Search This Blog

வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஒருத்தரும் சிக்கலையே...ஒரு பிரமாண்டமான ஓப்பனிங்...


குசேலன், குருவி, ஆளவந்தான் படங்களோட ஸ்டில்லை வெச்சிருக்கும்போதே நாங்க சுதாரிச்சிருக்கணும். இப்படி வந்து சிக்கிட்டோமேன்னு திட்டாம தொடர்ந்து படிங்க.


நாஞ்சில் சாரைப் பார்த்து நானும் நடிச்ச அனுபவத்தை எழுதப் போறேன்னு சொன்னதும் நிறைய வாசகர்கள் ரொம்பவும் அதிகமாவே ஒரு வரலாறை எதிர்பார்த்திருப்பாங்க. ஆனா ஒரு குறும்படத்துல நான் ஒரே ஒரு காட்சியில கூட்டத்தோட கூட்டமா நின்னு "நகையைக் காணோம்"னு ஹீரோயின் சொன்னதும் முகத்துல அதிர்ச்சியைக் காட்டினதுதான் அந்த வரலாறு.

இதுக்கே உங்களுக்கு கோபம் வருதே...அப்போ முழு நீளப் படத்துக்கெல்லாம் பில்ட்அப் கொடுத்து மிகப்பெரிய மொக்கையாக்குனா படம் எப்படி சூப்பர் ஹிட் ஆகும்?...சூப்பர் பிளாப்தான் ஆகும்.

இளைய பாரதம் 2009ல நான் கொடுத்த விளம்பரத்துல குசேலன், ஆளவந்தான், குருவி படங்களுடைய ஸ்டில்லை ஏன் வெச்சேன்னு இப்ப புரியுதா?

அந்தப் படங்கள் தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளருக்கெல்லாம் லாபம் சம்பாதிச்சு கொடுத்துதா இல்லையான்னுல்லாம் எனக்கு தெரியாதுங்க. ஏன்னா, வெளிப்படையான கணக்கில் வராத பணம் நிறைய புழங்குற தொழில்ல சினிமாவும் ஒண்ணு. மேலே சொன்ன படங்கள் அந்த ஹீரோக்களோட மார்க்கெட் வேல்யூவோட ஒப்பிடும்போது அந்தப் படங்கள் தோல்விதான். அதாவது ஐம்பது மார்க் வாங்கினது எப்பவும் முப்பது எடுக்குற மாணவனைப் பொறுத்தவரை மிகப் பெரிய வெற்றி. தொண்ணூறு எடுக்குறவனுக்கு ஐம்பதுன்னா தோல்வின்னுதான் சொல்லணும்.

ஆனா விதிமுறைப்படி பாஸ் பண்ணிட்டாங்கன்னு சொல்லலாம்.

இந்த ஆராய்ச்சியெல்லாம் போதும். நான்  உதவி இயக்குநரா வேலை செய்து ஒரு காட்சியில முகம் காட்டின படம் போலீஸ் வேலை.

இது குறும்படமா இருந்தாலும் தயாரிப்பு செலவு ஆறு இலக்கத் தொகையைத் தாண்டிடுச்சு.பண்ருட்டி அருகில் ஒரு கிராமத்தில்  நான்கு நாட்கள் படப்பிடிப்பு. கணவன்,மனைவி, ஒரு சிறுவன் - ஆகிய மூன்று பேர்தான் முக்கிய கதாபாத்திரங்கள். கணவன், மனைவி கதாபாத்திரங்களா புதுமுகங்கள்.

சிறுவன் செல்வம் பெரிய திரையில் அறிமுகமானவர். அழகி படத்தில் சிறு வயது கட்டையனாக நடித்த சிறுவன்தான் அவர். சிறு வயது பார்த்திபன் கதாபாத்திரத்தின் கிழிந்த கால்சட்டை இடைவெளியில் தபால் போடப் போவாரே...அவரேதான்.

அவர் பங்கேற்ற மற்றொரு படம், கில்லி.

ஷல்லல்லா... பாடலில்  த்ரிஷா கல்லை விட்டெறிந்து பானையை உடைப்பாரே...அப்போது உடலைக் குறுக்கிக்கொண்டு குனியும் சிறுவன்தான் செல்வம். அவரைப் பற்றிய அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்.

போலீசாக வேண்டும் என்று ஆசிரியரிடம் கூறும் மாணவன், திருடனாகிறான். அதற்கு சமூகம் எப்படி காரணமாகிறது என்பதை விவரிப்பதே இந்தக் குறும்படத்தின் கதை. இந்தப் படங்களை எல்லாம் பெரியதாகப் போட்டு உங்களை சிரமப்படுத்த விருப்பமில்லை. வழக்கம்போல் படத்தின் மீது க்ளிக் செய்து பெரியதாக்கிப் பார்த்துக் கொள்ளவும்.

******



டைட்டில் கார்டு சினிமாஸ்கோப்புல இருக்குதேன்னு பார்க்குறீங்கிளா? படம் 16mm ல எடுத்ததுதான். சும்மா ஒரு எஃபெக்டுக்குதான் படத்தின் டைட்டிலை மட்டும் சினிமாஸ்கோப்புல வெச்சுப் பார்த்தேன்.

******



இதுல சரவணன்னு போட்டிருக்குறது என் பேருதாங்கோ.

******


நம்ம ஹீரோ அம்மாவுக்கு சாப்பாடு ஊட்டுறதைப் பார்த்து ரொம்ப பாசக்கார புள்ளைன்னுதானே நினைக்கிறீங்க. சந்தோஷம்.

ஆனா இந்தக் காட்சியைப் படமாக்குறதுக்குள்ள நாங்க பட்ட பாடு இருக்கே. அதை காமெடியா, சீரியசான்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

பூஜா தன் வீட்டுல இருந்து இட்லி, தோசையை செல்வத்துகிட்ட கொடுப்பாங்க. செல்வம் அம்மாவுக்கு கொடுக்கணும்னு எடுத்துட்டு வந்து நீ சாப்பிடும்மான்னு ஊட்டணும்.இந்த ரெண்டு காட்சியும் தொடர்ச்சியான சீக்வென்ஸ். இதுல முதல் காட்சியை இரண்டாவது நாளே எடுத்துட்டோம். அடுத்த காட்சியை மூணாவது நாள் இரவுதான் எடுத்தோம்.

அப்போ சரியான மழை. மின்சாரமும் இல்லை. கொஞ்சம் முன்னெச்சரிக்கையா ஜெனரேட்டர் ஏற்பாடு பண்ணியிருந்ததால சமாளிக்க முடிஞ்சது. செல்வத்தோட அம்மாவை நாலாவது நாள் படப்பிடிப்புக்கு வரசொல்ல முடியாது. பட்ஜெட் சிக்கல்தான்.

அந்தக் காட்சியை எடுத்து முடிக்கும் நோக்கத்தில் நாங்க வேலை செய்துகிட்டு இருக்கோம். ஆனா செல்வத்துக்கு பசி அதிகமாயிடுச்சு போலிருக்கு. அம்மாவுக்கு ஊட்டாம தானே திங்க ஆரம்பிச்சுட்டான்.

பரவாயில்லை...சாப்பிட்டு முடிக்கட்டும். அப்புறம் எடுத்துக்கலாம்னு கேமராமேன் சொன்னார்.(இவர், முழு நீளப் படம் ஒன்றுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.)

எனக்கு அதிர்ச்சி.ஏன்...அது உன்னோட தோசையா?

இல்லைங்க.அன்னைக்கு யூனிட்டுக்காக வந்திருந்த ராத்திரி டிபன், பூரியும் பொங்கலும்தான். தொடர்ச்சியான காட்சி அமைப்புக்காக தோசை அல்லது இட்லி தேவைன்னு நான் தயாரிப்பு நிர்வாகி கிட்ட சொன்ன மாதிரி ஒரே ஒரு பார்சல்தான் தோசை இருந்துச்சு.

இப்ப செல்வம் இதை தின்னு முடிச்சுட்டா, அப்புறம் தோசை போச்சேன்னு உட்காரவேண்டியதுதான்.

தம்பி...நில்லுப்பா... அப்படின்னு சொல்லிட்டு யூனிட்டுக்கு வந்திருந்த பூரி பார்சலைப் பிரிச்சு சாப்பிட வெச்சிட்டுஅப்புறமா அந்தக் காட்சியை எடுத்தோம்.

******


இயக்குநர், இந்தக் காட்சியில முதல்ல என்னையத்தான் தொழிலதிபரா(?!) நடிக்கச் சொன்னார். நெஞ்சுல இருக்குற முடியைப் பார்த்துட்டு யாராச்சும் கடை முதலாளி ஒரு கரடியான்னு கேட்டுடக் கூடாதேன்னு நான் முன்வாங்கிட்டேன்.(எவ்வளவு நாளைக்குதான் பின் வாங்குறது?)

செல்வம் வெச்சிருக்குற கேன்ல இருக்குறது ஒரிஜினல் மண்ணெண்ணைதான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க. சொட்டு நீலம் கலந்ததுதான் நல்லாவே தெரியுதே. இது தொடர்பான இன்னொரு காட்சி மறு நாள் எடுக்க வேண்டியதாயிடுச்சு. நான் ரொம்ப கவனமா வேலை செய்யுறதா நினைச்சு இந்த கேனை அப்படியே பண்ருட்டியில நாங்க தங்கியிருந்த ஹோட்டல் வரைக்கும் எடுத்துகிட்டு சின்சியர் சின்னச்சாமியான வேடிக்கையும் உண்டு.

******


வரிசையா பாதையை மறைச்சு அடுக்கியிருக்குற மண்பானைகள் இருந்த இடம் ஃஃபீல்டுல இல்லை. நானும் ஆர்ட் அசிஸ்டெண்ட்டும்தான் இப்படி குறுக்க எடுத்து அடுக்கிட்டு, இங்க படப்பிடிப்பு முடிஞ்சதும் திரும்ப ஒரு பானையையும் உடைக்காம எடுத்து வெச்சோம்.(நம்புங்கப்பா)

அந்த அன்னக்கூடையில தண்ணீர் இருந்தாலும் இல்லைன்னாலும் பெரிய பிரச்சனை இல்லைன்னு இயக்குநர், ஒளிப்பதிவாளருக்கு தெரியும். எனக்குதான் எதுவும் தெரியாதே. அன்னக்கூடையில டியூப் கிடக்குதே. அது பாட்டுக்கு எதுவும் பேசாமதாங்க இருந்துச்சு. நான் பக்கத்துல இருக்குற தொட்டியில இருந்து தண்ணீர் வரவைக்கிறேன்னு வாயை வெச்சு உறிஞ்சேன். முதல்ல எதுவும் வரலை.

பலமா மறுபடி இழுத்தேன். உடனே வந்துச்சே.

என்னது?

கொஞ்சம் தண்ணியும், நிறைய கட்டெறும்பும். அடுத்து என்ன?...நீங்க எதிர்பார்த்தமாதிரியேதான். எல்லாம் வாய்க்குள்ள போயிடுச்சு. ரெண்டு நாள் அவஸ்தைதான்.(ச்சே...இப்படித்தானா அசிங்கப்படுறது?)

******


பொதுவா ஹீரோயின்தான் அதிகமா அழற மாதிரி காட்சி இருக்கும். இங்க ஹீரோ அழ வேண்டிய நிலை. அழுகை எப்படி வரும்?...கிளிசரின் உபயம்தான். அதை ஒரு கைக்குட்டையில கொஞ்சமா தெளிச்சு லேசாத்தாங்க துடைச்சு விட்டோம். வருஷம் பூராவும் காவிரியில வெள்ளம் போற மாதிரி இவருக்கு கண்ணீர். (இதுக்குப் பேர்தான் ஓவர் பில்ட்அப்போ)

******


"பணத்தை எங்கிருந்து திருடுன" அப்படின்னு கேட்டு செல்வத்தோட தொடையில பூஜா கிள்ளுற  காட்சி.

இதுவும் சில டேக் போக வேண்டியிருந்துச்சு.

ஏன்னுதானே கேட்டீங்க. கூச்சமா இருக்குன்னு சொல்லி செல்வம் சிரிக்க ஆரம்பிச்சா ரீ டேக் போகாம வேற என்ன பண்றது?

******


நடிப்பு சரியா வரலைன்னு அடிக்கடி ஆளை மாத்துற விஷயங்களை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க.

ஆனா, சிலர் ரொம்ப ஓவராவே நடிப்பாங்க. அவங்களாலயும் சிரமம்தான்.

பத்ரி படத்துல விஜய் ஒரு காட்சியில,"அக்காவுக்கு நூறு ரூபா கொடுத்தா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கிது."ன்னு வசனம் பேசுவாரு. அது உண்மைதாங்க.

மிகப்பெரிய இயக்குநர் ஒருத்தரோட படம், 1995ல ஷூட்டிங் நடந்துகிட்டு இருந்தது. நூறு படங்களுக்கு மேல கதாநாயகனா நடிச்ச ஒருத்தருக்கு குணசித்திர வேடம். அவரும் இப்படித்தான் அதிகமாவே நடிச்சதால, இயக்குநருக்கு திருப்தி இல்லை. அவரு உடனே அந்த நடிகரைக் கூப்பிட்டு," தம்பி...இந்தப்படத்துல உனக்கு ரெண்டு லட்சம்தான் சம்பளம். அப்புறம் எதுக்காக ரெண்டு கோடி ரூபாய்க்கு நடிக்கிற"ன்னு கேட்டாராம்.

இதுலயும் செல்வத்தோட அம்மா கதாபாத்திரம் அதிகமாவே நடிச்சதால ரீடேக் போக வேண்டியதாயிடுச்சு.

******


கதைப் படி இது தங்ககொலுசு. வீட்டுல  வேலை செய்யுறவங்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்க மாட்டாங்க. ஆனா இந்த மாதிரி ஆடம்பரங்களுக்குமட்டும் பெரும்பாலான பெண்களுக்கு ஆசை இருக்கும்.

பொதுவா நடிகைகள் பற்றி பல அபிப்பிராயங்கள் உண்டு.ஆனா தொழில் என்று வந்துவிட்டால் அதுதான் முக்கியம் என்று கருதும் பலர் திரைத்துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.இந்தப் படத்து கேமராமேன், படப்பிடிப்புலயே இந்தக் கதாநாயகிக்கு கொடுத்த மதிப்பைப் பார்த்ததும் எனக்கு வியப்பாவும் இருந்துச்சு. பெருமையாவும் இருந்துச்சு.

படப்பிடிப்பு துவங்கும் நேரம். பூஜை போடுவதற்காக தீபம் ஏற்றுவது யார் என்ற பேச்சு எழுந்தது. கேமராமேன் யோசிக்கவே இல்லை.

ஹீரோயினான பூஜாவைப் பார்த்து, "நீயே வந்து விளக்கு ஏத்தும்மா...பொண்ணுன்னா மஹாலெட்சுமிதான... அப்புறம் என்ன?" என்று சொல்லிவிட்டார்.

கேமராமேன் அந்த நேரத்தில் நடந்து கொண்ட முறை எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்தது.

******



சின்னப் பொண்ணுக்கு காபிதானே கொடுக்குறதா நினைக்குறீங்க...ஓ.கே...அப்படியே இருக்கட்டும். இது காபிதான். ஆனா காபி இல்லை.

******


இதுல இருக்குற ஜூஸ் உண்மைதான்.

******


செல்வம் ரொம்ப அப்பாவியாத்தானே தெரியுறாரு. ஆனா குறும்புக்கார புள்ளைங்க.படப்பிடிப்புல லொக்கேஷன் மாற்றும்போது  திடீர்னு அவரைத் தேடும்படியாயிடும். எங்கயும் காணாம போயிட மாட்டாரு. கிராமத்து பசங்களோட கோலிக்குண்டு விளையாடிகிட்டு இருக்குறவரை பாதி ஆட்டத்துல இருந்து புடிச்சு கொண்டு வருவோம்.

******


காரோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் நல்லாவே தெரியுதா? கடலூர் பகுதியில படப்பிடிப்பு நடந்துதுன்னு புரிஞ்சிருக்குமே.

இவங்க ரெண்டு பேரும் கோயிலுக்கு போயிட்டு திரும்ப வரும்போது கார் நிக்கிற காட்சி முதல்ல சரியா வரலை. அப்புறம் ஒளிப்பதிவு உதவியாளர் ஒருத்தர்தான் காரை ஓட்டுனார். அதுக்கப்புறம்தான் டேக் ஓ.கே ஆனது. (அந்த உதவியாளர், யாரடி நீ மோகினி படத்தில் பணியாற்றியவர்.)

******





மேல இருக்குற மூணு ஸ்டில்லும் என்னுடைய சுயபுராணம்தான். வேற என்ன?... பூஜா, நகையைக் காணோம் என்று குரல் கொடுத்துக் கொண்டு வரும்போது நாங்கள் அதிர்ச்சியுடன் பார்க்கவேண்டும். ஆனா அதிர்ச்சியே வரலியே. (ஓட்டுக்கு பணம் கிடையாதுன்னு சொல்லியிருந்தா அதிர்ச்சி நிறையவே வந்திருக்குமோ?)

******


மாநிலத்துலேயே முதலிடம் பிடிச்சா செலவில்லாம ஐ.பி.எஸ். ஆயிடலாம்னு செல்வம் சொல்லும் காட்சி.

******


ஒழுங்கா சம்பளம் வராம இருந்ததும் நகையைத் திருடி பணமாக்கும் கிளைமாக்ஸ் காட்சி.சின்னப் பையன் இப்படி ஒரு நகையை எடுத்துகிட்டு வந்தா கடை காரங்க சந்தேகப்பட்டு போலீஸ்ல சொல்ல மாட்டாங்களான்னு நீங்க கேட்குறது எல்லாம் சரிதான்.எல்லாரும் அப்படி நேர்மையா இருக்க மாட்டாங்களே?

******

இதுவும் ஒரு சுய விளம்பரம்தான்.

******

படத்தின் இயக்குநர் ரவிமாறன் அழகி, சொல்ல மறந்த கதை உட்பட சில படங்களில் பணியாற்றியவர். பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பாட், குட்டி என்ற குறும்படம் எடுத்த ஜானகி விஸ்வநாதன் ஆகியோரின் படைப்புக்களின் ஆக்கங்களிலும் இவருடைய பங்களிப்பு உண்டு.

******

எனக்கு ரவிமாறனிடம் அறிமுகம் ஏற்பட்டதற்கு காரணம் நாளைய விழுதுகள் சிறுகதை. தமிழ்நாடு குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு 2500 ரூபாய் பெற்றேன். அந்தக் கதையைப் படித்த வடமலை என்பவர்தான் தன் அண்ணன் ரவிமாறனிடம் என்னை அறிமுகம் செய்தார். வடமலை தமிழ் நாடு திரைப்படக் கல்லூரியில் எடிட்டிங் படித்தவர்.

மீடியா தொடர்பான என்னுடைய சிறு அனுபவம் இதுதாங்கோ.

பெரிய திரை அனுபவத்தை நினைச்சு வந்து ஏமாந்திருந்தா இளைய பாரதம் பொறுப்பல்ல. இதுவும் ஒரு விளம்பர உத்திதான். இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாதீங்க.


மக்களோட பார்வைக்கு வந்திருக்குன்னு சொன்னியே...எந்த தியேட்டர்னா கேட்குறீங்க...

நான் தியேட்டர்லன்னு சொல்லவே இல்லையே. யூ ட்யூப் வீடியோவுலதான் இருக்கு. அதுவும் மும்பையில் ஒரு திரைப்பட விழாவுல கலந்துகிட்ட குறும்படம்தான் இது. சரண் மேல உள்ள கோபத்தை விட்டுட்டு படத்தைப் பாருங்க.

ஒருத்தரும் சிக்கலையே - இது என்ன தலைப்புன்னுதானே யோசிக்கிறீங்க?

நான் ஹீரோவா நடிச்சிடலாம்னு பார்த்தா தயாரிப்பாளர் யாரும் சிக்கலையே... ஒரு ஆண்டின் தொடக்கத்தில் முதல் பதிவை நகைச்சுவை பஞ்ச வைத்து நிறைவு செய்திருக்கிறேன். சரியா.

10 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நான் 2ந்ட் para தான் வாசிச்றுக்கேன் அதுக்கு இப்படி இனி மீதி வாசிச்ட்டு வாரேன்
    என்ன கொடுமை சரவணா இது???????????????????????????????????

    பதிலளிநீக்கு
  3. அன்னக்கூடையில???????????
    நீங்க தினமும் தமிழ் dictionary வாசிப்பிங்கனு ஒத்துக்கிரேன் அதுக்குனு இப்படியா?

    பதிலளிநீக்கு
  4. ரெண்டு நாள் அவஸ்தைதான்
    2nd para ஏறடுத்தின உணர்ச்சியை இது கட்டுபடுத்திடுச்சு அதனால ஆட்டோ ஆளேல்லாம் அனுப்ப வேணாம்னு முடிவுபண்ணிருக்கொம்.

    பதிலளிநீக்கு
  5. அதிர்ச்சியே வரலியே.
    ப்ளாக் இனி யாரும் open பண்ண முடியாதுன்னு சொன்னா வந்திருக்குமோ???

    பதிலளிநீக்கு
  6. நிறைவு செய்திருக்கிறேன்
    மை டியர் வாசகர்களே இத வாசிச்சிட்டு எல்லாரும் தலை குளிசிருங்க அப்போ தான் கொஞ்சம் டென்ஷன் குறையும். பின்பு இடையில் சிரிச்சத வீட்ல யாரவது பாத்தா பிரசனை இல்லை ஆனா ஆபிஸ்ன ப்ரசனை தான் அவங்களே உங்கள தலையில எலுமச்சை தேச்சி குலிபாடிடுவாங்க

    பதிலளிநீக்கு
  7. @ angel

    //.overall its good analum neenga ipadi senjiruka koodaathu//

    ரொம்ப கோபமா...நான் சாதாரணமாத்தான் ஆரம்பிச்சேன். நீங்களா வந்து சிக்கிட்டீங்க. நான்தான் ஆளவந்தான், குசேலன், குருவின்னு எல்லா படமும் காட்டுறேன். நீங்க அப்பவாவது சுதாரிச்சிருக்க வேணாமா?

    இப்படி ஓவரா எதிர்பார்ப்பை ஏற்படுத்திட்டு விஷயம் இல்லாம பண்றதாலதான் நிறைய படங்கள் பிளாப் ஆகுதுன்னு பிரமாதமா சினிமாத் துறைக்கு நல்ல செய்தி சொல்லிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  8. @ angel

    பெரிய மொக்கைய போட்டு கவுத்தத மனசுல வெச்சிக்காம இனி எப்போதும் போல வாசகியா தொடரணும்.

    பதிலளிநீக்கு