Search This Blog

திங்கள், 5 ஜூலை, 2010

புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க சூப்பர் ஐடியா

1996ம் ஆண்டு நான் சினிமாதியேட்டரில் வேலை,பள்ளிக்கூடத்தில் படிப்பு என்று இரட்டைக்குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த காலகட்டம்.(ஒரு குதிரை சவாரியும் இன்று வரை எனக்கு கைகூடலைன்னுங்குறதெல்லாம் இப்ப நமக்கு தேவையில்லை.)
அப்போது திருவாரூர் நகரத்தில் நான்கு, புற நகர்ப்பகுதியில் ஒன்று என்று ஐந்து தியேட்டர்கள் இருந்தன.இப்போது புற நகர்ப்பகுதியில் இருந்த தியேட்டர்(தியேட்டர் மாதிரி) நெல் கோடவுனா மாறிட்டதா சொன்னாங்க.

திருவாரூர் நகரப்பகுதியில் இருந்த ரெண்டு தியேட்டர்களை இடித்து அப்புறப்படுத்தியாச்சு.மிச்சமிருக்குற மூணு தியேட்டர்கள் எப்படியோ சமாளிச்சு உசுரோட இருக்கு.

இந்த மூணு தியேட்டர்களும் 1996ல சிறப்பா இயங்கிகிட்டு இருந்த சமயம்.பரம்பரை,உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு,பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு,பாஞ்சாலங்குறிச்சி,சிவசக்தி போன்ற படங்கள் ஒரு தியேட்டர்ல குறைந்தபட்சம் முப்பதுநாள், அதிகபட்சம் அறுபதுநாள் என்ற கணக்குல நல்லா வசூல் செய்துகிட்டு இருந்துச்சு.

இன்னொரு தியேட்டர்ல தாயகம், செங்கோட்டை, இந்தியன், காதல்கோட்டை, அவ்வைசண்முகி அப்படின்னு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் அணிவரிசை.
இப்படி ரெண்டு தியேட்டர்களும் பிரமாதமான படங்களைத் திரையிட்டு டிக்கட் விலைகளை பதினைந்து, இருபதுன்னு வசூலிச்சுகிட்டு இருந்தாங்க.(பதினைந்து வருஷத்துக்கு முன்னால)

இது தவிர இன்னொரு தியேட்டர்ல ஆறு ரூபாய், பத்து ரூபாய் என்று டிக்கட்டில் உள்ள விலையையே வசூலித்தபடி சுமாரான படங்களைத் திரையிட்டாங்க.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நல்ல வசூலைதான் அந்த படங்கள் தந்துச்சு.

அந்த மாதிரி சின்ன விலையில டிக்கட் விற்பனை செய்ததுக்கு காரணம்,சின்ன பட்ஜெட் படங்களா அவை இருந்ததுதான்.

ஆனா இப்போ,மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு நம்புற ஹீரோவுக்கு பத்துப் பதினைஞ்சு கோடியை சம்பளமா கொடுத்து, சத்யம், ஐனாக்ஸ் மாதிரியான தியேட்டர்கள்ல திரையிட்டு ஒரே வாரத்துல கோடிகளை அள்ளிடணும்னு நினைக்கிறாங்க.இந்த ஐடியா பல நேரங்கள்ல தப்புக்கணக்காயிடுது.

காயலான் கடைக்குப் போற நிலையில இருக்குற பஸ்சுலயும் ஏ/சி வால்வோ பஸ்சுலயும் ஒரே டிக்கட் வசூல் செய்தா அது எப்படி சரியா வரும்? இது கூட தீபாவளி, பொங்கல் சமயமா இருந்தா வேற வழி இல்லாம சொந்த ஊருக்குப் போறவங்க புலம்பிகிட்டே ஏறுவாங்க.அதுவும் ஒருநாள் கூத்துதான்.
பாழடைஞ்ச நிலையில இருக்குற தியேட்டர்களிலயும் ஐம்பது நூறுன்னு டிக்கட் விலை வெச்சா யாரால தாங்க முடியும்?. அவனவன் முப்பது ரூபாய் கொடுத்து குடும்பத்தோட ...........யில பார்த்துடுறான்.

செல்போன் உபயோகம் இப்படி அதிரடியா வெற்றி அடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன? ஆயிரம் ரூபாயில இருந்து லட்ச ரூபாய் வரை மொபைல் கிடைக்குது. எல்லோருக்கும் தாங்கக்கூடிய விலையில சேவைக்கட்டணமும் இருக்கு.

வெளி செல்லும் ஒரு நிமிட அழைப்புக்கு பத்து ரூபாய்,உள் வரும் ஒரு நிமிட அழைப்புக்கு ஐந்து ரூபாய் என்று கட்டணம் இருந்தால் இந்த துறையின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்னு சொல்ல பள்ளிக்கூட பையனே போதும்.பி.ஹெச்.டி படிச்ச நிபுணர் தேவையில்லை.

எந்த தொழிலா இருந்தாலும் நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர் இருந்தால் அவர்களுக்கு பொருளை கொண்டு சென்று சேர்ப்பது சற்று கூடுதல் செலவு பிடிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்குப் பயந்து பெரிய விலைப்பொருட்கள் அல்லது பெரிய அளவு வாங்கும் வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிருந்தால் ஒரே ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் சின்ன முடிவு கூட பெரிய அளவில் கவிழ்த்துவிடும்.

இப்போது சினிமா தொழிலிலும் இந்த..................................தனத்தைதான் சில தயாரிப்பாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் சினிமாவை தொழிலாக நினைக்காமல் சூதாட்டமாக மட்டுமே கருதி பேராசைப்பட்டதுதான் நல்ல படங்களுக்கு கூட சரியான தியேட்டர் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை காரணமாக அதிக நாட்கள் படம் ஓடுவதில்லை.

இதே டெக்னிக்கை பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும் குறைத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எப்படின்னுதானே கேட்குறீங்க?

ஒரு சிகரெட் விலை மூணு ரூபாய் நாலு ரூபாய் என்று இருப்பதால்தானே நிறையபேர் ஈஸியா அதுக்கு அடிமையாயிடுறாங்க? ஒரு சிகரெட் விலை நானூறு ரூபாய் ஐநூறு ரூபாய் என்று வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்வதோடு, அடுத்தவர் நலனுக்கும் வேட்டு வைப்பது குறையும்.
இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன் கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப்  பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?

10 கருத்துகள்:

  1. கள்ள சாராயம் போல் கள்ள சிகரட் வரும்னு நினைகறேன். . . யாராவது தீங்கு தராத சிகரெட் கண்டுபிடித்தால் உண்டு...

    மற்றபடி நல்ல ஆய்வு நோக்கு.. நன்று.

    பதிலளிநீக்கு
  2. இந்த மேட்டரை சொல்லுறதுக்குத்தான் இவ்ளோ பெரிய முன்னோட்டமா தல.... ஓகே ஓகே...

    பதிலளிநீக்கு
  3. ////இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன் கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப் பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?////


    ..... உள் குத்து - நேர் குத்து - கும்மாங் குத்து - எல்லாம் சேர ஒரு பஞ்ச்! :-)

    பதிலளிநீக்கு
  4. நல்ல சமுக பதிவு...வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல யோசனைதான் சரவணன். ஆனா விற்பனை பாதிக்கும் என செய்ய மாட்டார்களே:(!

    பதிலளிநீக்கு
  6. அருமையான யோசனை மோட்டு முதலாளிங்களுக்கும் அரசுக்கும் புரியுதா பார்ப்பம்...?

    பதிலளிநீக்கு
  7. தல

    கடைசில குடுத்தியே.... அது படா ஷோக்கான ஐடியாபா....

    சர்தான்.... ஏத்துங்க... வெலைய ஏத்துங்க... நானூறா, ஐநூறா... இதுக்கெல்லாம் அசர மாட்டோம்.

    ஒரு நாலு நாள் பட்டினி இருந்துட்டு, அந்த காசை வச்சு, அஞ்சாவது நாள் ஒரு தம் வாங்கி கட்டிடுவோம்ல.....

    பதிலளிநீக்கு