செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சமையல் எரிவாயு என்ன விலை?

சமையல் எரிவாயுக்கு அரசு நிர்ணயித்த விலைக்கும் நுகர்வோர் கொடுக்கும் விலைக்கும் எப்போதுமே டேலி ஆகாது. எரிவாயு உருளைகளை டெலிவரி செய்பவர்கள் பத்து ரூபாயை சேர்த்துதான் வாங்குவார்கள். வீடு தேடி வந்து டெலிவரி செய்யும்போது ஓ.கே. ஒழுங்கான தேதியில் கொண்டுவந்து கொடுக்காமல் பல நாட்கள் சிலிண்டரை ரொட்டேஷன் விட்டு விடுகிறார்கள் என்று பலரும் இப்போதெல்லாம் நேரடியாக ஏஜன்சி கிடங்கிலேயே சென்று சிலிண்டரைப் பெற்று வருகிறார்கள். அப்போதும் அந்த பத்து ரூபாயை சேர்த்து வாங்குவது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.

திருவாரூரில் இரண்டு ஏஜன்சிகள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட செம்மலர் கியாஸ் ஏஜன்சியில் அங்கேயே போய் நாம் சிலிண்டரை பெற்று வந்தால் பில் தொகையைக் கொடுத்தால் போதும். ஆனால் நீ.....ண்ட காலமாக இருக்கும் பிரியா கேஸ் ஏஜன்சியினர் மட்டும் வலுக்கட்டாயமாக கூடுதல் தொகையை பிடுங்கி விடுகிறார்கள்.

இப்போது இண்டேன் கியாஸ் ஏஜன்சியில் முன்பதிவிற்காக பத்து இலக்க எண் ஒன்றை 24மணி நேரமும் செயல்படும் வகையில் அறிவித்திருக்கிறார்களாம்.

இது நல்ல முறையில் செயல்பட்டால் தில்லுமுல்லு செய்யும் கியாஸ் ஏஜன்சிக்களுக்கு ஆப்புதான்.

தாமதத்திற்கு வினியோகஸ்தர்கள் சொல்லும் ஒரே காரணம், எண்ணை நிறுவனங்களில் இருந்து போதுமான அளவுக்கு சப்ளை இருப்பது இல்லை என்பதுதான்.

பல முறை சிலிண்டர்களை தங்கள் இஷ்டத்திற்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் ஊரறிந்த ரகசியம்.

இதைத் தடுக்க எளிமையான வழி ஒன்று இருக்கிறது. சிலிண்டருக்கான முன்பதிவு ஆன் லைன் முறையாக்கப்பட்டுவிட்டதால், தினமும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்பதையும் அன்றைக்கு எண்ணை நிறுவனத்தில் இருந்து வந்த சிலிண்டரையும், எந்த எண் வரை முன்பதிவு செய்தவருக்கு அன்று சிலிண்டர் வழங்கலாம் என்பதையும் இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் பார்க்க வழி செய்யலாம். இதில் ரகசியம் காக்க தேவையில்லை.

எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கும் வரை தவறு நடக்க அதிக வாய்ப்பு உண்டு.

இப்படியெல்லாம் செய்யலாம் என்று பெரிய அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் யாராவது ஆப்பைத் தேடித்தேடி போய் உட்காருவார்களா?

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சாலை விபத்துக்களை தவிர்க்க என்ன வழி?

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பெரம்பலூர் பகுதி எப்போதுமே சாலை விபத்து என்ற பெயரில் உயிர்களைக் கொன்று குவிக்கும் பகுதிகளில் ஒன்றாகவே இருக்கிறது.

ஏனைய பகுதிகளில் விபத்தும் மரணமும் நிகழ்வதே இல்லையா என்று கேட்க கூடாது. சாலைகள் இருவழிப்பாதையாக இருக்கும்போதுதான் அஜாக்கிரதையால் வாகனங்கள் எதிர் எதிரே மோதிக்கொள்கின்றன என்று நான்கு வழிப்பாதைகளை அமைத்தார்கள். இப்போது வாகனங்கள் பெருகிய வேகத்தைவிட விபத்துக்கள் அதிகரித்திருக்கின்றன.

சாலைவிதிகளை மதிக்காத ஓட்டுனர்களின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் குறைந்த பட்ச வேகமே மணிக்கு 80 முதல் 140 கி.மீ என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பாதைகளில் வாகனங்களின் சக்கரங்கள் உருளுவதை விட பறக்கின்றன என்றே சொல்லலாம்.
ஏதாவது ஒரு கனரக வாகனம் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும். பின்னால் பறந்து வரும் வாகன ஓட்டுனருக்கு இந்த வண்டி ஓட வில்லை, நின்று கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொள்வதற்குள் அதன் மீது மோதி கடுமையான சேதம் ஏற்பட்டு விடுகிறது.

உலகத்தரத்தில் நாலுவழிச்சாலையைப் போட்டு இருக்கிறோம் என்று சொல்லி சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளை(?) அடிப்பதில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட இந்த சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க காட்டுவதில்லை.

ஏனெனில் நாலு வழிச்சாலைகளால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளும் விபத்து மிகவும் அரிதாகி விட்டது. ஆனால் இரவில், (சில நேரங்களில் பகலில் கூட) நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனம் மோதி அடிக்கடி உயிரிழப்பும், உடல் உறுப்பு இழப்பும் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

சாலையிலேயே இப்படி ஓரம் கட்டி நிறுத்தப்படும் வாகனம் பெரும்பாலும் லாரியாகத்தான் இருக்கும். இவை பழுதாகி நிற்பது என்பது அரிது. ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க, அதற்குரிய இடத்தில் நிறுத்தாமல் அலட்சியமாக நிறுத்திவிட்டு செல்வதுதான் இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம்.

சரியான காரணம் இன்றி இப்படி வாகனம் நிறுத்தப்படும்போது அந்த ஓட்டுனரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இந்த கொடுமைகள் குறையும்.

2005ம் ஆண்டு தமிழகத்தில் கன மழையின்போது மாநிலம் முழுவதும் வெள்ளச்சேதத்தால் கிட்டத்தட்ட எல்லா சாலைகளும் பஞ்சராகி விட்டன. அப்போது சுமார் ஒரு மாத காலம் சாலை விபத்துக்கள் மிக, மிக, மிக குறைவான அளவில்தான் நடந்தன. அந்த ஒரு மாதத்தின் நாளிதழ்களைப் பார்த்தாலே தெரியும்.

இதற்கு காரணம், சாலைகள் மோசமானதாக இருந்ததால் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றிருக்கின்றன.

ஆக மொத்தத்தில் வேகம்தான் முக்கிய வில்லன் என்பது புலனாகிறது.

இந்த பதிவில் நான் இணைத்திருக்கும் விபத்து படங்கள், திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் அரசு விரைவுப்பேருந்தும் தனியார் கல்லூரிப் பேருந்தும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியிருக்கும் காட்சி.

மூன்று கல்லூரிப் பேருந்துகள் போட்டி போட்டு அதி வேகமாக வந்தன. அதைப் பார்த்து நான் பேருந்தை நிறுத்தி விட்டேன். இரண்டு பேருந்துகள் நூலிழையில் ஒதுங்கிச் சென்றுவிட்டன, ஆனால் இந்தப் பேருந்து நான் ஓட்டி வந்த பேருந்தின் மீது மோதிவிட்டது என்று அரசு விரைவுப்பேருந்து ஓட்டுனர் சொன்னார்.

ஒரு நாளிதழின் நிருபர் ஒருவர் ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னது, விபத்துக்குள்ளான கல்லூரிப்பேருந்தை ஓட்டி வந்தது ஒரு கல்லூரி மாணவர்தானாம்.

இந்த புகைப்படங்களைப் பார்த்தால் கல்லூரிப்பேருந்தின் இடப்பக்கம் ஒரு பேருந்து செல்லும் அளவுக்கு இடம் இருப்பது தெரியும். அந்த பேருந்து கட்டுப்பாடில்லாமல் அலைபாய்ந்து வந்தது என்று அரசுப்பேருந்தின் ஓட்டுனர் சொன்னது உண்மையாக கூட இருக்கலாம்.

108 ஆம்புலன்ஸ் அந்த விபத்துக்குள்ளான பேருந்தின் பக்க வாட்டில் நிற்கிறது. சாலையின் மையத்தில் இருக்கும் வெள்ளைக் கோடு எல்லையை ஒழுங்காக கவனித்தாலே பாதி பிரச்சனை இருக்காது. என்ன செய்வது விதி வலியது.

இது உண்மையாக இருக்காது என்று நாம் முழுவதும் புறந்தள்ளி விட முடியாது.


என்னைப் பொறுத்தவரை நாலு வழிச்சாலையில் இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும், வாகனங்களும் வாகன ஓட்டிகளும் ஓய்வெடுக்க என்று பிரத்யேகமாக இருக்கும் இடம் தவிர வேறு எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நிறுத்தி ஏதாவது விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் வாகனத்தை அலட்சியமாக நிறுத்தியிருந்த ஓட்டுனர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த அலட்சியம் குறையும்.

எல்லா இடங்களிலும் இரட்டை வழி ரயில் பாதை அமைத்து பஸ் போக்குவரத்து போலவே ரயில் போக்குவரத்தும் பெருகினால் இத்தகைய விபத்துக்கள் கணிசமாக குறைந்துவிடும்.

அவ்வளவு எண்ணிக்கையில் ரயில்களை இயக்கத்தேவையான கட்டமைப்புகளை செய்வது மிகவும் கடினம் என்றும், இதனால் பேருந்து போக்குவரத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பலர் வேலையிழப்பார்கள் என்றும் சொல்வார்கள்.

உண்மையான காரணங்கள் இது இல்லை. டூரிஸ்ட் பஸ் என்று பர்மிட் வாங்கி வைத்து விட்டு தினமும் ஆம்னி பஸ் சர்வீஸ் நடத்தி கோடிகளில் புழங்கும் தொழிலதிபர்களின் ஆதரவு தேவைப்படும் அரசியல் வியாதிகளும் அவர்கள் நடத்தும் கேவலமான மோட்டல் வியாபாரம் பாதிக்கும் என்று பயப்படும் குண்டர்களும்தான் உண்மையான பிரச்சனை.

ஆனால் ரயில் போக்குவரத்து இரு வழிப்பாதையாக விஸ்தரிக்கப்பட்டால் பல வகையிலும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும். பெட்ரோலியப்பொருட்கள் இறக்குமதி இந்த அளவுக்கு தேவையிருக்காது. சுற்றுச்சூழலும் தப்பிக்கும். நாட்டு, வீட்டு பொருளாதாரமும் உருப்படும்.

ஆனால் மோட்டார் கம்பெனி முதலைகள் இதற்கெல்லாம் வழி விடுவார்களா?

அது சரி, நம் நாட்டில் எப்போதுமே சில லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான மக்களை பாதிக்கச்செய்வது வழக்கம்தானே.

சனி, 23 ஏப்ரல், 2011

மின் வெட்டு - சில தீர்வுகள்

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவி வந்தாலும் கோடை காலங்களில் இந்த பற்றாக்குறை உச்சத்தை தொட்டுவிடுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே சென்னை தவிர்த்த பிற நகரங்களில் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டுமணி நேரம் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தினமும் மின்வெட்டு கட்டாயமாக்கப்பட்டதால் நடுத்தரக் குடும்பங்களில் கூட இன்வெர்ட்டர்களை மிக அதிகமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சுமார் 20 சதவீதம் வரை மின் நுகர்வு கூடுதலாகும் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதமே இந்த அளவு மின் பற்றாக்குறை ஏற்பட இது கூட  முக்கியக் காரணமாக இருக்கலாம். பொதுவாகவே புதிய மின்திட்டங்கள் பலன் தர குறைந்தது 5 வருடங்களாவது ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.

அதனால் ஆட்சியாளர்கள் எதிர் அணியினரை குறை கூறுவதை நிறுத்தி விட்டு நீண்டகால நோக்கில் பல முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.
முதல் காரியமாக வீடுகளில் முற்றிலுமாக குண்டு பல்ப் உபயோகத்தை தடுத்து நிறுத்துவது அவசியம். வசதியானவர்களும், நடுத்தர வருவாய் பிரிவினரும் குண்டு பல்ப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு குழல்விளக்கு, சி.எஃப்.எல் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

ஆனால் இன்னமும் கிராமங்களிலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும் நிறையவே குண்டு பல்ப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவது அரசுக்கு மிகவும் சுலபமான ஒன்றுதான்.

சி.எஃப்.எல் பல்ப்புகள் குறைவான மின்சக்தியைப் பெற்று குறைவான வெப்பத்துடன் அதிக ஒளியைத் தருவதாக சொல்லப்படுகிறது. அந்த பல்ப்புகள் செயலிழந்த பிறகு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படவில்லை என்றால் அவற்றிலிருக்கும் பாதரசத்தால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும்.

ஆனால் எல்.இ.டி வகை விளக்குகளில் இத்தகைய அபாயங்கள் குறைவுதான் என்று சொல்கிறார்கள். மேலும் அவற்றின் ஆயுளும் சி.எஃப்.எல் பல்ப்புகளை விட அதிகம். எனவே இவற்றை முழு அளவில் உற்பத்தி செய்து ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு இத்தனை என்று மானிய விலையில் விற்பனை செய்யலாம்.

ஒரு வேளை அவை முன்பே பழுதாகி விட்டால் அவற்றை அந்த விற்பனை நிலையத்தில் திரும்பக் கொடுத்துவிட்டு மீண்டும் மானிய விலையிலேயே புதிய எல்.இ.டி பல்ப் வாங்கிக் கொள்ளும் வகையில் வழிசெய்தால் அது மிகப்பெரிய அளவில் பலன் தரும்.

சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழி இதற்கும் பொருந்தும். நம் நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய அளவில் நாட்டின் பொருளாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரிய நன்மை தரும்.

இது தவிர அரசு அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றில் முழு அளவில் சூரியஒளி மின்சாரத்தின் உதவியுடன் சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தினால் மின் பற்றாக்குறைப் பிரச்சனையின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.

என் வீட்டிலேயே முன்பெல்லாம் இரண்டு மாதங்களுக்கு மின் நுகர்வு 120 முதல் 140 யூனிட் வரை இருந்தது. நான் கம்ப்யூட்டர் வாங்கிய நேரத்தில் வீட்டில் இருந்த குண்டு பல்ப்புகளை சுத்தமாக ஒழித்து விட்டு, சி.எஃஎல் பல்ப் உபயோகத்தை அதிகப்படுத்தினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இப்போது கம்ப்யூட்டர் உபயோகம் அதிகமான பிறகும் மின்சார நுகர்வின் அளவு இரண்டு மாதங்களுக்கு 150 என்ற அளவுக்குள்தான் பெரும்பாலும் இருக்கிறது. எல்.இ.டி பல்ப்புகள் பயன்படுத்தினால் இன்னமும் மின்சாரம் சிக்கனமாக செலவாகும் என்பது கண்கூடு.

என்னுடைய ஒரு வீட்டுக்கே இப்படி என்றால் நாடு முழுவதும் இப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் எத்தனையோ சதவீதம் மின்சார தேவை குறையும். முக்கியமாக மின்வெட்டே இல்லை என்ற நிலை வந்தால் இன்வெர்ட்டர் பயன்பாடு மிகவும் அத்தியாவசிய தேவையுள்ள இடங்கள் தவிர மற்ற இடங்களில் குறைந்து விடும். இதனாலும் 20 சதவீத அளவுக்கு மின்சாரம் விரயமாவது தடுக்கப்படும்.

இதில் தனிமனிதர்கள் ஆர்வம் காட்டினாலும் செய்து முடிக்க வேண்டிய திறன் அரசுக்குதான் உள்ளது.

அரசு இயந்திரம் செவி சாய்க்குமா?

மின் திருட்டைப் பற்றி இந்தப் பதிவில் எழுதவில்லை. ஏனெனில் அது பெரிய தொடர்கதை.

வியாழன், 21 ஏப்ரல், 2011

முகவரி

ஏப்ரல் 6ம் தேதி அனுப்பி வைத்த சிறுகதை தேவி வார இதழில் ஏப்ரல் 18ம் தேதிக்குள் அச்சாகி 19ம் தேதி (April 27.,2011) புத்தகமே என்னிடம் வந்தி சேர்ந்து விட்டது.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு கதை மாந்தர்கள் வருவதாக இரண்டு வரிகள் எழுதியிருந்தேன். அது கூட இவ்வளவு உடனடியாக இந்தக் கதை பிரசுரம் ஆனதற்கு காரணமாக இருக்கலாம்.

ஏற்கனவே தேவி வார இதழில் சில கதைகள் பிரசுரமாகியிருந்தாலும் பெரும்பாலும் கறுப்பு வெள்ளை நிறமாகத்தான் ஓவியங்கள் இடம்பெறும்.

ஆனால் இந்த கதைக்கு மிக அழகான வண்ண ஓவியத்துடன் கதை பிரசுரம் ஆகியிருக்கிறது. அந்த ஓவியருக்கு நன்றி.

மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பேருந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் வந்து நின்று இளைப்பாறியது.நிரம்பி வழிந்த பஸ்சில் இருந்து பிதுங்கிய வாழைப்பழமாக வெளியே வந்து உதிர்ந்த கூட்டத்தில் சிவபாலனும் காயத்ரியும் பளிச் சென்று தெரிந்தார்கள்.

உடைகள் கசங்கி கண்களில் தூக்கம் மிச்சமிருந்தாலும், மஞ்சள் நிறம் குறையாத புதுத்தாலிக்கயிறு காயத்ரிக்கு தனி அழகைக் கொடுத்தது.தலைப்பின்னலை முன்னால் கொண்டுவந்து கொஞ்சம் பூவுடன் இருந்த பூச்சரத்தை (?) எடுத்துக் கீழே போட்டதையே சிவபாலன் பார்த்துக்கொண்டிருந்தான்.

"ம்ப்ச்...என்னங்க...இது பப்ளிக் ப்ளேஸ்...கொஞ்சம் பார்வையை மாத்துங்க...''என்று கிசுகிசுப்பான குரலில் சொன்னாள் அவள்.
அப்போது சிவபாலன் இரண்டு விஷ­யங்களை உணர்ந்து திடுக்கிட்டான்.

சிவபாலனும் காயத்ரியும் பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது, எதிரே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்களின் பார்வை இவர்களின் மேல் விழுந்தது.

"டேய்... புதுஜோடி... காலையிலேயே சூரியோதயத்துக்கு முன்னால பிரமாதமான சவாரி...மச்சம்தான் போ...''என்று முதலாவது ஆட்டோவின் ஓட்டுநரை சக டிரைவர் உற்சாகப்படுத்தினான்.

ஆனால் அந்த தம்பதியர் ஆட்டோவின் அருகில் வராமல் நேரே நடந்தார்கள்.
"சார்...எங்க போகணும்...வண்டியில வந்து உட்காருங்க சார்...காலையில முதல் சவாரி...”

"சாரி நண்பா...நடக்கணும்போல இருக்கு...''என்ற அவன் நிற்கவில்லை.

"புது பொண்டாட்டியை நடக்க வெச்சே சாகடிக்கிறான். சரியான கஞ்சனா இருப்பானோ...''என்று அந்த ஆட்டோ டிரைவரிடமிருந்து ஏமாற்றத்தில் வார்த்தைகள் வெளிப்பட்டன.

சற்று தூரம் சென்ற சிவபாலன் பேப்பர் போடும் பையன் ஒருவனிடம்  வங்கி ஒன்றின் ஏ.டி.எம். எங்கே இருக்கிறது என்று விசாரித்தான். (அது அந்த வங்கி ஏ.டி.எம் மில் மட்டும் பயன்படுத்தக்கூடிய அட்டை.(டெபிட் கார்டு அல்ல.)

"சார்...அது காந்தி சாலையில ரவி தியேட்டருக்குப் பக்கத்துல இருக்கு...காசுக்கடைத்தெரு வழியா குறுக்கே போனா கூட ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்குமே...ஆட்டோல போங்கசார்...இல்லன்னா இளையான்குடி பஸ்ல போய் ஆத்துப்பாலத்துல இறங்கிடுங்க...பக்கமா இருக்கும்.”

"ரொம்ப நன்றிப்பா...''என்ற சிவபாலன், மனைவியைப் பார்த்து முறைத்தான். அவள் எதுவும் பேசாமல் அவன் பின்னே நடந்தாள். பசி காயத்ரியின் வயிற்றைப் புரட்டியது .ஏதாவது குடித்தால் தேவலாம்... ஆனால் சிவபாலனிடம் சொல்ல பயமாக இருந்ததால் சமாளித்துக் கொண்டு நடந்தாள்.

காந்தி சாலையில் ஏ.டி.எம் இருந்த இடத்தை அவர்கள் மெதுவாக சென்று அடைந்தபோது அரைமணிநேரம் ஆகி இருந்தது.

பூச்சியை விழுங்கி பல்லி ஏப்பம் விடுவது போல சிவபாலனின் ஏ.டி.எம் கார்டை அந்த இயந்திரம் முழுங்கி விட்டு தற்காலிகமாக பழுதாகிவிட்டேன் என்று சிரித்தது.

மெஷினும் சதி செய்யுதே என்று நொந்து போனான் அவன்.

"பேங்க் எப்போ திறப்பாங்க?...''என்று வங்கி பாதுகாவலரிடம் கேட்டபோது சிவபாலன் வியர்வையில் நனைந்திருந்தான்.

"இன்னைக்கி ஞாயிற்றுக்கிழமை லீவு...அப்படியே ஆள் இருந்தாலும் உங்க கார்டை அக்கவுண்ட் இருக்குற ஹோம் பிராஞ்ச்சுக்குதான் அனுப்புவாங்க...அங்க வேற கார்டுதான் கிடைக்கும்.இப்ப அந்த நோட்டுல புகார் எழுதி வெச்சுட்டுப் போறதை மட்டும்தான் நீங்க செய்ய முடியும்.''என்றார் செக்யூரிட்டி.

புகார் நோட்டைப் பிரித்த சிவபாலனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

"பயப்படாதீங்க சார்...தினமும் பத்து கார்டாவது மெஷின் ரிப்பேரால இப்படி மாட்டிக்குது. உங்களுக்கு புது கார்டு கொடுக்க பணம் கேட்க மாட்டாங்க...''என்ற செக்யூரிட்டி ஒரு தீக்குச்சியால் அவருடைய பல் இடுக்கில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

நோட்டில் எழுதி வைத்துவிட்டு தளர்ந்து போய் வெளியே வந்தான் அவன்.

"என்னங்க ஆச்சு?...''

"ம்...மெஷின் கூட சில நேரங்கள்ல ஆகாத மாமியாரா மாறிடுது...கார்டும் அவ்வளவுதான்.''

இப்போது காயத்ரியின் கண்களில் பயம்.

"பணத்துக்கு என்னங்க செய்யுறது?''

"அப்படியே ஏதாவது கோயில் வாசல்ல உட்கார வேண்டியதுதான்.''என்று சிவபாலன் சொன்னது, காயத்ரிக்கு பசிதரும் வேதனையை விட அதிக வலி தந்தது. சட்டென்று கண்ணீர் விட்டாள்.

"ஏய்...ஏன் அழுது மானத்தை வாங்குற?...என்பேர்லயும்தானே தப்பு இருக்கு...காலேஜ்ல படிச்ச என் நண்பன் சந்துரு வீடு இந்த ஏரியாவுலதான்னு நினைக்குறேன்...வா...''என்று நடந்தான்.

"அட்ரஸ் தெரியுமாங்க?''

"ரவி தியேட்டர்ல இருந்து கிழக்கே போனா முதல் ரைட்,கண்ணாரத்தெருன்னு சொல்லியிருக்கான்...நான் இது வரை வந்தது இல்லை.

பத்திரிகை வைக்க வந்தப்ப கூட அவனை வட்டாட்சியர் அலுவலகத்துல வேலை செய்யுற இடத்துல வெச்சிதான் பார்த்தேன்.கண்டுபிடிச்சிடலாம் வா...''என்று நம்பிக்கையுடன் மனைவியை அழைத்துச் சென்றான்.

காயத்ரிக்கும் சந்துருவை நன்றாக நினைவிருந்தது.பார்த்தவர் யாரும் மறக்க முடியாத ஆள் அவன்.

"பேசாம ஹனிமூன் புரோகிராம ஊட்டியிலேயே கொண்டாடி இருக்கலாம்...முக்கியமான உறவுக்காரங்க, நண்பர்களை பார்க்க இதைவிட்டா வேற நேரம் கிடைக்காதுன்னு கோயம்புத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம்னு திட்டம் போட்டோம்...எல்லாம் சொதப்பல்.
இங்க சந்துரு தவிர வேற யாருமே கிடையாது...அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு...''என்ற சிவபாலன், அருகில் இருந்த டீக்கடையில் கண்ணாரத் தெரு எங்கே என்று விசாரித்து விட்டான்.

மதுரைவரை பேருந்தில் உட்கார இடம் கிடைத்தது. ஆனால் அங்கிருந்து இராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள் எதிலுமே நிற்கக் கூட இடம் இல்லை. கூட்டத்தில் சிக்கி நசுங்கி பிதுங்கி வெளியே வந்ததுமே சிறிது நேரத்தில் பார்வையை மாத்துங்க என்று காயத்ரி சொன்னாள்.

தன் பர்ஸ், செல்போன் இரண்டுமே திருடு போயிருப்பதை அப்போதுதான் சிவபாலன் கவனித்தான். யாருக்காவது போன் செய்யலாம் என்றால் போனில் இருந்த மெமரியைத்தவிர வேறு எதிலும் எந்த நம்பரையும் குறித்துக் கொள்ளவில்லை.

"சரி...போகட்டும்...இந்த மாதிரி ஏதாச்சும் ஆனா தேவைப்படும்னுதான் உன்கிட்ட ஆயிரம் ரூபாயைக் கொடுத்து வெச்சேன்...அதை எடு...''என்று கணவன் கேட்டதும் அதிர்ந்து போன காயத்ரி தயங்கி நின்றாள்.

பிறகு மெதுவாக,"உங்களுக்கு நாளைக்கு பிறந்தநாள்...அதனால சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னு நேத்து மதியம் லாட்ஜ்ல நீங்க தூங்கும்போது வெளியில போய் உங்களுக்கு புது டிரஸ் எடுத்துட்டு வந்தேன்...''என்று கூறி முடிக்கும் முன்பே அந்த அதிகாலைக் குளிர்க்காற்றிலும் அவளுக்கு நன்கு வியர்த்திருந்தது.

திருமணமாகி நான்கைந்து ஆண்டுகளாகி இருந்தால் சிவபாலனின் ரியாக்­ன் வேறு விதமாக இருந்திருக்குமோ என்னவோ... தற்போது திருமணம் முடிந்து பதினைந்தே நாட்கள் ஆனதால் பெரிய அளவில் கோபப்படவில்லை.
"அழகான முட்டாள்தனம் பண்ணியிருக்கியா நீ...''என்று திட்டத் தெரியாமல் உளறினான் அவன்.

"முதல்ல போலீஸ் ஸ்டே­ன்ல கம்ப்ளைண்ட் கொடுப்போம்...''என்று காயத்ரி சொல்லவும் சிவபாலன் அவளை முறைத்தான்.

"உன்கிட்ட பணம் இருக்கா?''

காயத்ரி இடவலமாக தலையை ஆட்டினாள்.

"அங்க ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு வர சொன்னாக்கூட என்கிட்டயும் சுத்தமா காசு கிடையாது. முதல்ல ஏ.டி.எம் ல போய் பணத்தை எடுப்போம்
ஊருக்கு போன் பண்ணி சந்துருவோட நம்பரைக் கேட்கணும்னா நம்ம வீட்டு நம்பரை விட்டா வேற  யார் நம்பரும் தெரியாது.
வீட்டுல நிச்சயமா பதறிடுவாங்க...அதனால ஏ.டி.எம் ல பணம் எடுத்துட்டு சந்துரு வீட்டுக்கு வழி தேடுவோம்.''என்று கிளம்பினார்கள்.

கண்ணாரத் தெருவில் நிறைய பேரிடம் விசாரித்தும் சந்துருவின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

"மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் இங்க பிரபலம். அங்க கண்டிப்பா போயிட்டு வான்னு அம்மா சொன்னாங்க. அங்க தரிசனம் பண்ணப் போறதுக்குள்ள ஏன் இந்த சோதனை?''என்று சிவபாலன் புலம்பினான்.

"மதுரையில மாதிரியே இங்கேயும் அழகர் ஆத்துல இறங்குற திருவிழாவைப் பார்க்கலாம்னுதான் நானும் ஆசை ஆசையா வந்தேன். அதுக்கு இன்னமும் நாலு நாள்தானே இருக்கு?''என்று காயத்ரி மனதில் தோன்றியதை சொல்ல, சிவபாலன் விரக்தியாகச் சிரித்தான்.

"கல்யாணம் பண்ணி முதன்முதலா பொண்டாட்டி கூட தனியா வெளியில வந்து இப்படித்தானா அசிங்கப்படுறது?...''என்று வடிவேலு பாணியில் கணவன் பேசியதைக் கேட்டு காயத்ரியால் மனம் விட்டு சிரிக்கக் கூட முடியவில்லை.

"ஏங்க...நீங்க சந்துருவோட அடையாளத்தை சொல்லி வழிகேளுங்களேன்...கண்டிப்பா நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்...''என்றாள்.

"காயத்ரி...இனிமே தயவு செஞ்சு இப்படி சொல்லாத. காலேஜ்ல முதல்வரு­ம் படிக்கும்போது ஒரு விபத்துல சிக்குன அவன் ஒரு கையையும் ஒரு கண்ணையும் இழந்துட்டான்.

கண் இருக்க வேண்டிய இடத்துல தையல் இருந்ததைப் பார்த்து நீ எப்படி பயந்து போன?

ஆனா அவன் இந்த சிக்கல்களை எதிர்த்து, தமிழ்நாடு அரசுப்பணித்தேர்வுல பொதுப்போட்டியிலேயே வெற்றி பெற்று வேலைக்கு சேர்ந்துட்டான்.
இவ்வளவு திறமைசாலியான சந்துருவை அவன் உடலில் உள்ள குறைபாட்டை முகவரியாக்கி கண்டுபிடிக்க விரும்பலை. அதுதான் அவன் தகுதிக்கு நாம தர்ற மரியாதை.

தாசில்தார் அலுவலகத்துல முக்கியமான பதவி வகிக்கிற அவனை அந்த தெருவுல கூட ஊனத்தை சொல்லிதான் கண்டுபிடிக்கணும்னா அது எவ்வளவு வேதனையான வி­ஷயம் தெரியுமா?...அது போகட்டும்...என் விரல்ல உள்ள ஒரு மோதிரத்தை அடகு வெச்சுட்டா நிம்மதியா ஊர் போய்ச் சேரலாம்...''என்று வட்டிக்கடையைத் தேடி அலையும் முடிவுக்கு வந்துவிட்டான் சிவபாலன்.

ஞாயிற்றுக்கிழமையும் திறந்திருக்கக் கூடிய அடகுக்கடைக்கு ஒருவர் ஒன்பது மணிக்குதான் திறப்பார்கள் என்ற உபரித் தகவலுடன் வழிகாட்டினார்.

காயத்ரிக்கு, லேசாகக் காய்ந்திருந்த அந்த பிரட் பாக்கெட்டை தூக்கி எறியாமல் எடுத்து வந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்தது.
அந்த வட்டிக்கடை வாசலில் சிவபாலனும் காயத்ரியும் ஒன்பது மணி ஆவதற்காக காத்திருக்கத் தொடங்கினார்கள்.
***
இந்தக் கதையில் சில வரிகளை நீக்கி, அழகாக எடிட் செய்த உதவி ஆசிரியருக்கும் நன்றி.

வியாழன், 14 ஏப்ரல், 2011

தமிழ் சோறு போடுமா?

எனக்கு இப்போ போடுதே. சரஸ்வதி பூஜை அன்னைக்கு பிறந்த பையன். படிப்பு பிரமாதமா வரும்னு யாரோ சொன்னாங்களாம்.

அவரு சொன்ன மாதிரியே படிப்பு நல்லா வந்துச்சுங்க. ஆனா அது பள்ளிக்கூட படிப்பு இல்லை. கதைபுக் படிக்கிறதுல ரொம்பவே ஆர்வம் அதிகமா போயிடுச்சு.

எனக்கு முதன்முதலா அறிமுகமான புத்தகம்னு சொன்னா அது தினமலர் நாளிதழோட இணைப்பா வெள்ளிக்கிழமையில வெளிவந்த சிறுவர்மலர்தான். பீர்பால், தெனாலிராமன், மரியாதைராமன் உட்பட பல நீதிக்கதைகள் தவிர நிறைய புராணக்கதைகளும் அந்த புத்தகத்தில்தான் படிச்சிருக்கேன்.

தெரிஞ்சவங்க யார் வீட்டுக்காவது போனா அம்புலிமாமா, பூந்தளிர் ஆகிய புத்தகங்கள் கிடைக்கும். நான் எவ்வளவு ஆர்வமா கதைப்புத்தகங்கள் படிக்கத்தொடங்கினாலும் என் அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது.

பாடப்புத்தகத்தை விட்டுட்டு இது என்ன வெட்டி வேலை அப்படின்னு சொல்லுவாங்க. வீட்டுல சிறுவர்மலர் படிக்கிற வாய்ப்பு இல்லாமல் போனதும் தெருவில் உள்ள இரண்டு சலூன் கடைகளை தஞ்சமடைந்து விடுவேன். ஒரு கடையில் தினமலர் மற்றொன்றில் தினத்தந்தி.

பாடப்புத்தகம் தவிர மற்றவற்றை படிப்பதில் ஆர்வம் வந்தது இப்படித்தான். கல்லூரி ஆண்டு மலர் மூலமாக எழுதத்தொடங்கி ஓரளவு அவை பிரசுரமும் ஆனதும் வழக்கமாக என்னிடம் இருக்கும் சோம்பேறித்தனத்தால் தொடர்ந்து எழுதவில்லை.

கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது திருச்சி தினமலர் நாளிதழில் நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். அன்று எனக்கு கல்லூரிப்படிப்பு இறுதியாண்டின் இறுதித்தேர்வு. அப்போது நேர்காணலுக்கு அடுத்த நாள் சென்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லி தயங்கினேன். அது என் வாழ்வில் எட்டு ஆண்டுகளை வீணடித்து விட்டது.

தன்னம்பிக்கையுடன் அடுத்த நாள் சென்று இதைப்போல் நேற்று எனக்கு தேர்வு இருந்தது என்று சொல்லியிருந்தால் அன்றைக்கு நேர்காணலுக்கு அனுமதித்திருந்திருக்கலாம். இந்நேரம் அந்த வேலையில் இருந்து பெரிய நிலைக்கு வந்திருக்கலாம். அல்லது அந்த வருமானம், சூழ்நிலை போன்றவை எனக்கு ஒத்து வராமல் வேறு வேலையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆனால் இரண்டும் நடக்காமல் நாளிதழ் அல்லது தொலைக்காட்சியில் நுழையும் (அரைகுறை) போராட்டத்திலேயே ஏழு ஆண்டுகளுக்கு மேல் தொலைத்து விட்டேன்.

இப்போது சில மாதங்களுக்கு முன்பு திருச்சி தினமலர் நாளிதழின் கிளை அலுவலகத்தில் பக்க வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்தபோதுதான், இந்த ஊதியத்தில் இருந்து படிப்படியாக முன்னேறக்கூடிய வயதைத்தாண்டி விட்டோம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன்.

அதாவது மாயை விலகியது என்று கூட சொல்லலாம். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழில் ஏகப்பட்ட கதைப்புத்தகங்களைப் படித்த அனுபவத்தால் தட்டச்சு செய்வதில் இலக்கணப் பிழைகள் மிக மிக குறைவாகவே வரும். இது நான் கணிப்பொறியில் டி.டி.பி வேலைகள் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

அதனால்தான் தமிழ் எனக்கு சோறு போடுகிறது என்று இந்த பதிவில் எழுதியிருக்கிறேன்.

இதற்காக நான் கடை வைக்க இடம் தேடி அலைந்த போது வேறு சில உண்மைகளை உணர்ந்து கொண்டேன். முக்கியமாக கருப்பு பணம் (முக்கியமாக அரசியல் மூலமாக புழங்குவது) சாமானியர்களைக்கூட எந்த அளவு பாதிக்கிறது என்பது புரிந்தபோது அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

ஒரு ஊரின் பேருந்து நிலையம், முக்கிய கடைவீதி போன்ற இடங்களில் கடைகளுக்கு ஆயிரக்கணக்கில் (லட்சக்கணக்கிலும் கூட) கேட்பது வேறு விஷயம். ஆனால் என்னுடைய டி.டி.பி வேலைகளுக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் கடை இருந்தால் கூட போதும் என்று இடம் தேடினேன். ஆனால் அதற்கே ஐம்பதாயிரம் ரூபாய் முன்பணமும் மாதம் மூன்றாயிரம் ரூபாய் வாடகையும் கேட்டார்கள்.

திருவாரூர் போன்ற இடங்களில் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இதற்கு முக்கிய காரணம், அரசியல் தொடர்புடைய சிலர் தங்களின் பணத்தை கொட்டி காம்ப்ளக்ஸ் கட்டி விட்டனர். அவர்கள் சொல்லும் விலைக்கு பைனான்ஸ் உள்ளிட்ட பல தொழில் செய்பவர்கள் ஒப்புக்கொள்வதால், சாதாரண சிறிய தெருக்களில் உள்ளவர்கள் கூட மிக மிக அதிக முன்பணம் வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் இதெல்லாம் வளர்ச்சி இல்லை. வீக்கம்தான் என்று உணர முடிகிறது.

இப்போது நான் வீட்டில் வைத்து செய்து கொடுக்கும் வேலைகளுக்கு பக்கத்துக்கு பத்து ரூபாய் வாங்குகிறேன். ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி கடை பிடித்தால் ஒரு பக்கத்துக்கு பதினைந்து, இருபது என்று வாங்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவேன் என்பது புரிகிறது.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், திருவாரூரில் பலர் ஒரு கடை வைத்து தொழில் செய்பவர்கள் குறைந்தது இரண்டு மூன்று கடைகளை பிடித்து பூட்டி வைத்து வாடகை கொடுத்து வருகிறார்கள். (தங்கள் கடைகளில் இடம் போதாமல் கிடங்காக பயன்படுத்துபவர்களை நான் சொல்லவில்லை.) தானும் படுக்காமல், தள்ளியும் படுக்க மாட்டேன் என்று சொல்பவர்களை என்ன செய்வது.

(திருவாரூர் மக்களை ஆண்டவன்தான் என்கிட்ட இருந்து காப்பாத்தணும்.ஹி..ஹி...)

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 ஐநூறு தமிழ் அறிஞர்கள் கூடி ஆய்வு (?!) செய்து தை 1 அன்று தமிழ் புத்தாண்டு என்று சொன்ன பிறகும் நீ எப்படி சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டு என்று கூறலாம் அப்படின்னு ஆட்டோவெல்லாம் அனுப்பிடாதீங்க.

தமிழ் பஞ்சாங்க முறையில் வெறும் மூடநம்பிக்கையாக பார்க்காமல் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் வான சாஸ்திர அறிவியல் முறையாக நினைத்துப்பாருங்கள். பிரமிப்பு வரும்.

மனிதன் என்றால் கண்கள், கால்கள், காதுகள், கைகள் போன்றவை இரண்டு என்ற எண்ணிக்கையிலும், இன்னும் பல விஷயகள் சுருதி பிசகாமலும் தான் பிறந்து வருகிறான். அதே போல் அவனுடைய மனமும், அவன் ஈடுபடும் காரியங்களும் அவற்றின் வெற்றிகளும் எதோ ஒரு வரையரைக்குட்பட்டுதான் நடக்கின்றன.

 இதை மிகச் சரியாக ஜோதிடக் கலை மூலமாக கணிக்க முடியும். இதை பலருக்கும் சரியாக செய்ய முடியவில்லை. அதாவது கணக்கு பண்ண முடியவில்லை.

இதனால் ஜோதிடமே தவறு என்ற வாதம் தப்பு. இதை வழிகாட்டிப் பலகையாகத்தான் பயன் படுத்த வேண்டும். வாகனமாக்க நினைத்தவர்கள் அது முடியாமல் போகவும்தான் ஜோதிடமே தவறு என்று சொல்கிறார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சியில் இருக்கும் பலரும் புது வீட்டுக்கு கிரஹப்பிரவேச நாளில் ஹோமம் செய்யாமல் இருப்பதில்லை.

இதுதான் உலகம். அதாவது ஊருக்கு உபதேசம்

புதன், 13 ஏப்ரல், 2011

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...


பகுத்தறிவைப்பற்றி பேசினாலும் திருவாரூர் வாழ் மக்களின் மன உணர்வுக்கு மதிப்பளித்து பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரை சீரமைத்து வலம் வரச் செய்தார் என்று அவரைப்பற்றி பெருமை பேசினார்கள். இருக்கட்டும்.

இப்போது என்னுடைய குழப்பமெல்லாம் என்னவென்றால் முதல்வருக்கும் அவரது குடும்பத்துக்கும் கடவுள் நம்பிக்கை உண்டா, இல்லையா. இந்த உண்மையை தெளிய வைத்தால் நல்லது.கடவுள் பக்தியைப் பற்றி ஒரு பக்கத்துக்கு தங்கள் சவுகர்யத்துக்கு பேசிவிட்டு பின்னர் பிசிறில்லாமல் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். இன்று 13.4.2011 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை எமகண்டம். அதனால் காலை 7.15 மணி சுமாருக்கு முதல்வருக்காக திருவாரூர் தொகுதி முழுவதும் வாக்கு கேட்ட அவரது புதல்வி திருவாரூர் பெரிய கோவிலில் வந்து அர்ச்சனை செய்தார்.

அவங்க உலகத்தில் இருக்கும் எல்லா கோவில்களிலும் பிரார்த்தனை செய்யட்டும். அது அவர்களது உரிமை. அதை பகிரங்கமாக செய்யட்டுமே. தலைவரிடம் கேட்டால் அது என் பெண்ணின் விருப்பம். அதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. என்று சொல்வார். அதையேத்தான் கேட்கிறோம், வழிபாடு என்பது ஒவ்வொரு மனிதனின் மன உணர்வுடன் சம்மந்தப்பட்டது. எனக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை. தன்னம்பிக்கை போதுமே என்று சொல்பவர்கள் அப்படியே இருக்கட்டும். ஆனால் தன்னுடைய மன தைரியத்துக்காக மனிதர்களில் பலர் இறைவனிடம் நம்பிக்கை வைக்கிறார்கள். இதை ஏன் ஏளனம் செய்ய வேண்டும்.

பல ஊர்களின் சிறப்பு மிக்க ஆலயங்களில் பக்தர்கள் சுரண்டப்படுவதற்கு முக்கிய காரணமே அரசியல் வியாதிகள்தான். எதாவது ஒரு கோயிலில் கூட்டம் கூடுவது தெரிந்தால் அந்த கோவில் வாசலில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை வாடகை வசூல் செய்யும் வகையில் ஒப்பந்தம் போட்டு மக்களை மொட்டை அடிப்பதில் முன்னணி வகிப்பது அரசியல் குண்டர்கள்தான்.

அரிசி 1ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் சில கட்டண கழிப்பிடங்களில் சிறு நீர் கழிக்க கூட 2 ரூபாய். கண்டதையும் இலவசமாக கொடுப்பவர்கள், மிக அதிக எண்ணிக்கையிலான கழிப்பிடங்களை அமைத்து மக்களின் பயன் பாட்டுக்கு இலவசமாக திறந்து விட்டால், வியாதிகள் வந்த பிறகு மக்களுக்காக அரசு செய்யும் செலவில் பாதி கூட ஏற்படாது.

இப்போது யோசித்துப்பார்க்கும்போது பல விஷயத்தில் சீர்திருத்தம் தேவை என்று தோன்றுகிறது. ஆனால் என் பார்வையில் முதலிடம் பெறும் தேவை: பசித்திருப்பவனுக்கு ஒரு வேளை உணவை பிச்சையாக போடுவதை விட அந்த உணவை அவனுடைய உழைப்பில் பெற வழி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் முன்பு ஒரு முறை நான் எழுதிய கதை.
 
நெய்விளக்குத்தோப்பு

திருவாரூர் நகரில் பல்வேறு சுடுகாடுகள் இருந்தாலும் அனைத்து வயதினருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது நெய்விளக்குத்தோப்பில் உள்ள சுடுகாடுதான்.இங்குள்ள மக்கள் யாருக்குமே அந்தப் பெயரைக் கேட்டாலோ உச்சரித்தாலோ அவர்கள் மனதில் அச்சம் அல்லது வெறுப்பு கண்டிப்பாகத் தோன்றும்.

ஓடம்போக்கி ஆற்றங்கரையோரம் உள்ள அந்த சுடுகாட்டுப் பகுதியில் நிறைய வீடுகள் வந்துவிட்டன. பேய், ஆவி போன்றவற்றின் மீது மக்கள் கொண்டிருந்த பயம், மூடநம்பிக்கை ஆகியவை மிகவும் குறைந்துவிட்டதற்கான குறியீடுதான் இது.

பேய்கள் பற்றிய வதந்திகளுக்குப் பயப்படாத அந்தப் பகுதி மக்கள் தற்போது நாய்களுக்கு அஞ்சி நடுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

விஜயபுரம் பகுதியிலிருக்கும் பழைய ஆற்றுப்பாலத்தைக் கடந்தால் நகரின் மையப்பகுதியை இணைக்கும் முக்கிய சாலையான நேதாஜி ரோடு. பாலத்தைக் கடந்ததும் நேதாஜி சாலையிலிருந்து ஆற்றோரமாக ஒரு குறுகிய சாலை பிரியும்.

அந்தப் பகுதியைத்தான் நெய்விளக்குத் தோப்பு என்று சொல்வார்கள்.அங்கிருந்து சுமார் ஒருகிலோமீட்டர் தொலைவில்தான் சுடுகாடு என்றாலும், பயம் காரணமாக இப்போதும் மனையின் மதிப்பு மற்ற பகுதிகளைவிட குறைவாகத்தான் இருந்தது.

சுடுகாட்டைக் கடந்து சற்று தொலைவில் இருந்த காலி இடங்களில்தான் நகராட்சி நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு.(வேறு என்ன...குப்பைகள் கொட்டப்படும் கிடங்குதான் அது.)

இது ஒன்று போதாதா...வெறிநாய்கள் அந்த இடத்தில் கூடிக் கூத்தடிக்க?

காரில் செல்பவர்கள் எல்லாம் நம்மை ஒன்றும் செய்யக்கூடாது என்று நீதிமன்றப் படியேறி ஆதரவு கொடுத்த வி­யத்தை அவைகள் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டதாக எண்ணும் அளவுக்கு அவை திட்டம் போட்டு  நடந்து செல்பவர்கள், சைக்கிளில் பயணிப்பவர்கள், முக்கியமாக திண்பண்டங்களை வைத்திருக்கும் குழந்தைகள் என்று இனம் கண்டு துரத்தி துரத்திக் கடித்தன.

அப்படித்தான் ஒருநாள் நான்காம் வகுப்பு படிக்கும் தேவயானியை (காதல்கோட்டை படம் வந்தபோது காமாட்சி வயிற்றில் கருவானவள்) நான்கைந்து நாய்கள் கடித்துக் குதறிவிட்டன.

அவளைக் காப்பாற்றச் சென்ற ஆண்களில் சிலரும் நாய்களிடம் சிக்க வேண்டியதாயிற்று. ஆனால் இது வழக்கமான நிகழ்வு என்பதால் யாரும் காமாட்சியிடம் கோபப் படிவில்லை.

இவளின் கெட்டநேரம்...அரசு மருத்துவமனையில் வெறிநாய்க்கடிக்குரிய தடுப்பூசி இருப்பு இல்லை.

""நாங்க என்னம்மா பண்றது...திருவாரூர் மட்டுமில்லாம சுற்றிலும் இருக்குற நூற்றுக்கணக்கான கிராமங்கள்ல இருந்து தினமும் இப்படி பல கேஸ் வருது.அதிகமா மருந்து அனுப்பச் சொல்லி மேலிடத்துக்கு எழுதி அனுப்பியிருக்கோம்.நீ உன் குழந்தையைக் காப்பாத்தணும்னா வெளியில காசு குடுத்துதான் ஊசி மருந்தை வாங்கிட்டு வரணும்.''என்று மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டார் அந்த மருத்துவர்.

உடனடியாக அவள் சென்று தஞ்சமடைந்தது ஆதிகேசவன் என்ற கந்துவட்டிக்காரனிடம்.
ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்பு காமாட்சியின் கணவன் சிக்குன்குனியா காய்ச்சலால் மிகவும் அவதிப்பட்டான். அதற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் வேறு பல காரணங்களால் வாங்கிய கடனுக்கு தவணை தவறிக் கொண்டிருந்தது. காரணம், இப்போது வரை தெனாலி அந்தக் காய்ச்சலின் பாதிப்பால் வேலைக்குச் செல்ல இயலவில்லை.

நிலைமை இப்படி இருந்தாலும் தேவயானிக்கு உயிரைக் காக்கும் ஊசி வாங்கவேண்டும் என்று கூறிய உடனே பணம் கொடுத்த ஆதிகேசவனை தெய்வத்துக்குச் சமமாக நினைத்துப் புகழ்ந்துவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

ஓரிரு மாதங்களில் அவன் வைக்கப்போகும் வெடி என்ன என்று ஆதிகேசவனைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.ஊசிமருந்து மூலம் தேவயானி உயிர்பிழைத்துவிட்டாலும் நாய்கள் கடித்துக் குதறிய காயம் ஆற இரண்டு மாதங்களாகிவிட்டன.பிறகுதான் பயம் குறைந்து படிப்படியாக பள்ளிக்குச் சென்று வந்தாள்.

தெனாலிக்கு சிக்குன்குனியா பாதிப்பு குறைந்து வேலைக்கு திரும்பிச் சென்றபோது அந்த முதலாளி,""இது ஒண்ணும் அரசு அலுவலகம் இல்லை...வேற ஆளை சேர்த்தாச்சு...”என்று விரட்டிவிட்டார்.

இப்போது அவன் வேறொரு கடையில் மிகக் குறைந்த ஊதியத்துக்கு சம்மதித்து வேலை செய்கிறான்.

""உன் பேச்சைக் கேட்டு நாலு பொண்ணு பெத்தேன் பாரு...இப்ப இதுவும் வேணும்...இன்னமும் வேணும். ஒண்ணோட நிறுத்தி இருந்தா அவளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி இருக்கலாம்.

வைத்திய செலவுக்கு வாங்குன கடனை எந்தக் காலம் கட்டி முடிக்கப்போறோம்னு தெரியலை.நம்ம விதி எந்த நேரத்துல ஆதி ரூபத்துல வந்து ஆட்டம் போடப்போகுதோ தெரியலை.'' என்று காமாட்சி கூறி முடிப்பதற்குள் வீட்டுவாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

இவர்கள் பயந்தது போல் ஆதிகேசவன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியயல்லாம் மிரட்டவில்லை.

"இதப்பாரும்மா...உசுரு சம்மந்தப்பட்ட வி­யம்னுதான் வேற எந்தக் கேள்வியும் கேட்காம ரூபாயை எடுத்து நீட்டுனேன்.கொஞ்சம் அசந்தா உங்களை மாதிரி என்னையும் யார்கிட்டயாவது வட்டிக்குப் பணம் கேட்க வெச்சிடுவீங்க.

தென்றல்நகர்ல தெரிஞ்சவங்க, புரு­ன் பொண்டாட்டின்னு ரெண்டுபேருமே வேலைக்குப் போறாங்க. வீட்டுல மூணுவயசுக் குழந்தை இருக்கு.சமையல் கூட அந்தம்மாவே பண்ணிடும். புள்ளையைப் பார்த்துக்க,மற்ற வேலைகளைச் செய்ய ஆள் வேணும்.வீட்டோட இருக்கணும்னு கேட்குறாங்க. உன் பொண்ணை அனுப்பிவை... முதல்லயே ரொக்கமா ஒரு தொகை தருவாங்க...எனக்கு தர வேண்டிய கடனுக்கு சரியாப்போகும்.

மாசா மாசம் அவுங்க தர்ற பணம் உங்களுக்கு உதவியா இருக்கும். இந்தப்புள்ளைக்கு துணிமணியும் சாப்பாடும் அவங்க வீட்டுலேயே. வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் ரெண்டு மூணு வரு­ம் கழிச்சு அவங்களே ஒரு நல்ல இடத்துல கல்யாணம் கட்டிக் கொடுக்க உதவி செய்வாங்க. வேற என்ன வேணும்? ... ரெண்டு நாள் யோசிச்சு முடிவு சொல்லுங்க. எந்த முடிவா இருந்தாலும் என்கிட்ட வாங்குன கடனைத் தீர்க்குற முடிவா இருக்கணும்மா...''என்ற ஆதிகேசவன் இவளை ஒரு வார்த்தை கூட பேசவிடாமல் கிளம்பிச் சென்றான்.

நாய்க்கடியால் ஊசலாடிய உயிரைக் காப்பாற்றிவிட்டு அந்தக் குழந்தையின் எதிர்காலத்தையே தன் வருமானமாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் ஆதிகேசவன் பேசியதைக் கேட்ட காமாட்சியும் தெனாலியும் திகைத்துப்போய்விட்டார்கள்.

மாற்றுவழி எதுவும் உடனடியாகப் புலப்படவில்லை.

"அப்பவே செத்துருந்தா அந்த நேரத்து அவஸ்தையோட முடிஞ்சிருக்கும்.அப்போ கஷ்டப்பட்டு காப்பாத்தி யார் வீட்டுலேயோ அடிமையா வளரணுமா நம்ம பொண்ணு...''என்று தெனாலி புலம்பினான்.

"அடச்சீ...சும்மாரு...நம்ம சந்தோ­த்துக்காக பெத்த புள்ளைங்களை செத்துருந்தா பரவாயில்லைன்னு சொல்றியே...உனக்கு வெட்கமா இல்லை...ஒழுங்கா அதிக சம்பளத்துல வேற வேலை கிடைக்குதான்னு பாரு...நான் வீட்டு வேலை செய்யுற டீச்சரம்மாகிட்ட ஏதாவது கேட்குறேன்...''என்று காமாட்சி கணவனைத் திட்டிவிட்டுக் கிளம்பினாள்.

"ஏய்... காமாட்சி... இவ்வளவு நடந்துருக்கு...என்கிட்ட ஏதாவது உதவி கேட்டா என்ன?...அட்லீஸ்ட் உன் பொண்ணை நாய் கடிச்ச வி­யத்தையாவது சொல்லியிருந்தா மருந்து செலவுக்காவது ஏற்பாடு பண்ணியிருப்பேனே...''வசுந்தரா டீச்சர் அக்கறையுடன் கேட்டாள்.

"இவ்வளவு பாசமா கேட்டீங்கிளே...அது ஒண்ணு போதும் டீச்சர்...எனக்கும் என் வூட்டுக்காரருக்கும் கைகால் எல்லாம் நல்லாத்தான இருக்குது...அப்புறம் ஏன் அடுத்தவங்ககிட்ட உதவி?...அது ஒரு மாசம் ஜூரத்துல படுத்துட்டதால கொஞ்சம் கஷ்டமாப்போச்சு.
அதோட என் வூட்டுக்காரருக்கு உழைப்புக்கு ஏத்த கூலி கிடைக்குறமாதிரி இருந்தா நாங்க யார்கிட்டயும் கடன் கூட வாங்கத் தேவையில்லை.
டீச்சர்...உங்க பள்ளிக்கூடத்துலதான் கேண்டீன் இருக்கே...அதுல எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுங்களேன்.எந்த வேலையா இருந்தாலும் செய்யுறேன்...எக்காரணம் கொண்டும் நாலு பொண்ணுங்களும் படிக்காம இருக்கக் கூடாது.அதுக்காகத்தான் கேட்குறேன் டீச்சர்...''என்ற காமாட்சியின் குரலில் தெரிந்த உறுதி கண்டு திகைத்துப்போன வசுந்தரா,மனதுக்குள்ளே மகிழ்ந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மேலும் சீண்டிப் பார்க்க முடிவு செய்தாள்.

"காமாட்சி...நீ காலையிலேயும் சாயந்திரமும் ரெண்டு வீடுகள்ல வேலை செய்யுறதே கஷ்டமா இருக்குன்னு சொல்லியிருக்க...இன்னும் ஏன் சிரமம்...ஆதிகேசவன் சொன்ன மாதிரியே தேவயானியை வேலைக்கு அனுப்பிட்டா அவளுக்காவது நல்ல உணவு துணிகள் கிடைக்கும். உங்களுக்கும் இப்ப கஷ்டம் தீரும்... எல்லாத்தையும் விட அவளோட கல்யாணத்தைக் கூட அவங்க செலவுல செய்யுறதுக்கு தயாரா இருக்குறது சாதாரண வி­ஷயமா?... நீ கஷ்டப்பட்டு உன் பொண்ணைப் படிக்க வெச்சாலும் பின்னால சம்பாதிச்சு உனக்கா தரப் போறா?... எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசி...''என்ற வசுந்தரா,காமாட்சியின் பதிலுக்கு ஆர்வமானாள்.

"இவ்வளவு படிச்ச நீங்களே இப்படி பேசலாமா டீச்சர்? ஆதிகேசவன் சொன்னபடி செஞ்சு என் பொண்ணும் நாளைக்கு என்னைப் போலவே நாலு பெத்து கஷ்டப்படணுமா?

நானும் என் புரு­னும் ஒழுங்கா பள்ளிக்கூட படிப்பையே முடிக்கலை.அவரு கடைகடையா தாவிகிட்டு சரியான சம்பளம் வாங்க முடியாம அல்லாட, நான் வீடு வீடா பாத்திரம் தேய்ச்சு பிழைப்பை நடத்தலாமான்னு பார்க்குறேன்.

பத்தாவது வரை படிக்க வெச்சாலும் மளிகைக் கடையிலோ எஸ்.டி.டி பூத்துலேயோ அவனுங்க குடுக்குற எழுநூறு எட்டுநூறுக்கு உயிரைக் குடுத்து வேலை செய்யணும்.அதோட ஒரு சில பொறுக்கி முதலாளிங்க தர்ற வேற விதமான தொந்தரவையும் தாங்கணும். இது எல்லாம் தேவையா... கல்லூரி வரை படிக்க வெச்சு, கம்ப்யூட்டர் கிளாசுக்கு அனுப்பிட்டா அப்புறம் அவ சாமர்த்தியம்.

நான் என்னைப் பெத்ததுங்களை திட்டுற மாதிரி என் பொண்ணுங்க என்னைய எதுவும் சொல்லக்கூடாது.அதுக்காக என்னால முடிஞ்ச அளவு என்ன...அதுக்கும் மேலேயே உழைக்கத் தயாராயிட்டேன்.”

"காமாட்சியிடமிருந்த தெளிவான குறிக்கோள் நன்கு படித்து பட்டம் பெற்ற பெண்களிடம் கூட இருப்பது சந்தேகம்தான்...'என்று வியந்த வசுந்தரா,

"இவ்வளவு கஷ்டத்துலேயும் என்கிட்ட பண உதவியை எதிர்பார்க்காம, உன்னைய நம்புன பாரு...அதுக்காக உனக்கு என்ன வேணுன்னாலும் செய்யலாம்.எனக்கு ரொம்ப சந்தோ­மா இருக்கு''என்றாள்.

"பெரிசா எதுவும் வேண்டாம்மா...எனக்கு கேண்டீன்ல வேலை...என் வூட்டுக்காரருக்கு உழைப்புக்குத் தகுந்த கூலி கிடைக்குற மாதிரி வேலை...அது போதும்.''என்று சிரிக்க வசுந்தராவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.

சனி, 9 ஏப்ரல், 2011

இந்த ஒற்றுமை நன்மைக்கா?

இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சியான தருணம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கடந்த 2007ல் எந்த எதிர்பார்ப்பும் ஏற்படாத வகையில் முதல் சுற்றிலேயே நாம் வெளியேறி வந்து விட்டோம். 2003ல் பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் ஆஸ்திரேலியா நமக்கு ஆப்பு வைத்தது. ஆனால் 2011ஐ பொறுத்தவரை லீக் மேட்ச் வரை மெகா சீரியல் போல் சென்றுகொண்டிருந்த இந்திய அணியின் ஆட்டம், நாக் அவுட் சுற்றில் நச் என்று மூன்றே ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று கோப்பையைக் கைப் பற்றியது. எந்த நேரமும் பரபரப்பாக இயங்கும் நாட்டின் முக்கிய நகரங்களில் இதயம் போன்ற சாலைகள் கூட வெறிச்சோடிப்போயின.

இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதிய அரையிறுதி ஆட்டம் துவங்கும் நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டது. அன்று முழுவது இப்படித்தான் ஏறத்தாழ ஒண்ணரை மணி நேரம் பவர் கட். உடனே திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கிரிக்கெட் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அந்தப் பக்கமாக சென்ற நாகை கலெக்டருடைய காரை வழிமறித்து சாலை மறியல் போராட்டம் செய்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்தன.

கிரிக்கெட் மீது வெறித்தனமாக இருக்கும் பலர் சொல்லும் சப்பைக்கட்டு காரணம், இந்த ஒரு விஷயத்தில் நம் நாட்டு மக்களின் தேசப்பற்று தெரிகிறது என்பதுதான்.

போட்டி நடக்கும்போது மைதானத்திலோ அல்லது வீட்டிலோ இருந்து ஆரவாரத்துடன் நேரிலோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ போட்டியைப் பார்ப்பதுடன் இவர்களின் ஒற்றுமை முடிந்து விடும்.

மின்வெட்டு காரணமாக பல தொழில்கள் முழுமையாகவோ,பகுதியாகவோ முற்றிலும் நசிந்து விட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து கொண்டிருக்கின்றனர். அதுதான் வருடம் தோறும் மென்பொருள் துறையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கிறதே என்று சப்பையாக ஒரு காரணம் சொல்வார்கள்.

நாங்கள் குடியிருந்த பகுதியிலேயே இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லையே என்று தெருவில் குடியிருக்கும் கட்சி பிரதிநிதியிடம் சண்டை போட்டு வாங்கிய மக்கள், சாக்கடை எந்த நேரமும் நிரம்பி வழிவதைப் பற்றி நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க முன்வருவதில்லை. அவ்வளவு ஏன், நான் மனு எழுதினால் கூட தெருவாசிகள் என்ற முறையில் கையெழுத்து போடக்கூட மிகவும் தயங்குகிறார்கள்.அது வெறும் கோரிக்கை மனுதான். அதற்கே இப்படி.

இவர்கள் எங்கே ஒரு அநீதி என்றால் பொது நல மனு மூலம் நீதிமன்றத்தில் கேள்வி கேட்கப்போகிறார்கள்.?

சமுதாயத்திற்கு நல்லது செய்யும் விஷயத்தில் இல்லாத ஒற்றுமை ஒரு கேளிக்கையை ரசிக்கும்போது மட்டும் இருப்பது வரமா சாபமா?

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வி முறையை கொண்டு வந்து மனப்பாடம் செய்வதில் வல்லவர்களுக்கு மட்டும் நல்ல கல்வி என்ற முறையை கச்சிதமாக செய்து விட்டுப் போனார்கள். நாம் கொஞ்சம் முன்னேறி மனப்பாடம் செய்ய முடியவில்லை என்றால் என்ன, கருப்போ, வெள்ளையோ...உன்னிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்தால் உயர்கல்வி உண்டு. பிறகு அதை நீ இந்த சமுதாயத்திடம் எப்படி சுரண்டினாலும் ஓ.கே என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டோம்.

இப்போது அதையும் தாண்டி, நூறு நாள் வேலைத்திட்டம், இலவசம் அது இது என்று கொண்டு வந்து குறிப்பிட்ட சாரரை மேலும் சோம்பேறிகளாக்கி மிகச்சில முதலாளிகளிடம் மட்டுமே கருப்பு பணம் குவிய வழி செய்து கொண்டிருக்கிறார்கள்.

 சிறுதொழில்களையும் விவசாயத்தையும் நாம் அழிய விட்டுக்கொண்டிருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இந்தியாவில் வளர்ந்து நிற்கும். அதற்கு முக்கிய காரணம் நமது மக்கள் தொகை. இவ்வளவு மக்கள் தொகை இருக்கும் நம் நாட்டின் பலமும் பலவீனமும் இதுதான்.