Search This Blog

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அங்காடித்தெருவில் நான் கண்ட சில விஷயங்கள்

"இலவசமா கொடுக்க இது என்ன கவர்மெண்ட்டா, இப்படி இலவசம் கொடுத்து கொடுத்துதான் உங்களை எல்லாம் கெடுத்து வெச்சிருக்காங்க." என்ற வசனத்தை கேள்வி கேட்ட புதுப்பையனுக்கு ஒரு அறை விட்டபிறகுதான் அந்த பணியாளர் பேசுவார்.அந்த அடி, இலவசங்களை சாதனையாக நினைத்து பெருமைப்படும் சில பொதுமக்களின் கன்னத்தில் விழுந்த அறையாகத்தான் எனக்குத் தோன்றியது.
அங்காடித்தெரு படம் பற்றி பல விதமாகவும் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. படத்தின் நிறைகளை விட குறைகள் என்று குறிப்பிட்டு மிகக் குறைவான விமர்சனங்களே வந்திருப்பது ஆரோக்கியமான விஷயமாகவே எனக்குத்தோன்றுகிறது.

தந்தை, லெவல்கிராசிங் விபத்தில் உயிரிழந்ததால் கல்லூரிக்குச் சென்று உயர்கல்வியைத் தொடரமுடியாமல் வேலைக்குச்சென்று அவதிப்படும் ஜோதிலிங்கம், தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதால் கால்களை இழந்து சாலை ஓரத்தில் பூ வியாபாரம் செய்யும் கனி- விபத்தால் சிதைந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின் அடையாளம்.

ஏதோ நலத்திட்ட உதவிகளுக்கான புள்ளிவிவரங்களை தெரிவிப்பது போல் சாலை விபத்துக்களைப்பற்றி நாள்தோறும் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவை எத்தனை குடும்பங்களை நிலைகுலையச்செய்து விடுகின்றன என்பதை இந்தப் படத்தின் ஜோதிலிங்கம், கனி கதாபாத்திரங்களின் மூலம் நான் புரிந்துகொண்டேன்.

நிலையான முகவரி இல்லாமல் கைகளும் கால்களும் உழைக்கத்தயாராக இருக்கையில் வேறு மூலதனம் எதற்கு என்று தன்னம்பிக்கையுடன் கோடானுகோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால் நாள்தோறும் ஏகப்பட்ட விபத்துக்களால் பிழைப்பை இழந்து இயல்பாக வாழும் உரிமை பறிக்கப்பட்டு அவதிப்படும் இந்த நிலைக்கு தொண்ணூறு சதவீதம் மனிதத்தவறுகள்தான் காரணமாக இருக்கின்றன. சில விஷயங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இயந்திரம் பாராமுகமாகவே இருந்து வருகிறது.

ஊழியர்களை வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அடித்து ரத்தக்காயப்படுத்துவது படத்தில் மிகைப்படுத்திக்காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் காட்சி.

அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். கடுஞ்சொற்களால் திட்டிவிட்டு, தனி அறைக்குள் அழைத்துச் சென்றுதான் பிரித்து மேய்வார்கள்.
அப்புறம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை. இது சாதாரண கடைகளில் கூட இருக்கிறது. படத்தில் கிளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது கனி,"முன்னாடி எல்லாம் சரிதான் போன்னு விட்டுடுவேன். இப்ப முடியலை..."என்று சொல்வாள். நிஜ வாழ்க்கையிலும் பல பெண்கள் இப்படித்தான் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.(இலவசக்கழிப்பறையில் மூக்கைப்பிடித்துக்கொண்டு நுழையும் மனோபாவத்துடன் தான் என்று கூட சொல்லலாம்.)

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். நாலுமணி நேரம் அலைந்து பொருட்கள் வாங்கியதற்குள்ளேயே எங்கள் கால்கள் ஓய்வு கேட்டு கெஞ்சத்தொடங்கிவிட்டன. பனிரெண்டு மணி நேரத்துக்குமேல் நின்று, நடந்து, ஓடி வேலை செய்பவர்களின் கால்கள் எப்படிக் கதறும் என்பதை என்னால் அதிகமாகவே உணரமுடியும்.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு எலக்ட்ரீஷியனிடம்  வேலை செய்த நாட்களில் நானும் உடலளவில் அதிகமான துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். எப்படி என்றால், கான்கிரீட் கூரை அமைக்கும்போது கம்பிகளின் மேல் பிளாஸ்டிக் குழாய் அமைக்கும் பணி பார்க்கும்போது சாதாரணமாகத்தான் இருக்கும்.  வெயில் இல்லாத நேரத்தில் என்றால் சாமர்த்தியமாக கம்பி மீதே அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். உச்சிவெயில் என்றால் அவ்வளவுதான். குத்துக்காலிட்டு முழங்கால் வலிக்க,பைப்புகளைப் பொருத்த வேண்டும்.
ஒரே நாளில் மூன்று கட்டிடங்களுக்கு குழாய் பொருத்தும் சூழ்நிலை வந்தது. காலை ஆறு மணிக்குத் தொடங்கிய பணி, இரவு பத்து மணிக்குதான் முடிந்தது. அன்றுதான் முதன் முதலில் என்கால்கள் கெஞ்சின. மறு நாள் கான்கிரீட் அமைக்கும்போது குழாய்கள் உருவிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது முடிந்த பிறகு சுவரில் குழாய், ஸ்விட்ச் போர்டு அமைக்க உளி சுத்தியல் பயன்படுத்தி உடைக்க வேண்டும். இப்போது கோடு போட்டுக் கிழித்து விட மெஷின் வந்தாலும், நடுவில் உள்ள பகுதியை நாம்தான் உடைக்க வேண்டும்.

நான் வேலை கத்துக்கும்போது நாற்பது முறை உளியை சுத்தியலால் அடித்தால் அதில் முப்பத்து ஒன்பது முறை இடக்கையில் புறங்கை மீதுதான் சுத்தியலின் அடி விழுந்தது. மஞ்சள் பத்து போட்டுக்கொண்டு இரண்டு நாட்களில் மீண்டும் அதே வேலையை செய்யச் சென்றது உண்டு. பிறகு உடைக்கும்போது மண் துகள் என் மேலே கூட படாமல் உடைக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றது வேறு கதை.

அப்போதெல்லாம் தொடர்ந்து படிக்கணும்னு தோணலை. நீங்க நம்புறீங்களோ இல்லையோ, நான் பனிரெண்டாம் வகுப்பு பிரைவேட்டா படிச்சு தேர்வு எழுதி காலேஜூல சேர்ந்து படிக்கணும்னு முடிவெடுக்க காரணம்,"ஜாலி" படத்துல வந்த ஃபேர்வெல்டே பாடல் காட்சிதான்.

எதுக்காக இதையெல்லாம் சொல்றேன்னா படத்துல காட்டுற மாதிரி வேலை செய்யுறவங்க மேல வன்முறையைக் காட்டுறவங்க இருக்குற அதே அளவுக்கு, வெளியில தெரியாம நசுக்குற முதலாளிங்களும் ரொம்பவே இருக்காங்க.

அங்காடித்தெருவுல காட்டுன முதலாளிங்க நிக்கவெச்சே கொத்தடிமையா நடத்துறாங்கன்னா, மென்பொருள் நிபுணர்களை உட்காரவெச்சே பிழிஞ்சு எடுத்துடுறாங்க. என்ன ஒரு வித்தியாசம், மென்பொருள் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமா கிடைச்சுடுறதால வாழ்க்கையில பல வசதிகளை அடைஞ்சுட முடியுது. ஆனா அவங்க அதுக்காக இழக்குற விஷயங்கள் ஏராளம்.முக்கியமா, அமைதியான குடும்ப சூழ்நிலை அவங்களுக்கு ரொம்ப அரிதாகத்தான் கிடைக்கும்.

இப்ப கூட நான் ஒரு தனியார் நிறுவனத்துல ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்கு (ஐந்து மணி நேரம்) வேலை செய்யுறேன். முழு நேரப்பணியாளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் தர்றேன்னு சொல்றாங்க. இந்த காசுக்கெல்லாம் நாள் பூராவும் கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து வேலை செய்து என் உடம்பை ரிப்பேர் ஆக்கிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.

நாட்டுல முதலாளியா இருந்தாலும் தொழிலாளியா இருந்தாலும் அதுலயும் ரெண்டு வகைதான் உண்டு. புலி, மான்.

ஒண்ணு வேட்டையாடணும் இல்லை...வேட்டையாடப்படணும். இதுதான் உலகம். சில இடங்கள்ல பணியாளர்கள் முதலாளியை அலற விட்டுகிட்டு இருப்பாங்க. பல இடங்கள்ல தொழிலாளிகள் அவதிப்பட்டுகிட்டே இருக்காங்க. இதை மாத்துறது ரொம்ப கடினம்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.- இதை நான் அனுபவப்பூர்வமா உணர்ந்துருக்கேன். சென்னையில கம்பெனி வேலை சரியா அமையாம அவதிப்பட்டப்ப, எலக்ட்ரிக்கல் வேலைக்குதான் போனேன். மதியம் சாப்பாடு + முன்னூறு ரூபாய் சம்பளம். ஆர்வத்தால வீடியோ எடுக்க கத்துகிட்டேன். சில திருமண நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்யப்போனப்ப நானூறு ரூபாய் வரை சம்பாதிச்சதுண்டு.

தொழில் தெரிஞ்சா தவறான பழக்கங்களுக்கும் சில ஆடம்பரங்களுக்கும் அடிமையாகாம இருந்தா நல்ல படியா பிழைக்கலாம். ரிஸ்க் எடுக்குறதுன்னா பெரிய பணக்காரங்க வாழ்க்கையில என்ன அர்த்தமோ எனக்குத் தெரியாது. ஆனா சிரமம் பார்க்காம உழைக்கத் தயாரா இருந்தா வாழ ஆயிரம் வழிகள்- இதைத்தான் அங்காடித்தெரு சொல்ற மெசேஜா நான் புரிஞ்சுகிட்டேன்.

******
இந்தப் படத்துல பல காட்சிகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டதா சிலர் விமர்சனத்தை முன் வெச்சிருக்காங்க. நிஜ வாழ்க்கையில சுரண்டுறது தெரியாம அட்டை மாதிரி உறிஞ்சுற முதலாளிகளைப் பத்தி படம் எடுத்தா என்னய்யா டாக்குமெண்ட்ரி எடுத்துருக்கான்னு ஒதுங்கிப்போறது ரசிகர்களோட தப்பு. அதனால இந்த மாதிரி காட்சிகளை அமைச்சது சரிதான்னு சொல்லுவேன்.

பெரிய ஹீரோக்களோட படங்கள்ல லட்சம் மடங்கு மிகைப்படுத்தல் இருக்குறதை விட்டுடுவாங்க. இந்த மாதிரி படங்கள்ல இருக்குற ஒண்ணு ரெண்டு சீன்ஸ் தான் உறுத்தும்.

******
சில வாரங்களுக்கு முன்னால விகடன்ல உதயநிதி ஸ்டாலினோட பேட்டி வந்துருந்துச்சு. புது டைரக்டருங்களுக்கு வாய்ப்பு கொடுப்பீங்களான்னு கேட்டதுக்கு, பெரிய ஹீரோக்கள்னா விளம்பரம் கூட அதிகம் தேவையில்லை அப்படின்னு ஏதோ சொல்லி மழுப்பிட்டாரு. அதாவது இந்த மாதிரி படங்களை எடுக்க மாட்டோம்னு சொல்லாம சொல்லிட்டாரு.  அவரு என்ன பண்ணுவாரு பாவம், கஷ்டப்பட்டு உழைச்ச காசு. காப்பாத்தணும்னு நினைக்குறது நியாயம்தான்.

டைரக்டர் ஷங்கர் மேல பல விமர்சனம் இருந்தாலும் எனக்கு அவரை ஒரு விஷயத்துக்காக ரொம்பவே பிடிக்கும். காதல், இம்சை அரசன், ஈரம், வெயில் போன்ற படங்களைத் தயாரித்ததற்காக.
இந்த அங்காடித்தெரு படம் முடிவடைஞ்சும் பல மாதங்கள் ரிலீசுக்காக தவம் இருந்துருக்கு. ரஜினி, சன் பிக்சர்ஸ் மாதிரியான ஆட்கள் நினைச்சிருந்தா ரொம்ப எளிதா வெளியிட்டு ஒரே வாரத்துல லாபம் சம்பாதிச்சிருக்கலாம். அவதார் படமும் பிரமாண்டம் வசூலும் பிரமாண்டம்.ஏதோ பில்லியன் கணக்குல சொல்றாங்க.
ஆனா ஆறு ஆஸ்கர்  அள்ளுன தி ஹர்ட் லாக்கர் படம் பதினோரு மில்லியன்ல தயாராகி பதினாறு மில்லியன் வசூலாம். இது மாதிரி தமிழ்ல வருஷத்துக்கு பத்து படம் வரவைக்குறது பெரிய விஷயமே இல்லை.  அதற்குரிய திறமைசாலிகள்  நிறையவே இருக்காங்க. தயாரிப்பாளர்கள்தான் இல்லை.

பெரிய தயாரிப்பாளர்கள் இப்படி நல்ல படங்கள் தயாரிக்கலைன்னாலும் பரவாயில்லை.மசாலாப்படங்கள் ரிலீசைக் காரணம் காட்டி நல்ல படங்களுக்கு தியேட்டரே கிடைக்காம பண்ணிடுறது ரொம்ப கொடுமையான விஷயம்.

அங்காடித்தெரு படத்துல, கடை யூனிபார்ம் கொடுக்க ஏன் காசு கேட்குறீங்கன்னு ஒரு பையன் கேட்டதும், "ஏலே...இலவசமா கொடுக்க இது கவர்மெண்ட்டா...இப்படி கொடுத்து கொடுத்துதாம்லே உங்களை எல்லாம் கெடுத்து வெச்சிருக்காங்க."அப்படின்னு சொல்லுவார்.(இலவசமாக அந்தப்பையனுக்கு ஒரு அடி கிடைக்கும்.)

இப்படி படங்கள் தயாரித்து பெரிய தயாரிப்பாளர்களை நஷ்டமடைய சொல்லவில்லை. ஷங்கர் செய்வது போல் பெரிய தலைகளும் ஆண்டுக்கு ஒரு படம் சின்ன பட்ஜெட்டில் அற்புதமாக தயாரித்தால் போதும். அவர்களும் நாலு காசு பார்க்கலாம். அடுத்த ஆண்டு இன்னொரு படம் தயாரிக்கலாம்.தமிழ் சினிமாவும் மேம்படும்.
இவர்கள் சுயநலத்துடன் இருக்கட்டும். பொதுநலமும் கலந்தால் நல்லது என்று சொல்கிறேன். சிலருக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக்கொடுப்பதும் திருமணம் செய்து வைப்பதும் மட்டும் தொண்டு இல்லை. தன்னை வாழ வைக்கும் கலைக்கு கொஞ்சமாவது ஆக்சிஜன் கொடுப்பதும் இந்த வகைதான்.

******
நாளை முதல் ஒரு தொடர்கதை எழுதப்போவதாக அறிவித்திருந்தேன். குறுகியது வீதி மட்டுமல்ல...மனமும்தான்.

9 கருத்துகள்:

  1. //அவரு என்ன பண்ணுவாரு பாவம், கஷ்டப்பட்டு உழைச்ச காசு.//
    உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு..

    பதிலளிநீக்கு
  2. அனுபவத்தோடு கூடிய அழகான விமர்சனம். அருமையான கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தொழில் தெரிஞ்சா தவறான பழக்கங்களுக்கும் சில ஆடம்பரங்களுக்கும் அடிமையாகாம இருந்தா நல்ல படியா பிழைக்கலாம். ரிஸ்க் எடுக்குறதுன்னா பெரிய பணக்காரங்க வாழ்க்கையில என்ன அர்த்தமோ எனக்குத் தெரியாது. ஆனா சிரமம் பார்க்காம உழைக்கத் தயாரா இருந்தா வாழ ஆயிரம் வழிகள்- இதைத்தான் அங்காடித்தெரு சொல்ற மெசேஜா நான் புரிஞ்சுகிட்டேன்.


    ....... சரிதான்......! ஆமாம், ரொம்ப நாளா உங்கள் இடுகைகள் காணோம் என்று நினைத்தேன். powerful எண்ணங்களோட வந்து இருக்கு. :-)

    பதிலளிநீக்கு
  4. @ Ravi

    //அவரு என்ன பண்ணுவாரு பாவம், கஷ்டப்பட்டு உழைச்ச காசு.//
    உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு..

    அட நீங்க வேற...இந்த மாதிரி எழுதுனதுக்காக ஆட்டோவுல ஆள் அனுப்பிடுவாங்களோன்னு குழம்பி பொய் இருக்கேன்.

    *****
    @ துபாய் ராஜா
    //அனுபவத்தோடு கூடிய அழகான விமர்சனம். அருமையான கருத்துக்கள்.//

    எவ்வளவு அனுபவம் இருந்து என்ன பண்ண சார்...வேலைக்கு போற இடத்துல ஒழுங்கா சம்பளம் வாங்குற திறமை இல்லையே...
    ******
    @ Chitra
    //....... சரிதான்......! ஆமாம், ரொம்ப நாளா உங்கள் இடுகைகள் காணோம் என்று நினைத்தேன். powerful எண்ணங்களோட வந்து இருக்கு. :-)//

    என்ன பண்றது...ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்கு போய் அடிமையா சிக்கியாச்சே...

    பதிலளிநீக்கு
  5. நால்லாயிருக்கு சரவணன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. .தமிழ் சினிமாவும் மேம்படும்

    யாராவது கேட்டு அடிக்க போறாங்கப்பா பாத்து.

    தன்னை வாழ வைக்கும் "கலை"க்கு

    எனக்கு இதுல கொஞ்சம் டவுட்


    தொடர்கதையில் சந்தியா என்று எதாவது கதாபாத்திரம் உண்டா?

    பதிலளிநீக்கு
  7. தமிழ் புத்தாண்டுன்னு சொல்றோம் ஆனா வடமொழியில் பெயர் ஏன் வைக்கனும்?

    பதிலளிநீக்கு
  8. ”தொழில் தெரிஞ்சா தவறான பழக்கங்களுக்கும் சில ஆடம்பரங்களுக்கும் அடிமையாகாம இருந்தா நல்ல படியா பிழைக்கலாம்.”
    எல்லோரும் முதலாளிகளுக்கு மட்டும் திருந்த வேண்டும் என்ற் கூறிகொண்டிருக்கும்போது தொழிலாளிகளுக்கான உங்கள் ஊக்கம் மிக நன்று.
    த.துரைவேல்

    பதிலளிநீக்கு
  9. படம் பார்க்கவில்லை. ஆனால் படத்துடன் வாழ்வின் மீதான உங்கள் பார்வை அருமை.

    பதிலளிநீக்கு