வியாழன், 11 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 4

"என்னடா...எதோ ஆப்பு அது இதுன்னு சொன்ன?"என்று சுந்தர்ராஜன் கேட்கவும்,
"இல்லப்பா...அந்த வீட்டுல யாரோ தெரிஞ்சவங்க இருக்காங்களோன்னு யோசிச்சேன்." என்று வெற்றி கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

"அந்த வீட்டுல இருக்குறது மூணும் பொண்ணு.சின்ன பொண்ணு ஸ்கூல்லதான் படிக்குது.ரெண்டாவது பொண்ணு காலேஜீல படிக்கிறாளாம். அவ உனக்கு சினேகமா?...எவ்வளவு நாளா இதெல்லாம்."

"அய்யோ...அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா...அந்த பொண்ணு படிக்கிறதே என் கிளாஸ்லதான்.அதனால தெரியும்.வேற ஒண்ணும் இல்லப்பா.""இந்த முகரைக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்.நீ ஓட்டு கேட்கப்போறேன்னு ஊர் பூராவும் சுத்தும் போதே நினைச்சேன்.இந்த மாதிரி எல்லா பொண்ணுங்களோட முகவரியைத் தெரிஞ்சுக்கதான் அலைஞ்சுருக்க.அங்க வந்து எதாவது ஏடாகூடமா பேசுன, தொலைச்சுடுவேன்.நீ கல்லூரியில என்ன வில்லங்கம் பண்றன்னு இனி நானும் தெரிஞ்சுக்கலாம்.ஒழுங்கா நேரத்தோட வீடு வந்து சேர்."என்ற சுந்தர்ராஜன் வீட்டுக்குள் சென்று விட்டார்.

"சொந்தமாகப்போறோமேன்னு நம்பி ஒரு வார்த்தை கூடுதலா பேசினேன்.அப்பாகிட்ட அது உல்டாவாயிடுச்சே.சந்தியா இனி எனக்கு தொடர்ந்து வேட்டு வெப்பாளே.இது என்னடா வெற்றி புது சோதனை."என்று மீண்டும் புலம்பிய வெற்றி, கல்லூரிக்குச் சென்றான்.

வகுப்புக்குள் சென்று,"டேய்...மாப்ள...கூடிய சீக்கிரம் என்னைய அத்தான் அப்படின்னு ஒரு பொண்ணு கூப்பிடப்போகுதுடா..."என்று பன்னீர்செல்வத்திடம் சொன்னான்.

உடனே மற்ற மாணவர்களும் சூழ்ந்து கொண்டார்கள்.மாணவிகளுக்கும் ஆச்சர்யம். ஆனால் சந்தியாவின் முகம் மட்டும் இறுக்கமாகவே இருந்தது.

"யார்றா அது...போட்டோ வெச்சிருக்கியா?"என்று ஆளாளுக்கு வெற்றியை கேள்வி கேட்டு சுற்றி வந்தார்கள்.

"இன்னைக்கு சாயந்திரம்தான் தெரியும். நாளைக்கு சொல்றேன். ஆனா ஒரு க்ளூ தர்றேன். அந்த பொண்ணு நம்ம வகுப்புலதான் இருக்கா."என்று சொன்னதும் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகள் சிலரிடமிருந்தும் 'ஓ'என்ற சத்தம்.

"பார்த்து...நம்ம சோப்பு புரொபசர் தூக்கத்துல இருந்து எழுந்து வந்துடப்போறாரு..."என்று வெற்றி சொன்னதும் வகுப்பறை மீண்டும் அதிர்ந்தது.

"ஆஹா...இந்த கொரங்கோட குடும்பம்தான் இன்னைக்கு சாயந்திரம் வரப்போகுதா...இரு உன்னைய கவனிச்சுக்குறேன்."என்று மனதுக்குள்ளேயே சந்தியா சொல்லிக்கொண்டாள்.

******
உள்ளூராக இருந்ததால் டாடா சுமோவில் பெரியவர்களும் சில பெண்களும் ஏறிக்கொள்ள மற்ற முக்கிய உறவினர்கள் தங்களின் டூவீலரிலேயே ஐயனார் கோவில் தெருவில் இருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றார்கள்.

"போட்டோவுலயே எங்களுக்கு புடிச்சுப்போச்சு.ஜாதகமும் பிரமாதமா பொருந்திருக்கு.பையனும் பொண்ணும் நேர்ல பார்த்து புடிச்சிருக்குன்னு சொல்லிட்டா மத்த விஷயங்களைப்பேசிடலாம்னுதான் இப்ப வந்துருக்கோம். உள்ளூரா இருக்குறதால எங்களோட நெருங்கிய உறவினர்கள் எல்லாம் அடிக்கடி வந்து பொண்ணைப் பார்க்கணும்னு உங்களுக்கு தொந்தரவு கொடுத்தா அது கொஞ்சம் சிரமம் பாருங்க.அதனாலதான் இப்பவே எல்லாரையும் அழைச்சுட்டு வந்துட்டேன்."சுந்தர்ராஜன்தான் முதலில் பேசினார்.

"இதுல சிரமப்படுறதுக்கு என்னங்க இருக்கு.நீங்க இத்தனை பேர் வருவோம்னு சொல்லிட்டுதானே வந்துருக்கீங்க.இந்த செயலே உங்க உயர்ந்த குணத்தை சொல்லிடுச்சு."என்று பெண்ணின் தந்தை ராமலிங்கம் லேசாக குழைந்தார்.

'அப்பாவைக் கவுத்துட்டார்.மேட்டர் ஓவர்.'என்று வெற்றி வழக்கம்போல் முணுமுணுத்தான்.

"தம்பி என்னவோ சொல்றாரே..."என்று ராமலிங்கம் சுந்தர்ராஜனிடம் கேட்டார்.

"இவன் என் சின்னப்பையன்.காலேஜீல படிக்கிறான்னு ஜாதகத்துல குறிச்சிருந்தோமே. அந்த ஆர்வக்கோளாறுதான் இது. ஆனா என் பெரிய பையன் ரொம்ப அமைதி.பேங்க்ல வேலைக்குப் போறதோட சரி. அனாவசியமா எங்கயும் அலைய மாட்டான்."என்று பெருமிதமாக சுந்தர்ராஜன் தன் மூத்த மகன் அன்புச்செல்வனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

'ஆஹா...ஒத்தப்படையா இருக்கணும்னு ஒரு எண்ணிக்கைக்காகதான் நம்மளைக் கூட்டிட்டு வந்தாருன்னு நினைச்சா அண்ணனை விலைபேச என்னைய வில்லனாக்கிடுவாரு போலிருக்கே.இப்படி நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைச்சா நாளைக்கு எனக்கு பொண்ணு கிடைக்குறதுல பிரச்சனையாயிடுமே...டேய் வெற்றி...இதுவரை எவ்வளவோ அவமானப்பட்டுருக்க...இதையும் கொஞ்சம் தாங்கிக்க.உன் அண்ணன் நல்லவனா இருந்தாலும் உன் தயவாலதான் இப்ப அவனுக்கு பொண்ணு கிடைக்கப்போகுது.'என்று வெற்றி மீண்டும் தனக்குள்ளேயே பேசிக்கொண்டான்.

"அன்னைக்கு மாணவர் தலைவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்டுவந்தப்ப அரசியல்வாதிகளே தோத்துப்போற மாதிரி பேசுன தம்பி, இப்ப வாயையே திறந்து பேச மாட்டெங்குறாரு...அப்பாவுக்கு அவ்வளவு பயமா?"என்று ராமலிங்கம் சிரித்தார்.

"இவனா...எனக்கு பயப்புடுறவனா...இப்படி எல்லாம் காமெடி பண்ணாதீங்க சார்.இவனைப்பத்திப் பேசி நேரத்தை வீணடிக்க வேணாம்.பொண்ணை வரசொல்லுங்க. ஆவுற விஷயத்தைப் பத்தி பேசுவோம்."என்று சுந்தர்ராஜன் சொல்லவும் காபி டம்ளர்கள் வைத்த டிரேயை காயத்ரி எடுத்து வந்தாள்.அவள் உடன் துணைக்கு ஒரு வயதான பெண்.

'அடச்சே...கூட வர்ற பிகர் தேறுமான்னு பார்த்தா உஷாராயிட்டாங்களே.அது சரி...இவங்க சொந்தக்கார பொண்ணு எதையாவது எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க நினைச்சாலும் அப்பாதான் விடமாட்டாரே. நமக்கு நாமே உதவி...பேசாம யாரையாவது லவ் பண்ணிடவேண்டியதுதான்.'என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தபோது காயத்ரி இவன் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

"டேய்...என்னடா யோசனை.எவ்வளவு நேரம் காத்துகிட்டு நிப்பாங்க...சீக்கிரம் எடுத்துக்கடா..."என்று சுந்தர்ராஜன் அதட்டினார்.
"அண்ணி...எனக்கு வேண்டாம்."என்று வெற்றி சொன்னதும் காயத்ரி முகத்தில் வெட்கத்துடன் ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.

கூடியிருந்த பலரும் வாய்விட்டு சிரித்துவிட, அன்புச்செல்வன், காயத்ரியின் அம்மா உள்ளிட்ட சிலரின் முகத்தில் புன்னகை அளவோடு வெளிப்பட்டது.

"ஏண்டா...வெற்றி...நீ இந்தப்பொண்ணுதான் அண்ணின்னு முடிவே பண்ணிட்ட மாதிரி பேசுற?...அப்புறம் பெரியவங்க நாங்க எல்லாம் எதுக்குடா...?"

"இந்த மாதிரி டயலாக் பேசுறதுக்குதான்.

மாமா...அண்ணன் விட்ட ஜொள்ளுல முக்கா டம்ளர் காபி முழு டம்ளர் ஆயிடுச்சு. அப்பா இப்பவே மருமகளுக்கு ஆதரவா என்னைய திட்ட ஆரம்பிச்சுட்டாரு.இனிமே நான் எதாவது சொன்னா எடுபடுமா என்ன.அதான் நான் முடிவே பண்ணிட்டேன்."என்று வெற்றி மிக சாதாரணமாக பேசினான்.

"அதுக்கு ஏண்டா காபியை வேணாம்னு சொல்றே...மரியாதை தெரியாதா உனக்கு."என்று சுந்தர்ராஜன் சீறினார்.

"அப்பா...நம்ம வீட்டு வென்னீரைக்
குடிக்கிறதுல இருந்து எப்படா தப்பிக்கிறதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.அதனாலதான் இந்த திடீர் முடிவு.

அண்ணி எடுத்துட்டு வந்துருக்குற காபியோட ருசியை அதோட வாசனையே சொல்லுது. எல்லா நாளும் அண்ணியே காபி போட்டு தர முடியுமா...அடிக்கடி அம்மாவோட காபியையும் குடிக்கவேண்டியதா இருக்கும். இதெல்லாம் தேவையா. புது வருஷத்தன்னைக்கு தீர்மானம் எடுக்குறதெல்லாம் சும்மா.இப்படி தடாலடியா முடிவெடுத்தாதான் அது உறுதியா இருக்கும்.

நடிகர் சிவகுமார் பல வருஷங்களா டீ,காபியையே தொடுறது இல்லையாம்.இதுவும் அவரோட இளமைக்கு ஒரு காரணம். அதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க அண்ணி. வெறும் தண்ணி கொடுத்தாலும் ஓ.கே...அது இல்லன்னாலும் பூரி, பொங்கல் அப்படின்னு எதாவது செஞ்சு வெச்சிருந்தாலும் கொடுங்க...நான் வேணான்னு சொல்லமாட்டேன்."என்று சொல்லவும் அந்த இடமே கலகலப்பானது.

"அன்பு...நீ பேசாததுக்கும் உன் தம்பி சேர்த்து பேசுறாண்டா..."என்ற அந்தப் பெரியவர் திரும்பி சுந்தர்ராஜனிடம்,"மச்சான்...உன் நிலமை பரிதாபம்தான்.இவனை எப்படி வெச்சு இத்தனை வருஷமா மேய்ச்சீங்க...."என்றார்.

"தாத்தா உங்களை பாட்டி வெச்சு சமாளிச்சதைக்காட்டிலுமா நான் படுத்துறேன்."என்று வெற்றி அவரை வார்விடவும், இதற்கும் மற்றவர்கள் சிரித்தார்கள்.

"மாமா...இவன் கிட்ட பேச்சுக்கொடுக்காதீங்க...எது சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுவான்.பொண்ணும் பையனும் தனியா பேசிக்கட்டும்.அவங்களுக்கு சம்மதம்னா நாம மற்ற ஏற்பாடுகளை செய்யலாம்."என்று வந்த விஷயத்தில் சுந்தர்ராஜன் தீவிரமானார்.
******
அடுத்த நாள், தன் தோழியின் வீட்டுக்கு சந்தியா சென்றுகொண்டிருந்தாள்.அங்கிருந்துதான் இருவரும் கல்லூரிக்குச் செல்வது வழக்கம்.
கடைத்தெரு சென்றுவிட்டுத் திரும்பிய வெற்றி, சந்தியாவை ஓவர்டேக் செய்யும்போது,"மிஸ் சந்தியா...இனி நீங்க என்னைய எப்படி கூப்பிடுவீங்க?"என்றான்.

"அட லூசு..."என்று ஆரம்பித்து அவள் பேசியதைக் கேட்ட வெற்றியின் முகத்தில்...

4 - தொடரும்.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
******
நான்காம் அத்தியாயத்திற்கான விளம்பரத்தில் விஜய் - அசின் ஆகியோருக்கு பின்னணியாக நான் வைத்திருக்கும் இடம் திருவாரூர் - குளுந்தான்குளம்தான்.முதல் அத்தியாய விளம்பரத்தில் வைகறைப்பொழுதில் இருந்த இந்த இடம்தான் மதிய நேர வெளிச்சத்தில் கொரியா மொபைல் போன் கேமராவின் உதவியுடன் உங்களுக்கு காட்சியளிக்கிறது.
இந்த பகுதிக்கு மற்றொரு சிறப்பு உண்டு.
நம் தமிழக முதல்வர் கலைஞரின் சிறுவயது தோழர்தான் இப்போது திருவாரூர் நகர்மன்றத் தலைவர். அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் நகராட்சியின் பதினைந்தாவது வார்டுதான் இது.
இப்படி சாக்கடை வழிந்தோடும் வீதியும் இந்த இடம்தான்.
இதைத்தான் சிறப்புன்னு சொல்றியான்னு நீங்க காதைத் திருகாதீங்க.அதிகாரத்துல இருக்குறவங்களை நான் என்ன சொல்றது?
******
படங்களைப் பெரியதாக்கிப் பார்க்க படத்தின் மீதே க்ளிக் செய்யவும்.

4 கருத்துகள்:

 1. டயர் படம் - கலக்கல் காமெடி. உங்க கதையில், திருவிழா குதூகலம் இருக்கு.

  பதிலளிநீக்கு
 2. பாத்து சூதனமா இருந்தக்கப்பு,, ஆட்டோ வர போவுது

  பதிலளிநீக்கு
 3. @ Chitra

  // டயர் படம் - கலக்கல் காமெடி. உங்க கதையில், திருவிழா குதூகலம் இருக்கு.//

  எல்லா குடும்பத்துலயும் இப்படி குதூகலம் இருக்கணும்னு ஒரு ஆசையில்தான் கதை எழுதுறேன். தங்கள் பாராட்டுக்கு நன்றி.
  ******

  @அண்ணாமலையான்

  //பாத்து சூதனமா இருந்தக்கப்பு,, ஆட்டோ வர போவுது//

  நீங்க சொல்றது சரிதான் தலைவா. ஆனா நம்ம பிளாக் மாதிரி ரொம்ப நல்ல விஷயங்கள் இருக்குற இடத்துக்கு எல்லாம் ஆட்டோ பார்ட்டிங்க வரமாட்டாங்க. அந்ததைரியம்தான்.

  பதிலளிநீக்கு
 4. unga thodrala Kadhai eruko ellioyo..

  annal nala karuthukgala Maraimugama...

  alaga choli erukenga...

  Good...

  pala Thirupathudan...
  Alagai poikondu erukirathu...
  Valthkkal..

  Summa Paypadama
  Mansila Ulatha Cholunga..
  eppdi yarvathu oruthar erukengaley ninikukmpothu manam Valthukirathu...

  Valga Valamudan.
  V.V.S.Groups.

  பதிலளிநீக்கு