Search This Blog

சனி, 6 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - காதலர்தின ஸ்பெஷல் தொடர்கதைக்கு முன்னுரை-2

அறுபது வயதில் இரண்டாவது முறை திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் மக்கள், இந்த சடங்குகளை செய்து வைக்கும் குருக்களுடன் சேர்ந்து தாய் தந்தையருக்கே இப்படி செய்யுங்க அப்படி பண்ணுங்க என்று செல்லமாக அதட்டி வேலைவாங்கிக்கொண்டிருந்தார்கள்.

இன்னொரு புறம் பத்து வயது கூட நிரம்பாத வாண்டுகள் செல்போன் கேமராவை வைத்துக்கொண்டு தாத்தா பாட்டியை படம்பிடிப்பதற்காக அவர்களை இயக்கிக்கொண்டிருந்தனர். கோயில் பிரகாரத்தினுள் எந்தப் பக்கம் பார்த்தாலும் பெரும்பாலும் இது மாதிரிக்காட்சிகள்தான்.
சிலர் தன் குடும்பத்தில் உள்ள நபர்களுடன் மட்டும் வந்து சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடையூர் கோயிலில் செய்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுபவர்களும் இந்த கோயிலில் வந்து திருமணம் செய்து கொள்ளும் வகையில் இருப்பது அனைவருக்கும் நம்பிக்கை தரும் விஷயம்.

இதையெல்லாம் பார்க்கும்போது குடும்பத்தைக் குதூகலப்படுத்தும் இது போன்ற ஒரு நிகழ்வு தரும் மகிழ்ச்சியை வற்றிவிடாமல் பாதுகாத்தால் பல குடும்பங்களில் உறவுகள் சிதையாமல் இருக்குமே என்ற ஏக்கம் என் மனதில் ஏற்பட்டது.

அதற்கு காரணம் என்னவென்றால், சஷ்டியப்த பூர்த்தியின்போது குடும்பத்துடன் குதூகலமடைந்தவர்கள் பலர் இருந்தாலும், படிப்பை வெறுக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் மனநிலையுடன் வந்திருந்த ஒரு சில குடும்பங்களையும் பார்த்தேன்.

விட்டுக்கொடுத்து நடந்தால் குடும்பத்திற்குள் பிரச்சனை வராது என்பார்கள். கலவரப்பகுதியில் தடுமாறி கீழே விழுந்தவர் மீது அனைவரும் ஏறி மிதித்து ஓடுவார்கள். ஒருவர் விட்டுக்கொடுத்தால் மற்றவரும் அதுபோல் நடந்து கொள்ள நினைப்பதில்லை.மாறாக அவர் மீது இன்னும் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இந்த அச்சத்தால்தான் இன்றும் பல குடும்பங்களில் மற்றவர்மீது குற்றப்பத்திரிகை வாசித்துக்கொண்டே சந்தோஷங்களை இழந்துவருவதை உணருவதே இல்லை.

வாகனங்களை இயக்கும்போது  நாம் மட்டும் விதிகளைப்பின்பற்றிச் சென்றால் போதாது.எதிரில் வருபவரும் சரியாக வந்தால்தான் நாம் ஒழுங்காக வீடு போய்ச் சேரமுடியும். இல்லை என்றால் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப்பிரிவு, சாதாரண வார்டில் அனுமதி வெளி நோயாளி இல்லையென்றால் வேறு ஒரு இடத்திற்குச் செல்லவோ செய்வோம்.

விட்டுக்கொடுப்பது என்பதும் இப்படித்தான்.பல குடும்பங்களில் யார் விட்டுக்கொடுப்பது என்றுதான் பிரச்சனையே தவிர நான் தான் விட்டுக்கொடுப்பேன் என்று நினைப்பதே கிடையாது.

இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சியின் சந்தோஷமான தருணங்களை அவ்வப்போது நினைத்துப்பார்த்தால் உறவுகளில் விரிசல் மிக மோசமாக விழாது என்பது என் எண்ணம்.

******

திருவாரூரில் திருவிழா தொடர்கதையின் கரு, கற்பனை-உண்மை இது பற்றிய விவரங்கள் நாளை வெளிவரும் அடுத்தபதிவில்.

3 கருத்துகள்:

  1. இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சியின் சந்தோஷமான தருணங்களை அவ்வப்போது நினைத்துப்பார்த்தால் உறவுகளில் விரிசல் மிக மோசமாக விழாது என்பது என் எண்ணம்.

    .................... well-said.

    பதிலளிநீக்கு
  2. //பல குடும்பங்களில் யார் விட்டுக்கொடுப்பது என்றுதான் பிரச்சனையே தவிர நான் தான் விட்டுக்கொடுப்பேன் என்று நினைப்பதே கிடையாது.//

    நச்சுனு சொன்னீங்க..

    பதிலளிநீக்கு