமே என்னிடம் வந்தி சேர்ந்து விட்டது.


    ...Super! Congratulations! :-)

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை சரவணன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு