Search This Blog

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதல் என்பது...

தமிழ் சினிமாவில் காதலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமாக அடித்து துவைத்து பிழிந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இப்போது வரும் படங்களில் வரும் காதல் காட்சிகள் பெரும்பாலும் அபத்தமாகவே இருக்கின்றன.

2000வது ஆண்டுக்கு முன்பு வரை படங்களில் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இப்போது வித்தியாசம் என்ற பெயரில் அபத்தமாகத்தான் எதையாவது செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. என் வயது முப்பதை தொடப்போவது கூட  இதற்கு காரணமாக இருக்கலாம்.

அது போகட்டும். சென்ற ஆண்டு யூத்ஃபுல் விகடனில் நான் கண்ட நிஜக்காதல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. நான் கல்லூரியில் படிக்கும்போது சக மாணவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு கனவு தேவதையை மனதில் நினைத்து டூயட் பாடிக்கொண்டிருந்த நேரம், சக மாணவி ஒருத்தி என்னிடம் வந்தாள். "நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே ஒருவரை நேசிக்கிறேன். இது சரியா, நான் அவரை நம்பி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று அவள் கேட்கும் அளவுக்கு நான் பொறுப்பான ஆளாக தெரிந்திருக்கிறேன்.(நான் ரொம்ப நல்லவனாக்கும் அப்படின்னு பில்டப் கொடுக்க விரும்பலை. டீனேஜ் வயதில் எல்லோரையும் போல் இளம் பெண்களைப் பார்க்கும்போது மனதில் ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை முழு நேரம் படிப்பு பகுதி நேரம் என்ற அளவில் ஆகிவிட்டது.வருமானத்தை தேடி ஓடினேன்...ஓடினேன் என்ற அளவில்தான் இன்னமும் இருக்கிறேன்.)

அந்த மாணவி என்னிடம் ஆலோசனை கேட்பதற்கு முக்கிய காரணம், அப்போது என்னுடன் படித்துக்கொண்டிருந்தவர்களில் நான்தான் நன்றாக படிப்பவன் (செய்தி, கதை, கட்டுரை என்று கையில் சிக்கும் எல்லாவற்றையும்) என்பதால்தான்.

அந்த மாணவி வீட்டின் எதிர்ப்பை மீறி உறுதியாக நின்று காதலித்தவனையே திருமணமும் செய்து கொண்டாள். இப்போது ஒரு குழந்தை இருக்கிறது.


இதே போல் வேறு சில காதலர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இருவர் காதலித்தார்கள். அந்தப் பெண் தன் காதலனின் ஜாதகத்திற்கு பொருந்தும் வகையில் தனக்கும் ஜாதகம் தயார் செய்து இரு  வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டாள். இருவரும் வேறு வேறு ஜாதி. ஆனால் இருவரின் வீட்டிலும் ஜாதி நம்பிக்கையை காட்டிலும் ஜாதக நம்பிக்கை அதிகமாக இருந்தது இவர்களின் அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் தன் காதலனின் சகோதரன் மனைவி கொண்டுவந்ததைக் காட்டிலும் அதிகமான வரதட்சணைதான் வேண்டும் என்று பிறந்த வீட்டிடம்  அடம் பிடித்ததுதான்.


அடுத்த சில காதல் விவகாரங்கள் உறவினர் வீடுகளில் நடந்தது. முன்பெல்லாம் மிக அதிகமாக எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை ஒதுக்கி வைத்திருந்த சம்பவங்கள் எல்லாம் என் கண் எதிரே நடந்திருக்கிறது. ஆனால் இப்போது எல்லாம் அந்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லை. அதற்கு முக்கிய காரணம், கணிணிப்புரட்சிதான். இப்போது தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பின்பு ஒரு காலத்தில் பலரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக இளம் வயதில் மிக அதிகமாக சம்பாதிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

அந்த பணம்தான் பல பெற்றோர்களின் காதல் ஏற்பு கொள்கைக்கு காரணமாக இருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கும்போது, இளம்பெண்கள் பின்னாலேயே சைக்கிளில் செல்லும் இளைஞர்களை மோசமாக திட்டிய ஒருவர் சமீபத்தில் தனது மகளுக்கு அவள் காதலனையே திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

அதற்கு அவர் சொல்லும் காரணம், வளர்ந்த புள்ளை, அவளுக்கு நல்லது கெட்டது தெரியாதா என்ன...இப்படி அவர் பேசக் காரணம் காதலித்த அந்த பெண் சென்னையில் ஒரு கணிணி நிறுவனத்தில் மாத சம்பளமாக அரை லகரத்துக்கு மேல் வாங்குகிறாள்.

பல பெற்றோர்களுக்கு தங்கள் மகனோ, மகளோ தேர்ந்தெடுத்திருப்பது நல்ல வாழ்க்கைத்துணைதானா என்ற அக்கறை அவ்வளவாக கிடையாது. நாம் சொல்பவரை திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் வெளியில் இருப்பவர்களிடம் தன் மகன், மகள் தன்னுடைய பேச்சை மீற மாட்டார்கள் (அடிமைகள்) என்பதை சொல்லிக்கொள்ளும் ஆசை மட்டுமே. இப்போது இந்த மனோபாவம் மாறியிருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பொருளாதாரக்காரணங்கள் பல பெற்றோர்களை வேறு வழியின்றி மாற வைத்திருக்கிறது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கிட்டத்தட்ட முப்பது வயதாகும் பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது வருமானத்தை முக்கியமாக கருதும் அவரது பெற்றோர் மகளின் திருமணப்பேச்சை எடுப்பதே இல்லை என்பதை விட கவனமாக தவிர்த்துவருகிறார்கள் என்று சொல்லாம். இப்படிப்பட்டவர்களை நான் இது நாள் வரை கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டும்தான் அறிந்திருந்தேன். கல்லூரியில் என்னுடன் படித்த மாணவியையே இந்த நிலையில் பார்க்கும்போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பல சூழ்நிலைகளில் ஒரு சாமானியனாக வெறும் பார்வையாளனாகவே கடந்து செல்லவேண்டியிருக்கிறது.

இந்த இருபத்து ஒன்பது வயது பெண்ணின் கதை இப்படி என்றால் மூன்று தினங்களுக்கு முன்பு 20வயது நிரம்பாத பத்தாம் வகுப்பு கூட படிக்காத பெண் காதலனுடன் தலைமறைவாகிவிட்டாள். தந்தை இறந்து விட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தாய் மிகக்கடுமையாக உழைத்து மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் காதலுக்கு எதிர்ப்பு வருமோ என்று அஞ்சி இவள் அவனுடன் தலைமறைவாகி விட்டாள்.

தினம் தினம் இப்படி பல சம்பவங்களைப் பார்க்கிறேன். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் பலரும் எனக்கு நண்பர்களாக இருப்பதால் இது போன்ற பல செய்திகள் என் கவனத்துக்கு வந்து விடுகின்றன.

இதையெல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் காதலா...அடச்சே...என்று துப்பத் தோன்றுகிறது. அப்படி சொன்னால் கார் ஓட்டத்தெரியாதவன் காரைக் கொண்டு போய் மோதிவிட்டு காரைக் குற்றம் சொன்ன கதையாகிவிடும்.

காதல் என்பது காதலர்களுக்கும் சரி, அவர்களது குடும்பத்துக்கும் சரி மன வேதனையை, இழப்பை கொடுக்காமல் இருக்க வேண்டும். பல நேரங்களில் பையனோ/பெண்ணோ சரியான துணையை தேர்வு செய்திருந்தாலும் ஈகோ காரணமாக பகைமை பாராட்டுவது இதில் சேராது.

மொத்தத்தில் காதல் என்பது சரியா தவறா என்று வரையறுத்துக்கூறிவிட என்னால் முடியவில்லை.

இருவரது மனம் ஒத்துப்போவதில் தொடங்கி படிப்பு, வேலை, குடும்ப நிலை என்று பல புறக்காரணிகள்தான் காதலை சரி, தவறு என்று எண்ண வைக்கின்றன.

2 கருத்துகள்: