Search This Blog

புதன், 3 பிப்ரவரி, 2010

எதிர்பார்த்ததும் அதிர்ச்சியும் - வடிவேலு - வைஷ்ணவி - எஸ்தர்

நான் பாக்குறதுக்குதான் காமெடியனா இருப்பேன்.ஆனா உள்ளுக்குள்ள டெரர் அப்படின்னு வடிவேலு ஒரு படத்தில் பேசிய வசனம் இப்போது சிங்கமுத்துவின் செயலில் வெளிப்பட்டு வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரைப் பற்றிய உண்மை வெளிவரவேண்டும் என்றால் அவரைப்பற்றி நன்கு தெரிந்த நபருக்கு போதை ஏற வேண்டும் அல்லது இருவருக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்படவேண்டும். வடிவேலு - சிங்கமுத்து விவகாரத்தில் இரண்டாவது விஷயம் நிகழ்ந்திருக்கிறது.

இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது அவரவர் மனசாட்சிக்குதான் தெரியும்.அதனால் இப்போது நான் பேசப்போவது இந்த செய்தியில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளைப்பற்றிதான்.

சாப்பாட்டைத் தவிர வேறு எதையுமே நாம் போதும் என்று சொல்வதே இல்லை.மற்ற துறைகளைக் காட்டிலும் சினிமாத்துறையில் புகழேணியில் ஏறத் தொடங்கிவிட்டால் கன்னாபின்னாவென்று பணம் கொட்டத்தொடங்கிவிடும்.

ஒரு சாதாரண வியாபாரி புதிய வண்டி வாங்கினாலே அவரிடம் பணியாற்றுபவர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் தீப்பிடிக்கத்தொடங்கிவிடும். மற்றவர்களின் விவகாரமே இப்படி என்றால்,மீடியாவின் ஒட்டுமொத்த கவனமும் இருக்கும் நடிகர்கள் நிலையைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்.

துரதிர்ஷ்ட வசமாக அவர்களுக்கு முதலீடு பற்றியோ பணத்தைப்பாதுகாப்பது பற்றியோ முழு அளவு விபரம் தெரிந்திருப்பது இல்லை.அதற்கு நேரமும் இருப்பது இல்லை.இதனால் பிறரை நம்பவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

இன்றைய சூழலில் அடுத்தவர் உதவி இல்லாமல் எதையும் செய்ய முடியாது.அதே சமயம் கண்மூடித்தனமாக நம்புவது வேறு. பிறரின் உதவியை அல்லது சேவையைப் பெற்றுக்கொள்வது என்பது வேறு. இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொண்டால் ஏமாந்து நிற்கவேண்டிய சூழ்நிலை அவ்வளவு எளிதில் வராது.

வகுப்பறையில் ஆசிரியை இருக்கும்போது ஐந்து வயது குழந்தைகள் அமைதியாக இருந்தாலும் அவர் எதற்காவது வெளியில் சென்றால் சந்தைக்கடை இரைச்சலின் நிலமைக்கு வகுப்பறையைக் கொண்டுவந்துவிடுவார்கள். கண்காணிப்பு இல்லாத எந்த விஷயமும் உருப்படியாக நடந்தேறாது என்ற உண்மையைப்புரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணம் போதாதா.

கண்காணிப்பு என்பது ஒரு விஷயத்தைக் கட்டுப்படுத்துவதாக இல்லாமல் நமக்குத் தேவையானதைக் கேட்டுப்பெறும் வகையில் இருக்கவேண்டும்.நம் கார் டிரைவரிடம் இப்படி ஸ்டியரிங்கை திருப்பு, இந்த அளவுக்கு ஆக்சிலேட்டரை அழுத்து என்று அபத்தமாக சொல்வதாக இல்லாமல் நான் இங்கே போக வேண்டும் என்ற விஷயத்தை மட்டும் தெளிவாக கேட்பதாக இருக்கவேண்டும்.

வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு ஓட்டுநர் சவுகர்யத்துக்கு விட்டுவிட்டு அவர் திருச்சிக்கு பக்கத்தில் ஒரு புளிய மரத்தில் மோதி நிறுத்தியபிறகு "அய்யய்யோ...நான் சென்னையில இருந்து பெங்களூரு போக சொன்னேன். இவன் திருச்சிக்குப்போய் காரை மோதிட்டான்." என்று புலம்புவதில் புண்ணியம் இல்லை.

நண்பர்களுக்கு சுற்றுலா, சினிமா என்று ஆயிரக்கணக்கில் செலவழிக்கும்போது அதெல்லாம் செலவழிப்பவர்களுக்கே ஒரு பொருட்டாக தெரியாது. ஆனால் எதாவது ஒரு சமயத்தில் பத்துரூபாய் என்ற அளவில் பிரச்சனையாகி நிற்கும்போதுதான் சின்ன வயதில் பத்து பைசா மிட்டாய் வாங்கி சட்டையில் வைத்துக் கடித்து பாதி கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வந்துதொலைக்கும்.

சிங்கமுத்து அவர் மகனை வைத்து மாமதுரை என்ற படம் எடுத்தபோதே, இப்படி எதாவது குற்றச்சாட்டு கிளம்பும் என்று நான் எதிர்பார்த்ததுதான்.

சினிமாக்காரர்களுக்கு அவர்கள் ஒரு காலத்தில் பட்ட கஷ்டத்துக்கு, புகழ் பெற்றுவிட்டால் பல நூறுமடங்கு வருமானம் வருவதால் இப்படி அவ்வப்போது ஒரு சிலர் ஏமாறுவதாக சொல்கிறார்கள்.

சில தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நண்பர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு பல வியாதிகளை சுமந்து சம்பாதிக்கும் பணத்தை சில தீய வழிகளில் மகிழ்ச்சி என்ற பெயரில் செலவழிக்கிறார்கள். அவர்கள் தங்கள் துறையிலேயே நல்ல வழிகளில் திட்டமிட்டு செலவழித்து தானும் சுற்றி உள்ளவர்களும் நன்றாக இருக்கிறார்கள். அவர்களை முன்னுதாரணமாகக்கொள்ளலாமே.

******

தொழில் பிரச்சனையில் ஆந்திராவின் தொழிலதிபர் ஒருவரின் மகளைக் கடத்திக் கொன்று பாய்லரில் போட்டு எரித்துவிட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது.இந்த அதிர்ச்சியில் அந்த கோடீஸ்வர தந்தை மாரடைப்பால் மரணம் என்ற செய்தி என் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு வேறுவிதமானது.

சாராய வியாபாரியான அவர் இந்த அளவு மகள் மீது பாசம் வைத்திருப்பதை ஒருபக்கம் பெருமையாகவும் மறுபக்கம் வெறுப்பாகவும் நான் உணர்கிறேன்.
நம் நாட்டில் இன்னும் எத்தனையோ குடும்பங்கள் குடியால் சீரழிந்து நிற்கின்றன.இப்படி சம்பாதித்தவர் தன் குடும்பத்தினரை நான் பாராட்டி சீராட்டி வசதி வாய்ப்போடு வளர்ப்பது போல் மற்றவர்களும் வளர்க்கவேண்டாமா என்று சிந்தித்திருக்கலாமே என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை மறுக்கமுடியவில்லை.

(நான் குறிப்பிடுவது, வருமானத்தை குடித்தே அழித்து குடும்பத்தை பசியால் வாடவிட்டிருப்பவர்களைத்தான்.)

அரசியல்வாதிகளில் ஒப்பந்தங்களைப்பெறுவது, மற்றும் இதுபோன்ற தொழில் போட்டிகள்தான் உயிருக்கே உலைவைக்கும் அளவுக்கு மோசமான பகையை வளர்க்கின்றன என்பது என் கருத்து.பிற தொழில்களில் போட்டிகள் இருந்தாலும் கொலைசெய்யும் அளவுக்குப்போவது மிகவும் அரிதாகத்தான் நடக்கிறது.

******

திருச்சியில் தறிகெட்டு ஓடிய மணல் லாரியின் சக்கரம் எஸ்தர் என்ற பொறியியல் கல்லூரி மாணவி மீதே ஏறி நின்ற ஒளிப்படத்தைப் பார்த்து பல நிமிடங்கள் எனக்கு படபடப்பு குறையவே இல்லை. நம் மோட்டார் வாகன சட்டத்தில் காயமடைந்தால் அவரது மருத்துவசெலவுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் உயிரிழந்துவிட்டால் ஓரிரு ஆயிரங்கள் அபராதம் செலுத்தினால் போதும் என்ற வகையில் விதிமுறை இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த அபத்தமான நடைமுறை கண்டிப்பாக மாற்றப்படவேண்டும்.

மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் இருபத்தைந்து முதல் முப்பது கி.மீ வேகம் மட்டுமே என்பது ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு கோரமான விபத்துகள் நாள்தோறும் அரங்கேறாது.

காயமடைந்தால் செலுத்துவதைவிட உயிரிழப்பு என்றால் பலமடங்கு அதிகமான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.மேலும் இது போன்ற குற்றவாளிகளுக்கு தனி சிறை ஏற்படுத்தப்பட்டு அவர்களை தொழிலாளர்களாகப் பயன்படுத்தி நஷ்டஈடு வசூலாகும் வரை வெளியில் விடவே கூடாது என்பது போன்று கடுமையான விதிமுறை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள் குறையும்.

ஏனெனில் விபத்துக்கு எண்பது சதவீதம் ஓட்டுநரின் தவறே காரணமாகிறது.

******
படங்களைப் பெரியதாகப் பார்க்க படத்தின் மீதே க்ளிக் செய்யவும்.

4 கருத்துகள்:

  1. நண்பர்களுக்கு சுற்றுலா, சினிமா என்று ஆயிரக்கணக்கில் செலவழிக்கும்போது அதெல்லாம் செலவழிப்பவர்களுக்கே ஒரு பொருட்டாக தெரியாது. ஆனால் எதாவது ஒரு சமயத்தில் பத்துரூபாய் என்ற அளவில் பிரச்சனையாகி நிற்கும்போதுதான் சின்ன வயதில் பத்து பைசா மிட்டாய் வாங்கி சட்டையில் வைத்துக் கடித்து பாதி கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வந்துதொலைக்கும்.

    .........உண்மை. அதுதான் மனித இயல்போ? மற்ற news விஷயங்கள், மனதை நெருடச் செய்தன. இதுவும் மனித இயல்போ?

    பதிலளிநீக்கு
  2. //கண்காணிப்பு என்பது ஒரு விஷயத்தைக் கட்டுப்படுத்துவதாக இல்லாமல் நமக்குத் தேவையானதைக் கேட்டுப்பெறும் வகையில் இருக்கவேண்டும்//

    சரியா சொன்னீங்கப்பு!

    அந்த வேகம் மேட்டர் கொஞ்சம் நடைமுறைக்கு ஒவ்வாத செயல்.... வெளியூருக்கு செல்லும் போது, பேருந்து ஓட்டுன‌ர் மெதுவாக ஒட்டினால், உள்ளே இருந்து கொண்டு "என்ன‌ய்யா வ‌ண்டி ஒட்டுறான் இவ‌ன்?" என்று கூவுகிறோம்... அவ‌ரை வேக‌ம் போக‌ சொல்லி வ‌ற்புருத்துகிறோம்.

    த‌னியார் பேருந்துக‌ள் இன்று கொடி க‌ட்டி ப‌ற‌க்க வேகமும் ஒரு கார‌ண‌ம்.

    பதிலளிநீக்கு
  3. வடிவேலுவின் நிலை கிணற்றை காணோம் அப்புடிங்கற மாதிரி ஆயிருச்சி.

    //மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் இருபத்தைந்து முதல் முப்பது கி.மீ வேகம் மட்டுமே என்பது ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு கோரமான விபத்துகள் நாள்தோறும் அரங்கேறாது.//

    உண்மை..அதான் கசக்கிறது போலும்

    பதிலளிநீக்கு
  4. ஓட்டுனர்கள் குறித்தும் தண்டனைகள் குறித்தும் நீங்கள் சொல்வது கொஞ்சம் அதிகப் படியான தண்டனையாக இருக்கும். மக்கள் நிறைந்த பகுதிகளில் பேருந்துகள் செல்கிற போது அவர் என்ன பாடு பட வேண்டியிருக்கிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். பாதசாரிகள் இசகு பிசகாக குறுக்கே ஓடுவது, பிளாட்பாரம் மேல் நடக்காமல் சாலையில் நடப்பது நடக்கும் போது மொபைல் பேசியபடி நடப்பது என்று ஏகப்பட்ட சோதனைகளைத் தருகிறார்கள். நானே பல சந்தர்ப்பங்களில் மொபைலில் பேசும் பெண்களின் கவனத்தைத் திருப்ப நீண்ட ஹாரன்கள் அடித்து என் பாட்டரியை டிரைன் செய்திருக்கிறேன்.

    அது சரி, திருவாரூரா?

    நான் நாகப்பட்டினம்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு