Search This Blog

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

தளபதி முதல் எந்திரன் வரை 1

இவரு பெரிய வி.ஐ.பின்னு நினைப்பு...படம் பார்த்த அனுபவங்களை அப்படியே அசைபோட வந்துட்டாருன்னு சொல்லிகிட்டே நிறைய பேரு பல்லைக் கடிக்கிறது எனக்கும் கேட்குதுங்க.ஆனா என்ன பண்றது?...சில விஷயங்களை இப்ப நினைச்சா எனக்கே சின்னப்புள்ளைத்தனமாத்தான் தெரியுது.அதனாலதான் இந்த பதிவு.



ராஜா சின்ன ரோஜா படம் திருவாரூர் சோழா தியேட்டரில் திரையிடப்பட்டபோது அங்கே வாழைமரம் தோரணம் என்று திருவிழாக்கோலம் பூண்டிருந்ததை அம்மாவுடன் கடைத்தெருவுக்குப் போகும்போது பார்த்திருக்கிறேன்.அப்போதெல்லாம் நான் தொலைக்காட்சி பார்த்த அனுபவம் என்றால் கோவில் திருவிழா அல்லது திருமண நிகழ்ச்சியின் போது விசிஆர் பயன்படுத்தி திரையிடப்பட்ட படங்களைப் பார்த்ததாகத்தானிருக்கும்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தளபதி படம் வெளிவந்தது.அப்போது அந்தப் படம் பார்க்க எங்கள் வீட்டில் அழைத்துச்செல்லவில்லை. என் தந்தை வைத்திருந்த டீக்கடையில் மாதக்காலண்டர் ஒன்றை அப்பாவின் நண்பர் ஒருவர் கொண்டுவந்து தந்தார். பக்கத்துக்கு ஒரு தளபதி படத்தின் ஸ்டில்ஸ் அச்சாகி இருந்தது.

பானுப்ரியாவின் கணவராக படத்தில் நடித்த தினேஷ் தலையின் பின்புறம் மங்கலாகத் தெரிய,  ரஜினிகாந்த் முகம் மட்டும் ஷோல்டர் ஷாட்டாக இருக்கும் ஸ்டில், போலீசார் ரஜினியை லாக்கப்பில் சித்ரவதை செய்யும் காட்சி, சுந்தரி என்று தொடங்கும் பாடலில் ஷோபனா ரஜினிக்கு மாலையிடும் காட்சி, உட்பட இன்னும் சில புகைப்படங்கள் அந்த காலண்டரில் அச்சாகி இருந்ததன.
சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் உருவான இந்தப் படத்தின் ஸ்டில்களில் இருந்த வித்தியாசமான (இருபது ஆண்டுகளுக்கு முன்பு) லைட்டிங் அந்த வயதிலேயே என்னைக் கவர்ந்தது.ஆனால் அந்தப் படத்தை நான் சன்டிவியில் பார்த்த பிறகுதான் திரையரங்கில் பார்த்தேன்.கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு.

திருவாரூரில் இருந்த பேபி தியேட்டரில் மணிரத்னம் படத்தில் இருக்கும் லைட்டிங் போலவே எல்லாப் படங்களுமே மங்கலாகத்தான் தெரியும். வேறு என்ன செய்வது என்று தளபதியை அந்த திரையரங்கத்தில் பார்த்து ரசித்தேன்.(?!)

இப்போது அந்த தியேட்டர் இடிக்கப்பட்டதால் மரம், செடி, கொடி, புதர்கள்தான் அங்கே இருக்கின்றன. இன்னும் அந்த தியேட்டர் நினைவாக மிச்சமிருப்பது அந்த தியேட்டர் இருந்த சாலைக்கு பேபி டாக்கீஸ் ரோடு என்ற பெயர் மட்டும்தான்.
******
வெயில் படத்தில் பசுபதி சிறுவயது பையனாக தியேட்டர் கேபினில் இருக்கும்போது பிலிமில் நேரடியாக படத்தைப் பார்க்கிறேன் என்று அவ்வளவு பிலிமையும் உருவிக் குவித்துவிடுவார்.

பிலிம் சுருளை புரொஜக்டரில் பொருத்தி திரையிட உதவும் ஸ்பூல் ஒரு சக்கரம் போலத்தான் இருக்கும். இரு பக்கமும் கம்பிகள் இருப்பதால் பிலிம் உருவிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கும். ஒரு ஸ்பூலில் நிறைய இருக்கும் பிலிம் இருபத்தைந்து நிமிடம் வரை ஓடும்.அந்த ஸ்பூல் அளவை விட அதிகமாக பிலிம் இருந்தால் அதை ஓவர் லோடு என்று சொல்வோம்.

புரொஜக்டரில் இருந்து கீழே இறங்கும் பிலிம் மிகச் சரியாக சுற்றிக்கொள்ளும்.ஆனால் அதை ரீவைண்ட் செய்யும்போது உருவிக்கொள்ளாமல் சுற்றுவதுதான் ஆப்ரேட்டர்களுக்கும் அசிஸ்டெண்ட்டுகளுக்கும் சவால்.ஓட்டுநர் வேலை போல் இதுவும் முதலில் தயக்கத்தில் ஆரம்பித்து பிறகு பழக்கத்தில் வழக்கமாகிவிடும்.

புரொஜக்டரில் ஓடிமுடிந்த பிலிம் தலைகீழாக இன்னொரு ஸ்பூலில் மெஷின் மூலமாக சுற்றிக்கொள்ளும். அதிலிருந்து காலியாக உள்ள ஸ்பூலில் மீண்டும் பிலிமை கையால் சுற்றி லோட் செய்வதுதான் ரீவைண்ட் செய்வதாகும்.

வலது கையால் லீவரை சுற்றி ரீவைண்ட் செய்யும்போது இடது கையால் பிலிம் இருக்கும் மற்றொரு ஸ்பூலை அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். அந்தக் கையை எடுத்தால் பிலிம் இழுக்கப்படும் வேகத்தில் வேகமாக உருவிக்கொண்டு சிக்கிக்கொள்ளும்.

ஒரு கையால் ரீவைண்ட் செய்யும்போது அப்படி இடது கையை எடுத்தாலும் அந்த ஸ்பூல் ஒரே சீராக ஓடினால் பிலிமை பேக் செய்து ஸ்பூலில் இருந்து கழற்றும் பணியைக் கற்றுக்கொள்ளத் தயாராகி விட்டதாக அர்த்தம்.

இப்போது இந்த விளக்கங்கள் ஏன் என்று நீங்கள் கேட்கலாம். இன்னும் சில காலத்தில் பிலிமைப் பயன்படுத்தி திரையிடும் திரையரங்கங்களே இல்லாமல் போகும். சுமார் நூறு ஆண்டுகள் சினிமாவில் நீடித்திருந்த புரொஜக்டர் தொழில்நுட்பத்தை எனக்குத் தெரிந்த தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சிதான் இது.

எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது இந்த பதிவு தொடரும்...

7 கருத்துகள்:

  1. //இன்னும் சில காலத்தில் பிலிமைப் பயன்படுத்தி திரையிடும் திரையரங்கங்களே இல்லாமல் போகும்.//

    உண்மை.

    // சுமார் நூறு ஆண்டுகள் சினிமாவில் நீடித்திருந்த புரொஜக்டர் தொழில்நுட்பத்தை எனக்குத் தெரிந்த தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சிதான் இது.//

    நல்லது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. @ ராமலக்ஷ்மி

    //இன்னும் சில காலத்தில் பிலிமைப் பயன்படுத்தி திரையிடும் திரையரங்கங்களே இல்லாமல் போகும்.//

    உண்மை.

    // சுமார் நூறு ஆண்டுகள் சினிமாவில் நீடித்திருந்த புரொஜக்டர் தொழில்நுட்பத்தை எனக்குத் தெரிந்த தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சிதான் இது.//

    நல்லது. தொடருங்கள்.
    //
    தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  3. நான் விடுமுறையில் சென்று இருந்த போது எழுதப்பட்ட இந்த பதிவை மிஸ் பண்ணிட்டேன். அரிய தகவல்கள்..... தொடர்ந்து எழுதுங்கள். அடிக்கடியும் எழுதுங்கள்....

    பதிலளிநீக்கு
  4. @ Chitra

    லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக கமென்ட் போட்டதற்கு நன்றி.

    ஊரில் பவர் கட் பிரச்சனை , இணைய இணைப்பும் பிரச்சனை. அலுவலக வேலைப் பளுவும் ஜாஸ்தி. அதனால் தான் இந்த தாமதம்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் சரவணன்
    நல்ல முயற்சி - தொடர்க
    நல்வாழ்த்துகள் சரவணன்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. உங்களின் இந்த பதிவு பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.

    http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  7. @ மோகன் குமார்

    சினிமா பற்றி நான் எழுதிய பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு