ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

தளபதி முதல் எந்திரன் வரை 1

இவரு பெரிய வி.ஐ.பின்னு நினைப்பு...படம் பார்த்த அனுபவங்களை அப்படியே அசைபோட வந்துட்டாருன்னு சொல்லிகிட்டே நிறைய பேரு பல்லைக் கடிக்கிறது எனக்கும் கேட்குதுங்க.ஆனா என்ன பண்றது?...சில விஷயங்களை இப்ப நினைச்சா எனக்கே சின்னப்புள்ளைத்தனமாத்தான் தெரியுது.அதனாலதான் இந்த பதிவு.ராஜா சின்ன ரோஜா படம் திருவாரூர் சோழா தியேட்டரில் திரையிடப்பட்டபோது அங்கே வாழைமரம் தோரணம் என்று திருவிழாக்கோலம் பூண்டிருந்ததை அம்மாவுடன் கடைத்தெருவுக்குப் போகும்போது பார்த்திருக்கிறேன்.அப்போதெல்லாம் நான் தொலைக்காட்சி பார்த்த அனுபவம் என்றால் கோவில் திருவிழா அல்லது திருமண நிகழ்ச்சியின் போது விசிஆர் பயன்படுத்தி திரையிடப்பட்ட படங்களைப் பார்த்ததாகத்தானிருக்கும்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தளபதி படம் வெளிவந்தது.அப்போது அந்தப் படம் பார்க்க எங்கள் வீட்டில் அழைத்துச்செல்லவில்லை. என் தந்தை வைத்திருந்த டீக்கடையில் மாதக்காலண்டர் ஒன்றை அப்பாவின் நண்பர் ஒருவர் கொண்டுவந்து தந்தார். பக்கத்துக்கு ஒரு தளபதி படத்தின் ஸ்டில்ஸ் அச்சாகி இருந்தது.

பானுப்ரியாவின் கணவராக படத்தில் நடித்த தினேஷ் தலையின் பின்புறம் மங்கலாகத் தெரிய,  ரஜினிகாந்த் முகம் மட்டும் ஷோல்டர் ஷாட்டாக இருக்கும் ஸ்டில், போலீசார் ரஜினியை லாக்கப்பில் சித்ரவதை செய்யும் காட்சி, சுந்தரி என்று தொடங்கும் பாடலில் ஷோபனா ரஜினிக்கு மாலையிடும் காட்சி, உட்பட இன்னும் சில புகைப்படங்கள் அந்த காலண்டரில் அச்சாகி இருந்ததன.
சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் உருவான இந்தப் படத்தின் ஸ்டில்களில் இருந்த வித்தியாசமான (இருபது ஆண்டுகளுக்கு முன்பு) லைட்டிங் அந்த வயதிலேயே என்னைக் கவர்ந்தது.ஆனால் அந்தப் படத்தை நான் சன்டிவியில் பார்த்த பிறகுதான் திரையரங்கில் பார்த்தேன்.கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு.

திருவாரூரில் இருந்த பேபி தியேட்டரில் மணிரத்னம் படத்தில் இருக்கும் லைட்டிங் போலவே எல்லாப் படங்களுமே மங்கலாகத்தான் தெரியும். வேறு என்ன செய்வது என்று தளபதியை அந்த திரையரங்கத்தில் பார்த்து ரசித்தேன்.(?!)

இப்போது அந்த தியேட்டர் இடிக்கப்பட்டதால் மரம், செடி, கொடி, புதர்கள்தான் அங்கே இருக்கின்றன. இன்னும் அந்த தியேட்டர் நினைவாக மிச்சமிருப்பது அந்த தியேட்டர் இருந்த சாலைக்கு பேபி டாக்கீஸ் ரோடு என்ற பெயர் மட்டும்தான்.
******
வெயில் படத்தில் பசுபதி சிறுவயது பையனாக தியேட்டர் கேபினில் இருக்கும்போது பிலிமில் நேரடியாக படத்தைப் பார்க்கிறேன் என்று அவ்வளவு பிலிமையும் உருவிக் குவித்துவிடுவார்.

பிலிம் சுருளை புரொஜக்டரில் பொருத்தி திரையிட உதவும் ஸ்பூல் ஒரு சக்கரம் போலத்தான் இருக்கும். இரு பக்கமும் கம்பிகள் இருப்பதால் பிலிம் உருவிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கும். ஒரு ஸ்பூலில் நிறைய இருக்கும் பிலிம் இருபத்தைந்து நிமிடம் வரை ஓடும்.அந்த ஸ்பூல் அளவை விட அதிகமாக பிலிம் இருந்தால் அதை ஓவர் லோடு என்று சொல்வோம்.

புரொஜக்டரில் இருந்து கீழே இறங்கும் பிலிம் மிகச் சரியாக சுற்றிக்கொள்ளும்.ஆனால் அதை ரீவைண்ட் செய்யும்போது உருவிக்கொள்ளாமல் சுற்றுவதுதான் ஆப்ரேட்டர்களுக்கும் அசிஸ்டெண்ட்டுகளுக்கும் சவால்.ஓட்டுநர் வேலை போல் இதுவும் முதலில் தயக்கத்தில் ஆரம்பித்து பிறகு பழக்கத்தில் வழக்கமாகிவிடும்.

புரொஜக்டரில் ஓடிமுடிந்த பிலிம் தலைகீழாக இன்னொரு ஸ்பூலில் மெஷின் மூலமாக சுற்றிக்கொள்ளும். அதிலிருந்து காலியாக உள்ள ஸ்பூலில் மீண்டும் பிலிமை கையால் சுற்றி லோட் செய்வதுதான் ரீவைண்ட் செய்வதாகும்.

வலது கையால் லீவரை சுற்றி ரீவைண்ட் செய்யும்போது இடது கையால் பிலிம் இருக்கும் மற்றொரு ஸ்பூலை அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். அந்தக் கையை எடுத்தால் பிலிம் இழுக்கப்படும் வேகத்தில் வேகமாக உருவிக்கொண்டு சிக்கிக்கொள்ளும்.

ஒரு கையால் ரீவைண்ட் செய்யும்போது அப்படி இடது கையை எடுத்தாலும் அந்த ஸ்பூல் ஒரே சீராக ஓடினால் பிலிமை பேக் செய்து ஸ்பூலில் இருந்து கழற்றும் பணியைக் கற்றுக்கொள்ளத் தயாராகி விட்டதாக அர்த்தம்.

இப்போது இந்த விளக்கங்கள் ஏன் என்று நீங்கள் கேட்கலாம். இன்னும் சில காலத்தில் பிலிமைப் பயன்படுத்தி திரையிடும் திரையரங்கங்களே இல்லாமல் போகும். சுமார் நூறு ஆண்டுகள் சினிமாவில் நீடித்திருந்த புரொஜக்டர் தொழில்நுட்பத்தை எனக்குத் தெரிந்த தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சிதான் இது.

எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது இந்த பதிவு தொடரும்...

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே...

இந்த தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்திரைப்படம் வந்திருக்கிறது.கதையின் நாயகன் மன்சூர்அலிகான் என்று நினைக்கிறேன்.அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை.

பழமொழியைப்போல் சொல்லப்பட்ட இந்த வாக்கியத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று யோசித்துப்பார்த்தேன்.என் அறிவுக்கு எட்டிய அளவிலும் சரி, அனுபவத்திலும் சரி...உண்மை சுடுவதாகத்தான் இருக்கிறது.

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் வேலையை விட்டு விலகிவிட்டார்.அதற்குக் காரணம், என்னைப் பொறுத்தவரை அற்பமாகத்தான் தெரிகிறது.

அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்ட காலதாமதத்தை சரிசெய்யவேண்டும் என்றால் அந்தப் பெண் செய்யும் வேலைகளை வரிசை மாற்றி செய்ய வேண்டும். இதைத்தான் மிகச் சாதாரணமாக மேலதிகாரி சொன்னார்.

கடைநிலை ஊழியர்கள் இரண்டு பேர், தங்களுக்குரிய ஸ்டேட்மெண்ட்டைத்தான் முதலில் தயார்செய்து தரவேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் அன்புத்தொல்லை கொடுத்து இவ்வளவு நாளும் வாங்கிக்  சென்றுகொண்டிருந்தார்கள்.

இப்போது யார் பேச்சைக் கேட்பது என்று குழம்பிய அந்தப்பெண் வியர்த்து விறுவிறுத்து ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து அழுது கொண்டே அந்த நேரத்துடன் வேலையை விட்டுச் சென்றுவிட்டார்.(இதற்கு முன்னோட்டமாக சக ஊழியைகள் இருவருடன் ஏற்படும் சிறு மனஸ்தாபத்திற்கே கண்ணீர் வடித்தவர்தான் இவர்.)
இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும், அதை விட்டு விட்டு நீங்கள் சொல்வதுபோல் மாற்றினால் இந்த மாதிரியான சிக்கல்கள் வரும் என்பது மாதிரியான சூழ்நிலைகள் ஒவ்வொரு அலுவலகத்திலும் இருக்கும். இதைத் தெளிவாக மேலதிகாரியிடம் பேசும் துணிச்சல் இருக்க வேண்டும். அதற்கு சாத்தியமில்லாத துக்ளக் தர்பார் நடக்கும் இடம் என்றால் அவர்கள் சொல்வது படி செய்துவிடுவது உத்தமம். ஏதாவது சொதப்பலானால் சொன்னவரைக் கைகாட்டிவிட்டு நாம் நல்ல பிள்ளையாக வேடிக்கை பார்க்கலாம்.

இந்த இரண்டு நிலைகளிலும் இல்லாமல் பிரச்சனைகளைக் கண்டு அழுதுகொண்டு ஓடிய அந்தப் பெண் ஒரு பொறியியல் பட்டதாரி. இந்தப் பெண்ணுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் மாத சம்பளம் கொடுத்த இடத்திலேயே சிறிய காரணத்தால் அழுதுகொண்டு வேலையை விட்டு விலகிய இவர் பல ஆயிரங்கள், லட்சங்கள் என்ற அளவில் ஊதியம் கிடைக்கும் இடத்திற்கு வேலைக்கு சென்றால் அங்கு இருக்கும் வேலைப்பளு,
ஊழியர்களுக்கு இடையில் இருக்கும் அரசியல், வேறு சில சிக்கல் என்று அனைத்தையும் எப்படி சமாளிப்பார்?
யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் வேலையில் சொதப்பியவுடன் அவரது டிரெய்னரான நயன்தாராவை அந்த டீம்லீடர் திட்டுவார். அதைத் தாங்க முடியாமல் நயன்தாரா அழுததும் எனக்கும் அழுகை வந்தது.(அவ்....)

இந்த மாதிரியான கடுமையான வார்த்தைகள் எதுவும் இல்லாமல் பணி வரிசையில் சில மாற்றங்கள் சொன்னதையே தாங்க முடியாமல் வேலையை விட்ட அந்தப்பெண் போல நிறைய ஆண்களும் இருக்கலாம். படிப்பு மட்டும் ஒருவருக்கு எல்லா விஷயத்தையும் கற்றுத்தந்துவிடாது என்பது எனக்குப் புரிஞ்சுடுச்சு.

திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளரான காலம்சென்ற ஏ.வி.மெய்யப்பன் அவர்களைப் பற்றிய நூல் ஒன்றில் என்னைக் கவர்ந்த விஷயம் ஒன்று எல்லாருக்குமே பொருந்தும் என்று நினைக்கிறேன்.

எந்த ஒரு செயல் அல்லது விஷயத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படி இல்லாமல் அது சரியாக வராது என்று நீங்கள் கருதினால் அதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் காரணம் கூற வேண்டும்.சுருக்கமாக சொன்னால் சமாதானமாகு அல்லது சமாதானப்படுத்து. அவ்வளவுதான் வெற்றியின் ரகசியம்.
நான் இந்தப் பதிவின் மூலம் சொல்வதும் இதுதாங்க.முடியும் அல்லது முடியாது என்ற இரண்டு நிலையில் எதாவது ஒரு முடிவில் தெளிவாக இருக்கவேண்டும்.அதை விட்டு விட்டு விலகி ஓடினால் எவ்வளவு விஷயங்களுக்கு எவ்வளவு தூரம், எத்தனை நாள்தான் ஓட முடியும்?

இப்படி அதிரடி முடிவு எடுக்காமல் மழுப்பலாக இருந்து காலத்தின் போக்கில் சரியாகும் என்று விடக்கூடிய சூழ்நிலைகள் குடும்பத்திலும் பொதுவாழ்விலும்  இருக்கும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

சமாதானமாகு அல்லது சமாதானப்படுத்து - இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் வெற்றியைத்தரும் ஃபார்முலாக்களில் இதுவும் ஒன்று.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இரண்டரை லட்ச ரூபாய் போச்சே!...இந்திய ரூபாய்க்கான புதிய குறியீடு வடிவமைப்பு

ஊரோட ஒத்துப்போகாம எப்ப பார்த்தாலும் நீதி,நேர்மை,நடுநிலைமை அப்படின்னு பேசி வாய்ப்புக்களை இழக்குறதே அவனுக்கு வழக்கமாப் போச்சு.(அவன் வேற யாரு...நாந்தேன்.)
எல்லா விஷயத்துலயும் அயல்நாட்டு ஐடியாவைத்தான் சுடணுமான்னு ரொம்பவே யோசிச்சு நானே ஒரு குறியீட்டை வடிவமைச்சு போட்டிக்கு அனுப்புனேன்.

நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 1
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 2
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 3
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 4
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 5

தமிழகத்தைச்சேர்ந்த ஒருத்தர் வடிவமைச்ச குறியீடு தேர்வு செய்யப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் முதல்ல பெருமையாத்தான் இருந்துச்சு.ஆனா தொடர்ந்து வந்த தகவல்கள்,நான் எந்த அளவுக்கு விஷயம் தெரியாம இருந்துருக்கேன்னு வேதனைப்பட வெச்சது.

என்னோட வடிவமைப்பு எழுதுறதுக்கு கடினமா இருந்ததாலயோ, வேற காரணங்களாலயோ நிராகரிக்கப்பட்டிருந்தா பெருமையா இருந்துருக்கும்.ஹிந்தி தேசிய மொழியா அங்கீகரிக்கப்பட்ட ஒரே காரணத்தால அதை அடிப்படையா வெச்சி உருவாக்கப்பட்ட குறியீடு ஏக மனதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு.

இது உதயக்குமாருக்கு சாத்தியமாகக் காரணம் அவருக்கு ஹிந்தி தெரிஞ்சதாலதான்.

என்னுடைய வருத்தம் என்னன்னா, தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகள்ல நான் கொடுத்த விளக்கம் யாருடைய கவனத்துக்கும் போகாமலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாமோன்னுதான்.

ஹிந்தியை எதிர்க்குறோம்னு சொல்லி பல மத்திய அரசுப்பணிக்குரிய வாய்ப்பை நமக்கு கடினமாக்கி வெச்சிட்டாங்க. இப்போ இது மாதிரியான சாதனை முயற்சிகள் ஹிந்தி தெரியாத காரணத்தால வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போகுது. இந்த அவல நிலையை நினைச்சு பெருமூச்சு விடத்தான் முடியும். வேற என்ன செய்யுறது?

பத்திரிகையாளர் 'ஞாநி' ஓ பக்கங்களை குமுதத்தில் படிச்சதும் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் வடிவமைச்ச குறியீட்டுக்கு  தேர்ந்தெடுக்கப்பட தகுதியில்லாம இருக்கலாம்.ஆனா நான் அதுல என்னென்ன விஷயங்கள் இருக்கணும்னு நினைச்சு உருவாக்குனேனோ அந்த கொள்கைகள் நடுநிலையானவைன்னு புரிஞ்சுடுச்சு.

நீங்களும் இந்த பக்கங்களைப் படிச்சுட்டு அமைதியா யோசிச்சுப் பாருங்க. உண்மை புரியும்.

ஆனா ஒண்ணுங்க...ரூபாய் நோட்டுல பதினெட்டு மொழிகள் இருக்கேன்னு பெருமையா நினைச்சு தமிழ்,ஆங்கிலத்துல மட்டும் விளக்கம் அனுப்பினது எவ்வளவு முட்டாள்தனம்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.
வெட்டி நியாயம் பேசாம ஹிந்தி கத்துகிட்டா பல விஷயங்களுக்கு நல்லது.இல்லன்னா நம்மை இந்த நிலையில வெச்சிருக்குற அரசியல்வாதிகளோட புள்ளைங்க ஹிந்தியைக் கத்துக்கிட்டு வெளுத்து வாங்கிகிட்டு இருக்குறதை கட்டியிருக்குற கோவணத்தையும் இழந்துட்டு நாம வேடிக்கை பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

ஓ பக்கங்கள் 1
ஓ பக்கங்கள் 2
ஓ பக்கங்கள் 3
ஓ பக்கங்கள் 4
ஓ பக்கங்கள் 5