Search This Blog

புதன், 14 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 1

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜசேகர் தெருவுக்குள் நுழையும் முன்பு இவனிடம் இருந்த சுமைகளைப்பார்த்துவிட்டு  ஒன்றிரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் சற்று முன்னால் வந்தார்கள். ஆனால் இவன், எந்த வித தயக்கமும் இல்லாமல் ரங்கநாதன் தெருவிற்குள் இறங்கி நடந்ததும் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். இதைப்பார்த்த ராஜசேகருக்கு அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போல் மகிழ்ச்சி.
வேலை கிடைத்து புறப்பட்ட இவனுக்கு, சென்னை ரிட்டன் நண்பன் (எவ்வளவு நாள்தான் துபாய் ரிட்டன், சிங்கப்பூர் ரிட்டன் இப்படியே சொல்றது?) சில ஆலோசனைகளை சொல்லியிருந்தான். "உனக்கே நேரம் சரியில்லை. ஊருக்குப் புதுசுன்னு தெரிஞ்சா ஆப்படிக்கிற ஆட்டோக்காரங்க கிட்டதான் நீ போய் மாட்டுவ. அதனால, நடந்தே இந்த முகவரிக்குப் போற மாதிரி நான் வழி சொல்றேன்" என்ற அவன், ராஜசேகரிடம் எப்படி நடந்து செல்ல வேண்டும் என்று கூட பாடம் எடுத்தான்.

அதைக்கேட்ட ராஜசேகர், பிறந்து வளர்ந்த ஊரில் நடப்பது போல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து செல்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவன் வைத்திருந்த சுமைகள் அப்படி. ஆனால் ஆட்டோவுக்கு கொடுக்கும் நூறு ரூபாய் இருந்தால் கையேந்தி பவனில் ரெண்டு நாளைக்கு சாப்பிடலாம். அங்க போனா ஒவ்வொன்னுக்கும் காசு. உள்ளூருன்னா சொந்தக்காரங்க வீட்டுக்கு சும்மா பார்க்கப்போற மாதிரி விசிட் விட்டுட்டு வயித்தை நிரப்பிட்டு வந்துடலாம். அங்க அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லடி மாப்ளே...என்று நண்பன் சொன்னது நினைவுக்கு வரவும் ராஜசேகர் வைத்திருந்த பேக்கும், ப்ரீஃப் கேசும் கனமாகவே தெரியவில்லை.

பெரிய மருத்துவமனையை எதிர்பார்த்திருந்த ராஜசேகருக்கு பர்கிட் ரோட்டில் அமைந்திருந்த அந்த கிளினிக்குக்கு சென்றதும் சின்ன ஏமாற்றம். அங்கே உள்நோயாளிகள் அனுமதி எல்லாம் கிடையாதாம். பரிசோதனைகள், ஆலோசனைகள் மட்டுமே. இதிலேயே ஒரு நாளைக்கு இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கும் கிளினிக் அது. மருத்துவரின் பெரியப்பா ஆள்பிடிக்கும் தேடுதலில் இறங்கியபோது ராஜசேகர் சிக்கியிருந்தான்.

சாப்பாடு மட்டும் வெளியில பார்த்துக்க. ஆஸ்பத்திரியிலேயே தங்கிக்கலாம். வாடகையும் அட்வான்சும் மிச்சம் அப்படின்னு அவர் சொன்னதை நம்பி வந்த ராஜசேகருக்கு காட்டப்பட்ட அறையைப் பார்த்ததும் பகீர் என்றது. பனிரெண்டுக்கு பத்து என்ற அளவுடைய அறையில் ஆறு பேருக்கு அலாட்மெண்ட் என்று சீனியர் சொன்னான்.

"தம்பி...ரொம்ப பயப்படாத...இந்த ரூம்ல ஏசி வெச்சாதான் படுக்கமுடியும். இல்லன்னா லாயக்கில்லை. அதனால பேஷண்ட் வெயிட்டிங் ஹால்லயே படுத்துக்கலாம். என்ன...ராத்திரி பதினோரு மணிக்கு முன்னால படுக்க முடியாது. காலையில ஆறரை மணிக்கப்புறம் தூங்க முடியாது. போகப்போக பழகிடும்.

ஊருல உட்கார்ந்த இடத்துலயே வேலையா...இல்ல...அலைஞ்சு திரிஞ்சு பழக்கமா..." என்றான் மணிகண்டன்.

"ஏன்?"

"இங்க உட்கார வாய்ப்பே இல்லை. அதான் கேட்டேன்."

"என்னது...உட்கார முடியாதா. நான் டிகிரி படிச்சுருக்கேன். லேப்ல எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு ஃபீஸ் அப்படின்னு குறிச்சு கொடுக்குறதுதான் வேலைன்னு சொன்னாங்களே." என்ற ராஜசேகரின் கண்களில் லேசான பதற்றம் தெரிந்தது.

இதைப் பார்த்ததும் சிரித்த மணிகண்டன்,"சரியாத்தான் சொல்லியிருக்காங்க. ஆனா ஒரு பேஷண்ட் டாக்டர் ரூமுக்குள்ள போகும்போது நீயும் கூடவே போகணும். உயரம், எடையை குறிச்சு டாக்டர்கிட்ட சொல்லணும். அவர் குறிச்சு கொடுக்குற டெஸ்ட்டுக்கான ஸ்லிப்பை எடுத்துகிட்டு பேஷண்ட்டோட வெளியில வந்து தொகையைக் குறிச்சு பணம் வாங்கி, கட்டி பெய்டு சீல் வெச்சு லேப்புக்குள்ள அனுப்பணும். அதுக்குள்ள வேற பேஷண்ட்டுகள் சிலரை மற்ற ஸ்டாஃப் கவனிச்சுக்குவாங்க. மறுபடி நீ முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்."என்றான்.

இப்போது ராஜசேகர் மனம் முழுவதும் வெறுப்பு. இந்த வெறுப்பு மனதில் இருக்கும்போது கலெக்டர் வேலையே கிடைத்தாலும் ஈடுபாடு வராது.

"அட்டெண்டர் வேலைன்னு சுருக்கமா சொல்லக்கூடாதா?" என்றான்.

இதைக் கேட்ட மணிகண்டன்,"அட...நீ டிகிரி படிச்ச ஆளுதாம்பா...இவ்வளவு சரியா புரிஞ்சுகிட்ட...பத்து நாள் வரை நீ இங்க இருக்குற யார்கிட்ட வேணுன்னாலும் வேலை தொடர்பான சந்தேகம் கேட்கலாம். யாரும் திட்ட மாட்டாங்க. அதுலயும் லேபுக்கு வர்ற பொண்ணுங்க எல்லாம் அழகா அம்சமா இருக்கும். அவங்ககிட்ட ஜாலியா கடலை போடுறது ஒண்ணுதான் எனக்கு இப்ப இருக்குற ஒரே ஆறுதல். நீயும் என்ஜாய். இப்ப போய் குளிச்சுட்டு வா. நான் தாங்கிக்குவேன். நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் என்னைய தப்பா நினைச்சுடுவாங்க."என்று சொல்லிவிட்டு அகன்றான்.

குளித்துவிட்டு உடைமாற்றி மேக்கப்புடன் வந்த ராஜசேகர், ரிஷப்ஷன் டேபிளின் பின்னால் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த பெண்ணிடம்,"மேடம்...நான் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன். இப்ப என்ன செய்யணும்." என்றான்.

அவள் நிமிர்ந்து,"மணிகண்டன் சொன்னார். வேலையைத் தொடங்குறதுக்கு முன்னால போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்புறம் ரெண்டு மணி வரை எங்கயும் போக முடியாது. இன்னொரு விஷயம்...நான் உங்களோட சின்னப்பொண்ணாத்தான் இருப்பேன். அதனால மேடமெல்லாம் வேண்டாம். கால் மீ ஷண்முகப்ரியா..."என்றாள்.

1-தொடரும்

******
இந்தக் கதையை நான் எழுத தூண்டுதலாக இருந்தது அங்காடித்தெரு படம்தான். படத்தில் மூன்றாவது தளத்தின் சூப்பர்வைசராக வரும் இயக்குனர் A.வெங்கடேஷ்,"என்னலே சிரிப்பு..."என்று பல்லைக்கடித்துக்கொண்டு கேட்கும் காட்சியில் பாண்டியும் மகேஷும் அலறுவது காமெடிக்காட்சியாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக, அவருடைய அட்டகாசத்தைப் பார்க்கும்போது பிடித்து அடித்து விடலாமா என்று கூட நினைக்க வைத்தது. அதுதான் அவருடைய நடிப்புக்கு கிடைத்த வெற்றி.

இந்தப் படம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் பத்து இயக்குனர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்தேன். வசந்தபாலன் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தபோது A.வெங்கடேஷ் அசோசியேட் டைரக்டராம். வசந்தபாலன் படப்பிடிப்பின்போது முக்கியமான ஒரு நோட்டைத் தொலைத்து விட்டபோது ஒரு வெங்கடேஷ் டெரர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

வசந்தபாலன் அப்போது அவரைப்பார்க்கவே அஞ்சி நடுங்கிய அனுபவம்தான் இந்த கேரக்டரில் வெங்கடேஷை நடிக்கவைக்க காரணம் என்று சொன்னார்.

ஆனால் ஒன்றிரண்டு முறை இயக்குனர் வெங்கடேஷைப் பார்த்தால் அவர் இவ்வளவு டெரர் என்று சொல்லவே முடியாது.
நீ எத்தனை தடவை அவரைப் பார்த்துருக்கன்னுதானே கேட்குறீங்க. ஒரே ஒரு தடவை ஏ.வி.எம் ஸ்டுடியோவுலதான் சந்திச்சிருக்கேன்.

2006ம் வருஷம் தீபாவளி நெருங்கிய சமயம், ஏவிஎம் ஸ்டுடியோவுல வாத்தியார் படத்தோட எடிட்டிங், கே.பாக்யராஜ் ஸ்டுடியோவுல சரத்குமாரின் நூறாவது படமான தலைமகன்  எடிட்டிங் நடந்துகிட்டு இருந்தது. நெகட்டிவை பிராசஸ் பண்ணின பிறகு பிரிண்ட் போட்டுட்டு அதை அப்படியே எடிட்டிங் செய்யப் பயன்படுத்துற சிரமமெல்லாம் இப்ப கிடையாது. டெலிசினி மெஷின் மூலமா வீடியோ டேப்புக்கு கன்வர்ட் பண்ணிடுவாங்க.

அந்த டேப்புல பதிவான படத்தை கணிணிமூலமா அவிட், எஃப் சி பி போன்ற தொழில்நுட்பம் மூலமா  தொகுத்து, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் முடிஞ்சு திருப்தி வந்த பிறகுதான் ஒரிஜினல் நெகட்டிவ்ல மாற்றம் செய்யுறதெல்லாம் நடக்கும்.

வீடியோ டேப்புல இருக்குற படத்தை கணிணியில ஏற்ற பீட்டா கேம் பிளேயர் தேவை. பல லட்ச ரூபாய் விலையுள்ள அந்த பிளேயரை நான் இந்த எடிட்டிங் நடக்குற இடத்துக்கெல்லாம் எடுத்துட்டுப் போனேன். இருபது கிலோவுக்கு குறையாத எடை இருக்கும்.

வாத்தியார் பட எடிட்டிங் வேலைக்காக பிளேயரை எடுத்துட்டுப் போகும்போது ஏவிஎம்ல அர்ஜூன், A.வெங்கடேஷ், எடிட்டர் வி.டி.விஜயன்  எல்லாம் இருந்தாங்க. அப்ப வெங்கடேஷ் பேசிகிட்டு இருந்ததை பார்த்துருக்கேன். அவரைப்பார்த்தா கோபப்படுவாரான்னு கேட்குற மாதிரிதான் இருந்துச்சு. ஆனா வசந்தபாலன் வெங்கடேஷ் கோபத்தைப் பத்தி சொன்னதும்,"நம்பமுடியவில்லை..."அப்படின்னு பாடத்தான் தோணுச்சு.

******
அங்காடித்தெருவில் நான் கண்ட விஷயங்கள்

3 கருத்துகள்: