திங்கள், 8 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - அத்தியாயம் 1

"சார்...அங்க என்ன சத்தம்?" இந்தக்குரல் ஒலித்த இடம் கல்லூரி என்பதால் கேட்டது பேராசிரியர் என்று நீங்களாக நினைத்துக்கொள்ளக்கூடாது.

"ஒருமாணவன் வழிதவறி வகுப்புக்குள்ள வந்துட்டான். அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சுகிட்டு இருந்தோம்."என்று மாணவன் வெட்டி (எ) வெற்றிக்கு பதில் சொன்ன சாமிநாதன் வணிகவியல் துறை பேராசிரியர்.
"என்ன கொடுமைசார் இது.வகுப்புக்கு தொடர்ந்து வரலைன்னா அபராதம் கட்டுனாதான் பரிட்சை எழுதலாம்னு சொல்றீங்க.வெளியில நின்னுகிட்டு இருந்தா வெட்டித்தனமா (கதை நாயகன் வெற்றி எப்படி "வெட்டி"யானான்னு சொல்லியாச்சு.) சுத்தாதன்னு திட்டுறீங்க. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் உலகமாச்சே இது." என்று வெற்றி சொன்னதும் வகுப்புக்குள் 'ஓஹோ' என்ற சத்தம் கட்டிடங்களையே அதிரவைத்தது.

"வெட்டி...அவன் கும்பகோணம் கல்லூரி மாணவன். அந்த காலேஜுக்குப் போகாம இங்க வந்து வகுப்புக்குள்ள உட்கார்ந்துருக்கான்.நீ அவனுக்கு சப்போர்ட்டா..."

"சார்...இதுல என்ன தப்பு இருக்கு.கோர்பேங்கிங் சிஸ்டத்தால எந்த வங்கியிலயும் பணம் போட்டு எடுக்கலாம்னு சொல்லிட்டாங்க.நீங்க இன்னும் சேர்ந்த காலேஜுலதான் அந்த படிப்பை படிக்கணும்னு சொல்றீங்க...என்ன பண்றது...எல்லாம் எங்க நேரம்."

"வெட்டி... கூடப்படிக்கிற பசங்க மத்தியில ஹீரோவாகணும்னு நினைச்சு இஷ்டத்துக்குப் பேசாத. நீ மட்டும் என்ன யோக்கியம்..காலேஜுல சேர்றதுக்கு முன்னால போன வருஷமே இங்க வந்து வகுப்புல உட்கார்ந்தவனாச்சே நீ." என்று பேராசிரியர் சொன்னதும் மற்ற மாணவர்கள், மாணவிகள் முகத்தில் திகைப்பு தெரிந்தது.

"காலேஜ் நிர்வாகம் அவ்வளவு பிரமாதம்.இங்க உள்ள தவறை சுட்டிக்காட்டுன என் திறமையை மதிக்காம இப்படி எல்லாம் பேசுறது நல்லா இல்லை சார். ஆனா நான் இதுக்கெல்லாம் அசர மாட்டேன். கல்லூரி மாணவர்களான நாமே சரியா காலேஜுக்கு வர்றது இல்லை.நம்ம வெற்றி..."என்று அவன் பேசி முடிக்கும் முன்பே பேராசிரியர்,"வெட்டி...இந்த வார்த்தையை தயவு பண்ணி நீ சொல்லாத. வெற்றிக்கும் உனக்கும் ரொம்ப தூரம். பலமான அஸ்திவாரம் போட்டுதான் நீ வராண்டா அட்மிஷன்ல சேர்ந்துருக்க.இதையும் ஞாபகம் வெச்சுக்க." என்றார்.

"நீங்க என்னதான் பேசினாலும்...நான் எதுக்கும் கோபப்படமாட்டேன்.தெரியாத விஷயத்தை திரும்பவும் கேட்கலாம் தப்பில்லைன்னு சொல்றீங்க.இதை உண்மைன்னு நம்பி நாங்களும் உங்ககிட்ட எதாவது கேட்டா, அதை சொல்லிக்காட்டியே பொழுதை ஓட்டிடுறீங்க.நாங்க கேட்ட சந்தேகத்துக்கு மட்டும் பதில் கிடைக்க மாட்டெங்குது.

இதனாலதான் பிளஸ்டூ பாடங்களை ஸ்கூல்ல படிச்சது போதாதுன்னு மறுபடி ஒரு வருஷம் வீட்டுல இருந்து தெளிவா படிச்சுட்டு அடுத்து ஒரு வருஷம் காலேஜ் எப்படி இருக்குன்னு நல்லா செக் பண்ணிட்டு சேர்ந்துருக்கேன். இந்த திறமையைப் பாராட்டலைன்னாலும் நக்கலா பேசாதீங்க சார்."

"உனக்கு பிரின்ஸ்பாலும் நம்ம ஹெச் ஓ டியும் ஃபுல் சப்போர்ட் பண்றாங்க.அந்த துணிச்சல்ல இருக்குற உனக்கு எங்களுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்கணும்னு எப்படி தெரியும்?நடத்து ராசா நடத்து." என்று சலிப்புடன் பேராசிரியரிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.

"எல்லாத்துக்கும் சிகப்புதான் சார் காரணம்."

"சரி...போதும் இத்தோட நிறுத்திக்குவோம்."என்று பன்னீர்செல்வம் என்ற மாணவன் சொன்னான்.

"டேய்...சார் இன்னும் பாடத்தையே ஆரம்பிக்கலையே."என்று வெட்டி சொல்லவும் வகுப்பறையில் சிரிப்பொலி.

இவ்வளவு கலகலப்புடன் வகுப்பறை என்றதுமே இது அரசுக்கல்லூரி என்பது உங்களுக்குப்புரிந்திருக்கும்.அங்கே உள்ள நிர்வாக குளறுபடிகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.இப்போதும் சில நிறுவனங்களில் அக்கவுண்டண்ட் தொடர்பான பணிகளுக்கு அரசுக்கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். இதற்குக் காரணம், போதுமான எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லாததால் தானே படித்து எழுத வேண்டிய நிலையில்தான் பெரும்பாலும் அரசுக்கல்லூரி மாணவர்கள் இருப்பார்கள் என்ற உண்மையை அவர்கள் புரிந்திருக்கிறார்கள்.ஆனால் அரசுக்கல்லூரி மாணவர்களுக்கு எப்போதும் எதாவது ஒரு வகையில் சிரமதசைதான் நடைபெற்று வரும்.

கூடலூர் - நாகப்பட்டணத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 67 திருவாரூர் வழியாகத்தான் செல்கிறது. அந்த சாலை ஓரமாக திருவாரூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கிறது இந்த கலைக்கல்லூரி.

கல்லூரி என்றதும் சில தமிழ்ப்படங்களில் வரும் பிரமாண்டமான உருவத்தை எதிர்பார்க்காதீர்கள். கல்லூரி படத்தில் வருவது போன்ற ஒரு சூழ்நிலைதான் நான் சொல்லும் கதையில் வரும் கல்லூரியிலும் இருக்கும்.

கல்லூரியில் மாணவர் தலைவர்,செயலாளர் ஆகியோர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை அறிவித்தார்கள்.

"நான் ரெடி சார்..."என்று வெற்றி குரல் கொடுத்தான்.

"தம்பி...இதுல முதல் வருஷ மாணவர்கள் ஓட்டுப்போடவும் முடியாது. போட்டியிடவும் முடியாது.அதனால கொஞ்சம் அடங்கு."என்று கிருஷ்ணமூர்த்தி புரொபசர் சொன்னார்.

எல்லாருக்குமே வெற்றி மேல் கோபம்தான்.அதனால் அவனை மட்டம் தட்டிப் பேசுகிறார்களா.அல்லது இவனைப்பார்த்து மற்றவர்கள் கெட்டுப்போயிடக்கூடாது என்ற நல்ல எண்ணமா என்பது அவர்களுக்குதான் தெரியும்.

"கலந்துக்கலைன்னா என்ன...சீனியருக்கு ஆதரவா ஓட்டு கேட்கப்போறேன்.ஒண்ணும் பிரச்சனை இல்லை.எதாவது கலாட்டான்னா அவங்களைத்தானே உதைப்பாங்க.நான் உதைக்க வர்றவங்க கால்ல விழுந்தாவது எஸ்கேப் ஆயிடுவேன்."என்று வெற்றி உற்சாகமாக சொன்னான்.

"அதுசரி...போன வருஷம் நீ எக்ஸ்ட்ரா டிக்கட்டா வந்து கிளாஸ்ல உட்கார்ந்ததை நாங்க கண்டு பிடிச்சதும் எங்க கால்ல விழுந்துதானே தப்பிச்ச.அந்த புத்தி அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுப்போயிடுமா?"என்று பேராசிரியர் இவனை வாரிவிட்டதும் மற்றவர்களுடன் சேர்ந்து வெற்றியும் சிரித்தான்.

"ஏண்டா...பொண்ணுங்க எல்லாரும் சிரிக்கிறாங்க.உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா."

"நான் எதுக்கு வெட்கப்படணும்? எனக்கு நெகட்டிவாச்சும் பப்ளிசிட்டி தேடித்தர்றதுக்கு ரொம்ப நன்றி சார். அது சரி...கால்ல விழுறதை அவ்வளவு கேவலமாவா நினைக்குறீங்க...வட இந்தியாவுல ஒரு குறிப்பிட்ட சமூகம் இருக்கு சார். அவங்க சொந்தக்காரங்க, சமூகத்து ஆளுங்க யாரைப்பார்த்தாலும் ஒரு வயசு பெரிய ஆளா இருந்தாலும் சட்டுன்னு கால்ல விழுந்துடுவாங்க. எதிரியா இருந்தாலும் சட்டுன்னு ஒருத்தன் உங்க கால்ல விழுந்தா என்ன சொல்லுவீங்க...நல்லாயிருப்பா...அப்படின்னு உங்களை அறியாம ஒரு வார்த்தை அந்துடும்.அந்த வார்த்தைக்கு சக்தி அதிகம் சார்.

அது மட்டுமில்ல...நான் யார் கால்ல விழுந்து தப்பிச்சேன்...பெற்றோர்களுக்கு அடுத்தபடியா மதிக்கக்கூடிய ஆசிரியர்கள் கால்லதானே..."என்று வெற்றி பேசியபோது அருகில் இருந்த பன்னீர்செல்வம், தன் கையை சொறிந்து கொண்டு,"புல்லரிக்குதுடா..."என்றான்.

"வருஷத்துக்கு ஒரு தடவையாச்சும் குளின்னு சொன்னா கேட்குறீயா?"என்று இன்னொருவன் அவனை வாரி விட, அந்த வகுப்பு தொடர்ந்து கலகலப்பானது.

"எப்படியோ நல்லா இருந்தா சரிதான்."என்று பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பாடத்துக்குள் புகுந்தார்.

வகுப்பு முடிந்ததும் பன்னீர்செல்வம்,"டேய் வெட்டி...எவனோ ஜெயிக்க நாம ஓட்டு கேட்க போகணுமா?"என்றான்.

"அடப்போடா வெண்ணை...கல்லூரி அலுவலகத்துலயே எல்லா பொண்ணுங்களோட முகவரியையும் வாங்கிட்டு அவங்க வீட்டுலயே போய் ஓட்டுக்கேட்கப்போவாங்க. இந்த நல்ல வாய்ப்பை விட்டுட சொல்றியா?"என்று வெற்றி சொன்னதும் வகுப்பில் இருந்த சக மாணவர்களை விட, மாணவிகள்தான் திகைத்துப்போய் "அடப்பாவி" என்றார்கள்.

"அண்ணே...நீ எதுக்கு போன வருஷமே இந்த காலேஜுக்கு வந்து எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டன்னு இப்பதான் புரியுது..."என்று பன்னீர்செல்வம் வெற்றியின் காலைப்பிடிக்கப்போனான்.

"டாய்...தள்ளி நில்லு...காலைப்பிடிக்கிறது என் பழக்கம். ஆனா என் காலைப்பிடிக்க வர்ற மத்தவனை நான் நம்புறதா இல்லை." என்று வெற்றி உஷாரானான்.

பொதுத்தேர்தல்களுக்கு சவால் விடும் வகையில் பிளக்ஸ் போர்டு, தோரணம் என்று அசத்தலோடுதான் தேர்தலை சந்தித்தார்கள்.விளம்பரத்திற்கான நிதியுதவிக்கு திருவாரூரில் இருந்த சில வணிக நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யும் யோசனையை அளித்த வெற்றி சீனியர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டான். அவன் சேர்ந்திருந்த நண்பர்களே தேர்தலிலும் வெற்றி பெற்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன் ஐந்து வேன்களில் மாணவர்கள் வெற்றி ஊர்வலம் செல்லக்கிளம்பினார்கள்.

எதிர்க்கோஷ்டியுடன் மோதல் வந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாவல் வேறு.

வெற்றி பெற்ற மாணவர்கள் வாகன ஊர்வலத்தின் போது திருவாரூரில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க முடிவு செய்தார்கள். காவல்துறையினரும் சம்மதித்தார்கள்.

மாணவர் தலைவரும், செயலாளரும் மாலைகளுடன் வேனைவிட்டுக்கீழே இறகியபோது வெற்றி கோஷம் போட்டான். அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் மட்டுமின்றி எல்லா காவலர்களும் அதிர்ந்தார்கள்.

1-தொடரும்.
******

தனுஷ், நயன்தாரா ஆகியோருடைய ஒளிப்படங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் விளம்பரத்தில் பிண்ணனியாக இருக்கும் இடம் திருவாரூரில் உள்ள குளுந்தான்குளம்தான். பொதுவாகவே இயற்கை என்றால் அழகுதான். அதிலும் அதிகாலை என்றால் கேட்கவே வேண்டாம்.

குப்பைகளின் கூடாரமாகிப்போன இந்த குளத்தினை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு நாள் அதிகாலையில் படம் பிடித்தேன்.அதற்குப் பயன்படுத்திய கேமரா ஒரு சாதாரண டப்பாதான்.பெட்டிக்கடையில் பரிசுச்சீட்டில் விழுந்தால் கொடுப்பதற்காக இருந்த அந்த கேமராவை ஒரு நண்பன் வாங்கி என்ன செய்யுறதுன்னு தெரியலையேன்னு வெச்சிருந்தான்.
பேட்டரி போட வேண்டிய அவசியம் இல்லை.பிளாஷ் கிடையாது ஜூம் பண்ற வசதி இல்லை. இது மாதிரி ஏகப்பட்ட இல்லை என்ற தகுதிகளை உடைய கேமராவில் படம் பிடித்த இந்த இடம் எங்கள் வீட்டு எதிரில் உள்ள குளம்தான். ஆனாலும் என் பார்வையில் அழகாகத் தெரியும் இந்த இடம் இப்படி பதிவானதும் இயற்கைதானோ.

நாளை இரண்டாம் அத்தியாயத்தில் சந்திப்போம்.

(படங்களைப் பெரியதாகப் பார்க்க படத்தின் மீதே க்ளிக் செய்யவும்.) 

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2

9 கருத்துகள்:

 1. குப்பைகளின் கூடாரமாகிப்போன இந்த குளத்தினை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அதிகாலையில் படம் பிடித்தேன்.அதற்குப் பயன்படுத்திய கேமரா ஒரு சாதாரண டப்பாதான்.பெட்டிக்கடையில் பரிசுச்சீட்டில் விழுந்தால் கொடுப்பதற்காக இருந்த அந்த கேமராவை ஒரு நண்பன் வாங்கி என்ன செய்யுறதுன்னு தெரியலையேன்னு வெச்சிருந்தான்.


  .........ஆடத் தெரியாதவன் தான் மேடையை கோணல் என்று சொல்வான். நீங்க, சகலகலா வல்லவராச்சே! அசத்துங்க.

  பதிலளிநீக்கு
 2. திருவாரூர் தில்லானா மோகனாம்பாளை விசாரித்ததாகச் சொல்லவும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 3. @ Chitra

  //.........ஆடத் தெரியாதவன் தான் மேடையை கோணல் என்று சொல்வான். நீங்க, சகலகலா வல்லவராச்சே! அசத்துங்க.//

  இந்த மாதிரி எல்லாம் என்னைய பெரிய ஆளா நினைச்சுடாதீங்க. வேலைக்குப்போற இடத்துல சம்பளத்தையே ஒழுங்கா வாங்க திறமை இல்லாத சாதாரண ஆள்தான் நான்.

  ******
  dondu(#11168674346665545885)

  //திருவாரூர் தில்லானா மோகனாம்பாளை விசாரித்ததாகச் சொல்லவும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்//

  சொல்கிறேன் அய்யா. இளையபாரதத்தில் முதல் முறையாக கமெண்டியதற்கு நன்றி.

  ******

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சரவணன். முதல் பகுதி நல்ல கலகலப்பா இருக்கிறது தொடருங்கள். வாழ்த்துக்கள். நானும் திருவாரூர்தான்.

  பதிலளிநீக்கு
 5. @ கிள்ளிவளவன்

  வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து இளையபாரதத்துக்கு வருகை தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 6. கதை ஒரு அத்தியாயமே இப்படி இருக்கே,,, மொத்த அத்தியாயம எவ்வளவு இருக்கும்???

  பதிலளிநீக்கு
 7. @ angel

  //antha collage peru thiru.vi.ka va?//

  இல்ல. நான் உண்மைச் சம்பவங்களை கட்டுரை, ஆசிரியர் பக்கம் இது மாதிரியான தலைப்புல நேரடியாவே எழுதுவேன். அதனாலதான் திருவாரூர்ல உண்மையா இருக்குற காலேஜுக்கு எதிர்த்திசையில ஆறு கிலோமீட்டர் தூரத்துல இந்த கல்லூரி இருக்குறதா கதையிலகற்பனையா சொல்லி இருக்கேன்.

  பதிலளிநீக்கு
 8. @ நாஞ்சில் பிரதாப்

  //கதை ஒரு அத்தியாயமே இப்படி இருக்கே,,, மொத்த அத்தியாயம எவ்வளவு இருக்கும்???//

  இதெல்லாம் பெரிசுன்னு சொன்னா என்ன பண்றது. மொத்தம் ஏழு அத்தியாயம்தான் தல. காதலர் தினத்து அன்னைக்கு கதை நிறைவடையும்.

  பதிலளிநீக்கு