Search This Blog

திங்கள், 22 மார்ச், 2010

நீண்...........ட இடைவேளைக்கப்புறம் பாக்யாவில் நான் எழுதிய கதை!

எத்தனையோ கதை எழுதி அனுப்பியிருந்தாலும் இந்தக் கதையை ஏன் சார் அவங்க பிரசுரம் செஞ்சாங்க?...கதையைப்படிச்சு முடிச்சதும் உங்களுக்கு எதாவது காரணம் தெரியுதான்னு பாருங்க.

கொடை வள்ளல் - ஒரு பக்க கதை

அழைப்பு மணியோசை கேட்டதுமே என் மனதில் குழப்பம்.

"இங்க குடி வந்து ரெண்டு நாள்தானே ஆகுது. வேண்டியவங்களுக்கு எல்லாம் இனிமேதான் முகவரியை தெரியப்படுத்தணும். அதுக்குள்ள யாரா இருக்கும்"என்று நினைத்துக் கொண்டே கதவைத்திறந்தேன்.

ஆறு நடுத்தர வயது ஆண்கள் காவியுடை, நெற்றியில் விபூதி குங்குமம், நோட்டீஸ், மஞ்சள் பை என்று நின்றதுமே, "இந்த மாதிரி ஆளுங்களோட தொல்லை தாங்காதே..."என்று மனதுக்குள்ளேயே முணுமுணுத்தபடி "என்ன விஷயம்?" என்றேன்.

ஒருவர் தன் பற்களை எல்லாம் என்னிடம் காட்டியே தீருவது என்ற முடிவுடன் ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டு, "சார்...பத்து நாள்ல நம்ம தெரு அம்மன் கோயில் திருவிழா..."என்றவாறு நோட்டீசை என் கையில் திணித்தார். மற்றொருவர் ரசீதுப் புத்தகத்தில் எழுதத் தயாரானார்.

'என் மனைவிக்கு பக்தி அதிகம்னு இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா...பர்சை விட்டு பறந்துடுச்சுடா பெரிய தொகை' என்று நான் மனதுக்குள் அதிர்ந்த  நேரத்தில்தான் அந்த திருப்பம்.
"என்னங்க...நான் பேசிக்குறேன்..." என்று அருகே வந்த என் மனைவி,

"அய்யா...இந்த மாதிரி கோயிலுக்கெல்லாம் பணம் கொடுக்குறது என் வீட்டுக் காரருக்கு சுத்தமா பிடிக்காது. இருந்தாலும் வீடு தேடி வந்த உங்களை வெறும் கையோட அனுப்ப எனக்கு மனசில்லை. இந்தாங்க...இருபது ரூபாய்..."என்று அவர்களிடம் கொடுத்தாள்.

வந்தவர்கள் எதுவும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தந்துவிட்டுச் சென்றார்கள்.

'புது வீட்டுக்கு வந்ததும் என் மனைவி இப்படி மாறிட்டாளே' என்ற சந்தோஷம் எனக்கு. அவளிடமே என் சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.

"நீங்க ஏதேதோ கற்பனை பண்ணீக்காதீங்க. நான் அவங்களை இருபது ரூபாயோட அனுப்பக் காரணமே வேற. நேற்றே அந்தக் கோயிலைப் பற்றி விசாரிச்சுட்டேன். இங்க ரெகுலரா பூஜை செய்ய ஆள் கிடையாதாம். வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களுக்கு மட்டும் ஒரு குருக்களை வெச்சு பூஜை செய்யுறாங்களாம். மற்ற நாட்களில் சரியா  விளக்கு கூட எரியுறது இல்லைன்னு சொன்னாங்க.

ஆனா இந்த ஆட்கள் ஒவ்வொரு வருடமும் வசூல் பண்ணி பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சின்னு செலவழிக்கிறாங்களாம். இந்த மாதிரி வசூல் செய்த பணத்தை வெச்சு தினமும் ஒருகால வழிபாடு நடக்க ஏற்பாடு பண்ணின பிறகு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினா பரவாயில்லை.

வருஷம் பூராவும் பட்டினி போட்டுட்டு ஒரே ஒரு நாள் விருந்து வைக்கிற செயலுக்கு நாம் ஏன் அதிகமா கொடுக்கணும்னு நினைச்சுதான் இருபது ரூபாயோட அனுப்பினேன். இந்த திருவிழா முடிஞ்ச பிறகு தினமும் வழிபாடு நடக்க கண்டிப்பா நான் ஏற்பாடு செய்வேன்...

அப்ப ஒரு பெரிய தொகையை நீங்கதான் தரணும்..." என்று என் மனைவி சொல்லி முடிப்பதற்குள் 'தடால்' என்று ஒரு சத்தம்...

என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க...நான் தான்  மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.
******
இந்தக்கதையை வழிபாடுன்னு தலைப்பு கொடுத்து அனுப்பியிருந்தேன். மார்ச் 25 ஏப்ரல் 1, 2010 பாக்யா வார இதழ்ல பிரசுரம் ஆகியிருக்கு. ஆனா வேற ஒரு புனைப்பெயர்ல.

ராட்டினத்தை சுத்துனா(கொசுவர்த்தியை ரொம்ப பேர் சுத்திட்டாங்க...இன்னும் சுத்திகிட்டே இருக்காங்க.நம்ம சித்ரா டீச்சரும் கிரைண்டரை சுத்திட்டாங்க.அதனால நான் ராட்டினத்தை சுத்துறேன்.) 2004 ஏப்ரல். பாக்யாவுல ஒரு கதை பிரசுரம் ஆகியிருந்துச்சு. அப்புறம் சில கதைகள் அனுப்பியிருந்தேன்.அவங்க கவனிக்கலை.அப்புறம் நான் வேற பத்திரிகைகள்ல அனுப்புன கதைகளுக்கு பரிசு கிடைக்க ஆரம்பிச்ச உடனே இந்த மாதிரி பத்திரிகைகளை நான் கண்டுக்கலை. ராட்டினத்தை நிறுத்தியாச்சுங்க. அவ்ளோதான் இப்ப இருக்குற மேட்டரு.

4 கருத்துகள்:

  1. கதை மிக அருமை சரவணன்.

    சுற்றிய ராட்டினத்தில் பயணித்து இறங்கும் போது வருத்தமாய் இருந்தது. சரியான முடிவுதான் எடுத்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. ராட்டினம் சுத்துனதும் சூப்பர்.
    பாக்கியா பத்திரிகையில், உங்கள் கதை வந்தது அவர்களின் பாக்கியம். எப்பூடி?

    பதிலளிநீக்கு
  3. @ Chitra

    பாக்கியா பத்திரிகையில், உங்கள் கதை வந்தது அவர்களின் பாக்கியம். எப்பூடி?//

    இதை அவங்க யாராவது பார்த்துட்டு என்னைய ஆணியே புடுங்க வேணாம்னு (எழுத வேணாம்னு ) சொல்லிடப்போறாங்க ?!

    பதிலளிநீக்கு