Search This Blog

ஞாயிறு, 7 மார்ச், 2010

நித்திய கேடிகள் - என்னுடைய பார்வை...

தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரும் மது, மாது என்று வாழ்ந்தவர்தான்.அதை விமர்சிப்பதில்லை.அவர் படைப்புகளை நாம் தலையில் வைத்துக்கொண்டாடுகிறோம்.இப்போது பெரிய பதவியில் இருப்பவர்களில் பலரும் மனைவி, துணைவியுடன்தான் இருக்கிறார்கள்.மக்கள் பணத்தில் அவர்கள் இப்போது சுகவாசியாக இருக்கிறார்களே என்று நம்மால் ஆதங்கப்படத்தான் முடிகிறது.அதிகாரத்தை மீறி எதுவும் பேசக்கூட முடிவதில்லை.
ஆனால் சாமியார்கள் விஷயம் அப்படி இல்லை.மெத்தப்படித்தவர்களும் பணக்காரர்களும் லட்சக்கணக்கில் பணத்தைக்கொடுத்துவிட்டு அவர் காலைப்பிடித்து தொழுகிறார்கள்.இதை தவிர்ப்பது முழுவதும் நம் கையில்தான் உள்ளது.இல்லறத்துக்குப்பிறகு துறவறம் என்ற கோட்பாடுதான் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு இஷ்டத்துக்கு ஆட்டம் போடுபவர்களை நம்பி மோசம் போனோம் என்று மக்கள் புலம்பும் நிலைக்கு வருவதற்கு சில ஊடகங்கள் துணைபோகின்றன.

பிரகாஷ்ராஜ் சொல்லாததும் உண்மை என்ற தலைப்பில் விகடனில் ஒரு தொடர் எழுதியதை உங்களில் பலர் படித்திருக்கக்கூடும்.அவர் இப்போது மனைவியை ஒதுக்கிவிட்டார், நடன இயக்குனருடன் இருக்கிறார் என்பதெல்லாம் என்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை.
அவர் எழுதிய கட்டுரையில்  பல விஷயங்கள் என்னை சிந்திக்கச் செய்தன.அதில் ஒன்று,ஒரு சிறுகதையைப்பற்றிய அவரது கருத்து.

கதாசிரியரான நாயகன், அவள் தோழி உடம்பை விற்று பிழைப்பதைப்பார்த்து ஏன் இப்படி என்று கேட்டு அவள் தவறை உணரச்செய்வான்.அவளும் அந்த தொழிலை விட்டுவிடுவாள்.ஆனால் சில தினங்களிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்ததும் கதாசிரியருக்கு வருத்தம் வாட்டும். செய்யும் தவறை உணர வைத்த நான் அவளுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை உணர வைக்கவில்லையே என்று புலம்புவதாக கதை முடியும்.

அதாவது சிலரின் இறை நம்பிக்கையை தவறு என்று சொல்வதையே பிழைப்பாக வைத்திருப்பார்கள்.இதில் என்ன தவறு என்பது அந்த கட்டுரை ஆசிரியருடையது மட்டுமல்ல...என்னுடைய கேள்வியும் கூட.

தன்னம்பிக்கை இருந்தால் ஓ.கே. இல்லையென்றால் இறை நம்பிக்கை.வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் வெளியூர் சென்றிருக்கும்போது தனியாக இருப்பவர்கள் எதையோ இழந்தது போல் உணரவே இல்லை என்று சொல்லமுடியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில் இறைநம்பிக்கை என்பது ஒருவனுக்கு தன்னம்பிக்கை தரும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஒரு இடத்திற்கு வாகனத்தில் செல்கிறோம்.சிறு விபத்து. வாகனத்தையும் நம்மையும் தூக்கிவிடுபவர்கள் அருகில் எதாவது நிழல் இருந்தால் அங்கே உட்கார வைக்கிறார்கள்.பிறகு பக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கி கொடுப்பார்கள். நாம் அதைக் குடித்துவிட்டு, லேசாக முகம் கழுவிக்கொண்டு பயணத்தை தொடர வேண்டியதுதான்.இத்தகைய இளைப்பாறும் இடம்தான் ஆலயம் என்பது என்னுடைய கருத்து.

அதை விட்டுவிட்டு, நான் இங்கேயேதான் இருப்பேன்.கடவுள் வந்து நான் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்வார் என்று காத்திருப்பதும், அப்படி அவர் அழைத்துச் செல்வாரா என்று கேட்பதும் அறிவுடமை ஆகாது.

இந்து மதத்தில் இருக்கும் பல பழக்கங்கள், சடங்குகள் அடிப்படையில் ஏதாவது ஒரே ஒரு அறிவியல் உண்மையை நம் நன்மையை உத்தேசித்துதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இப்போது கல்வியறிவால் சில தெளிவு இருந்தாலும் நமக்கு நலம் தரும் விஷயங்கள் சிலவற்றை நாம் சோம்பேறித்தனத்தாலோ விதண்டாவாதத்தாலோ செய்வதில்லை.அந்தக்காலத்தில் கல்வியறிவு மிகவும் குறைவாக கொண்ட மக்கள் இருந்ததால் இறைவனின் பெயரால் கட்டாயம் என்று சொன்னதில் ஒரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஒரு சில விஷயங்கள் வேண்டுமானால் இப்போது பொருந்தாமல் இருக்கலாம்.இப்போது பிரச்சனை அந்த சடங்குகளில் இல்லை.அவற்றை ஏன் செய்கிறோம் என்பதற்கான விளக்கம் தெரியாததால்தான் இவ்வளவு குழப்பமும், வில்லங்க கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையும்.

உடல் பசியைப்பற்றி நன்றாக தெரிந்து கொள்வதை தவறு என்று இந்துமதம் சொல்லவில்லை.நன்றாக அனுபவித்து பிறகு 'ச்சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று சொல்வதுதான் நிரந்தரமே தவிர, தொடக்கம் முதலே ஒரு விஷயத்தை தள்ளி வைத்து அதன் மீதான ஆர்வத்தை அதிகரிப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

சிவாலயங்களில் திருமணம் ஆனவர்தான் பூஜை செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் சொல்லப்பட்டுள்ளது.இதை சிதம்பரம் தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள்.அதனால்தான் அங்கே பதினாறு வயது பையனுக்கு பதினான்கு வயது பெண்ணை மணமுடிக்கும் வழக்கம் இப்போது கூட இருக்கிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இதை பல இடங்களில் யாரும் கடைப்பிடிப்பதில்லை.

வயிற்றுப்பசி போலவே உடல்பசியும் இயற்கையே.ஆனால் அதை முறையான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.இதை சரிவர செய்யாமல் போவதின் விளைவுதான் சாமியார்களின் லீலைகள். இப்படி ஒருவர் புத்திமதி சொல்லி கட்டுரை எழுதுகிறாரா...அதில் நல்ல விஷயங்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.இவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது.

இதை விட்டுவிட்டு சாமி தரிசனம் தருகிறார் என்று அவரிடம் காசைக்கொடுத்துவிட்டு நிம்மதியைத் தேடிப்போகாதீர்கள். அந்த நிம்மதி, உங்கள் நகரத்திற்கு அருகாமையில் ஒரு கிராமத்துக்கு சென்றால் பாழடைந்த ஆலயத்திலோ, ஆற்றங்கரை ஓரத்திலோ கூட கிடைக்கலாம். நான் செய்வது இதுதான்.சில ஆண்டுகளுக்கு முன்பு சுகி.சிவம் அவர்கள் பெயரைக்குறிப்பிடாமல் ஒன்றுமில்லாதவரைப்பற்றி ஒரு வாரப்பத்திரிகையில் புகழ்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு என்று சன் தொலைக்காட்சியில் பேசினார். எனக்கு அப்போதே அது நித்தியானந்தா என்று புரிந்து விட்டது.

அவ்வப்போது ஓரிருவர்கள்தான் மாட்டுகிறார்கள்.மாட்டிக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

தூய்மையான அரசியல் வாதி என்று இப்போது இருக்கும் அரசியல் புள்ளிகள் கூட அண்ணா, காமராஜர், காந்தி என்றுதான் சொல்கிறார்கள்.ஆக மொத்தத்தில் இப்போது ஒருவரும்......................................... என்பது இவர்களே ஒப்புக்கொண்ட ஸ்டேட்மெண்ட்.அது போல், நம் முன்னோர்கள் உருவாக்கிய கோவில்களை மேம்படுத்தி வழிபடுவதுதான் நல்லது. நான் தான் சாமி என்று சொல்பவனை கண்டுகொள்ளாதீர்கள். ஆளில்லா கடையில் அவன் எவ்வளவு நாள் டீ ஆத்த முடியும்?

நாயன்மார்கள் என்று போற்றப்படுபவர்கள் கூட சிவனை வழிபடும் பக்தர்களுக்கு தொண்டு செய்யும் அடியேன்.இன்னும் கடவுளின் பக்தன் என்று சொல்லும் அளவுக்கு கூட எனக்கு தகுதியில்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று நான் தான் கடவுள் என்று சொல்பவன் எவ்வளவு மோசக்காரனாக இருக்கவேண்டும் என்று உணர வேண்டியது நம் கடமை.

கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் உருவானதற்கு காரணம் ரொம்ப சிம்பிள். இவை எல்லாம் இருப்பதால்தான் வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து புது ஆடை வாங்குவது என்று பல விஷயங்களிலும் நாம் நம்மை புதுப்பித்துக்கொள்ள முடிகிறது.(தினமும் ஜவுளிக்கடைக்கு செல்பவர்களுக்கு இது அபத்தமாக தெரியலாம்.ஆனால் மூன்று வேளை சாப்பாட்டுக்கு கூட சம்பாதிக்க முடியாத பல கோடிக்கணக்கான மக்களுக்கு பண்டிகை தினம்தான் நல்ல உணவு, உடை கடன் வாங்கியாவது கிடைக்கிறது என்பதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.)

அவ்வளவு ஏன்? ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவி செய்பவர்கள் கூட பிறந்த நாள், திருமண நாள் என்று எதாவது ஒரு நாளில்தான் செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அந்த குழந்தைகளுக்கு அரை வயிற்று உணவாவது ஏற்பாடு செய்ய சில இல்லங்களின் நிர்வாகிகள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

மூன்று மணி நேரத்தில் தேர்வு எழுத வேண்டும் என்றால்தான் ஒரு ஒழுங்கு இருக்கும்.படிப்பு என்று இல்லை...எந்த விஷயத்திலும் ஒழுங்கு இல்லை என்றால் சிக்கல்தான். வரிசை முறை கடைப்பிடிக்கப்படாததால் பேருந்தில் ஏறுவது முதல் பல காரியங்களிலும் எவ்வளவு இன்னல்கள்?

இப்போது உத்திரப்பிரதேசத்தில் கூட இலவசங்களைப் பெற கூடிய கூட்டத்தில் அறுபது பேருக்கு மேல்  பலியான இடத்தில் வரிசை முறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காதே.

நமக்கு நன்மை தரும் விஷயமாக இருந்தாலும் அதற்கு என்று ஒரு ஒழுங்கு இருந்தால் மட்டுமே நம்மால் கடைப்பிடிக்க முடியும்.

நான் பதினைந்து வயதிலேயே திரையரங்கத்தில் வேலைக்குச் சென்றவன்.திரைப்படம் திரையிடும் கருவியை அப்போதே இயக்கியதால் பிறகு வேறு திரையரங்கத்தில் படம் பார்க்கச் சென்றால், திரையில் வரும் காட்சிகள் பற்றிய எதிர்பார்ப்பை விட அந்த நேரத்தில் ஆப்ரேட்டர் எப்படி மெஷினை இயக்குவார், ஒரு புரொஜக்டரில் இருந்து மற்றொரு புரொஜக்டரில் எப்படி சட்டென்று காட்சி மாறும் என்பது போன்ற ஆராய்ச்சியில்தான் இருப்பேன்.இப்போதெல்லாம் படம் பார்ப்பது என்பது எரிச்சல் தரும் விஷயமாகிவிட்டது.

இவ்வளவுக்கும் நான், சிறுவயதில் சில படங்களுக்கு அழைத்துச்செல்லாததால் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு பல நாட்கள் சரியாக சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.(அப்போது எனக்கு ஒரு திரையரங்கத்தில்தான் இலவசமாக படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தது.)

எனக்கு இருபத்தி ஒரு வயது ஆகும் வரை (கல்லூரியில் மூன்றாம் ஆண்டு) எங்கள் வீட்டில் தொலைக்காட்சி மட்டுமல்ல, வானொலி கூட கிடையாது.எல்லாம் அக்கம்பக்கத்து வீடுகளில்தான்.

பி.காம் முதல்வருடம் படிக்கும்போது உள்ளூர் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக ஒரு ஆண்டு இரவு நேரப்பணி செய்தேன்.அந்தப்பணியில் இருந்து விலகிய பின்பும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது.பிறகு அம்மாவுக்காக ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிதான் வாங்கினோம்.அதிலும் பதினைந்து நாட்கள் கழித்துதான் படம் பார்க்க முடிந்தது.கேபிள் வயர் பொருத்தும் இடத்தில் ஒரு வயர் சரியாக பற்ற வைக்காததுதான் பிரச்சனை.

கேபிளில் வேலை செய்தபோது தொலைக்காட்சியின் மீதான மோகம் சுத்தமாக போய்விட்டது.(அப்போதும் இப்போதும் கதைப்புத்தகங்கள் மீதான காதல்தான் எனக்கு அதிகரித்து வந்துள்ளது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.)

டூவீலரில் ஹாரன் அடிப்பதில் இருந்த ஆர்வம் நான் வண்டி ஓட்டத்தொடங்கியது காணாமல் போனது. கேமராக்களின் மீதான பிரமிப்பு, பல திருமணங்களையும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் படம் பிடித்ததும் குறைந்து விட்டது. நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன் என்று சொல்லவில்லை.ஒரு பொருளை விட்டு விலகி இருக்கும்போது அதன் மீதான ஆர்வம், பக்குவப்பட்ட மனமில்லாதவர்களிடம் வெறியாகத்தான் வெளிப்படும் என்று சொல்கிறேன்.பூவை ரசிப்பதற்கும், அதைக் கசக்கிப்போடுபவர்களுக்கு வித்தியாசம் உண்டுதானே.

உணவு, தூக்கம் இவை சரியாக இல்லை என்றால் ஒரு மனிதனால் ஒழுங்காக இருக்க முடியாது.இதன் மோசமான விளைவு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெவ்வேறு விகிதத்தில் வெளிப்படும் என்பது எனது அனுபவம்.உடலில் ஏற்படும் உணர்ச்சியும் இது போன்ற ஒன்றுதான். சாமியார்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்பது என் மனம் ஏற்றுக்கொண்டு விட்டதால் இந்த செய்தி தெரிந்ததும் என் மனதில் எந்த மாற்றமும் இல்லை. கவலைப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சில போலிகளிடம் பணத்தையும் அறிவையும் கொடுத்து ஏமாந்தவர்களாகவே இருப்பார்கள்.

புலம்பும் நண்பர்களுக்கு நான் சொல்லும் ஒரே வார்த்தை பதில், "புறக்கணிப்பு." இதை விட பெரிய தண்டனை ஒன்று இருக்கவே முடியாது.இந்த தண்டனை தவறு செய்த பின்பு அல்ல.இது போன்ற சாமியார்கள் வெளிவரும்போதே ஒதுக்கிவிடுங்கள். அவர்கள் ஆளில்லா கடையில் யாருக்கு இட்லி அவிப்பார்கள் என்று பார்த்துவிடுவோம்.

ஆசிரியர், காவல்துறை, அரசியல் என்று எந்த துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் காமத்தை அடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.பசியைப்போக்குவது போல் இந்த உணர்வைத் தணிக்கவும் ஒரு வரையறை உள்ளது. குப்பைத்தொட்டியில் உள்ள எச்சில் இலைகளில் போய் உணவு உண்ணுவது போன்றது இத்தகைய முறையற்ற உறவு. இனி முடிவெடுக்கவேண்டியது நீங்கள்தான்.

1 கருத்து:

  1. கரெக்ட் சரவணன். ஆனால், எல்லா ஆன்மீகவாதிகளையும் குற்றம் கூறிவிட முடியாது. உதாரணத்திற்கு. ஜக்கி வாசுதேவ். அவரின் முந்தைய வாழ்க்கை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம். தன்னுடைய பக்தர்களை சமுதாய பணிக்கு திருப்பி விடுவதை தன்னுடைய முதன்மை பணியாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். ஆன்மீகத்தை பொறுத்தவரை நாம் அன்னப்பறவையாய் மாறிவிட வேண்டும். நல்லதை பிரித்து எடுத்துக்கொண்டு கெட்டதை புறம்தள்ள தெரியவேண்டும்.

    பதிலளிநீக்கு