Search This Blog

வியாழன், 15 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 2

"பேர் சொல்லிக்கூப்பிட்டா கோவிச்சுக்க மாட்டீங்கிளா?"என்ற ராஜசேகர் தேவையில்லாமல் சிரித்து வைத்தான்.

"ஷண்முகப்ரியா...-இந்தப்பேர் எப்படி இருக்கு?" என்ற அவள், இரண்டு கண்களையும் சிமிட்டினாள்.

"உங்களை மாதிரியே அழகா இருக்குங்க..."என்று சொல்லும்போதே இவன் மனதுக்குள் குதூகலம்.

"அழகான பேரை சொல்லி கூப்பிடாம இருந்தாதான் என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு கோபம் வரும். இப்படியே வழிஞ்சுகிட்டு நிக்காம போய் சாப்பிட்டுட்டு வாங்க. கையேந்திபவன் காலியாயிடப்போகுது."என்ற ஷண்முகப்ரியா வேலையில் கவனமானாள்.

இவன் வழி கேட்டு ஒரு கையேந்திபவனை அடைந்தபோது அங்கே இட்லி காலியாகியிருந்தது. கடைக்காரர்,காய்ந்துபோயிருந்த பூரியைக் காட்டி,"கெளங்கு இல்லை.சாம்பார்தான் இருக்கு.இன்னா சொல்ற..."என்றார்.

"சரி...திங்கிறேன்." என்று அதை வாங்கிய ராஜசேகர், பூரியுடன் மல்யுத்தம் நடத்தி அவற்றை உள்ளே தள்ளினான்.

இவன் சென்னைக்கு வந்து பசி தீர்க்க எடுத்த முதல் முயற்சியில் வயிற்றுக்குள் ரயில்வண்டி ஓடத்தொடங்கியிருந்தது. கிளினிக்குலதான் டாய்லெட் இருக்கே...சமாளிச்சுக்கலாம். என்று நினைத்தபடியே பணியிடத்துக்கு திரும்பினான் ராஜசேகர்.
கிளினிக்கில் வேலை செய்யும் பெண்களில் நிறையபேர் வந்துவிட்டிருந்தார்கள். ஹாலில் இருந்த இருக்கைகளும் பெருமளவு பேஷண்டுகளால் நிரம்பியிருந்தன.

'அவசரப்பட்டு ஷண்முகப்ரியாவை அழகுன்னு சொல்லிட்டோமோ...இங்க வேலை செய்யுற பொண்ணுங்க எல்லாருமே அழகாத்தான் இருப்பாங்க போலிருக்கே. ராத்திரி பயணத்தால தூக்கமே இல்லை. இவ்வளவு நேரம் கண்ணு எரியுற மாதிரி இருந்துச்சு. இப்ப குளுகுளுன்னு இருக்கே...'என்றெல்லாம் யோசித்துக்கொண்டே ரிஷப்ஷன் டேபிளை நோக்கிச் சென்றான்.

"ராஜசேகர்...இதுல எந்த எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு அமவுண்ட்டுன்னு எழுதியிருக்கேன். டாக்டர் எந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்னு இந்த ஸ்லிப்புல டிக் அடிச்சு தந்துடுவார். அதுக்கு நேரே தொகையை எழுதி டோட்டல் போட்டு ரெசீப்ட் போட்டுட வேண்டியதுதான்.

நல்லா பழகுற வரைக்கும் என் டேபிளுக்கு வந்துடுங்க...அப்புறம் ஒரு ஓரமா சுவத்துல வெச்சு கூட ரெசீப்ட் போட்டுடுவீங்க. எப்படியோ எனக்கு திட்டு வாங்கி கொடுக்காம இருந்தாசரி...உங்களுக்கு இந்த வேலையை எல்லாம் சொல்லிக்கொடுக்கணும்னு சொல்லி டாக்டரோட மிஸஸ் ஆர்டர் போட்டிருக்காங்க."என்ற ஷண்முகப்ரியா வசூலிக்க வேண்டிய தொகைகள் எழுதப்பட்ட ஸ்லிப் ஒன்றை ராஜசேகரிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிய ராஜசேகர் பேஷண்ட் அருகில் காலியாக இருந்த இருக்கையில் போய் அமர்ந்தான்.

"அய்யோ...ராஜசேகர், அங்க எல்லாம் உட்காரக்கூடாது. ரொம்ப சிரமமா இருந்தா இங்க ரிஷப்ஷன் டேபிளுக்குப் பின்னால இருக்குற சேர்ஸ்ல கொஞ்ச நேரம் உட்காருங்க. கண்ட இடத்துலயும் உட்கார்ந்தா டாக்டர் ஒண்ணும் சொல்ல மாட்டார். டாக்டரோட வைஃப் ஒருவழியாக்கிடுவாங்க."

சட்டென்று எழுந்து வந்த ராஜசேகர்,"நான் எங்க உட்கார்ந்துருக்கேன்னு பார்க்க சார் வெளியில ஓடி ஓடி வருவாரா...ஏங்க இப்படி பயமுறுத்துறீங்க?" என்றான்.

"அவரு ஏன் எழுந்து வந்து பார்க்கணும்? இந்த குட்டி கிளினிக்குக்குள்ள ஆறு கேமரா இருக்கு. அவரோட ரூமுக்குள்ள இருக்குற டி.வியில எல்லாத்தையும் கவனிச்சுகிட்டே இருப்பாரு...நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறையவே இருக்கு..."என்று சிரித்தாள் ஷண்முகப்ரியா.

"சின்னப்புள்ளையா இருந்தப்ப, கல்யாண வீட்டுல வீடியோவுல பதிவாகணும்னு வெறியோட அலையுவேன். இனிமே கேமரா என்னைய பார்த்துடுமோன்னு பயந்துதான் வாழணுமா?"என்று ராஜசேகர் புலம்பியதைக் கேட்ட ஷண்முகப்ரியா லேசாக சிரித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

அப்போது அங்கே வந்த மணிகண்டன்,"டேய்...ராஜசேகர்...என்னோட வா..." என்று கிளினிக்கின் பின்புறம் அழைத்துச் சென்றான்.

"எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்த?"என்ற ராஜசேகரின் குரலில் ஒருவித அலுப்பு தெரிந்தது.

"டேய் பட்டிக்காட்டு வெளக்கெண்ணை...ஷண்முகப்ரியாகிட்ட இப்படி கடலை வறுக்குற?...ஒரேடியா சட்டி தீயுற வாடை. இப்படியே அவகிட்ட பேசிகிட்டே இருந்தீன்னா மத்தவளுங்க எல்லாம் சேர்ந்து உனக்கு ஆப்பு வெச்சுடுவாளுங்க..."என்று மணிகண்டன் சொன்னதும் ராஜசேகரின் முகத்தில் பிரகாசம்.

"தம்பி...நீ பெரிய சினிமா ஷீரோ...அதனால பத்துப்பதினஞ்சு பேர் உனக்காக போட்டி போடுறதா நினைச்சுடாத...நிறைய மனிதர்கள்கிட்ட இருக்குற பொறாமைக்குணம்தான் இதுக்கு காரணம். நம்ம கிட்ட மட்டும்தான் அதிகமா பேசணும். முக்கியமான விஷயங்களை நாமதான் கத்துக்கொடுக்கணும். அடுத்தவங்களோட அவருக்கு அல்லது அவளுக்கு டீப்பான ஃப்ரெண்ட்ஷிப் இருக்கக் கூடாது...இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கின அரசியல் இங்கயும் இருக்கு.

அவ்வளவு ஏன்? ஷண்முகப்ரியாகிட்ட நீ அதிகமா பேசுறது எனக்கே பொசபொசன்னுதான் இருக்கு.சரி...வா...ரொம்ப நேரம் நாம கேமராவுல சிக்கலன்னா டாக்டர் ஓலை அனுப்பிடுவார்."என்று மணிகண்டன் சொல்லிச் சென்றதும் ராஜசேகருக்கு தன் முதுகே தெரிவது போல் இருந்தது.

அரைமணிநேரம் கழித்து முதன்முதலாக ஒரு பேஷண்டுடன் அட்டெண்டராக உள்ளே சென்றான். வெளியில் இருந்த புழுக்கத்துக்கு உள்ளே இருந்த ஏ/சி இவனுக்கு சுகமாகத்தான் தெரிந்தது.

உயரம், எடை போன்றவற்றைக் எப்படி குறிக்க வேண்டும் என்று டாக்டரே ராஜசேகரிடம் சொன்னார்.'இவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரே...'என்ற எண்ணம் ராஜசேகர் மனதில்.

இவன் வெளியில் கிளம்பும் போது,"ராஜசேகர்...லேப்ல சரஸ்வதின்னு ஒரு பொண்ணு இருக்கும். அதை ரிஷப்ஷன் டேபிளுக்கு வரசொல்லி ரெசீப்ட் போடுங்க. அடுத்த பேஷண்ட்டுக்கு நான் டிக்டேட் பண்ணப்போற ரிப்போர்ட்டை எழுத ஷண்முகப்ரியா இங்க வந்துடுவாங்க."என்று சொல்லி அனுப்பினார் டாக்டர்.

இவன் அமவுண்ட் வாங்க வேண்டிய பேஷண்ட்டை ரிஷப்ஷன் அருகில் அமரசொல்லிவிட்டு, லேப்புக்கு சென்றான்.

"இங்க யாருங்க சரஸ்வதி?...டாக்டர் ரிஷப்ஷன் டேபிளுக்கு வரசொன்னார்."

அங்கு இருந்த ஆறு பெண்களில் ஆரஞ்சு வண்ண சுடிதாரில் இருந்த அவள்,"ஏம்பா சரஸ்வதீன்னு இழுக்குற?...சரஸ் அப்படின்னு சுருக்கு.இப்படி பேர் வெச்ச அப்பா அம்மாவை முதல்ல உதைக்கணும்...இந்த டாக்டரை அடுத்ததா மிதிக்கணும்...சரி...வா..."என்று சொன்ன சரஸ்வதி இவனுக்கு முன்னால் நடந்தாள்.

அவள் பேசியதைக் கேட்டு திகைத்து நின்ற ராஜசேகரைப் பார்த்து, மற்ற பெண்கள் சிரித்தார்கள்.

அப்போது ஒருத்தி சொன்னதைக் கேட்டு பதறிப்போன ராஜசேகர்....

2-தொடரும்
******

அங்காடித்தெரு படம் பற்றி ஒருசிலரால் குறையாக சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு. எந்த முதலாளியும் தங்களின் கொடூர முகத்தை இப்படி பகிரங்கமாக காட்டமாட்டார்கள். படத்துக்காக மிகைப்படுத்திய காட்சிதான் அது என்பது இவர்களின் வாதம்.

இப்படி சொல்பவர்கள் நிச்சயமாக இப்படியும் ஒரு உலகம் இருப்பதைப் பார்க்கும் வாய்ப்பு அமையாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் ஒட்டுமொத்தமாக தொழிலாளியை வஞ்சிக்கும் முதலாளிகளைப் பற்றி கணக்கெடுத்துப் பார்த்தால் வேறொரு உண்மை புலப்படும்.
பேருந்துநிலையம், மதுக்கடை அருகில் உள்ள கடைகள், இரவு நேரக் கடைகள் உட்பட பல இடங்களில் பணியாளர்கள் மீதான வன்முறை இப்படி இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் மிக அதிகமான முதலாளிகள் மோசமான அரசியல்வாதிகள் போலவேதான்.

அதாவது, அவர்கள் பேசும்போது பளிங்குத்தரையாகத்தான் தெரியும். ஆனால் திரைமறைவு நடவடிக்கைகள் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட  சாலையைப் போன்றே மோசம்தான். இந்த மோசமான முகமும் எல்லா இடத்திலும் வெளிப்படாது. தோலில் ஒட்டிக்கொண்டு நமக்கே தெரியாமல் ரத்தம் உறிஞ்சும் அட்டை போலத்தான் எளிய மக்களின் உழைப்பை சுரண்டுவார்கள்.

மதுவுக்கும் பிரியாணிக்கும் சொற்பத் தொகைக்கும் அடிமட்டத்தொண்டன் இவர்களுக்கு அடிமையாக கிடப்பது இந்த வகைதான்.

இப்போது நான் வேலை செய்யும் இடத்தில் இரண்டு கால்களும் முற்றிலும் செயலிழந்த பெண்ணும் வேலை பார்க்கிறாள். இன்று மதியம் அழுதுகொண்டிருந்த அவளை சக ஊழியைகள் சமாதானப் படுத்தினார்கள். காரணம் என்ன தெரியுமா?

காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை வேலை செய்யும் அந்தப் பெண்ணிற்கு மாதம் ஆயிரத்து நூறு ரூபாய்தான் ஊதியம். அதையும் இன்று (15ந்தேதி) வரை வழங்கவில்லை. மேலாளரிடம் கேட்டதற்கு, என் வேலை உங்களிடம் வேலை வாங்குவதுதான். சம்பளம் வேணுன்னா முதலாளிகிட்ட பேசிக்குங்க... என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி வேலை செய்பவர்களுக்கான சொற்பக்கூலியைக் கூட மிக மிக காலதாமதமாக தரும் முதலாளிகளும் என் பார்வையில் மிக மிக ஆபத்தானவர்களே.

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 1

3 கருத்துகள்:

  1. கூலிக்கேத்த ஊதியம் கூட கொடுக்காமல், அலட்சியம் எதற்கு? எளியவர்களின் கண்ணீர், வீணாய் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  2. "உங்களை மாதிரியே அழகா இருக்குங்க..."என்று சொல்லும்போதே இவன் மனதுக்குள் குதூகலம்.அவசரப்பட்டு ஷண்முகப்ரியாவை அழகுன்னு சொல்லிட்டோமோ...இங்க வேலை செய்யுற பொண்ணுங்க எல்லாருமே அழகாத்தான் இருப்பாங்க போலிருக்கே. ராத்திரி பயணத்தால தூக்கமே இல்லை. இவ்வளவு நேரம் கண்ணு எரியுற மாதிரி இருந்துச்சு. இப்ப குளுகுளுன்னு இருக்கே...'என்றெல்லாம் யோசித்துக்கொண்டே ரிஷப்ஷன் டேபிளை நோக்கிச் சென்றான்.

    என்னங்க நான் 1st time கதைன்னு நினைச்சேன். இப்பவும் அப்படிதான் நினைக்கிறேன்னு சொல்ல வந்தேன்.


    தம்பி...நீ பெரிய சினிமா ஷீரோ...அதனால பத்துப்பதினஞ்சு பேர் உனக்காக போட்டி போடுறதா நினைச்சுடாத

    நான் கூட ஒரு செகண்ட் அப்படி தான் நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  3. @ angel

    //என்னங்க நான் 1st time கதைன்னு நினைச்சேன். இப்பவும் அப்படிதான் நினைக்கிறேன்னு சொல்ல வந்தேன்.//

    புரியலையே...

    பதிலளிநீக்கு