Search This Blog

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 3

"ஏய்...அந்த பேஷண்ட்ஸ் பணம் கொடுக்காம போயிட்டாங்கன்னா உன் சம்பளத்துல இருந்துதான் புடுங்குவாங்க. போய் வேலையைப் பாருங்கப்பா." என்று அவள் சொன்னதும் ராஜசேகர்"அய்யய்யோ இது வேறயா...ஏங்க...நீங்க சீக்கிரம் வாங்க..."என்றான்.
"நீ சரிப்பட்டு வரமாட்ட போலிருக்கே...டாக்டர்தான் நம்மளை அடிமையா நடத்துறார். வேலை செய்யுற நம்மளுக்குள்ளயாவது கொஞ்சம் ஜாலியா பேசி அந்த வேதனையை மறந்துட்டு இருக்கலாம்னுதான் இவ்வளவு உரிமையோட பேசுறோம். இது கூட புரியலையா...நீ டியூப்லைட் மட்டும் இல்லை...பியூஸ் போன பல்ப்...வா..."என்று சொன்னவாறு சரஸ் நடந்தாள்.

ராஜசேகருக்கு அவள் பேசியது ஒருவித ஆயாசத்தை ஏற்படுத்தியிருந்தது. அவன் ஊரில் இருந்தபோது ஒரு நாளைக்கு ஏழுமணி நேரம் தூங்கியவன். இங்கே அதில் பாதி நேரம் கூட நிம்மதியான தூக்கம் கிடைக்கவில்லை. இது தவிர நின்று கொண்டே நாள் முழுவதும் வேலை செய்வதால் விருந்தாளியாக வந்த முழங்கால் வலி இவன் உடலை நிரந்தரமுகவரியாக்கி ரேஷன் கார்டும் பெற்றுவிட்டது.

இது தவிர இன்னொரு பிரச்சனை. இந்த கிளினிக் அருகில் கையேந்திபவன்கள் இருந்தாலும் அவற்றில் அசைவம்தான். அவை மாட்டுக்கறியா, கோழியா, காக்கையா என்று கூட அங்கே சாப்பிடுபவர்களுக்கு கூட தெரியாது. முதல் நாளே சைவ உணவு கிடைக்கும் இடத்தைப் பற்றி மணிகண்டனிடம் விசாரித்தான்.

"மாப்ள...இப்படியே நேரே போய், வெங்கடநாராயணா ரோட்டுல திரும்பு. கொஞ்ச தூரத்துலயே நடேசன் பார்க் இருக்கும். அது ஓரமா போற பாதியில நுழைஞ்சு பார்க்கோட பின்பக்கம் வந்தீன்னா நீ எதிர்பார்க்குற சைவ சமையல் இருக்கும். ஆனா உனக்கு லஞ்ச் டைம் அரை மணி நேரம்தான். கிளினிக்ல இருக்குற சைக்கிளை எடுத்துகிட்டு போகலாம். அங்க போக பத்து நிமிஷம், வர பத்து நிமிஷம், சாப்பிட பத்து நிமிஷம்னு உன் ஷெட்யூல் இருந்தாதான் தப்பிச்ச. சிக்னல் பிரச்சனையும் இருக்கு. பார்த்துக்க." என்று பயமுறுத்திவிட்டுப் போய்விட்டான்.

ராஜசேகருக்கு அந்தக் கடை உணவு எவ்வளவோ திருப்தியாக இருந்தது. ஆனால் பத்து நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பதுதான் இவனுக்கு இருந்த பெரிய சவால். வைட்டமின் குறைபாட்டால் ராஜசேகர் வாய் முழுவதிலும் அல்சர் வந்துவிட, சூடான மதிய சாப்பாட்டை கண்களில் நீர் வடிய மிகவும் அவதியுடன் சாப்பிட்டு முடித்தான். நீர் அருந்துவது மட்டுமின்றி பேசுவது கூட போராட்டமாகிப்போயின.

இந்த லட்சணத்தில் கிளினிக்கில் இருக்கும் டெலிபோன்களுக்கு வரும் அழைப்புகளுக்கும் பதில் சொல்லும் வேலையையும் அவ்வப்போது கொடுத்தார்கள்.

ராஜசேகர் போனில் பேசிவிட்டு அப்படா என்று அமைதியாகிவிட்டாலும் ஷண்முகப்ரியாவும் அவள் தோழிகளும் விடுவதில்லை."என்ன சார்...பேச கூட மாட்டெங்குறீங்க. ஏன், தமன்னா, ஸ்ரேயா எல்லாம் வெயிட்டிங்க்ல இருக்காங்களா? அதுதான் எங்க கூட பேசுறதுக்கு தடை போடுதா?"என்றால்லாம் கேட்டு வெறுப்பேற்றினார்கள்.

அங்கேயே தங்கினால் இன்னும் கொஞ்ச நாட்களில் சென்னைக்கு வந்தபோது இருந்த எடையில் பாதி குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் என்று ராஜசேகர் உணர்ந்தான். அங்கேயே தங்காமல் வெளியில் இருந்து வந்தால் காலை ஒன்பது மணிக்கு வந்து இரவு ஒன்பது மணிக்குச் சென்றுவிடலாம் என்று சொன்னார்கள்.
மிகுந்த போராட்டத்திற்குப் பின் டாக்டரிடம் சம்மதம் வாங்கி நெசப்பாக்கத்தில் உள்ள நண்பன் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு வர சம்மதம் வாங்கினான். 17G அல்லது 17A ஆகிய பேருந்துகளில் ஏறி தி.நகர் வரவேண்டும் என்றால் நெரிசலான நேரத்தில் முக்கால்மணிநேரம் கூட ஆனது. இது தவிர, பல பேருந்துகளில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்குவதற்குக் கூட இடம் கிடைக்கவில்லை.

அதனால் காலை ஏழு மணிக்கே பேருந்தைப் பிடித்து பனகல் பார்க் அருகில் இறங்கி விடுவான். ஒன்பது மணி வரை பொழுதைப் போக்க வேண்டுமே...அப்படியே நடேசன் பார்க்கில் வந்து அமர்ந்து விட்டு எட்டே முக்காலுக்கு டிபனை முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு கிளினிக்குக்கு சென்றான்.

இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்து வெளியேறினால், துரைசாமி பேருந்து நிறுத்தத்திற்கு(அங்காடித்தெருவில் ஆரம்ப காட்சியில் வருமே, அந்த பேருந்து நிறுத்தம்தான்.) நடந்து வரவே பதினைந்து நிமிடம் ஆகிவிடும். பிறகு பேருந்தில் ஏறி நெசப்பாக்கம் வந்து இறங்க பத்தேகால் வரை ஆகும். அடுத்து எதாவது ஒரு கையேந்திபவனில் அரை வயிற்றுக்கு இட்லியை தள்ளிவிட்டு சென்று படுக்க பதினோரு மணி ஆகிவிடும். வயிறு பாதிக்கு மேல் காலியாக இருப்பதால் சரியாக தூக்கம் வராது.மறுபடி காலை ஆறு மணிக்கே எழுந்து...இனி எல்லாம் வழக்கம்போல்தான்.

கிளினிக்கிலேயே தங்கியிருந்ததற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. நடுவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஊருக்குப் போய் ஓட்டு போட்டுட்டு வர்றேன். என்று டாக்டரிடம்  அனுமதி கேட்டான்.

"நீயெல்லாம் ஓட்டு போட்டு என்ன ஆகப்போகுது...ஒழுங்கா லீவு போடாம வேலைக்கு வர்ற வழியைப் பாரு..." என்று கண்டித்து விட்டார்.

சென்னைக்கு வந்து கொத்தடிமையா சிக்கிட்டோமோ என்று ராஜசேகர் யோசித்த நேரத்தில் சொந்த ஊரில் இருந்த பழைய நண்பன் இவனிடம் பேசினான்.அவன் வெளிநாடு செல்வதால் ஏற்கனவே இருந்த இடத்தில் ஒரு ஆள் கேட்குறாங்க...என்றான். இவனுக்கு தப்பிச்சோம்டா சாமி என்றுதான் தோன்றியது.

"சென்னைன்னா சும்மாவா...முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு வருஷம் ஓட்டியாச்சுன்னா எல்லாம் பழகிடும். வேலைக்குப் போற பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க... சென்னையில ஒட்டிக்கலாம்."என்று அறிவுரை சொன்னது ஷண்முகப்ரியாதான்.

"ஆளை விடு ஆத்தா..."என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு பிறந்த ஊருக்கே வந்துவிட்டான் ராஜசேகர்.

3-முற்றும்.
*****
இதெல்லாம் என்ன கதை அப்படின்னு கேட்காதீங்க. அங்காடித்தெருவுல சென்னையின் மிகச் சின்ன பகுதியில நடக்குற சுரண்டலை லேசான சினிமா கலரோட சொல்லியிருந்தாங்க. படத்துல காட்டின கஷ்டமாச்சும் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டு பாவம் என்று சொல்லவைத்தது. ஆனா இந்த கதையில வர்ற ராஜசேகர் மாதிரி ஆளுங்க படுற வெளியில தெரியாத அவதி பெரும்பான்மையான மக்களால கஷ்டமாவே ஒப்புக்கொள்ளப்படுறது இல்லை.

சுருக்கமா சொன்னா நம்ம அரசாங்கத்துகிட்ட மாட்டிகிட்டு திண்டாடுற நடுத்தரவர்க்கம் மாதிரிதான். கோடீஸ்வரர்களுக்கு பட்ஜெட்டுகளாலும் வரியாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஏன்னா அவங்க கிட்ட வசூலிக்கிற வரியை சுமக்கப்போறது நடுத்தர வர்க்கம்தான்.

பிளாட்பாரவாசிகளும் கிடைக்கிற இலவசங்கள் இன்ன பிற சலுகைகள் போன்றவற்றால் வாழ்க்கையை நடத்த பழகிட்டாங்க.

ஆனா நடுத்தர வர்க்கம்தான் கோடீஸ்வரர் லிஸ்ட்டுலயும் சேரமுடியாம பிளாட்பாரத்துக்கும் வர முடியாம தூக்கு மாட்டிகிட்டும் உயிர் போகாம முழி பிதுங்கி போன நிலையில இருக்குறது.

இந்தக் கதையில வர்ற ராஜசேகரோட நிலையும் இதுதான்.

கடைசியா  ஒரு உண்மை.

இந்தக் கதையில எந்த ஒரு இடத்துலயும் (ராஜசேகர் கதாபாத்திரத்தின் பெயர் தவிர) கற்பனையே இல்லை. இப்படி சென்னைக்குப் போய் முதல் முறை புறமுதுகிட்டது நானேதான்.

4 கருத்துகள்:

  1. அதானே பார்த்தேன்... "அங்காடி தெரு" படம் பார்த்து விட்டு வந்து, ரொம்ப ஒன்றி போய் அய்யா சிறு தொடர் கதை எல்லாம் எழுதுறாரேனு..... "சுய சரிதையில்" ஒரு பாகமா? நல்லா இருக்குங்க. சொந்த கதை - flow தடை இல்லாமல் சரளமாக எழுதி இருக்கீங்க.... பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. இனி உங்க வீட்ல சொல்லி உங்கள தியேட்டருக்கு போறத நிறுத்த சொல்லனும்.மீதி கதை படித்துவிட்டு சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. நீ டியூப்லைட் மட்டும் இல்லை...பியூஸ் போன பல்ப்...வா..."

    இதுவும் அனுபவமா? ஹிஹி

    ஏழுமணி நேரம் தூங்கியவன்

    ஐயோ நான் இப்போ முக்கால்வாசி நேரம் அதான் செய்றேன் . இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை

    பேசாம காலையிலேயே வாங்கிட்டு வந்துடலாமே சாப்பாட்டை.

    "நீயெல்லாம் ஓட்டு போட்டு என்ன ஆகப்போகுது..

    ஆமாம் கரெக்ட் தானே . இப்போலாம் என்னமோ திருமங்கலம் formula தானாம் .

    பதிலளிநீக்கு
  4. அனுபவமே கதையாக. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சரவணன்.

    பதிலளிநீக்கு