Search This Blog

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே...

இந்த தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்திரைப்படம் வந்திருக்கிறது.கதையின் நாயகன் மன்சூர்அலிகான் என்று நினைக்கிறேன்.அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை.

பழமொழியைப்போல் சொல்லப்பட்ட இந்த வாக்கியத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று யோசித்துப்பார்த்தேன்.என் அறிவுக்கு எட்டிய அளவிலும் சரி, அனுபவத்திலும் சரி...உண்மை சுடுவதாகத்தான் இருக்கிறது.

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் வேலையை விட்டு விலகிவிட்டார்.அதற்குக் காரணம், என்னைப் பொறுத்தவரை அற்பமாகத்தான் தெரிகிறது.

அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்ட காலதாமதத்தை சரிசெய்யவேண்டும் என்றால் அந்தப் பெண் செய்யும் வேலைகளை வரிசை மாற்றி செய்ய வேண்டும். இதைத்தான் மிகச் சாதாரணமாக மேலதிகாரி சொன்னார்.

கடைநிலை ஊழியர்கள் இரண்டு பேர், தங்களுக்குரிய ஸ்டேட்மெண்ட்டைத்தான் முதலில் தயார்செய்து தரவேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் அன்புத்தொல்லை கொடுத்து இவ்வளவு நாளும் வாங்கிக்  சென்றுகொண்டிருந்தார்கள்.

இப்போது யார் பேச்சைக் கேட்பது என்று குழம்பிய அந்தப்பெண் வியர்த்து விறுவிறுத்து ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து அழுது கொண்டே அந்த நேரத்துடன் வேலையை விட்டுச் சென்றுவிட்டார்.(இதற்கு முன்னோட்டமாக சக ஊழியைகள் இருவருடன் ஏற்படும் சிறு மனஸ்தாபத்திற்கே கண்ணீர் வடித்தவர்தான் இவர்.)
இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும், அதை விட்டு விட்டு நீங்கள் சொல்வதுபோல் மாற்றினால் இந்த மாதிரியான சிக்கல்கள் வரும் என்பது மாதிரியான சூழ்நிலைகள் ஒவ்வொரு அலுவலகத்திலும் இருக்கும். இதைத் தெளிவாக மேலதிகாரியிடம் பேசும் துணிச்சல் இருக்க வேண்டும். அதற்கு சாத்தியமில்லாத துக்ளக் தர்பார் நடக்கும் இடம் என்றால் அவர்கள் சொல்வது படி செய்துவிடுவது உத்தமம். ஏதாவது சொதப்பலானால் சொன்னவரைக் கைகாட்டிவிட்டு நாம் நல்ல பிள்ளையாக வேடிக்கை பார்க்கலாம்.

இந்த இரண்டு நிலைகளிலும் இல்லாமல் பிரச்சனைகளைக் கண்டு அழுதுகொண்டு ஓடிய அந்தப் பெண் ஒரு பொறியியல் பட்டதாரி. இந்தப் பெண்ணுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் மாத சம்பளம் கொடுத்த இடத்திலேயே சிறிய காரணத்தால் அழுதுகொண்டு வேலையை விட்டு விலகிய இவர் பல ஆயிரங்கள், லட்சங்கள் என்ற அளவில் ஊதியம் கிடைக்கும் இடத்திற்கு வேலைக்கு சென்றால் அங்கு இருக்கும் வேலைப்பளு,
ஊழியர்களுக்கு இடையில் இருக்கும் அரசியல், வேறு சில சிக்கல் என்று அனைத்தையும் எப்படி சமாளிப்பார்?
யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் வேலையில் சொதப்பியவுடன் அவரது டிரெய்னரான நயன்தாராவை அந்த டீம்லீடர் திட்டுவார். அதைத் தாங்க முடியாமல் நயன்தாரா அழுததும் எனக்கும் அழுகை வந்தது.(அவ்....)

இந்த மாதிரியான கடுமையான வார்த்தைகள் எதுவும் இல்லாமல் பணி வரிசையில் சில மாற்றங்கள் சொன்னதையே தாங்க முடியாமல் வேலையை விட்ட அந்தப்பெண் போல நிறைய ஆண்களும் இருக்கலாம். படிப்பு மட்டும் ஒருவருக்கு எல்லா விஷயத்தையும் கற்றுத்தந்துவிடாது என்பது எனக்குப் புரிஞ்சுடுச்சு.

திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளரான காலம்சென்ற ஏ.வி.மெய்யப்பன் அவர்களைப் பற்றிய நூல் ஒன்றில் என்னைக் கவர்ந்த விஷயம் ஒன்று எல்லாருக்குமே பொருந்தும் என்று நினைக்கிறேன்.

எந்த ஒரு செயல் அல்லது விஷயத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படி இல்லாமல் அது சரியாக வராது என்று நீங்கள் கருதினால் அதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் காரணம் கூற வேண்டும்.சுருக்கமாக சொன்னால் சமாதானமாகு அல்லது சமாதானப்படுத்து. அவ்வளவுதான் வெற்றியின் ரகசியம்.
நான் இந்தப் பதிவின் மூலம் சொல்வதும் இதுதாங்க.முடியும் அல்லது முடியாது என்ற இரண்டு நிலையில் எதாவது ஒரு முடிவில் தெளிவாக இருக்கவேண்டும்.அதை விட்டு விட்டு விலகி ஓடினால் எவ்வளவு விஷயங்களுக்கு எவ்வளவு தூரம், எத்தனை நாள்தான் ஓட முடியும்?

இப்படி அதிரடி முடிவு எடுக்காமல் மழுப்பலாக இருந்து காலத்தின் போக்கில் சரியாகும் என்று விடக்கூடிய சூழ்நிலைகள் குடும்பத்திலும் பொதுவாழ்விலும்  இருக்கும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

சமாதானமாகு அல்லது சமாதானப்படுத்து - இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் வெற்றியைத்தரும் ஃபார்முலாக்களில் இதுவும் ஒன்று.

3 கருத்துகள்:

  1. //முடியும் அல்லது முடியாது என்ற இரண்டு நிலையில் எதாவது ஒரு முடிவில் தெளிவாக இருக்கவேண்டும்.அதை விட்டு விட்டு விலகி ஓடினால் எவ்வளவு விஷயங்களுக்கு எவ்வளவு தூரம், எத்தனை நாள்தான் ஓட முடியும்?//

    நல்ல கேள்வி.

    //சமாதானமாகு அல்லது சமாதானப்படுத்து//

    அருமை.

    //வேலையை விட்ட அந்தப்பெண் போல நிறைய ஆண்களும் இருக்கலாம்.//

    அப்புறம் ஏங்க இப்படியொரு தலைப்பு:)?

    பதிலளிநீக்கு
  2. @ ராமலஷ்மி மேடம் மற்றும் அனைவருக்காகவும் இந்த விளக்கம்.

    1.எங்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்பம் தண்ணீரை ஊதாரித்தனமாக செலவு செய்யும். இதனால் மற்ற மூன்று குடித்தனக்காரர்களுக்கு அதிக அளவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சுட்டிக்காட்டியதால் ஆத்திரமடைந்த அந்த குடும்பத்தலைவி தன் கணவனிடம் வார்த்தைகளைத் திரித்துக்கூறி பெரிய சண்டையை ஏற்படுத்திவிட்டார்.

    2.நண்பர் ஒருவர் சிறுவயதில் இருந்தே மிகவும் சிரமப்பட்டுத்தான் ஒரு தொழிலில் ஈடுபட்டு முன்னேறினார்.அந்த தொழிலுக்கு ஒரு நாளில் பதினைந்து மணி நேரம் வரை தேவைப்பட்டது.தற்போது அவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது.அவரது மனைவி, கணவருடன் வெளியில் செல்வதற்குத் தடையாக இருக்கிறது என்று கருதி இந்த தொழிலையே விட வைத்துவிட்டார்.

    3.இன்னொரு நண்பருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகுதான் அவரது மனைவிக்கு அரசு வேலை கிடைத்தது. அந்தப்பெண்ணுக்கு தன் கணவர் தினக்கூலி வேலைதான் பார்க்கிறார் என்ற வருத்தமோ,அலட்சியமோ இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.ஒரு முறை இது பற்றி பேச்சு வந்தபோது, எனக்கு வேலை கிடைப்பதற்கு முன்பு, இந்த வேலை பார்த்துதானே குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்.அப்போ அந்த வேலையும் மரியாதைக்குரியதுதானே என்று ரொம்ப இயல்பாக பேசினார்.

    நான் நேரில் கண்ட மேலே கூறிய மூன்று சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து இந்த பதிவை எழுத நினைத்ததால்தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற தலைப்பில் தட்டச்சு செய்ய உட்கார்ந்தேன். ஆனால் அலுவலகத்தில் அந்தப் பெண் வேலையை விட்டு விலகியதும் அந்த விஷயத்தை மட்டுமே பதிவு ஆக்கிரமித்துக்கொண்டது.

    வழக்கமாக இளையபாரதத்துக்கு வருபவர்கள் தவிர வம்பு பேச நினைப்பவர்களையும் தலைப்பு இழுக்கும் என்று தோன்றியதால் அப்படியே விட்டுவிட்டேன்.

    அவ்வளவுதான் விஷயம்.

    பதிலளிநீக்கு