Search This Blog

வெள்ளி, 14 ஜனவரி, 2011

எதற்காக போகி?

ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை வரும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழும். இந்த பண்டிகைகள் இப்போது வரவில்லை என்று யார் அழுதா?...இப்படி ஒரு எண்ணம் பலருக்கும் தோன்றக்காரணம் இந்த நேரத்தில் மட்டும்தான் வீடு கடை போன்ற இடங்களை சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமங்கள்தான். ஆனால் இப்படி ஒரு பண்டிகை இல்லை என்றால் ஒவ்வொரு இடமுமே அகற்ற முடியாத குப்பைகளை மட்டுமே சுமந்து கொண்டிருக்கும்.

போகிப் பண்டிகை  வேண்டாத பொருட்களை கழித்துக்கட்டுவதற்காகவேதான் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சும்மா இருப்பவன் ஆணி புடுங்கிய கதையாக, போகி அன்று எதையாவது கொளுத்த வேண்டும் என்பதற்காகவே டயர் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பலவற்றை எரிக்கும் அறிவுஜீவிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேண்டாத குப்பைகளை உரிய முறைப்படி வெளியேட்ற்றுபவர்கள்தான் உண்மையிலேயே போகிப்பண்டிகையை கொண்டாடி வீட்டுக்கும் உலகத்துக்கும் நன்மை செய்பவர்கள் என்பது என் எண்ணம்.

போகிப்பண்டிகை அன்று வேண்டாத பொருட்களை மட்டும்தான் உதற வேண்டுமா? தீய எண்ணங்களை அகற்றுவதும் நல்ல விஷயம்தான். சமீபத்தில் நான் பார்த்த இரண்டு தொ(ல்)லைக்காட்சி விளம்பரங்கள் புது ஆண்டில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது சற்று வியப்பை ஏற்படுத்தியது. சிறுவர்களுக்கிடையே படகுப்போட்டி. குறிப்பிட்ட பிஸ்கட் தின்பவர்கள் நல்ல எனர்ஜியுடன் சுறுசுறுப்பாக படகை இயக்குவார்கள். அந்த பிஸ்கட் சாப்பிடாத இன்னொரு குழு சோர்ந்து இருப்பார்கள். பிஸ்கட் தின்றால் மட்டுமே எனர்ஜி முழு அளவில் வந்து விடும் என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனால் சோர்ந்து போய் இருக்கும் சிறுவர்களுக்கும் அந்த பிஸ்கட்டை உற்சாகமாக இருப்பவர்கள் தந்தவுடன் இருவரும் சம வேகத்தில் செல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

விளையாட்டுப்போட்டியில் வேண்டுமானால் யாராவது ஒருவர் வெற்றி பெறுவது அவசியமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் எல்லாருமே வெற்றி பெறுவதற்கு உரிமை உள்ளது. ஒருவருடைய சாப்பாட்டை இன்னொருவர் தட்டிப்பறிக்க அவசியமில்லை. இத்தகைய எண்ணம்தான் அந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.

இன்னொரு விளம்பரத்தில் ராகிங் செய்து தன் கால்சட்டையை கழட்டி விடும் சக மாணவர்களை அந்த சிறுவன் ஆசிரியையிடம் காட்டிக்கொடுக்காமல் இருப்பான். குறும்பு செய்த சிறுவர்களும் திருந்தி நண்பர்களாகி விடுவார்கள். இதில் பெரியவர்களும் பாடம் கற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயம், இப்படி ஒவ்வொரு முறையும் மன்னித்துக்கொண்டிருக்கத்தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு முறை போதும். மன்னிப்பதே வேலையாக இருந்தால் சில நேரங்களில் அது நமக்கே ஆபத்தாக முடியலாம்.

எல்லா விளம்பரங்களுமே இப்படி நேர்மறை எண்ணங்களைத்தாங்கி வந்தால், பாட்டி சொல்லும் நீதிக்கதைகள் குறைந்து வரும் இந்த நேரத்தில் நல்ல மாற்றாக அமையும் என்று நினைக்கிறேன்.

10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தியேட்டரில் வேலைபார்த்து வந்த நான் ஒரு சில காரணங்களுக்காக அந்த வேலையை விட்டு விலகி வெளியில் வந்தேன். பிறகு மீண்டும் நான் தனித்தேர்வராக பிளஸ் டூ எழுதி கல்லூரியில் படித்து இப்போது ஒரு பிரபல நாளிதழில் பக்க வடிவமைப்பாளராக இருக்க முக்கிய காரணம் மிகச்சிறிய சம்பவம் என்று மற்றவர்கள் சொல்லும் ஒரு விஷயத்துக்காக நான் கோபத்துடன் தியேட்டர் வேலையை விட்டு வந்ததுதான். கோபம் கூடாது என்று சொல்வார்கள். அப்படி இல்லை. கோபம் வேண்டியதுதான். அது நமக்கு மட்டுமல்ல. பிறருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது.  ஆனால் நமக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும். என் வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அந்த நாள் 1998ம் ஆண்டு போகிப்பண்டிகை.

2000ம் ஆண்டில் நான் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து அவ்வப்போது எழுதி வந்தேன். கல்லூரி ஆண்டு மலரிலும் கதை வெளிவந்தது. ஆனால் வெளி பத்திரிகையில் முதல் கதை பிரசுரமானது 2003ம் ஆண்டு போகி அன்று வெளிவந்த திருச்சி மாலைமுரசு பொங்கல் மலரில்தான்.

இதுபோல் பலருக்கும் பல சிரமங்கள் அழிந்து நன்மைகள் பிறக்கும் திருநாளாக இந்த போகி அமைய வாழ்த்துக்கள்.

1 கருத்து: