வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உலக புத்தக தினம்-ஏப்ரல் 23-கரணின் கந்தாவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?

இந்தப் படத்தின் இயக்குனரான பாபு.K.விஸ்வநாத் திருவாரூரைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் பாபுகாமராஜ். அவரது தந்தை இரா.விஸ்வநாதன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எழுத்தாளர்.பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில வாரப்பத்திரிகைகளில் திருவாரூர்பாபு என்ற பெயரில் பாபுகாமராஜ் எழுதிய கதைகளைப் படித்தபோது இவரை யார் என்றே தெரியாது.(இப்போதும் அவருக்கு என்னைத் தெரியாது.) ஆனால் அப்போதே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது.
திருவாரூர்பாபு எழுதிய "காத்திருக்கிறார்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். 15.08.1947க்கு முன்பு மழைபெய்யும் இரவில் சுதந்திரப்போராட்ட கலகம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கிராமத்துப் பெண்மணி பிரசவ வலியால் நடுவழியில் அவதிப்படுவாள். அப்போது அந்த வழியாக வரும் ஆங்கிலேய அதிகாரி, தான் காரை விட்டு இறங்கிக்கொண்டு கர்ப்பிணியை தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்புவார். நல்லபடியாக மருத்துவமனையில் அந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்கும்.

கதையில் அடுத்த பகுதி, அந்த கர்ப்பிணியின் பேரனுக்கு திருமணமாகி அவன் மனைவியும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இதே மாதிரியான ஒரு சிக்கல். இது 15.08.1947க்குப் பிந்தைய காலமாயிற்றே.(முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.) மதக்கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் இந்த கர்ப்பிணியால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை.

அப்போது அந்த வழியாக வந்த போலீசார், நிலைமையைக் கேட்டுவிட்டு, "சரி...எதாவது வண்டி வந்தா போங்க." என்று சொல்லிவிட்டு நாகரிகமாக(?!) சென்றுவிடுவார்கள்.

அந்த கர்ப்பிணிப்பெண்ணும் அவள் குடும்பத்தாரும் எதாவது வாகனம் வருகிறதா என்று காத்திருக்கிறார்கள் என்று கதை முடியும்.

அந்த சிறுகதைத் தொகுப்பில் மற்றொரு கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்குக் காரணம், அந்தக் கதை எங்கள் ஊரில் 1995ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச்சம்பவம் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. திருவாரூர் பாபு எழுதிய இந்தக் கதையின் முடிவு மிகவும் எதார்த்தமாக இருந்தது. இந்த கதைக் கருவை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாமே என்று யோசித்தேன். கதாபாத்திரங்கள், சம்பவங்கள் என்று அனைத்திலும் நான் வேறு பல மாற்றங்களுடன் என் மனதுக்குத் தோன்றிய நடையில் குறுநாவலாக எழுதி மாலைமதிக்கு அனுப்பினேன்.

அதுவும் பிரசுரமானது. ஆனால் தூரம் அதிகமில்லை வெளிவந்த இதழை மட்டும் நான் படிக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு குமுதத்தில் இருந்து 300 ரூபாய்க்கான காசோலை வந்த பிறகுதான் அந்த மாலைமதி இதழைத் தேடி அலைந்தேன். திருவாரூரில் உள்ள பத்திரிகை நிருபர்கள், முகவர்கள் ஆகியோரில் பலர் எனக்கு நண்பர்கள்தான். குமுதம் குழும பத்திரிகைகளின் முகவரிடம் தேடியும் இந்த இதழ் கிடைக்கவில்லை. பிறகு வாடகை நூல் நிலையம் நடத்தும் ஒரு நண்பரிடம் தேடி இந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்தேன்.

அந்த காசோலையை வசூலிப்பதற்காகத்தான் வங்கிக்கணக்கையும் ஆரம்பித்தேன்.

கந்தா படத்தின் இயக்குனர் படித்த கல்லூரியின் வணிகவியல் துறையில்தான் நானும் படித்தேன்.(திரு.வி.க கல்லூரியின் வணிகவியல் துறையில் படித்த எனக்குத்தெரிந்த மற்றொரு பத்திரிகை ஆசிரியர் 'குமுதம்' ப்ரியா கல்யாணராமன்.)சுதந்திரப்போராட்ட தியாகியான திருவாரூர் பாபுவின் தந்தை இரா.விஸ்வநாதன் என் தந்தையின் டீக்கடையில் நான் இருக்கும்போது அடிக்கடி வருவார். சாத்வீகமான அவரது தோற்றமே எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தோன்றும். அப்படி நான் எழுந்து நிற்கும்போது "கல்லாவுல இருக்குற நீ இப்படியெல்லாம் எழுந்து நிற்கத்தேவையிலைப்பா."என்று அன்போடு கூறுவார்.அப்போது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும்.

பாபுவின் தந்தை திருவாரூரில் தட்டச்சுப் பயிலகம் நடத்தி வந்ததால் ஆரம்ப கால கட்டத்திலேயே பாபு, கதைகளை தட்டச்சுதான் செய்து அனுப்பியிருக்கிறார். பிறகு தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வேலை செய்த அவர் இயக்குனர் சரணிடம் (சரவணன்) உதவி இயக்குனராக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஜே.ஜே, இதயத்திருடன் (பட்டியலில் சில படங்கள் விடுபட்டிருக்கலாம்.) ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

ஆசிரியர், மாணவனுக்கு இடையே உள்ள உறவை மையமாகக் கொண்டு கந்தா படத்தை இயக்கியிருக்கும் அவர் தஞ்சாவூரைத்தான் கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். முதலில் காமெடிப் பகுதிக்கு வடிவேலுவை நடிக்கவைக்க முயற்ச்சித்திருக்கிறார்கள். கால்ஷீட் பிரச்சனையால் விவேக் நடித்திருக்கிறார்.

ஆனால் பாபு இயக்கிய படத்தைப் பார்ப்பதற்குள் அவரது தந்தை இரா.விஸ்வநாதன் அமரராகிவிட்டார்.

பாபு.K.விஸ்வநாத் அவர்களுடன் நேரில் பேசியது இல்லை. அப்புறம் ஏன் அவரைப் பத்தியும் படத்தைப் பத்தியும் மாங்குமாங்குன்னு எழுதி பப்ளிசிட்டி கொடுக்குறன்னுதானே கேட்குறீங்க? எல்லாம் ஒரே ஊர்க்காரருன்னு பாசந்தான். தசாவதாரம் படத்தில் பல்ராம்நாயுடுவிடம் ஒரு பையன் தன் பெயர் நரசிம்மராவ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஆந்திராவா என்று வாஞ்சையாக கேட்பாரே அப்படித்தான் இதுவும்.
தூரம் அதிகமில்லை கதையின் அடுத்த ஐந்து அத்தியாயங்களை நான் பதிவேற்றம் செய்ய சற்று தாமதமாகும்போல் தெரிகிறது. வரும் ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களும் சென்னையில் இருப்பேன். அதனால் ஏப்ரல் இறுதியில் மீதமுள்ள ஐந்து அத்தியாயங்களையும் பதிவேற்றுகிறேன்.
இன்று உலகபுத்தகதினம். வாசிக்கும் பழக்கம் என்னை மேம்படுத்தியுள்ளது என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் பாடப்புத்தகம் தவிர மற்றவற்றைப் படிக்கிறேன் என்று சொல்லும்போது அதனால் என்ன பிரயோஜனம் என்று கேட்கும் மக்கள் இன்னும் அதிகமாகவே இருக்கிறார்கள். பாடப்புத்தகத்தை கஷ்டப்பட்டு படிப்பவர்கள்தான் அதிகம். ஆனால் மற்ற நூல்களை இஷ்டப்பட்டு படித்தால் அவை நிச்சயமாக நம் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

தூரம் அதிகமில்லை-குறுநாவல் 

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

தூரம் அதிகமில்லை-கந்தா-என்ன சம்மந்தம்?

பதிவு எழுத ஆரம்பிச்சதுல இருந்து நானும் சினிமாவைத் தவிர்த்துட்டு எழுத அப்பப்போ முயற்சி செய்துகிட்டுதான் இருக்கேன். ஆனா திரும்பிப்பார்த்தா என்னைய ரொம்ப நல்லவன்னு நம்புற வழக்கமா வர்ற சகாக்கள் மட்டும்தான் வர்றீங்க. கமல்ஹாசன், தினமலர் பேரைப் பயன்படுத்தி ஒரு பதிவு எழுதுனதும் முதல்நாள் இருநூற்று ஐம்பது, அடுத்த நாள் அறுநூற்று அறுபது, அதற்கடுத்தநாள் இருநூறுக்குமேல அப்படின்னு ஹிட் விழுந்துகிட்டே இருக்கு.

அதனால விளம்பரத்துக்குப் பாவமில்லைன்னு நானும் டிரெண்ட்டுக்கு ஏத்த மாதிரி படங்களைப் பயன்படுத்தியே நான் சொல்ல நினைக்கிற கருத்துக்களை பதிவு பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இளையபாரதம் பேனர்ல சொன்ன மாதிரி என்னுடைய குறுநாவலுக்கும் கரண் நடிக்கும் கந்தா படத்துக்கும் என்ன சம்மந்தம்?...

நீங்க நினைக்கிற மாதிரி அது என்னோட கதை அப்படின்னெல்லாம் ஸ்டண்ட் அடிக்க மாட்டேன். ஏன்னா...சரி...அது என்னன்னு குறுநாவலோட முடிவுல நீட்டி முழக்கி எழுதுறேன்.

இதுல அஞ்சு அத்தியாயம் இருக்கு. மீதி இருக்குற அஞ்சு அத்தியாயத்தை ரெண்டு மூணு நாளைக்குள்ள வெளியிட்டுடுறேன்.

குறு நாவலைப் படிப்போமா?
******

தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 1

நண்பகல் மணி 12.30.

திருவாரூர் நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் அவ்வளவாக பரபரப்பில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன.

தெற்குவீதி, காரைக்காட்டுத்தெரு, மேலவீதி ஆகியவற்றில் மதியம் வீட்டுக்குச் சாப்பிடச் செல்லும் மாணவ - மாணவிகள் கூட்டம் ஓரளவுக்கு இருந்தது.

கீழவீதியும், பனகல்ரோடும் சந்திக்கும் இடத்திலிருந்த போலீஸ் கண்காணிக்கும் குடைநிழலில் நின்றிருந்த காவலர் அங்கு இல்லை. அதனால் வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டத்துக்கு சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்தனர்.

நகர காவல்நிலையம்.

வார்டு கவுன்சிலர், எஸ்.ஐ.யிடம் ஒருவருக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருந்தார்.

"சார்...அந்த ஆள் உண்மையிலேயே ரொம்ப நல்லவர். நான் குடியிருக்குற ஏரியாவுல ரொம்ப வருஷமா இருக்கார்...தண்ணி போட்டதுல, ஏதோ தெரியாம பேசிட்டார்...தயவுபண்ணி விட்டுருங்க..."

"போதை ஏறிப்போனா தலைகால் புரியாதோ...தேரடிக்குப் பக்கத்துல உட்கார்ந்து சவுண்டு விட்டுகிட்டு இருந்தார். இங்க உட்காராதீங்க...எழுந்து வீட்டுக்குப் போங்கன்னு நான் முதல்ல மரியாதையாத்தான் சொன்னேன்.

என்னையே தரக்குறைவா பேசினா?...அதான். ரெண்டு தட்டு தட்டி இங்க இழுத்துட்டு வந்துட்டேன்...சரி...வயசான ஆளா இருக்காரு...சாயந்திரம் வரைக்கும் இங்க இருக்கட்டும். அப்புறம் அனுப்புறேன். நீங்க போயிட்டு வாங்க."என்றார் எஸ்.ஐ.

"சார்..."என்று இழுத்தார் அந்த கவுன்சிலர்.

"உங்களுக்கு மரியாதை கொடுத்தா காப்பாத்திக்கத் தெரியாதா?..." என்று பல்லைக் கடித்தார் எஸ்.ஐ.

"சரி...நான் வர்றேன் சார்."என்று சொல்லிவிட்டு வெளியேறினார் கவுன்சிலர்.
அதே நேரம்.

திருவாரூர் ஊரக காவல்நிலையம்.

தொலைபேசி மணி ஒலித்தவுடன் ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தார் ஏட்டு சிவசண்முகம்.

விஷயத்தைக் கேட்கக் கேட்க அவருடைய முகம் இலேசான மாறுதலுக்கு உட்பட்டது.

ரிசீவரை வைத்துவிட்டு நிமிர்ந்த ஏட்டு,"சார்...ஒரு மர்டர் கேஸ்..." என்றார்.

"நான் இந்த ஊருக்கு வந்த ரெண்டாவது நாளே ஒரு கொலை கேசா...?" என்று அலுத்துக்கொண்ட ராஜேஷ்குமார்,

"எந்த ஏரியா?" என்றார்.

"சோழபுரம்."
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 2

திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ளது அந்தக் கல்லூரி.

கையில் புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களுடன் சென்றுகொண்டிருந்தாள் ஷைலாபானு.

அவளிடம்,"என்னடி...உன் ஆள் கார்ர்த்திக்கும் அஸைன்மெண்ட் எழுதி எடுத்துக்கிட்டு வர்றியா...?" என்றாள் சுபா.

சுபா அவ்வாறு கேட்டவுடன், ஏற்கனவே வெண்மையாக இருந்த ஷைலாவின் கன்னம் சிவந்து போனது. எதுவும் பேசாமல் லேசாக வெட்கப்பட்டுக்கொண்டு நடந்தாள்.

"பொதுவா இதேமாதிரி காதலிக்கும்போது பசங்கதான் பொண்ணுங்களுக்கு ஏகப்பட்ட வேலை செஞ்சு தருவானுங்க.

இங்க அப்படியே தலைகீழா இருக்கு.பார்த்துடி...கல்யாணத்துக்கு அப்புறம் உன்னையத்தான் வேலை வாங்கப் போறான். இங்க படிக்கும்போதாச்சும் நீ அவனை வேலை வாங்கிப் பழகிக்க." என்றாள் சுபா.

"போடி...காதலைப் பத்தி உனக்கு என்ன தெரியும்...இதெல்லாம் எழுதிக்கொடுக்குறதால நான் ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டேன். மனசுல இருக்குற ஒருத்தருக்காக இது மாதிரி செய்யுறது எவ்வளவு சுகம் தெரியுமா?..." என்னவோ பெரிய அனுபவசாலியைப் போல் பேசினாள் ஷைலா.

"ஆமாமா...நாம காலேஜ்ல சேர்ந்ததுல இருந்து ஒரு வருஷம் விடாம உன்னைய துரத்துனானே...அதுக்கு நன்றிக்கடனா நமக்கு இந்த வருஷம் காலேஜ் திறந்தவுடனே உன் இதயத்துல இடம் கொடுத்துட்டியாக்கும்.

தொடர்ந்து போராடுபவனே வீரன் அப்படின்னு நான் ஒரு புத்தகத்துல படிச்சிருக்கேன். ஆனா நீ தொடர்ந்து துரத்துபவனே காதலன்னு முடிவு பண்ணிட்ட.

நீ இவ்வளவு அழகா இருக்குறதால அவன் அவ்வளவு நாள் மெனக்கெட்டான். இல்லன்னா அத்தனை நாள் வேஸ்ட் பண்ணியிருப்பானா?..."என்றாள் சுபா.

"உனக்குப் பொறாமை. நீயும் யாரையாச்சும் காதலி. அது முடியலைன்னா பேசாம இரு. என் கிட்ட இதைப் பத்தி பேசாத."என்று சற்று கோபத்துடன் சொல்லிவிட்டு நகர்ந்தாள் ஷைலா.

கல்லூரி வளாகத்தின் மரத்தடியில், கார்த்தி தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூவருடன் பேசிக்கொண்டிருந்தான். அந்த நால்வருமே ஆளுக்கு ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருந்தனர்.

"கார்த்தி," டேய்...நாம வெளியூருக்குப் போய் ரொம்ப நாளாச்சு. அடுத்த வாரம் வேளாங்கண்ணிக்குப் போயிட்டு வருவோமா?..."என்றான்.

"தாராளமா போயிட்டு வருவோமே...ஆனா நாம எல்லாரும் போறதோட ஜோடி சேர்ந்து போனா ரொம்ப ஜாலியா இருக்குமே." என்று யோசனை சொன்னான் மணிகண்டன்.

"நானும் அதையேதாண்டா யோசிச்சேன்...நாம ஒவ்வொருத்தரும் தனியா நம்ம லவ்வர்சைக் கூப்பிட்டா வரத் தயங்குவாளுங்க..."

அதனால எட்டுப் பேரும் சேர்ந்துதான்  போறோம்னு சொல்லி ரெடி பண்ணணும். இந்த காலேஜ் லைஃப் இன்னும் ஒண்ணரை வருஷம்தான் மீதம் இருக்கு. அதுக்கப்புறம் இப்படியெல்லாம் இருக்க முடியுமா?..."- இது குமாரவேல்.

கல்லூரியின் வேலை நாளிலேயே, எட்டுப் பேரும் வேளாங்கண்ணிக்குச் செல்வது என்று தீர்மானித்தனர்.

ஷைலாபானு உட்பட, நான்கு பேருமே முதலில் தயங்கினார்கள். ஆனால் அந்த வயது அவர்களுக்கு ஆவலைத் தூண்டி, சம்மதிக்க வைத்தது.
******

தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 3

கொலை நடந்தது பற்றி தகவலறிந்ததும், எஸ்.ஐ. ராஜேஷ்குமார், ஏட்டு சிவசண்முகம், மேலும் மூன்று காவலர்கள் ஒரு ஜீப்பில் சோழவரம் பகுதிக்குக் கிளம்பினர்.

திருவாரூர்-மயிலாடுதுறை  வழியில் இரண்டு கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது. அந்த ஊர் எல்லையைத் தாண்டியவுடன் ஒரு காளி கோயில். அந்த வழியாகச் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள் அங்கு வண்டியை நிறுத்தி, உண்டியலில் காசு போட்டுவிட்டு, கும்பிட்டுவிட்டுத்தான் செல்வார்கள்.

அந்தக் கோயிலைத் தாண்டி நூறு மீட்டர் தூரத்தில் கிழக்கே ரோடு ஒன்று பிரிந்து செல்லும்.

அந்த வழியில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சோழபுரம். அது மிகவும் சிறிய கிராமம்.

ஆனால் கொலை நடந்தது ஊர் எல்லைக்கு முன்பாகவே, ஒரு குளத்தின் அருகில்.

குளம் சுத்தமாக வறண்டு போயிருந்தது.

விஷயம் தெரிந்து அந்த இடத்தில் ஏற்கனவே கூட்டம். ராஜேஷ்குமார், இறந்து கிடந்தவனைப் பார்த்தார். இருபது வயது இருக்கலாம். உடையை வைத்துப் பார்க்கும்போது, நல்ல வசதியானவனாகத் தெரிந்தான்.

குளத்தின் கரையோரமாக ஒரு ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது.

சாலையோரத்தில் இருந்து சுமார் நூற்று முப்பது அடி தூரத்தில் அவன் இறந்து கிடந்தான்.

இடப்புற அடிவயிற்றில் கத்திக்குத்து காயம்.

ஏட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தது யார் என்று விசாரித்து, அவரிடம் சில விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். இறந்தவன் யார் என்ற விவரம், அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது.

வயர்லெஸ் மூலம் நாகப்பட்டினம் தடய அறிவியல் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டுதான் வந்திருந்தார் எஸ்.ஐ.

அவர்கள் வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. தடயங்கள் சேகரிக்கப்பட்டவுடன், எஸ்.ஐ. இறந்தவனின் சட்டை பாக்கெட்டுகளைத் துழாவினார்.

அவனுடைய லைசன்ஸ், அடையாள அட்டை ஆகியவை கிடைத்தன.

உடலைத் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, ராஜேஷ்குமாரும் மற்ற போலீசாருடன் ஜீப்பின் அருகில் சென்றார்.

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அனாதையாக நின்றுகொண்டிருந்த ஹீரோ ஹோண்டாவைக் கவனித்தார்.

சாவி வண்டியிலேயே இருந்தது. இரண்டு முறை வண்டியின்மீதும் கூடியிருந்த மக்களின் மீதும் அவருடைய பார்வை சென்றது.

அவர் இதற்கு முன்னால் சென்னையில் பணிபுரிந்தபோது அடிபட்டவன் உயிருக்குப் போராடும்போதே வண்டியை முப்பது பாகமாகப் பிரித்து முப்பத்தைந்து கடைகளில் விற்று விடுவார்கள்.

பெரும்பாலான இடங்களில் இப்படித்தான் நடக்கும். ஆனால், சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த வண்டி இப்படியே நிற்பதைப் பார்த்தவுடன் ராஜேஷ்குமாருக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை.

சாவியை எடுத்து பெட்ரோல் டாங்க் மூடியைத் திறந்தார். பாதிக்குமேல் பெட்ரோல் இருந்தது.

ஒருவேளை இன்றுதான் பெட்ரோல் போட்டிருப்பார்களோ என்று அவருக்குத் தோன்றியது.
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 4

ஜீப்பை ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்லிவிட்டு, ஹீரோ ஹோண்டாவை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

கிளை ரோட்டிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்ததும், அந்த காளியம்மன் கோயிலுக்கு எதிரில் ஒரு பெட்ரோல்  பங்க் இருந்ததைப் பார்த்தார்.

கட்டட வேலைகள் இன்னும் முழுவதுமாக முடியவில்லை. ஆனால் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

அங்கே சென்று வண்டியை நிறுத்தினார். ராஜேஷ்குமாரை சீருடையில் பார்த்ததும் வேலை பார்க்கும் பையனின் முகத்தில் ஒரு மரியாதை தெரிந்தது.

"சார்...அங்கே போய் பில் வாங்கிட்டு வரணும்..."

"இல்லைப்பா... நான் பெட்ரோல் போட வரலை. ஆமா நீ எத்தனை மணிக்கு இன்னைக்கு வேலைக்கு வந்த?"

"காலையில ஏழு மணிக்கு வந்தேன் சார்."

"வந்ததுலேர்ந்து நீ எங்கயும் போகாம இங்கேதான் இருந்தியா...?"-இவ்வாறு ராஜேஷ்குமார் கேட்டதும் அவனுடைய முகத்தில் லேசான மிரட்சி தெரிந்தது.

அதைக் கவனித்துவிட்ட அவர்,"தம்பி...பயப்படாத.இந்த வண்டிக்கு காலையில யாராவது பெட்ரோல் போட வந்துட்டுப் போனாங்களா?...எப்படியும் வந்திருந்தா காலையில பத்து மணிக்குள்ள வந்துருக்கணும். அதுக்கப்புறம் வந்திருக்க வாய்ப்பில்லை."

"சார்...இங்க கூட்டம் அதிகமா வர்றது கிடையாது. இந்த வண்டியை காலையில பார்த்த மாதிரி ஞாபகம். ஆனா, ஆள் யாருன்னு நினைவில்லை. ஃபோட்டோ எதுவும் இருந்தா நினைவுபடுத்திப் பார்க்கலாம்."

உடனே அந்த லைசன்சை எடுத்துக் காட்டினார் ராஜேஷ்குமார்.

அதைப் பார்த்ததும் அவனுடைய முகத்தில் பிரகாசம்.

"ஆமா சார்...இந்தப் பையன்தான் வந்தார். இவருக்குப் பின்னாடி இன்னொரு ஆளும் இருந்தார். அவருக்கு இருபத்தஞ்சு வயசுக்கு மேல இருக்கும்."என்றான் அவன்.

அந்தப் பையனுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார் ராஜேஷ்குமார்.
திருவாரூர்  மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை இருந்த ஏரியா, கூட்டத்தில் சிக்கி விழி பிதுங்கிக்கொண்டிருந்தது.

கமலாலயக் குளத்தின் தென்கரையில், கோர்ட், தீயணைப்புத்துறை, அரசு மருத்துவமனை ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.

இறந்தவனின் வீட்டுக்குத் தகவல் சொல்லப்பட்டதால், அவனுடைய உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரிலிருந்து கிட்டத்தட்ட எல்லா மக்களும் திரண்டு வந்திருந்தனர்.

சேந்தமங்கலத்திற்கு அடுத்து இருக்கும் ஊர் வண்டாம்பாளை.

ஏறத்தாழ இரண்டாயிரம் வீடுகள் அந்த கிராமத்தில் இருக்கும்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்  - எல்லாருமே கிட்டத்தட்ட சம அளவில் வாழ்ந்து வந்தனர்.

இதுவரை அந்த ஊரில் மதத் தகராறு, சாதித்தகராறு ஏற்பட்டதே கிடையாது.

அனைத்து இன மக்களும் அந்த அளவுக்கு ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.

அந்த ஊரில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலின் தர்மகர்த்தா சந்திரமோகன். தற்போது அவர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும் அந்த ஊரில் மூன்று மதத்தவரில் யாராவது ஒரு பிரிவினர் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவர்.

இந்த முறை சந்திரமோகன். அவருடைய மகன்தான் கொல்லப்பட்டது. அதனால்தான் ஆஸ்பத்திரியில் அவ்வளவு கூட்டம் கூடியிருந்தது.

ஹீரோ ஹோண்டாவை ஸ்டேஷனில் நிறுத்திய ராஜேஷ், காவல்துறைக்குச் சொந்தமான வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.

அப்போது மணி 3:30

கூட்டத்திற்குள் புகுந்து மருத்துவமனையின் வாயிலை அடைவதற்குள் ராஜேஷுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

வழக்கமான ஃபார்மாலிட்டியை எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்த அவர், முக்கியமான பெரியவர்களை அழைத்தார். அவர்களிடம்,"ஒரு பத்துப்பேர் மட்டும் இருந்து உடம்பை வாங்கிட்டுப்போங்க. மத்தவங்க இங்க இருக்க வேண்டாமே..." என்று கேட்டுக் கொண்டவுடன் கூட்டம் கலைந்தது.

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய ராஜேஷ்குமாரிடம், ஏட்டு வந்தார்.

"எங்க சார் கிளம்பிட்டீங்க?...நாங்க இங்க எத்தனை பேர் இருக்கணும்னு சொன்னீங்கன்னா?..."

"சச்சிதானந்தம், நீலவன் - இவங்க ரெண்டு பேரையும் இங்க வெச்சுட்டு மத்த ரெண்டு பேரும் ஸ்டேஷனுக்குப் போங்க...நான் இப்ப அந்த காலேஜுக்குப் போறேன்."
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 5

கார்த்தி உட்பட நாலு பேரும் நான்கு பெண்களையும் எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டனர். அந்த சந்தோஷத்துடன் மறுநாள் வழக்கமாக கல்லூரிக்கு வரும் பஸ்சில் இருந்து இறங்கியவர்கள் அடுத்த பேருந்தில் எட்டு பேராக ஏறிவிட்டனர்.

போகும்போது ஷைலா,"கார்த்தி, எனக்கு என்னவோ தப்பு பண்றதாவே தோணுது."என்றாள்.

"அடச்சீ...நாம என்ன ஊரைவிட்டா ஓடப்போறோம்?...பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து பிக்னிக் போறதுக்குப் போய் இப்படி பயப்படுறியே..."என்று ஷைலாவை தைரியப்படுத்தினான் கார்த்தி.

நாகப்பட்டினம் பஸ் நிலையம் வரை செல்லாமல், புத்தூர் நிறுத்தத்திலேயே அனைவரும் இறங்கிக்கொண்டனர்.
பிறகு ஒரு டவுன் பஸ்சில் ஏறி வேளாங்கண்ணிக்குச் சென்றனர். முதலில் சர்ச்சுக்கு சென்றவர்கள் சிறிது நேரத்திலேயே கடற்கரைக்கு வந்தார்கள். அங்கே அதிக நேரம் விளையாடியதுடன் திரும்பியிருக்கலாம்.

ஆனால் அதற்கு மனமில்லாமல் சற்று ஒதுக்குப்புறமாக சென்றனர்.

வேறு யாரும் இல்லை. நாம எட்டுப் பேரும்தானே என்ற தைரியத்தில் அனைவரும் விளையாட ஆரம்பித்தனர்.

இது தவறு என்று நான்கு பெண்களின் புத்திக்கும் தெரிந்தது. ஆனால் வென்றது அந்த வயதின் ஹார்மோன்கள்.

கார்த்தி எடுத்து வந்திருந்த கேமராவில், தனித்தனி ஜோடியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தண்ணீரில் நனைந்தவுடன், ஷைலாபானு உள்ளிட்ட நாலு பேரின் தோற்றமும் திரைப்பட கவர்ச்சி நடிகைகளின் அங்கங்களை விட மோசமாக வெளிப்பட்டன.

ஒருவழியாக மாலை நாலு மணிக்கு திரும்பவும் ஊருக்குக் கிளம்பினர்.

இவர்களின் நல்லநேரம்...ஒதுக்குப்புறமாக எட்டு பேரும் அரைகுறை ஆடைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, சமூக விரோதிகள் யாரும் அந்தப் பக்கம் வரவில்லை.

அப்படி யாராவது வந்திருந்தால் யாருடைய வாழ்க்கையாவது உடனடியாக பாதிக்கப்பட்டிருக்கும்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 3

"ஏய்...அந்த பேஷண்ட்ஸ் பணம் கொடுக்காம போயிட்டாங்கன்னா உன் சம்பளத்துல இருந்துதான் புடுங்குவாங்க. போய் வேலையைப் பாருங்கப்பா." என்று அவள் சொன்னதும் ராஜசேகர்"அய்யய்யோ இது வேறயா...ஏங்க...நீங்க சீக்கிரம் வாங்க..."என்றான்.
"நீ சரிப்பட்டு வரமாட்ட போலிருக்கே...டாக்டர்தான் நம்மளை அடிமையா நடத்துறார். வேலை செய்யுற நம்மளுக்குள்ளயாவது கொஞ்சம் ஜாலியா பேசி அந்த வேதனையை மறந்துட்டு இருக்கலாம்னுதான் இவ்வளவு உரிமையோட பேசுறோம். இது கூட புரியலையா...நீ டியூப்லைட் மட்டும் இல்லை...பியூஸ் போன பல்ப்...வா..."என்று சொன்னவாறு சரஸ் நடந்தாள்.

ராஜசேகருக்கு அவள் பேசியது ஒருவித ஆயாசத்தை ஏற்படுத்தியிருந்தது. அவன் ஊரில் இருந்தபோது ஒரு நாளைக்கு ஏழுமணி நேரம் தூங்கியவன். இங்கே அதில் பாதி நேரம் கூட நிம்மதியான தூக்கம் கிடைக்கவில்லை. இது தவிர நின்று கொண்டே நாள் முழுவதும் வேலை செய்வதால் விருந்தாளியாக வந்த முழங்கால் வலி இவன் உடலை நிரந்தரமுகவரியாக்கி ரேஷன் கார்டும் பெற்றுவிட்டது.

இது தவிர இன்னொரு பிரச்சனை. இந்த கிளினிக் அருகில் கையேந்திபவன்கள் இருந்தாலும் அவற்றில் அசைவம்தான். அவை மாட்டுக்கறியா, கோழியா, காக்கையா என்று கூட அங்கே சாப்பிடுபவர்களுக்கு கூட தெரியாது. முதல் நாளே சைவ உணவு கிடைக்கும் இடத்தைப் பற்றி மணிகண்டனிடம் விசாரித்தான்.

"மாப்ள...இப்படியே நேரே போய், வெங்கடநாராயணா ரோட்டுல திரும்பு. கொஞ்ச தூரத்துலயே நடேசன் பார்க் இருக்கும். அது ஓரமா போற பாதியில நுழைஞ்சு பார்க்கோட பின்பக்கம் வந்தீன்னா நீ எதிர்பார்க்குற சைவ சமையல் இருக்கும். ஆனா உனக்கு லஞ்ச் டைம் அரை மணி நேரம்தான். கிளினிக்ல இருக்குற சைக்கிளை எடுத்துகிட்டு போகலாம். அங்க போக பத்து நிமிஷம், வர பத்து நிமிஷம், சாப்பிட பத்து நிமிஷம்னு உன் ஷெட்யூல் இருந்தாதான் தப்பிச்ச. சிக்னல் பிரச்சனையும் இருக்கு. பார்த்துக்க." என்று பயமுறுத்திவிட்டுப் போய்விட்டான்.

ராஜசேகருக்கு அந்தக் கடை உணவு எவ்வளவோ திருப்தியாக இருந்தது. ஆனால் பத்து நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பதுதான் இவனுக்கு இருந்த பெரிய சவால். வைட்டமின் குறைபாட்டால் ராஜசேகர் வாய் முழுவதிலும் அல்சர் வந்துவிட, சூடான மதிய சாப்பாட்டை கண்களில் நீர் வடிய மிகவும் அவதியுடன் சாப்பிட்டு முடித்தான். நீர் அருந்துவது மட்டுமின்றி பேசுவது கூட போராட்டமாகிப்போயின.

இந்த லட்சணத்தில் கிளினிக்கில் இருக்கும் டெலிபோன்களுக்கு வரும் அழைப்புகளுக்கும் பதில் சொல்லும் வேலையையும் அவ்வப்போது கொடுத்தார்கள்.

ராஜசேகர் போனில் பேசிவிட்டு அப்படா என்று அமைதியாகிவிட்டாலும் ஷண்முகப்ரியாவும் அவள் தோழிகளும் விடுவதில்லை."என்ன சார்...பேச கூட மாட்டெங்குறீங்க. ஏன், தமன்னா, ஸ்ரேயா எல்லாம் வெயிட்டிங்க்ல இருக்காங்களா? அதுதான் எங்க கூட பேசுறதுக்கு தடை போடுதா?"என்றால்லாம் கேட்டு வெறுப்பேற்றினார்கள்.

அங்கேயே தங்கினால் இன்னும் கொஞ்ச நாட்களில் சென்னைக்கு வந்தபோது இருந்த எடையில் பாதி குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் என்று ராஜசேகர் உணர்ந்தான். அங்கேயே தங்காமல் வெளியில் இருந்து வந்தால் காலை ஒன்பது மணிக்கு வந்து இரவு ஒன்பது மணிக்குச் சென்றுவிடலாம் என்று சொன்னார்கள்.
மிகுந்த போராட்டத்திற்குப் பின் டாக்டரிடம் சம்மதம் வாங்கி நெசப்பாக்கத்தில் உள்ள நண்பன் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு வர சம்மதம் வாங்கினான். 17G அல்லது 17A ஆகிய பேருந்துகளில் ஏறி தி.நகர் வரவேண்டும் என்றால் நெரிசலான நேரத்தில் முக்கால்மணிநேரம் கூட ஆனது. இது தவிர, பல பேருந்துகளில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்குவதற்குக் கூட இடம் கிடைக்கவில்லை.

அதனால் காலை ஏழு மணிக்கே பேருந்தைப் பிடித்து பனகல் பார்க் அருகில் இறங்கி விடுவான். ஒன்பது மணி வரை பொழுதைப் போக்க வேண்டுமே...அப்படியே நடேசன் பார்க்கில் வந்து அமர்ந்து விட்டு எட்டே முக்காலுக்கு டிபனை முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு கிளினிக்குக்கு சென்றான்.

இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்து வெளியேறினால், துரைசாமி பேருந்து நிறுத்தத்திற்கு(அங்காடித்தெருவில் ஆரம்ப காட்சியில் வருமே, அந்த பேருந்து நிறுத்தம்தான்.) நடந்து வரவே பதினைந்து நிமிடம் ஆகிவிடும். பிறகு பேருந்தில் ஏறி நெசப்பாக்கம் வந்து இறங்க பத்தேகால் வரை ஆகும். அடுத்து எதாவது ஒரு கையேந்திபவனில் அரை வயிற்றுக்கு இட்லியை தள்ளிவிட்டு சென்று படுக்க பதினோரு மணி ஆகிவிடும். வயிறு பாதிக்கு மேல் காலியாக இருப்பதால் சரியாக தூக்கம் வராது.மறுபடி காலை ஆறு மணிக்கே எழுந்து...இனி எல்லாம் வழக்கம்போல்தான்.

கிளினிக்கிலேயே தங்கியிருந்ததற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. நடுவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஊருக்குப் போய் ஓட்டு போட்டுட்டு வர்றேன். என்று டாக்டரிடம்  அனுமதி கேட்டான்.

"நீயெல்லாம் ஓட்டு போட்டு என்ன ஆகப்போகுது...ஒழுங்கா லீவு போடாம வேலைக்கு வர்ற வழியைப் பாரு..." என்று கண்டித்து விட்டார்.

சென்னைக்கு வந்து கொத்தடிமையா சிக்கிட்டோமோ என்று ராஜசேகர் யோசித்த நேரத்தில் சொந்த ஊரில் இருந்த பழைய நண்பன் இவனிடம் பேசினான்.அவன் வெளிநாடு செல்வதால் ஏற்கனவே இருந்த இடத்தில் ஒரு ஆள் கேட்குறாங்க...என்றான். இவனுக்கு தப்பிச்சோம்டா சாமி என்றுதான் தோன்றியது.

"சென்னைன்னா சும்மாவா...முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு வருஷம் ஓட்டியாச்சுன்னா எல்லாம் பழகிடும். வேலைக்குப் போற பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க... சென்னையில ஒட்டிக்கலாம்."என்று அறிவுரை சொன்னது ஷண்முகப்ரியாதான்.

"ஆளை விடு ஆத்தா..."என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு பிறந்த ஊருக்கே வந்துவிட்டான் ராஜசேகர்.

3-முற்றும்.
*****
இதெல்லாம் என்ன கதை அப்படின்னு கேட்காதீங்க. அங்காடித்தெருவுல சென்னையின் மிகச் சின்ன பகுதியில நடக்குற சுரண்டலை லேசான சினிமா கலரோட சொல்லியிருந்தாங்க. படத்துல காட்டின கஷ்டமாச்சும் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டு பாவம் என்று சொல்லவைத்தது. ஆனா இந்த கதையில வர்ற ராஜசேகர் மாதிரி ஆளுங்க படுற வெளியில தெரியாத அவதி பெரும்பான்மையான மக்களால கஷ்டமாவே ஒப்புக்கொள்ளப்படுறது இல்லை.

சுருக்கமா சொன்னா நம்ம அரசாங்கத்துகிட்ட மாட்டிகிட்டு திண்டாடுற நடுத்தரவர்க்கம் மாதிரிதான். கோடீஸ்வரர்களுக்கு பட்ஜெட்டுகளாலும் வரியாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஏன்னா அவங்க கிட்ட வசூலிக்கிற வரியை சுமக்கப்போறது நடுத்தர வர்க்கம்தான்.

பிளாட்பாரவாசிகளும் கிடைக்கிற இலவசங்கள் இன்ன பிற சலுகைகள் போன்றவற்றால் வாழ்க்கையை நடத்த பழகிட்டாங்க.

ஆனா நடுத்தர வர்க்கம்தான் கோடீஸ்வரர் லிஸ்ட்டுலயும் சேரமுடியாம பிளாட்பாரத்துக்கும் வர முடியாம தூக்கு மாட்டிகிட்டும் உயிர் போகாம முழி பிதுங்கி போன நிலையில இருக்குறது.

இந்தக் கதையில வர்ற ராஜசேகரோட நிலையும் இதுதான்.

கடைசியா  ஒரு உண்மை.

இந்தக் கதையில எந்த ஒரு இடத்துலயும் (ராஜசேகர் கதாபாத்திரத்தின் பெயர் தவிர) கற்பனையே இல்லை. இப்படி சென்னைக்குப் போய் முதல் முறை புறமுதுகிட்டது நானேதான்.

சனி, 17 ஏப்ரல், 2010

கமல்ஹாசன் மீது தினமலருக்கு என்ன கோபம்?

எல்டாம்ஸ் ரோடுக்கு நடிகர் கமல்ஹாசனின் பெயரை வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. இதைக் கண்டித்து 11.04.2010 அன்று வெளிவந்த தினமலர்-வாரமலரின் இது உங்கள் இடம் பகுதியில் ஒருவர் கடிதம் எழுதி ஆயிரத்து ஐநூறு ரூபாய் பரிசும் வாங்கியிருக்கிறார்.

அந்தக் கடிதம்,

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா கூட்டத்தில், சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள எல்டாம்ஸ் சாலைக்கு, நடிகர் கமலஹாசன் பெயரை வைக்க வேண்டும் என்று வழிமொழிந்து, முன்மொழிந்து, முதல்வரிடம் கோரிக்கையும் வைக்கும் அளவிற்கு போயிருக்கின்றனர். நடிகர் கமலஹாசன், நாட்டுக்கு உழைத்த தியாகியா, இல்லை உலகம் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமா? அவர் ஒரு சினிமா வியாபாரி. திறமையானவர்; மறுப்பதற்கில்லை.
நடிகர் கமலஹாசனின் வீட்டிற்கு, நான்காவது வீடு என்றால், உடனே, அடையாளம் கண்டு கொள்கின்றனர் என்று, 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில், ஒரு பெண் வழிந்திருக்கிறார்.
தன் சொந்த வீட்டை விற்று, புரஜெக்டர் வாங்கி, கேரளாவில் கிராமம் கிராமமாக தூக்கிச் சென்று மக்களுக்கு இலவசமாக சினிமா போட்டு காட்டினாரே ஜான் ஆப்ரகாம்... அவர் போல கமலஹாசன் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா!
மனித குலத்துக்கு முரண்பாடான சிந்தனைகளை விதைக்கும் கூட்டத்தில் இவரும் ஒருவர். அவ்வளவுதான்!
'முள்ளும் மலரும்' என்ற அருமையான படமும், 'பதினாறு வயதினிலே' படமும், தமிழ் சினிமா வரலாற்றை, திசை திருப்பிய போது, மார்பை காட்டி ஏவி.எம்., கைக்குலுக்கலுடன், 'நான் தான் சகலகலா வல்லவன்...' என குலுக்கி, மீண்டும் படவுலகை கமர்ஷியல் பாதைக்கு திருப்பியவர். தேவைப்படும் போது இலக்கியவாதிகளின் (இதில் போலிகளும் அடக்கம்) தோளில் கைப்போட்டு, 'பீ அள்ளும் தாயம்மாள்...' என்று குமுத குழுமத்தில் கவிதை எழுதி, தன்னை என்னமோ தலித்களின் தலைவன் போல் காட்டிக் கொண்டவர்.
ஒரு தெருவிற்கு பெயர் வைக்கும் அளவுக்கு, இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
வியாபார படங்கள் வெளியிட்டு, 'துட்டு பார்க்கும்' ஜோலியை செய்து கொண்டிருக்கும் இவரின் பெயரை, தெருவிற்கு வைக்க இவர் என்ன, வாஜ்பாய் தேடிப் போய் காலில் விழுந்த சமூக சேவகியா?
இந்த வேகத்தில் போனால்... குஷ்பு தெரு, நயன்தாரா தெரு, சிவக்குமார் தெரு, விவேக் தெரு, வடிவேலு தெரு, ரம்பா தெரு, தமன்னா தெரு, ஜீவா தெரு, சின்னத்திரை சிங்காரிகள் தெரு, சரத்குமார் தெரு, ராதிகா தெரு என்று வைக்கக்கோரி, கோரிக்கை வைத்துக் கொண்டே போவர். தமிழ்நாடு எந்த அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது என்பது, இவர்களது குறுகிய சிந்தனையில் பட்டவர்த்தனமாக தெரிகிறது.
— ஏ.ஸ்ரீதரன், கே.கே.நகர்.

இதில் உதாரணமாக சொல்லியிருக்கும் முள்ளும் மலரும் படத்தின் படப்பிடிப்பு 99 சதவீதம் முடிந்த நிலையில் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் மீதமுள்ள படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டாராம்.

சரத்பாபுவும் ஷோபாவும் சந்திக்கும் முக்கியக் காட்சியும் செந்தாழம்பூ பாடலும்தான் படம்பிடிக்க வேண்டிய காட்சிகள். படத்தின் முக்கிய ஜீவனான இந்தக் காட்சிகளை எடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்தால் என்ன ஆகுமோ என்று இயக்குனர் மகேந்திரன் தவித்து நின்றபோது மூவாயிரம் அடி பிலிமுக்கு ஏற்பாடு செய்து படப்பிடிப்பை நடத்த உதவியது கமல்ஹாசன்தான். இதை இயக்குனர் மகேந்திரனே "நானும் சினிமாவும்" என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

இது தவிர ஹீரோ என்றால் சூப்பர்மேனாக மட்டும்தான் இருப்பார் என்று இருந்து வந்த தமிழ் சினிமாவின் இலக்கணத்தை ஓரளவாவது உடைத்த ஆளாக கமல்ஹாசன் இருப்பார். அதற்காக அவர் பெயரை எல்டாம்ஸ் ரோடுக்கு வைக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை.

சினிமாவை பின்னுக்கு இழுத்தது என்று இவரை மட்டும் சுட்டிக்காட்டி இவ்வளவு காரசாரமான கடிதம் ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி. மசாலா வாசனையில் ரசிகர்களை மயக்கி கோடி கோடியாக சம்பாதிக்கும் பெரியதலைகள் யாரும் தங்கள் படங்களை பரிசோதனை முயற்சியாக செய்ய வேண்டாம். ஆண்டுக்கு இப்படி ஒரு படம் தயாரிக்க கூட மனமில்லாமல் இருக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பவர்களுக்கு கூட மசாலா படங்கள் தயாரிப்பதில்தான் குறி.
 அவர்களைப் பற்றி எழுதினால் பின்விளைவுகள் அதிகமாகவே இருக்கும் என்று எழுதியவருக்கும் தெரியும். ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்தவர்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அதனால்தான் பெயர்களைக் குறிப்பிடவில்லை.

வியாழன், 15 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 2

"பேர் சொல்லிக்கூப்பிட்டா கோவிச்சுக்க மாட்டீங்கிளா?"என்ற ராஜசேகர் தேவையில்லாமல் சிரித்து வைத்தான்.

"ஷண்முகப்ரியா...-இந்தப்பேர் எப்படி இருக்கு?" என்ற அவள், இரண்டு கண்களையும் சிமிட்டினாள்.

"உங்களை மாதிரியே அழகா இருக்குங்க..."என்று சொல்லும்போதே இவன் மனதுக்குள் குதூகலம்.

"அழகான பேரை சொல்லி கூப்பிடாம இருந்தாதான் என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு கோபம் வரும். இப்படியே வழிஞ்சுகிட்டு நிக்காம போய் சாப்பிட்டுட்டு வாங்க. கையேந்திபவன் காலியாயிடப்போகுது."என்ற ஷண்முகப்ரியா வேலையில் கவனமானாள்.

இவன் வழி கேட்டு ஒரு கையேந்திபவனை அடைந்தபோது அங்கே இட்லி காலியாகியிருந்தது. கடைக்காரர்,காய்ந்துபோயிருந்த பூரியைக் காட்டி,"கெளங்கு இல்லை.சாம்பார்தான் இருக்கு.இன்னா சொல்ற..."என்றார்.

"சரி...திங்கிறேன்." என்று அதை வாங்கிய ராஜசேகர், பூரியுடன் மல்யுத்தம் நடத்தி அவற்றை உள்ளே தள்ளினான்.

இவன் சென்னைக்கு வந்து பசி தீர்க்க எடுத்த முதல் முயற்சியில் வயிற்றுக்குள் ரயில்வண்டி ஓடத்தொடங்கியிருந்தது. கிளினிக்குலதான் டாய்லெட் இருக்கே...சமாளிச்சுக்கலாம். என்று நினைத்தபடியே பணியிடத்துக்கு திரும்பினான் ராஜசேகர்.
கிளினிக்கில் வேலை செய்யும் பெண்களில் நிறையபேர் வந்துவிட்டிருந்தார்கள். ஹாலில் இருந்த இருக்கைகளும் பெருமளவு பேஷண்டுகளால் நிரம்பியிருந்தன.

'அவசரப்பட்டு ஷண்முகப்ரியாவை அழகுன்னு சொல்லிட்டோமோ...இங்க வேலை செய்யுற பொண்ணுங்க எல்லாருமே அழகாத்தான் இருப்பாங்க போலிருக்கே. ராத்திரி பயணத்தால தூக்கமே இல்லை. இவ்வளவு நேரம் கண்ணு எரியுற மாதிரி இருந்துச்சு. இப்ப குளுகுளுன்னு இருக்கே...'என்றெல்லாம் யோசித்துக்கொண்டே ரிஷப்ஷன் டேபிளை நோக்கிச் சென்றான்.

"ராஜசேகர்...இதுல எந்த எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு அமவுண்ட்டுன்னு எழுதியிருக்கேன். டாக்டர் எந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்னு இந்த ஸ்லிப்புல டிக் அடிச்சு தந்துடுவார். அதுக்கு நேரே தொகையை எழுதி டோட்டல் போட்டு ரெசீப்ட் போட்டுட வேண்டியதுதான்.

நல்லா பழகுற வரைக்கும் என் டேபிளுக்கு வந்துடுங்க...அப்புறம் ஒரு ஓரமா சுவத்துல வெச்சு கூட ரெசீப்ட் போட்டுடுவீங்க. எப்படியோ எனக்கு திட்டு வாங்கி கொடுக்காம இருந்தாசரி...உங்களுக்கு இந்த வேலையை எல்லாம் சொல்லிக்கொடுக்கணும்னு சொல்லி டாக்டரோட மிஸஸ் ஆர்டர் போட்டிருக்காங்க."என்ற ஷண்முகப்ரியா வசூலிக்க வேண்டிய தொகைகள் எழுதப்பட்ட ஸ்லிப் ஒன்றை ராஜசேகரிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிய ராஜசேகர் பேஷண்ட் அருகில் காலியாக இருந்த இருக்கையில் போய் அமர்ந்தான்.

"அய்யோ...ராஜசேகர், அங்க எல்லாம் உட்காரக்கூடாது. ரொம்ப சிரமமா இருந்தா இங்க ரிஷப்ஷன் டேபிளுக்குப் பின்னால இருக்குற சேர்ஸ்ல கொஞ்ச நேரம் உட்காருங்க. கண்ட இடத்துலயும் உட்கார்ந்தா டாக்டர் ஒண்ணும் சொல்ல மாட்டார். டாக்டரோட வைஃப் ஒருவழியாக்கிடுவாங்க."

சட்டென்று எழுந்து வந்த ராஜசேகர்,"நான் எங்க உட்கார்ந்துருக்கேன்னு பார்க்க சார் வெளியில ஓடி ஓடி வருவாரா...ஏங்க இப்படி பயமுறுத்துறீங்க?" என்றான்.

"அவரு ஏன் எழுந்து வந்து பார்க்கணும்? இந்த குட்டி கிளினிக்குக்குள்ள ஆறு கேமரா இருக்கு. அவரோட ரூமுக்குள்ள இருக்குற டி.வியில எல்லாத்தையும் கவனிச்சுகிட்டே இருப்பாரு...நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறையவே இருக்கு..."என்று சிரித்தாள் ஷண்முகப்ரியா.

"சின்னப்புள்ளையா இருந்தப்ப, கல்யாண வீட்டுல வீடியோவுல பதிவாகணும்னு வெறியோட அலையுவேன். இனிமே கேமரா என்னைய பார்த்துடுமோன்னு பயந்துதான் வாழணுமா?"என்று ராஜசேகர் புலம்பியதைக் கேட்ட ஷண்முகப்ரியா லேசாக சிரித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

அப்போது அங்கே வந்த மணிகண்டன்,"டேய்...ராஜசேகர்...என்னோட வா..." என்று கிளினிக்கின் பின்புறம் அழைத்துச் சென்றான்.

"எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்த?"என்ற ராஜசேகரின் குரலில் ஒருவித அலுப்பு தெரிந்தது.

"டேய் பட்டிக்காட்டு வெளக்கெண்ணை...ஷண்முகப்ரியாகிட்ட இப்படி கடலை வறுக்குற?...ஒரேடியா சட்டி தீயுற வாடை. இப்படியே அவகிட்ட பேசிகிட்டே இருந்தீன்னா மத்தவளுங்க எல்லாம் சேர்ந்து உனக்கு ஆப்பு வெச்சுடுவாளுங்க..."என்று மணிகண்டன் சொன்னதும் ராஜசேகரின் முகத்தில் பிரகாசம்.

"தம்பி...நீ பெரிய சினிமா ஷீரோ...அதனால பத்துப்பதினஞ்சு பேர் உனக்காக போட்டி போடுறதா நினைச்சுடாத...நிறைய மனிதர்கள்கிட்ட இருக்குற பொறாமைக்குணம்தான் இதுக்கு காரணம். நம்ம கிட்ட மட்டும்தான் அதிகமா பேசணும். முக்கியமான விஷயங்களை நாமதான் கத்துக்கொடுக்கணும். அடுத்தவங்களோட அவருக்கு அல்லது அவளுக்கு டீப்பான ஃப்ரெண்ட்ஷிப் இருக்கக் கூடாது...இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கின அரசியல் இங்கயும் இருக்கு.

அவ்வளவு ஏன்? ஷண்முகப்ரியாகிட்ட நீ அதிகமா பேசுறது எனக்கே பொசபொசன்னுதான் இருக்கு.சரி...வா...ரொம்ப நேரம் நாம கேமராவுல சிக்கலன்னா டாக்டர் ஓலை அனுப்பிடுவார்."என்று மணிகண்டன் சொல்லிச் சென்றதும் ராஜசேகருக்கு தன் முதுகே தெரிவது போல் இருந்தது.

அரைமணிநேரம் கழித்து முதன்முதலாக ஒரு பேஷண்டுடன் அட்டெண்டராக உள்ளே சென்றான். வெளியில் இருந்த புழுக்கத்துக்கு உள்ளே இருந்த ஏ/சி இவனுக்கு சுகமாகத்தான் தெரிந்தது.

உயரம், எடை போன்றவற்றைக் எப்படி குறிக்க வேண்டும் என்று டாக்டரே ராஜசேகரிடம் சொன்னார்.'இவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரே...'என்ற எண்ணம் ராஜசேகர் மனதில்.

இவன் வெளியில் கிளம்பும் போது,"ராஜசேகர்...லேப்ல சரஸ்வதின்னு ஒரு பொண்ணு இருக்கும். அதை ரிஷப்ஷன் டேபிளுக்கு வரசொல்லி ரெசீப்ட் போடுங்க. அடுத்த பேஷண்ட்டுக்கு நான் டிக்டேட் பண்ணப்போற ரிப்போர்ட்டை எழுத ஷண்முகப்ரியா இங்க வந்துடுவாங்க."என்று சொல்லி அனுப்பினார் டாக்டர்.

இவன் அமவுண்ட் வாங்க வேண்டிய பேஷண்ட்டை ரிஷப்ஷன் அருகில் அமரசொல்லிவிட்டு, லேப்புக்கு சென்றான்.

"இங்க யாருங்க சரஸ்வதி?...டாக்டர் ரிஷப்ஷன் டேபிளுக்கு வரசொன்னார்."

அங்கு இருந்த ஆறு பெண்களில் ஆரஞ்சு வண்ண சுடிதாரில் இருந்த அவள்,"ஏம்பா சரஸ்வதீன்னு இழுக்குற?...சரஸ் அப்படின்னு சுருக்கு.இப்படி பேர் வெச்ச அப்பா அம்மாவை முதல்ல உதைக்கணும்...இந்த டாக்டரை அடுத்ததா மிதிக்கணும்...சரி...வா..."என்று சொன்ன சரஸ்வதி இவனுக்கு முன்னால் நடந்தாள்.

அவள் பேசியதைக் கேட்டு திகைத்து நின்ற ராஜசேகரைப் பார்த்து, மற்ற பெண்கள் சிரித்தார்கள்.

அப்போது ஒருத்தி சொன்னதைக் கேட்டு பதறிப்போன ராஜசேகர்....

2-தொடரும்
******

அங்காடித்தெரு படம் பற்றி ஒருசிலரால் குறையாக சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு. எந்த முதலாளியும் தங்களின் கொடூர முகத்தை இப்படி பகிரங்கமாக காட்டமாட்டார்கள். படத்துக்காக மிகைப்படுத்திய காட்சிதான் அது என்பது இவர்களின் வாதம்.

இப்படி சொல்பவர்கள் நிச்சயமாக இப்படியும் ஒரு உலகம் இருப்பதைப் பார்க்கும் வாய்ப்பு அமையாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் ஒட்டுமொத்தமாக தொழிலாளியை வஞ்சிக்கும் முதலாளிகளைப் பற்றி கணக்கெடுத்துப் பார்த்தால் வேறொரு உண்மை புலப்படும்.
பேருந்துநிலையம், மதுக்கடை அருகில் உள்ள கடைகள், இரவு நேரக் கடைகள் உட்பட பல இடங்களில் பணியாளர்கள் மீதான வன்முறை இப்படி இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் மிக அதிகமான முதலாளிகள் மோசமான அரசியல்வாதிகள் போலவேதான்.

அதாவது, அவர்கள் பேசும்போது பளிங்குத்தரையாகத்தான் தெரியும். ஆனால் திரைமறைவு நடவடிக்கைகள் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட  சாலையைப் போன்றே மோசம்தான். இந்த மோசமான முகமும் எல்லா இடத்திலும் வெளிப்படாது. தோலில் ஒட்டிக்கொண்டு நமக்கே தெரியாமல் ரத்தம் உறிஞ்சும் அட்டை போலத்தான் எளிய மக்களின் உழைப்பை சுரண்டுவார்கள்.

மதுவுக்கும் பிரியாணிக்கும் சொற்பத் தொகைக்கும் அடிமட்டத்தொண்டன் இவர்களுக்கு அடிமையாக கிடப்பது இந்த வகைதான்.

இப்போது நான் வேலை செய்யும் இடத்தில் இரண்டு கால்களும் முற்றிலும் செயலிழந்த பெண்ணும் வேலை பார்க்கிறாள். இன்று மதியம் அழுதுகொண்டிருந்த அவளை சக ஊழியைகள் சமாதானப் படுத்தினார்கள். காரணம் என்ன தெரியுமா?

காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை வேலை செய்யும் அந்தப் பெண்ணிற்கு மாதம் ஆயிரத்து நூறு ரூபாய்தான் ஊதியம். அதையும் இன்று (15ந்தேதி) வரை வழங்கவில்லை. மேலாளரிடம் கேட்டதற்கு, என் வேலை உங்களிடம் வேலை வாங்குவதுதான். சம்பளம் வேணுன்னா முதலாளிகிட்ட பேசிக்குங்க... என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி வேலை செய்பவர்களுக்கான சொற்பக்கூலியைக் கூட மிக மிக காலதாமதமாக தரும் முதலாளிகளும் என் பார்வையில் மிக மிக ஆபத்தானவர்களே.

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 1

புதன், 14 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 1

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜசேகர் தெருவுக்குள் நுழையும் முன்பு இவனிடம் இருந்த சுமைகளைப்பார்த்துவிட்டு  ஒன்றிரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் சற்று முன்னால் வந்தார்கள். ஆனால் இவன், எந்த வித தயக்கமும் இல்லாமல் ரங்கநாதன் தெருவிற்குள் இறங்கி நடந்ததும் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். இதைப்பார்த்த ராஜசேகருக்கு அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போல் மகிழ்ச்சி.
வேலை கிடைத்து புறப்பட்ட இவனுக்கு, சென்னை ரிட்டன் நண்பன் (எவ்வளவு நாள்தான் துபாய் ரிட்டன், சிங்கப்பூர் ரிட்டன் இப்படியே சொல்றது?) சில ஆலோசனைகளை சொல்லியிருந்தான். "உனக்கே நேரம் சரியில்லை. ஊருக்குப் புதுசுன்னு தெரிஞ்சா ஆப்படிக்கிற ஆட்டோக்காரங்க கிட்டதான் நீ போய் மாட்டுவ. அதனால, நடந்தே இந்த முகவரிக்குப் போற மாதிரி நான் வழி சொல்றேன்" என்ற அவன், ராஜசேகரிடம் எப்படி நடந்து செல்ல வேண்டும் என்று கூட பாடம் எடுத்தான்.

அதைக்கேட்ட ராஜசேகர், பிறந்து வளர்ந்த ஊரில் நடப்பது போல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து செல்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவன் வைத்திருந்த சுமைகள் அப்படி. ஆனால் ஆட்டோவுக்கு கொடுக்கும் நூறு ரூபாய் இருந்தால் கையேந்தி பவனில் ரெண்டு நாளைக்கு சாப்பிடலாம். அங்க போனா ஒவ்வொன்னுக்கும் காசு. உள்ளூருன்னா சொந்தக்காரங்க வீட்டுக்கு சும்மா பார்க்கப்போற மாதிரி விசிட் விட்டுட்டு வயித்தை நிரப்பிட்டு வந்துடலாம். அங்க அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லடி மாப்ளே...என்று நண்பன் சொன்னது நினைவுக்கு வரவும் ராஜசேகர் வைத்திருந்த பேக்கும், ப்ரீஃப் கேசும் கனமாகவே தெரியவில்லை.

பெரிய மருத்துவமனையை எதிர்பார்த்திருந்த ராஜசேகருக்கு பர்கிட் ரோட்டில் அமைந்திருந்த அந்த கிளினிக்குக்கு சென்றதும் சின்ன ஏமாற்றம். அங்கே உள்நோயாளிகள் அனுமதி எல்லாம் கிடையாதாம். பரிசோதனைகள், ஆலோசனைகள் மட்டுமே. இதிலேயே ஒரு நாளைக்கு இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கும் கிளினிக் அது. மருத்துவரின் பெரியப்பா ஆள்பிடிக்கும் தேடுதலில் இறங்கியபோது ராஜசேகர் சிக்கியிருந்தான்.

சாப்பாடு மட்டும் வெளியில பார்த்துக்க. ஆஸ்பத்திரியிலேயே தங்கிக்கலாம். வாடகையும் அட்வான்சும் மிச்சம் அப்படின்னு அவர் சொன்னதை நம்பி வந்த ராஜசேகருக்கு காட்டப்பட்ட அறையைப் பார்த்ததும் பகீர் என்றது. பனிரெண்டுக்கு பத்து என்ற அளவுடைய அறையில் ஆறு பேருக்கு அலாட்மெண்ட் என்று சீனியர் சொன்னான்.

"தம்பி...ரொம்ப பயப்படாத...இந்த ரூம்ல ஏசி வெச்சாதான் படுக்கமுடியும். இல்லன்னா லாயக்கில்லை. அதனால பேஷண்ட் வெயிட்டிங் ஹால்லயே படுத்துக்கலாம். என்ன...ராத்திரி பதினோரு மணிக்கு முன்னால படுக்க முடியாது. காலையில ஆறரை மணிக்கப்புறம் தூங்க முடியாது. போகப்போக பழகிடும்.

ஊருல உட்கார்ந்த இடத்துலயே வேலையா...இல்ல...அலைஞ்சு திரிஞ்சு பழக்கமா..." என்றான் மணிகண்டன்.

"ஏன்?"

"இங்க உட்கார வாய்ப்பே இல்லை. அதான் கேட்டேன்."

"என்னது...உட்கார முடியாதா. நான் டிகிரி படிச்சுருக்கேன். லேப்ல எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு ஃபீஸ் அப்படின்னு குறிச்சு கொடுக்குறதுதான் வேலைன்னு சொன்னாங்களே." என்ற ராஜசேகரின் கண்களில் லேசான பதற்றம் தெரிந்தது.

இதைப் பார்த்ததும் சிரித்த மணிகண்டன்,"சரியாத்தான் சொல்லியிருக்காங்க. ஆனா ஒரு பேஷண்ட் டாக்டர் ரூமுக்குள்ள போகும்போது நீயும் கூடவே போகணும். உயரம், எடையை குறிச்சு டாக்டர்கிட்ட சொல்லணும். அவர் குறிச்சு கொடுக்குற டெஸ்ட்டுக்கான ஸ்லிப்பை எடுத்துகிட்டு பேஷண்ட்டோட வெளியில வந்து தொகையைக் குறிச்சு பணம் வாங்கி, கட்டி பெய்டு சீல் வெச்சு லேப்புக்குள்ள அனுப்பணும். அதுக்குள்ள வேற பேஷண்ட்டுகள் சிலரை மற்ற ஸ்டாஃப் கவனிச்சுக்குவாங்க. மறுபடி நீ முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்."என்றான்.

இப்போது ராஜசேகர் மனம் முழுவதும் வெறுப்பு. இந்த வெறுப்பு மனதில் இருக்கும்போது கலெக்டர் வேலையே கிடைத்தாலும் ஈடுபாடு வராது.

"அட்டெண்டர் வேலைன்னு சுருக்கமா சொல்லக்கூடாதா?" என்றான்.

இதைக் கேட்ட மணிகண்டன்,"அட...நீ டிகிரி படிச்ச ஆளுதாம்பா...இவ்வளவு சரியா புரிஞ்சுகிட்ட...பத்து நாள் வரை நீ இங்க இருக்குற யார்கிட்ட வேணுன்னாலும் வேலை தொடர்பான சந்தேகம் கேட்கலாம். யாரும் திட்ட மாட்டாங்க. அதுலயும் லேபுக்கு வர்ற பொண்ணுங்க எல்லாம் அழகா அம்சமா இருக்கும். அவங்ககிட்ட ஜாலியா கடலை போடுறது ஒண்ணுதான் எனக்கு இப்ப இருக்குற ஒரே ஆறுதல். நீயும் என்ஜாய். இப்ப போய் குளிச்சுட்டு வா. நான் தாங்கிக்குவேன். நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் என்னைய தப்பா நினைச்சுடுவாங்க."என்று சொல்லிவிட்டு அகன்றான்.

குளித்துவிட்டு உடைமாற்றி மேக்கப்புடன் வந்த ராஜசேகர், ரிஷப்ஷன் டேபிளின் பின்னால் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த பெண்ணிடம்,"மேடம்...நான் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன். இப்ப என்ன செய்யணும்." என்றான்.

அவள் நிமிர்ந்து,"மணிகண்டன் சொன்னார். வேலையைத் தொடங்குறதுக்கு முன்னால போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்புறம் ரெண்டு மணி வரை எங்கயும் போக முடியாது. இன்னொரு விஷயம்...நான் உங்களோட சின்னப்பொண்ணாத்தான் இருப்பேன். அதனால மேடமெல்லாம் வேண்டாம். கால் மீ ஷண்முகப்ரியா..."என்றாள்.

1-தொடரும்

******
இந்தக் கதையை நான் எழுத தூண்டுதலாக இருந்தது அங்காடித்தெரு படம்தான். படத்தில் மூன்றாவது தளத்தின் சூப்பர்வைசராக வரும் இயக்குனர் A.வெங்கடேஷ்,"என்னலே சிரிப்பு..."என்று பல்லைக்கடித்துக்கொண்டு கேட்கும் காட்சியில் பாண்டியும் மகேஷும் அலறுவது காமெடிக்காட்சியாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக, அவருடைய அட்டகாசத்தைப் பார்க்கும்போது பிடித்து அடித்து விடலாமா என்று கூட நினைக்க வைத்தது. அதுதான் அவருடைய நடிப்புக்கு கிடைத்த வெற்றி.

இந்தப் படம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் பத்து இயக்குனர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்தேன். வசந்தபாலன் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தபோது A.வெங்கடேஷ் அசோசியேட் டைரக்டராம். வசந்தபாலன் படப்பிடிப்பின்போது முக்கியமான ஒரு நோட்டைத் தொலைத்து விட்டபோது ஒரு வெங்கடேஷ் டெரர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

வசந்தபாலன் அப்போது அவரைப்பார்க்கவே அஞ்சி நடுங்கிய அனுபவம்தான் இந்த கேரக்டரில் வெங்கடேஷை நடிக்கவைக்க காரணம் என்று சொன்னார்.

ஆனால் ஒன்றிரண்டு முறை இயக்குனர் வெங்கடேஷைப் பார்த்தால் அவர் இவ்வளவு டெரர் என்று சொல்லவே முடியாது.
நீ எத்தனை தடவை அவரைப் பார்த்துருக்கன்னுதானே கேட்குறீங்க. ஒரே ஒரு தடவை ஏ.வி.எம் ஸ்டுடியோவுலதான் சந்திச்சிருக்கேன்.

2006ம் வருஷம் தீபாவளி நெருங்கிய சமயம், ஏவிஎம் ஸ்டுடியோவுல வாத்தியார் படத்தோட எடிட்டிங், கே.பாக்யராஜ் ஸ்டுடியோவுல சரத்குமாரின் நூறாவது படமான தலைமகன்  எடிட்டிங் நடந்துகிட்டு இருந்தது. நெகட்டிவை பிராசஸ் பண்ணின பிறகு பிரிண்ட் போட்டுட்டு அதை அப்படியே எடிட்டிங் செய்யப் பயன்படுத்துற சிரமமெல்லாம் இப்ப கிடையாது. டெலிசினி மெஷின் மூலமா வீடியோ டேப்புக்கு கன்வர்ட் பண்ணிடுவாங்க.

அந்த டேப்புல பதிவான படத்தை கணிணிமூலமா அவிட், எஃப் சி பி போன்ற தொழில்நுட்பம் மூலமா  தொகுத்து, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் முடிஞ்சு திருப்தி வந்த பிறகுதான் ஒரிஜினல் நெகட்டிவ்ல மாற்றம் செய்யுறதெல்லாம் நடக்கும்.

வீடியோ டேப்புல இருக்குற படத்தை கணிணியில ஏற்ற பீட்டா கேம் பிளேயர் தேவை. பல லட்ச ரூபாய் விலையுள்ள அந்த பிளேயரை நான் இந்த எடிட்டிங் நடக்குற இடத்துக்கெல்லாம் எடுத்துட்டுப் போனேன். இருபது கிலோவுக்கு குறையாத எடை இருக்கும்.

வாத்தியார் பட எடிட்டிங் வேலைக்காக பிளேயரை எடுத்துட்டுப் போகும்போது ஏவிஎம்ல அர்ஜூன், A.வெங்கடேஷ், எடிட்டர் வி.டி.விஜயன்  எல்லாம் இருந்தாங்க. அப்ப வெங்கடேஷ் பேசிகிட்டு இருந்ததை பார்த்துருக்கேன். அவரைப்பார்த்தா கோபப்படுவாரான்னு கேட்குற மாதிரிதான் இருந்துச்சு. ஆனா வசந்தபாலன் வெங்கடேஷ் கோபத்தைப் பத்தி சொன்னதும்,"நம்பமுடியவில்லை..."அப்படின்னு பாடத்தான் தோணுச்சு.

******
அங்காடித்தெருவில் நான் கண்ட விஷயங்கள்

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அங்காடித்தெருவில் நான் கண்ட சில விஷயங்கள்

"இலவசமா கொடுக்க இது என்ன கவர்மெண்ட்டா, இப்படி இலவசம் கொடுத்து கொடுத்துதான் உங்களை எல்லாம் கெடுத்து வெச்சிருக்காங்க." என்ற வசனத்தை கேள்வி கேட்ட புதுப்பையனுக்கு ஒரு அறை விட்டபிறகுதான் அந்த பணியாளர் பேசுவார்.அந்த அடி, இலவசங்களை சாதனையாக நினைத்து பெருமைப்படும் சில பொதுமக்களின் கன்னத்தில் விழுந்த அறையாகத்தான் எனக்குத் தோன்றியது.
அங்காடித்தெரு படம் பற்றி பல விதமாகவும் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. படத்தின் நிறைகளை விட குறைகள் என்று குறிப்பிட்டு மிகக் குறைவான விமர்சனங்களே வந்திருப்பது ஆரோக்கியமான விஷயமாகவே எனக்குத்தோன்றுகிறது.

தந்தை, லெவல்கிராசிங் விபத்தில் உயிரிழந்ததால் கல்லூரிக்குச் சென்று உயர்கல்வியைத் தொடரமுடியாமல் வேலைக்குச்சென்று அவதிப்படும் ஜோதிலிங்கம், தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதால் கால்களை இழந்து சாலை ஓரத்தில் பூ வியாபாரம் செய்யும் கனி- விபத்தால் சிதைந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின் அடையாளம்.

ஏதோ நலத்திட்ட உதவிகளுக்கான புள்ளிவிவரங்களை தெரிவிப்பது போல் சாலை விபத்துக்களைப்பற்றி நாள்தோறும் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவை எத்தனை குடும்பங்களை நிலைகுலையச்செய்து விடுகின்றன என்பதை இந்தப் படத்தின் ஜோதிலிங்கம், கனி கதாபாத்திரங்களின் மூலம் நான் புரிந்துகொண்டேன்.

நிலையான முகவரி இல்லாமல் கைகளும் கால்களும் உழைக்கத்தயாராக இருக்கையில் வேறு மூலதனம் எதற்கு என்று தன்னம்பிக்கையுடன் கோடானுகோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால் நாள்தோறும் ஏகப்பட்ட விபத்துக்களால் பிழைப்பை இழந்து இயல்பாக வாழும் உரிமை பறிக்கப்பட்டு அவதிப்படும் இந்த நிலைக்கு தொண்ணூறு சதவீதம் மனிதத்தவறுகள்தான் காரணமாக இருக்கின்றன. சில விஷயங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இயந்திரம் பாராமுகமாகவே இருந்து வருகிறது.

ஊழியர்களை வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அடித்து ரத்தக்காயப்படுத்துவது படத்தில் மிகைப்படுத்திக்காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் காட்சி.

அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். கடுஞ்சொற்களால் திட்டிவிட்டு, தனி அறைக்குள் அழைத்துச் சென்றுதான் பிரித்து மேய்வார்கள்.
அப்புறம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை. இது சாதாரண கடைகளில் கூட இருக்கிறது. படத்தில் கிளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது கனி,"முன்னாடி எல்லாம் சரிதான் போன்னு விட்டுடுவேன். இப்ப முடியலை..."என்று சொல்வாள். நிஜ வாழ்க்கையிலும் பல பெண்கள் இப்படித்தான் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.(இலவசக்கழிப்பறையில் மூக்கைப்பிடித்துக்கொண்டு நுழையும் மனோபாவத்துடன் தான் என்று கூட சொல்லலாம்.)

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். நாலுமணி நேரம் அலைந்து பொருட்கள் வாங்கியதற்குள்ளேயே எங்கள் கால்கள் ஓய்வு கேட்டு கெஞ்சத்தொடங்கிவிட்டன. பனிரெண்டு மணி நேரத்துக்குமேல் நின்று, நடந்து, ஓடி வேலை செய்பவர்களின் கால்கள் எப்படிக் கதறும் என்பதை என்னால் அதிகமாகவே உணரமுடியும்.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு எலக்ட்ரீஷியனிடம்  வேலை செய்த நாட்களில் நானும் உடலளவில் அதிகமான துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். எப்படி என்றால், கான்கிரீட் கூரை அமைக்கும்போது கம்பிகளின் மேல் பிளாஸ்டிக் குழாய் அமைக்கும் பணி பார்க்கும்போது சாதாரணமாகத்தான் இருக்கும்.  வெயில் இல்லாத நேரத்தில் என்றால் சாமர்த்தியமாக கம்பி மீதே அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். உச்சிவெயில் என்றால் அவ்வளவுதான். குத்துக்காலிட்டு முழங்கால் வலிக்க,பைப்புகளைப் பொருத்த வேண்டும்.
ஒரே நாளில் மூன்று கட்டிடங்களுக்கு குழாய் பொருத்தும் சூழ்நிலை வந்தது. காலை ஆறு மணிக்குத் தொடங்கிய பணி, இரவு பத்து மணிக்குதான் முடிந்தது. அன்றுதான் முதன் முதலில் என்கால்கள் கெஞ்சின. மறு நாள் கான்கிரீட் அமைக்கும்போது குழாய்கள் உருவிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது முடிந்த பிறகு சுவரில் குழாய், ஸ்விட்ச் போர்டு அமைக்க உளி சுத்தியல் பயன்படுத்தி உடைக்க வேண்டும். இப்போது கோடு போட்டுக் கிழித்து விட மெஷின் வந்தாலும், நடுவில் உள்ள பகுதியை நாம்தான் உடைக்க வேண்டும்.

நான் வேலை கத்துக்கும்போது நாற்பது முறை உளியை சுத்தியலால் அடித்தால் அதில் முப்பத்து ஒன்பது முறை இடக்கையில் புறங்கை மீதுதான் சுத்தியலின் அடி விழுந்தது. மஞ்சள் பத்து போட்டுக்கொண்டு இரண்டு நாட்களில் மீண்டும் அதே வேலையை செய்யச் சென்றது உண்டு. பிறகு உடைக்கும்போது மண் துகள் என் மேலே கூட படாமல் உடைக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றது வேறு கதை.

அப்போதெல்லாம் தொடர்ந்து படிக்கணும்னு தோணலை. நீங்க நம்புறீங்களோ இல்லையோ, நான் பனிரெண்டாம் வகுப்பு பிரைவேட்டா படிச்சு தேர்வு எழுதி காலேஜூல சேர்ந்து படிக்கணும்னு முடிவெடுக்க காரணம்,"ஜாலி" படத்துல வந்த ஃபேர்வெல்டே பாடல் காட்சிதான்.

எதுக்காக இதையெல்லாம் சொல்றேன்னா படத்துல காட்டுற மாதிரி வேலை செய்யுறவங்க மேல வன்முறையைக் காட்டுறவங்க இருக்குற அதே அளவுக்கு, வெளியில தெரியாம நசுக்குற முதலாளிங்களும் ரொம்பவே இருக்காங்க.

அங்காடித்தெருவுல காட்டுன முதலாளிங்க நிக்கவெச்சே கொத்தடிமையா நடத்துறாங்கன்னா, மென்பொருள் நிபுணர்களை உட்காரவெச்சே பிழிஞ்சு எடுத்துடுறாங்க. என்ன ஒரு வித்தியாசம், மென்பொருள் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமா கிடைச்சுடுறதால வாழ்க்கையில பல வசதிகளை அடைஞ்சுட முடியுது. ஆனா அவங்க அதுக்காக இழக்குற விஷயங்கள் ஏராளம்.முக்கியமா, அமைதியான குடும்ப சூழ்நிலை அவங்களுக்கு ரொம்ப அரிதாகத்தான் கிடைக்கும்.

இப்ப கூட நான் ஒரு தனியார் நிறுவனத்துல ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்கு (ஐந்து மணி நேரம்) வேலை செய்யுறேன். முழு நேரப்பணியாளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் தர்றேன்னு சொல்றாங்க. இந்த காசுக்கெல்லாம் நாள் பூராவும் கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து வேலை செய்து என் உடம்பை ரிப்பேர் ஆக்கிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.

நாட்டுல முதலாளியா இருந்தாலும் தொழிலாளியா இருந்தாலும் அதுலயும் ரெண்டு வகைதான் உண்டு. புலி, மான்.

ஒண்ணு வேட்டையாடணும் இல்லை...வேட்டையாடப்படணும். இதுதான் உலகம். சில இடங்கள்ல பணியாளர்கள் முதலாளியை அலற விட்டுகிட்டு இருப்பாங்க. பல இடங்கள்ல தொழிலாளிகள் அவதிப்பட்டுகிட்டே இருக்காங்க. இதை மாத்துறது ரொம்ப கடினம்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.- இதை நான் அனுபவப்பூர்வமா உணர்ந்துருக்கேன். சென்னையில கம்பெனி வேலை சரியா அமையாம அவதிப்பட்டப்ப, எலக்ட்ரிக்கல் வேலைக்குதான் போனேன். மதியம் சாப்பாடு + முன்னூறு ரூபாய் சம்பளம். ஆர்வத்தால வீடியோ எடுக்க கத்துகிட்டேன். சில திருமண நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்யப்போனப்ப நானூறு ரூபாய் வரை சம்பாதிச்சதுண்டு.

தொழில் தெரிஞ்சா தவறான பழக்கங்களுக்கும் சில ஆடம்பரங்களுக்கும் அடிமையாகாம இருந்தா நல்ல படியா பிழைக்கலாம். ரிஸ்க் எடுக்குறதுன்னா பெரிய பணக்காரங்க வாழ்க்கையில என்ன அர்த்தமோ எனக்குத் தெரியாது. ஆனா சிரமம் பார்க்காம உழைக்கத் தயாரா இருந்தா வாழ ஆயிரம் வழிகள்- இதைத்தான் அங்காடித்தெரு சொல்ற மெசேஜா நான் புரிஞ்சுகிட்டேன்.

******
இந்தப் படத்துல பல காட்சிகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டதா சிலர் விமர்சனத்தை முன் வெச்சிருக்காங்க. நிஜ வாழ்க்கையில சுரண்டுறது தெரியாம அட்டை மாதிரி உறிஞ்சுற முதலாளிகளைப் பத்தி படம் எடுத்தா என்னய்யா டாக்குமெண்ட்ரி எடுத்துருக்கான்னு ஒதுங்கிப்போறது ரசிகர்களோட தப்பு. அதனால இந்த மாதிரி காட்சிகளை அமைச்சது சரிதான்னு சொல்லுவேன்.

பெரிய ஹீரோக்களோட படங்கள்ல லட்சம் மடங்கு மிகைப்படுத்தல் இருக்குறதை விட்டுடுவாங்க. இந்த மாதிரி படங்கள்ல இருக்குற ஒண்ணு ரெண்டு சீன்ஸ் தான் உறுத்தும்.

******
சில வாரங்களுக்கு முன்னால விகடன்ல உதயநிதி ஸ்டாலினோட பேட்டி வந்துருந்துச்சு. புது டைரக்டருங்களுக்கு வாய்ப்பு கொடுப்பீங்களான்னு கேட்டதுக்கு, பெரிய ஹீரோக்கள்னா விளம்பரம் கூட அதிகம் தேவையில்லை அப்படின்னு ஏதோ சொல்லி மழுப்பிட்டாரு. அதாவது இந்த மாதிரி படங்களை எடுக்க மாட்டோம்னு சொல்லாம சொல்லிட்டாரு.  அவரு என்ன பண்ணுவாரு பாவம், கஷ்டப்பட்டு உழைச்ச காசு. காப்பாத்தணும்னு நினைக்குறது நியாயம்தான்.

டைரக்டர் ஷங்கர் மேல பல விமர்சனம் இருந்தாலும் எனக்கு அவரை ஒரு விஷயத்துக்காக ரொம்பவே பிடிக்கும். காதல், இம்சை அரசன், ஈரம், வெயில் போன்ற படங்களைத் தயாரித்ததற்காக.
இந்த அங்காடித்தெரு படம் முடிவடைஞ்சும் பல மாதங்கள் ரிலீசுக்காக தவம் இருந்துருக்கு. ரஜினி, சன் பிக்சர்ஸ் மாதிரியான ஆட்கள் நினைச்சிருந்தா ரொம்ப எளிதா வெளியிட்டு ஒரே வாரத்துல லாபம் சம்பாதிச்சிருக்கலாம். அவதார் படமும் பிரமாண்டம் வசூலும் பிரமாண்டம்.ஏதோ பில்லியன் கணக்குல சொல்றாங்க.
ஆனா ஆறு ஆஸ்கர்  அள்ளுன தி ஹர்ட் லாக்கர் படம் பதினோரு மில்லியன்ல தயாராகி பதினாறு மில்லியன் வசூலாம். இது மாதிரி தமிழ்ல வருஷத்துக்கு பத்து படம் வரவைக்குறது பெரிய விஷயமே இல்லை.  அதற்குரிய திறமைசாலிகள்  நிறையவே இருக்காங்க. தயாரிப்பாளர்கள்தான் இல்லை.

பெரிய தயாரிப்பாளர்கள் இப்படி நல்ல படங்கள் தயாரிக்கலைன்னாலும் பரவாயில்லை.மசாலாப்படங்கள் ரிலீசைக் காரணம் காட்டி நல்ல படங்களுக்கு தியேட்டரே கிடைக்காம பண்ணிடுறது ரொம்ப கொடுமையான விஷயம்.

அங்காடித்தெரு படத்துல, கடை யூனிபார்ம் கொடுக்க ஏன் காசு கேட்குறீங்கன்னு ஒரு பையன் கேட்டதும், "ஏலே...இலவசமா கொடுக்க இது கவர்மெண்ட்டா...இப்படி கொடுத்து கொடுத்துதாம்லே உங்களை எல்லாம் கெடுத்து வெச்சிருக்காங்க."அப்படின்னு சொல்லுவார்.(இலவசமாக அந்தப்பையனுக்கு ஒரு அடி கிடைக்கும்.)

இப்படி படங்கள் தயாரித்து பெரிய தயாரிப்பாளர்களை நஷ்டமடைய சொல்லவில்லை. ஷங்கர் செய்வது போல் பெரிய தலைகளும் ஆண்டுக்கு ஒரு படம் சின்ன பட்ஜெட்டில் அற்புதமாக தயாரித்தால் போதும். அவர்களும் நாலு காசு பார்க்கலாம். அடுத்த ஆண்டு இன்னொரு படம் தயாரிக்கலாம்.தமிழ் சினிமாவும் மேம்படும்.
இவர்கள் சுயநலத்துடன் இருக்கட்டும். பொதுநலமும் கலந்தால் நல்லது என்று சொல்கிறேன். சிலருக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக்கொடுப்பதும் திருமணம் செய்து வைப்பதும் மட்டும் தொண்டு இல்லை. தன்னை வாழ வைக்கும் கலைக்கு கொஞ்சமாவது ஆக்சிஜன் கொடுப்பதும் இந்த வகைதான்.

******
நாளை முதல் ஒரு தொடர்கதை எழுதப்போவதாக அறிவித்திருந்தேன். குறுகியது வீதி மட்டுமல்ல...மனமும்தான்.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பையா ... அடப்போங்கய்யா...(இது விமர்சனமல்ல.)

"நான் கதாசிரியர்..."

"வந்த படத்துக்கா, வராத படத்துக்கா..."-இந்த வசனம் பூவே உனக்காக படத்தில் 'மதன்பாப்'பிடம் சார்லி பேசுவது.

அந்தப்படத்தில் கதாசிரியர் என்பவர் காமெடியனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். பெரும்பாலும் திரையுலக ஜாம்பவான்களும் கதாசிரியரை ஒரு பொருட்டாகவே மதிப்பதே இல்லை. பாடல், சில காட்சி அமைப்புகள் என்று பையா நல்ல பெயர் வாங்கினாலும் கதை என்ற விஷயத்தை வழக்கம்போல் மறந்ததால் சந்தேகத்திற்கு இடமில்லாத வெற்றி என்று சொல்ல முடியவில்லை.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வசந்தபாலன்,"தொழில்நுட்பத்தைக்கொண்டு மிரட்ட தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.கதை சொல்லத்தான் ஆள் பற்றாக்குறை."என்று சொன்னார்.இது உண்மைதான். நானும் இப்படி அனுபவப்பட்டிருக்கிறேன்.

 நான் எழுதிய சில கதைகள் பத்திரிகைகளில் பிரசுரமான நேரம். அந்த ஆர்வத்தில் கதை சொல்கிறேன் என்றதும்,விவேக்குடன் நகைச்சுவைக்காட்சிகளில் தோன்றும் நந்தகுமார் என்ற நடிகரிடம் நண்பன் ஒருவன் அழைத்துச் சென்றான்.(ஒரு படத்தில் மிஸ்டர் சோத்தப்பன்...என்று விவேக் சொன்னதும், சாத்தப்பன் என்று சொல்வாரே...அவர்தான்.ரன் படத்தில் விவேக்கின் தந்தையாக வருவதும் இவர்தான்.)

எப்படி சொல்றான்னு பார்த்துட்டு யாராவது ஒரு இயக்குனரிடம் உதவியாளரா சேர்த்துவிடுறேன்.என்று என் நண்பனிடம் சொல்லியிருக்கிறார்.இத்தகைய நல்ல வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை.ஆர்வக்கோளாறில் ஒரு பஸ், குற்றாலத்தில் இருந்து சென்னைக்கு பயணம் என்று உளறினேன்.

நான் கதை (!?) சொல்லி முடிச்சதும், "இந்த மாதிரி கதை சொல்ல ஆரம்பிச்ச உடனே எழுந்திரிச்சு வெளியே போன்னு சொல்லிடுவாங்க. இன்னும் நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு."அப்படின்னு நிறைய புத்தி சொல்லி, மறுபடி உருப்படியான கதையோட வான்னு சொன்னார். ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளரா சேர்றது எவ்வளவு கஷ்டம்னு எல்லாருக்குமே தெரியும்.என் சோம்பேறித்தனத்தால அவர்கிட்ட ஆறு வருஷமா கதை சொல்லப்போகணும்னு நினைச்சுகிட்டே இருக்கேன்.

அதை விடுங்க. வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனரான லிங்குசாமி ஒரே மாதிரி படங்களா கொடுத்துகிட்டு இருக்குறது ஏன்னு புரியலை. கதைன்னா படம் பார்க்குறவங்களோட மனசை கலங்க வைக்கிறதுன்னு இல்லை. சாதாரண நாலு வரிக்கதையை சுவாரஸ்யத்தோட சொன்னாலே போதும்.

பாடத்துல மக்கா இருந்து வீட்டுல திட்டுவாங்குற காமெடி பீசா இருக்குற ஒருத்தன் ஒரு பொண்ணை அவ மாமன்கிட்ட இருந்து காப்பாத்துறான்.-இதுதான் கில்லி படத்தோட கதை. சொல்லும்போது ரொம்ப சாதாரணமா இருக்குல்ல. ஆனா இது கூட சூப்பர் கதையானதற்கு காரணம் ரொம்பவும் சிம்பிள். விஜய், பிரகாஷ்ராஜ் ரெண்டு பேருக்கும் அந்த கேரக்டர் பொருத்தமா இருந்துச்சு. பாட்டு ஹிட். படம் அதிரடி வெற்றி.

வழவழான்னு கதையை சொல்லிகிட்டு இருந்தா புரொடியூசருங்க நம்மளை வெளில போக சொல்லிடணும். இல்லன்னா, ஜனங்க யாரும் வரலைன்னு தியேட்டரை விட்டு முதலாளிங்க படத்தை துரத்திடுவாங்க.

நல்ல கதைன்னு ஒண்ணும் இல்லை. தெளிவான கதையோட வந்த பல படங்கள் தோல்வி அடைஞ்சிருக்கலாம். ஆனா தெளிவில்லாத கதையோட வந்த ஒரு படம் கூட வெற்றி அடைஞ்சிருக்காது. இதை மனசுல வெச்சுகிட்டு படம் பண்ணினாங்கண்ணா தேவலை.
எந்த கதையை வேணுன்னாலும் படமா எடுங்க. அந்தக் கதை என்ன கேட்குதோ அதைதான் திரைக்கதையில செய்யணும். ஹீரோவுக்காக செய்தா வெற்றியோட சதவீதம் மிக மிக மிக.........குறைவு.

சுருக்கமா சொன்னா, ஹிட்டு இல்ல...ஹிட்டு மாதிரி.

பையா ... அடப்போங்கய்யா...(இது விமர்சனமல்ல.)

"நான் கதாசிரியர்..."

"வந்த படத்துக்கா, வராத படத்துக்கா..."-இந்த வசனம் பூவே உனக்காக படத்தில் 'மதன்பாப்'பிடம் சார்லி பேசுவது.

அந்தப்படத்தில் கதாசிரியர் என்பவர் காமெடியனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். பெரும்பாலும் திரையுலக ஜாம்பவான்களும் கதாசிரியரை ஒரு பொருட்டாகவே மதிப்பதே இல்லை. பாடல், சில காட்சி அமைப்புகள் என்று பையா நல்ல பெயர் வாங்கினாலும் கதை என்ற விஷயத்தை வழக்கம்போல் மறந்ததால் சந்தேகத்திற்கு இடமில்லாத வெற்றி என்று சொல்ல முடியவில்லை.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வசந்தபாலன்,"தொழில்நுட்பத்தைக்கொண்டு மிரட்ட தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.கதை சொல்லத்தான் ஆள் பற்றாக்குறை."என்று சொன்னார்.இது உண்மைதான். நானும் இப்படி அனுபவப்பட்டிருக்கிறேன்.

 நான் எழுதிய சில கதைகள் பத்திரிகைகளில் பிரசுரமான நேரம். அந்த ஆர்வத்தில் கதை சொல்கிறேன் என்றதும்,விவேக்குடன் நகைச்சுவைக்காட்சிகளில் தோன்றும் நந்தகுமார் என்ற நடிகரிடம் நண்பன் ஒருவன் அழைத்துச் சென்றான்.(ஒரு படத்தில் மிஸ்டர் சோத்தப்பன்...என்று விவேக் சொன்னதும், சாத்தப்பன் என்று சொல்வாரே...அவர்தான்.ரன் படத்தில் விவேக்கின் தந்தையாக வருவதும் இவர்தான்.)

எப்படி சொல்றான்னு பார்த்துட்டு யாராவது ஒரு இயக்குனரிடம் உதவியாளரா சேர்த்துவிடுறேன்.என்று என் நண்பனிடம் சொல்லியிருக்கிறார்.இத்தகைய நல்ல வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை.ஆர்வக்கோளாறில் ஒரு பஸ், குற்றாலத்தில் இருந்து சென்னைக்கு பயணம் என்று உளறினேன்.

நான் கதை (!?) சொல்லி முடிச்சதும், "இந்த மாதிரி கதை சொல்ல ஆரம்பிச்ச உடனே எழுந்திரிச்சு வெளியே போன்னு சொல்லிடுவாங்க. இன்னும் நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு."அப்படின்னு நிறைய புத்தி சொல்லி, மறுபடி உருப்படியான கதையோட வான்னு சொன்னார். ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளரா சேர்றது எவ்வளவு கஷ்டம்னு எல்லாருக்குமே தெரியும்.என் சோம்பேறித்தனத்தால அவர்கிட்ட ஆறு வருஷமா கதை சொல்லப்போகணும்னு நினைச்சுகிட்டே இருக்கேன்.

அதை விடுங்க. வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனரான லிங்குசாமி ஒரே மாதிரி படங்களா கொடுத்துகிட்டு இருக்குறது ஏன்னு புரியலை. கதைன்னா படம் பார்க்குறவங்களோட மனசை கலங்க வைக்கிறதுன்னு இல்லை. சாதாரண நாலு வரிக்கதையை சுவாரஸ்யத்தோட சொன்னாலே போதும்.

பாடத்துல மக்கா இருந்து வீட்டுல திட்டுவாங்குற காமெடி பீசா இருக்குற ஒருத்தன் ஒரு பொண்ணை அவ மாமன்கிட்ட இருந்து காப்பாத்துறான்.-இதுதான் கில்லி படத்தோட கதை. சொல்லும்போது ரொம்ப சாதாரணமா இருக்குல்ல. ஆனா இது கூட சூப்பர் கதையானதற்கு காரணம் ரொம்பவும் சிம்பிள். விஜய், பிரகாஷ்ராஜ் ரெண்டு பேருக்கும் அந்த கேரக்டர் பொருத்தமா இருந்துச்சு. பாட்டு ஹிட். படம் அதிரடி வெற்றி.

வழவழான்னு கதையை சொல்லிகிட்டு இருந்தா புரொடியூசருங்க நம்மளை வெளில போக சொல்லிடணும். இல்லன்னா, ஜனங்க யாரும் வரலைன்னு தியேட்டரை விட்டு முதலாளிங்க படத்தை துரத்திடுவாங்க.

நல்ல கதைன்னு ஒண்ணும் இல்லை. தெளிவான கதையோட வந்த பல படங்கள் தோல்வி அடைஞ்சிருக்கலாம். ஆனா தெளிவில்லாத கதையோட வந்த ஒரு படம் கூட வெற்றி அடைஞ்சிருக்காது. இதை மனசுல வெச்சுகிட்டு படம் பண்ணினாங்கண்ணா தேவலை.
எந்த கதையை வேணுன்னாலும் படமா எடுங்க. அந்தக் கதை என்ன கேட்குதோ அதைதான் திரைக்கதையில செய்யணும். ஹீரோவுக்காக செய்தா வெற்றியோட சதவீதம் மிக மிக மிக.........குறைவு.

சுருக்கமா சொன்னா, ஹிட்டு இல்ல...ஹிட்டு மாதிரி.