Search This Blog

திங்கள், 8 மார்ச், 2010

அவதார் - ஆஸ்கர் - தி ஹர்ட் லாக்கர் - மகளிர் தினத்தில் மகளிருக்கு பெருமை

ஷங்கர் என்னதான் பிரமாண்டத்தில் மிரட்டியிருந்தாலும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் முடிவைக்காட்டிலும் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த காதல் படத்தின் கிளைமேக்ஸ் அதிகமாகவே என்னை பாதித்தது.

இது போல் பல உதாரணங்களை சொல்லலாம்.ரஜினியின் பாட்ஷா, தளபதியைக்காட்டிலும் ஆறிலிருந்து அறுபது வரை படம் அதிக நாட்களுக்கு மனதை விட்டு அகன்றிருக்காது.

விஜய் படங்களில் கில்லி, மதுர இவை அதிரடி என்றால் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்றவற்றின் மென்மையும் படங்களுக்கு வெற்றி தேடித்தருவதில் சளைத்தவை அல்ல.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் அதிரடி கதையம்சம் கொண்ட படங்கள் நம்மை பிரமிப்புடன் பார்க்க வைக்கலாம். ஆனால் மனதைத் தொடுபவை எந்த மாதிரியான படங்கள் என்றால் மனதின் வலிகளையும் உணர்வுகளையும் பேசும் படங்கள்தான்.

சமீபத்தில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு சக்கைபோடு போட்டு வசூலைக்குவித்த அவதார் படம் போலவே தி ஹர்ட் லாக்கர் படமும் ஒன்பது பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இன்று அவதார் மூன்று ஆஸ்கர் விருதுகளையும் தி ஹர்ட் லாக்கர் ஆறு விருதுகளையும் வென்றிருக்கின்றன.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 82 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குனர் பிரிவில் முதல் முறையாக பெண் இயக்குனர் விருது பெற்றிருக்கிறார்.மகளிர் தினத்தில் இந்த சிறப்பு நிகழ்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.(அமெரிக்காவில் 7ந் தேதிதானே என்று எதிர்வாதம் புரியக்கூடாது.)
தி ஹர்ட் லாக்கர் படத்தின் கதை தெரியாதவர்களுக்காக சிறு அறிமுகம்:

போர் என்பது போதை தருவது என்ற மெசேஜை நிகரில்லாத த்ரில்லராக தருகிறது இந்தப்படம்.வில்லியம் ஜேம்ஸ் என்ற வெடிகுண்டு நிபுணர்தான் கதையின் ஹீரோ. கவச உடை அணியாமலே, அலட்சியமாகச் சென்று கார்களிலும், சாலைகளிலும் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் வித்தியாசமான ஹீரோ. ராணுவ முகாமிலும் ஜாலி; போர்முனையிலும் ஜாலியாக வேலை பார்ப்பவன்.அலட்சியம் ஆகாது என்று சக வீரர்கள் சொல்வதை அசட்டை செய்து, ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்து ஜெயிக்கிறான்.
கிட்டத்தட்ட ஒரு வருட காண்ட்ராக்ட் முடியும் நேரத்தில் தன் பணியில் முதல் தோல்வியைச் சந்திக்கிறான். சோதனைச் சாவடி ஒன்றை நோக்கி வருகிறார் அந்த இராக்கியர். அவர் உடலில் குண்டை கட்டி வைத்து, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு உயிர் வாழ ஆசை. காப்பாற்றும்படி கெஞ்சுகிறார். ஆனால் ஒரு இரும்புப்பட்டையால் பிணைக்கப்பட்ட குண்டை ஜேம்சால் அகற்றவே முடியவில்லை. வெடிக்கப்போகும் நொடியில் அந்த மனிதரை நிராதரவாக விட்டுவிட்டு ஓடிவருகிறான். அவனால் அதன் பிறகு தூங்கவே முடியவில்லை. அமெரிக்கா திரும்பியும் மனைவி,குழந்தைகளுடன் அவனால் இயல்பாக இருக்கமுடியவில்லை. எனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்குப் போறேன்.என்று சொல்லிவிட்டு திரும்ப இராக் வருகிறான். போர் என்ற போதை அவனை களத்துக்கு இழுக்கிறது.

உலகசினிமா வரலாற்றிலேயே மிக அதிகமாக வசூலைக் குவித்த படம் அவதார்.இதுவரை கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்கள்.வெறும் 11 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு, 16 மில்லியன் டாலர் ஈட்டியது தி ஹர்ட் லாக்கர்.ஆஸ்கர் வரலாற்றில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த படங்களில் மிகக்குறைந்த வசூல் செய்தது என்ற வித்தியாசமான பெருமையைப் பெறுகிறது இந்தப்படம்.
அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவிதான் தி ஹர்ட் லாக்கர் பட இயக்குனர் கேத்ரின் பிகெலோ. 3 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து, பிரிந்தவர்கள்தான் இருவரும்.ஆஸ்கர் வரலாற்றில் விருதுக்கான தகுதிப்பட்டியலில் இடம் பிடிப்பதே பெரும்பாடு. அப்படி பரிந்துரை பெற்ற நான்காவது பெண் டைரக்டர் கேத்ரின்.

பிரிந்த ஜோடி என்றாலும் கேமரூனுக்கும் கேத்ரினுக்குமிடையே வெறுப்பு வளையம் இல்லை.கோல்டன் குளோப் விருதை வாங்கும்போது, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கேத்ரின்தான் இதை வாங்கப்போகிறார் என்று நினைத்தேன். இதை வாங்கப்போகிறார் என்று நினைத்தேன். அவர் இதற்கு எல்லா வகையிலும் தகுதியானவர். என்று மனம் திறந்து சொன்னார் கேமரூன்.

இந்த இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தாலும் அற்புதமான படைப்புகளை கொடுத்து கலை சேவை புரிகிறார்கள்.

ஆனால் குடும்ப சண்டையில் அடிமை சிலரை சாகடிச்சுட்டு மறுபடி குடும்பமே ஒண்ணு கூடி அந்த அடிமைங்க ஏன் செத்தாங்கன்னே யாருக்கும் புரிய விடாம செஞ்ச கொடுமையையும் நாம பார்த்துகிட்டுதான் இருக்கோம். என்ன செய்ய முடியுது?

தொலைக்காட்சியில் ஆஸ்கர் விருது பற்றிய செய்தியைப் பார்த்ததும் வீட்டில் தி ஹர்ட் லாக்கர் படம் பற்றி வெளிவந்திருந்த தகவலை புத்தக குவியலில் தேடி எடுத்தேன். குங்குமம் - 15.2.2010 இதழ்.

4 கருத்துகள்: