Search This Blog

வியாழன், 18 மார்ச், 2010

தோட்டா - விலை என்ன? ...........துறையின் சட்டையைப்பிடித்து ஒரு கேள்வி.

தொலைக்காட்சியில் நான் நிகழ்ச்சிகள் பார்க்கும் நேரம் மிகவு........ம் குறைவு. அப்படி நான் பார்த்த கலைஞர் தொலைக்காட்சியின்  நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் என் கண்களில் சிக்கிய படம், என்னை அதிகமாக யோசிக்க வைத்த படம் "தோட்டா - விலை என்ன?" (தலைப்பில் வார்த்தைகள் இடம் மாறி இருக்கலாம். பொறுத்துக்கொள்ளவும். அல்லது சரியான வரிசையை தெரிவிக்கவும்.)
சாகும்போது ஒருவரின் கதறலைக் கேட்க விரும்பி பத்துப்பேரைக் கொன்று புதைத்திருக்கிறேன். என்று ஒரு இளைஞன் அந்த சத்தம் பதிவுசெய்யப்பட்ட டேப் ரெக்கார்டருடன் போலீசாரிடம் சரணடைகிறான்.அவனுடைய பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஒரு சைக்கோ கொலைகாரனைப்போல்தான் இருக்கிறது.

இதற்கிடையில் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரின் மகளும் பாட்டு கற்றுக்கொள்ள செல்லும்போது அப்பாவிடம் செய்யும் சிறு குறும்பால் பார்வையாளரின் மனதிலும் இடம்பிடிக்கிறாள்.

கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது அந்த இளைஞன், "நீங்க கேட்குறதெல்லாம் ஒரு இசையா?...உயிர் போகும்போது ஒருத்தன் கத்துற கத்தல் இருக்கே...அதுக்கு எந்த இசையும் ஈடாகாது.அதனாலதான் பாட்டு பாடுறவங்களா பார்த்து கொலைசெஞ்சு புதைச்சேன்." என்று சொல்கிறான். இந்தக் காட்சியின் போது எனக்கும் அவன் மீது எரிச்சல்தான் வந்தது.

அவன் தொடர்ந்து,"இன்ஸ்பெக்டர்...உங்க வீட்டுல யாராவது பாட்டு கத்துக்குறவங்க இருக்காங்களா?"அப்படின்னு கேட்பான்.உடனே அவருக்கு பாட்டு கத்துக்கப் போறப்ப எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி பாடுன மகளோட நினைப்பு வந்துடும்.(நமக்கும்தான்.)இனிமே இவனை விட்டு வைக்க கூடாதுன்னு நினைச்சு அவனை ஜீப்புல இருந்து கீழ இறக்கி சுட்டுக்கொன்னுடுவார்.

இந்த மாதிரி ஆளுங்களை இப்படித்தான் போட்டுத்தள்ளணும். அப்படின்னு ஒரு எண்ணம்தான் இது வரை படம் பார்த்தவங்களுக்கு தோணும். எனக்கும் அப்படித்தான்.

ஆனா படத்துல முக்கிய திருப்பமே இனிமேதான்.என்கவுண்ட்டர் செய்த இன்ஸ்பெக்டருக்கு போன் வருது. அதுல பேசுறது, அந்த பத்து பிணங்களை பரிசோதனை செய்த டாக்டர்.

"கேன்சர் உட்பட பல காரணங்களால இயற்கையா மரணமடைஞ்ச பத்துபேரோட உடல்கள்தான் அவை. இவங்க கொலை செய்யப்பட்டிருக்க சான்சே இல்லை. அவன் ஏன் இப்படி கொலை செய்ததா பொய் சொல்லி சரணடைஞ்சான்னு தெரியலை. நல்லா விசாரிங்க சார். அவசரப்பட்டு அவனுக்கு தண்டனை வாங்கித்தந்துடாதீங்க.டீடெய்ல்டு ரிப்போர்ட் சீக்கிரம் தந்துடுறேன்."

இதுதான் அந்த டாக்டர் பேசின விஷயம்.இப்போ அதிர்ச்சி அடையுறது இன்ஸ்பெக்டர் மட்டுமில்ல...நாமும்தான்.

இந்தக் காட்சிக்குப்பிறகு போலி என்கவுண்ட்டரில் கொலைசெய்யப்பட்ட இளைஞனின் வாக்குமூலமாக அடுத்த காட்சி வீடியோவில் வருகிறது.

"இந்த வீடியோவை நீங்க பார்க்குறீங்கன்னா என்னைய போலி என்கவுண்ட்டர்ல என்னைய போட்டுத்தள்ளிட்டாங்கன்னு அர்த்தம்.ஏற்கனவே இது மாதிரி போலியான என்கவுண்ட்டர்ல என் அண்ணனை இழந்தேன். அதனால மனித உரிமைகளுக்காக உயிரைக்குடுத்துப் போராடுற போராளிதான் நான்.

இதுக்காகவே ரொம்ப சிரமப்பட்டு நான் குற்றவாளின்னு நம்பவைக்கிற மாதிரி போலி ஆதாரங்களை உருவாக்கியிருக்கேன். இந்த வழக்கை போலீஸ் உணர்ச்சிவசப்படாம நேர்மையா விசாரிச்சா நான் குற்றவாளி இல்லைன்னு சுலபமா கண்டுபிடிச்சுருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் போலீஸ்காரங்க தயாரா இல்லைன்னுங்குறதை  என் உயிரைக் கொடுத்து உங்களுக்குப் புரிய வெச்சிருக்கேன்." இது தவிர இன்னும் சில விஷயங்களை அந்த இளைஞன் பேசுவதுடன் அந்த வாக்குமூலம் முடியும்.

இதைப் பேசி முடித்ததும் அந்த இளைஞனின் முக பாவம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.எதையோ இழந்தது போன்ற உணர்வு.அந்த இயக்குனர் ஐந்து நிமிடத்தில் இப்படி ஒரு அழுத்தமான படம் கொடுத்தது நான் எதிர்பார்க்காத ஒன்று.
******
இந்த நிகழ்ச்சி இன்று 18 மார்ச் 2009 இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகும்.
******
இப்போது என் மனதில் தோன்றிய எண்ணங்கள்.கொலை, தற்கொலை போலவே மிகவும் மடத்தனமான ஒன்றுதான் இந்த என்கவுண்ட்டரும்.
சட்டத்தில் கடுமையான விதிகள் குற்றவாளிகளை இறுக்கிப்பிடிக்கவும் நியாயமான பார்வை அப்பாவிகளைக் காப்பாற்றவும் என்று நினைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால் நடப்பது என்ன? சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தொழில்முறை குற்றவாளிகள் தப்பிக்கவும், சட்டத்தில் உள்ள கடுமையான விதிமுறைகள் அப்பாவிகளை செய்யாத குற்றங்களை சுமத்தி சிக்கவைக்கவும் மட்டுமே அதிகமாகப் பயன்படுகின்றன.

கடுமையான குற்றம் செய்பவர்களை இப்படி தண்டித்தால்தானே பயம் இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம்.அந்த ரவுடிகள் இப்படி வளர முக்கியக் காரணமாக இருப்பதே சில அரசியல்வாதிகளும் சில காவல்துறை அதிகாரிகளும்தானே. அதிலும் பல என்கவுண்ட்டர்கள், இந்த ரவுடிகளை கோர்ட்டில் நிறுத்தினால் தாங்கள் சிக்கிக்கொள்வோமே என்ற பயத்தில் அரசியல்வாதிகள் செய்யச்சொல்வதால்தான் அரங்கேற்றப்படுகின்றன.

வல்லரசு படத்தில் ஒரு வசனம் வரும். மன்சூர்அலிகான் பேரணிக்கு அனுமதி கேட்கச் செல்லும் போது அத்தனை பேரை வெட்டுனேன். இத்தனை பஸ்சைக் கொளுத்தினேன்னு சொல்லிகிட்டே போவார்.  அவரை அடிச்சு துவைக்கும் விஜயகாந்த்,"நீ ஜாதி பேரை சொல்லி ஒரு பஸ் மேல கல்லை வீசுனப்பவே லோக்கல் ஸ்டேஷன்ல இருந்த கான்ஸ்டபிள் உன் கையை உடைச்சுருந்தா நீ இந்த அளவுக்கு ரவுடியா மாறி இருக்க மாட்ட." என்று பேசும் வசனம் நூறு சதவீதம் உண்மை என்பது என் கருத்து.

பல நாடுகளிலும் மரண தண்டனையை முற்றிலும் நீக்கியிருக்கும்போது, அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே இங்கே என்கவுண்டர் என்ற பெயரில் போலி முகமூடிக்குப்பின்னால் படுகொலைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் கூட பல கைதிகளை வைத்து கோயில்கள், அணைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்போதும் இப்படி கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டிய குற்றவாளிகளை ஏன் இப்படி ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?...அவர்கள் தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழவே முடியாது. ஆயுளுக்கும் இப்படி பொதுப்பணியில் இருந்தே காலம் கழிக்கவேண்டும் என்று ஒரு நிலை இருந்தால் தொடர்ச்சியாக குற்றம் செய்ய ரவுடிகளுக்கு மனம் வருமா? சிறையில் முதல்வகுப்பு,....................ர் வகுப்பு என்று இருப்பதையே நீக்க வேண்டும்.
காலத்தை இழந்தால் கூட நாம் பெற வேண்டிய எதோ ஒன்று தள்ளிப்போகும். ஆனால் உயிரை எடுத்துவிட்டால் பிறகு எந்த சூழ்நிலையிலும் அதற்கு மாற்று என்பது கிடையவே கிடையாது.

இது என்னுடைய கருத்து.இதில் உடன்பாடு இல்லாதவர்கள் என்னைத் திட்டாமல் அவர்களின் கருத்தை அவரவர் வலைப்பூவில் பதிவாக வெளியிடக்கோருகிறேன்.

6 கருத்துகள்:

  1. தோட்டாவை- நான் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. உங்கள் பதிவை பார்க்கும் போது பார்த்து இருக்கலாமே என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. குற்றவாளிககளால் நீங்க்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் உங்களின் பார்வை வேறாக இருக்கும்.தூர இருந்து பார்ப்தால் இப்ப்டி நினைக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  3. என்கவுண்டர் லிஸ்ட் ஆட்களை வைத்து, வேலை வாங்குறது கஷ்டம்னு நினைச்சி தோட்டாவுக்கு வேலை வச்சுட்டாங்க.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் குறிப்பிட்ட அந்த குறும்படத்தை, இன்று 11 மணிக்கு மறுஒளிபரப்பில் கண்டிப்பாக பார்க்கிறேன். நீங்கள் பார்த்ததோடல்லாமல், அதை பிறர் பார்க்கும்படி சிபாரிசு செய்தமைக்கும், மறுஒளிபரப்பு தகவல் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி..!

    இது போன்ற குறும்படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும், அதை எடுத்த இயக்குனர்கள் வெற்றி பெற வேண்டும்.

    -
    DREAMER

    பதிலளிநீக்கு
  5. நன்றி சரவணன் உங்கள் இமெயில் சரியான நேரத்தில் கிடைத்தது. அந்த குறும்படத்தை 10.30 ஒளிபரப்பில் பார்த்தேன். நன்றாக இருந்தது. அந்த குறும்படத்தைப் பற்றி இயக்குனர் திரு.வசந்த் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இருந்தாலும், படம் நீங்கள் குறிப்பிட்டதுபோல் நல்லதொரு கருத்துடனும் இருந்தது. சிறப்பான குறும்பட பரிந்துரை உங்கள் மூலம் கிடைத்தது.

    நன்றி!

    -
    DREAMER

    பதிலளிநீக்கு