Search This Blog

சனி, 9 ஜனவரி, 2010

ஃபெயில் ஆகலை. ஆனாலும் ஒரு வருஷம் அம்பேல்

திரையரங்க உரிமையாளர் குடும்பத்துடன் எங்கள் குடும்பத்துக்கு நட்பு உண்டுங்க. அப்புறம் என்ன...திருட்டு விசிடி வாங்காமலேயே நிறைய படங்களைப் பார்த்திருப்பியேன்னுதானே கேட்குறீங்க? நீங்க நினைக்கிறதும் ஓரளவுக்கு சரிதான். ஆனா அதுலயும் ஒரு ஊசலாட்டம்தான். இப்ப சில கட்சித்தலைவர்கள் எந்த நேரத்துல யாரோட கூட்டணி வெச்சிருக்கோம்னு குழம்பிப்போய் அதைக்கண்டுபிடிக்கவே சி.பி.ஐ கிட்ட உதவி கேட்குறதுதான் உங்களுக்கும் தெரியுமே.

அந்த திரையரங்க உரிமையாளருடைய பிள்ளைகளும் மூடுக்குத் தகுந்த மாதிரிதான் நடந்துக்குவாங்க. அனுமதிச்சீட்டுக்கு பணத்தை எடுத்து நீட்டுனா,"சரி...சரி...உள்ள வை." அப்படின்னு சொல்லிடுவாங்க. சில நாட்கள்ல சட்டுன்னு காசை வாங்கிக்குவாங்க. எப்படி இருந்தாலும் அந்த திரையரங்கத்துல மட்டும் நான் எல்லாரும் போற கவுன்டர் வழியா போனதே கிடையாது. அப்ப உன் வழி தனி வழியான்னு கேட்கக் கூடாது. திரையரங்க உரிமையாளர், ஊழியர்கள் பயன்படுத்துற பாதையிலயே போறது அந்த சின்ன வயசுல மனசுக்கு சந்தோஷம் தந்ததை மறுக்க முடியாது.

அப்ப சினிமாக்களை விட கேபினுக்குள்ள இருக்குற திரைப்படம் திரையிடும் கருவிகள் மேலதான் எனக்கு ஆர்வம் அதிகம். உன்னைய எல்லாம் உள்ள விட்டிருக்க மாட்டாங்களேன்னுதானே நீங்க நினைக்கிறீங்க. பொதுவா அப்படி எல்லாரையும் அங்க அனுமதிக்கமாட்டாங்கதான். ஆனா என் விஷயத்துல விதிவிலக்கா உரிமையாளர் நடந்துக்க காரணம், அவங்க குடும்ப நட்புதான்னு சொல்லணும்.

சாதாரணமா நான் படம் பார்க்கப் போனால் புரொஜக்டரையும் பார்த்து வணக்கம் வைக்காம வர்றது இல்லை. ஒன்பதாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு விடுமுறையில தியேட்டருக்கு வேலைக்கே போயிட்டேங்க.அப்புறம் என்ன கேட்கவா வேணும். அந்த 
ஒண்ணரை வருஷத்துல பரம்பரை, நாட்டுப்புறப்பாட்டு, பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு, சிவசக்தி, பாஞ்சாலங்குறிச்சி,லவ்டுடே அப்படின்னு நிறைய படங்கள் ஐம்பது நாள் ரேஞ்சிலேயே ஓடுனதால திரையரங்கத்துல எல்லாருக்குமே உற்சாகம்தான்.

தியேட்டர்ல ஐம்பது பேர் இருந்தா எதோ ஆளில்லா கடையில டீ ஆத்துற மாதிரி ஒரு பேட் ஃபீலிங் இருக்கும். இப்ப மாதிரி தெளிவான விசிடி புழக்கம் அப்ப அதிகம் இல்லை. நுழைவுக்கட்டணமும் குறைவுதான். பெண்கள், குழந்தைகள் கூட்டமும் ரொம்ப அதிகமாவே இருக்கும்.

பள்ளிக்கூடம் முடிஞ்சதும் மாலை, இரவு நேரக்காட்சிகள் திரையிடப்படுற நேரத்துல திரையரங்கத்துலதான் இருப்பேன்.(பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு எழுதும்போது அறிவியல் பரிட்சைக்கு முதல் நாள் மற்றொரு தியேட்டர்ல காசு கொடுத்து காலமெல்லாம் காதல் வாழ்க படம் பார்த்தேன்.)

அந்த அளவுக்கு ஆர்வமா போய் படத்தை ஒழுங்கா பார்ப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க.இரண்டு புரொஜக்டர்களில் ஏழு அல்லது எட்டு பகுதி பிலிம் சுருளை மாற்றி மாற்றிதான் திரையிடுவாங்க. சாதாரண பார்வையாளர்களுக்கு இது தெரிந்தாலும் எந்தக்காட்சியின் போது புரொஜக்டர் மாறியது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நான் இதைக் கண்டுபிடிப்பதை ஒரு சாதனையாகவே நினைத்த காலம் அது.

ஒவ்வொரு ரோலின் இறுதியிலும் End of Part 2  இது போன்ற நம்பர் இருக்கும். ஆனால் இது வரும் முன்பு காட்சியைத் துண்டிக்காம அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்து காட்சியை மாத்துறது ஒரு கலை. அதை நான் ரொம்பச்சரியாவே செய்வேங்க.

திரையரங்கங்கள் மேல இப்படி ஆர்வம் இருந்ததால பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடர எண்ணம் வரலை. சரியாக ஓராண்டு போனதும் என்னோட பத்தாம் வகுப்புல படிச்ச மாணவர்கள் மறுபடி படிக்கிறதைப் பார்த்து எனக்கும் படிப்பு மேல ஆசைங்க.

ஒரு தனிப்பயிற்சி நிலையத்துல பணத்தைக் கட்டிட்டு வீட்டில் இருந்துதான் படிச்சுகிட்டு இருந்தேன்.வணிககணிதத்துக்கு மட்டும் தனியே மூணு மாசத்துக்கு  டியூஷன்.

ரொம்ப ஆர்வமா நான் தேர்வுக்குத் தயாராகிட்டு இருந்தப்ப பள்ளிக்கல்வித்துறையில் இருந்து எனக்கு ஒரு பதிவுத்தபால் வந்துச்சு. ஹால்டிக்கட் தேர்வு எழுதப்போற பள்ளிக்கூடத்துக்குதானே வரும்னு சொன்னாங்க. நாம தியேட்டர்ல டிக்கட் கொடுத்தது தெரிஞ்சு ஸ்பெஷலா அனுப்பிட்டாங்க போலிருக்குன்னு பெருமையாட தபாலைப் பிரிச்சுப் படிச்சேன். தபால்னு நான் மயக்கம் போட்டு விழவேண்டியதாயிடுச்சு.

தேர்வுக்கட்டணம் உரிய காலத்தில் செலுத்தப்படாததால் நீங்கள் தேர்வு எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த வகையிலாவது நீங்கள் தேர்வு எழுதினால் முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறது. - இதுதான் அந்த கடிதத்துல இருந்த தகவல்.

தனிப்பயிற்சி நிறுவனம் நடத்துற ஆள்கிட்ட போய் கேட்டா, "வெள்ளிக்கிழமை கடைசி நாள். சனி, ஞாயிறு கல்வித்துறை அலுவலகம் லீவு. நான் சனிக்கிழமை

டி.டி எடுத்துட்டேன்.அடுத்த வேலை நாள் திங்கள்கிழமை. அன்னைக்கு நான் அனுப்புன டி.டி. அவன் கையில இருந்துருக்கும். அப்புறம் ஏன் ரிஜெக்ட் பண்ணினான்?"னு எங்கிட்டயே எதிர் கேள்வி கேட்குறான்.

இப்படி ரூம் போட்டு யோசிக்கிறவனை அடிச்சு என்ன ஆகப்போகுதுன்னு நான் ஏற்கனவே சேர்ந்தப்ப கட்டின பணத்தை திருப்பிக் கேட்டேன். நூறும் இருநூறுமா முக்கால்வாசி தொகையை திருப்பித்தந்தான்.ஆனாலும் ஒரு வருஷம் ஆப்பு.

நடுவுல நான் தியேட்டர்ல இருந்ததோட புதிய கட்டடங்களுக்கு எலக்ட்ரீஷியனாவும் வேலை செஞ்சேன். இந்த வேலையை விட்டுட்டு மறுபடியும் படிக்கப் போனியே. பரிட்சை எழுத முடிஞ்சதா...நீ படிக்கிறது கடவுளுக்கே புடிக்கலை...அப்படின்னு சொந்தக்காரங்க என்னைய திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

மனசு ரொம்ப வெறுத்துப் போய் எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியலை. நூலகம் எங்க இருக்குன்னே எனக்குத் தெரியாத காலகட்டம் அது. அது நாள் வரை நாங்க குடியிருந்த தெருவுல இருந்த ஒரு பிள்ளையார் கோவிலுக்குள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குதான் போயிருப்பேன். இந்த சமயத்துல அந்தக் கோவில்ல பூஜை செய்யும் குருக்கள் நண்பரானதால தொடர்ந்து அங்க போற பழக்கம் வந்துடுச்சு.அவரும் அந்தக் கோயிலும்தான் எனக்கு ஒரே ஆறுதல்.

இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆகி இருபது வருஷம் ஆனதால மறுபடி இடிச்சு கட்டலாம்னு முயற்சி செஞ்சோம். சிலர் முட்டுக்கட்டை போட்டாங்க. சிலர் பணம் கொடுக்கத் தயாரா இருந்தாலும் திருப்பணியை முன்ன நின்னு செய்ய தயாரா இல்லை.கடைசியா பிள்ளையார் தனக்கு தானே மறுபடி கோவில் கட்ட ஆரம்பிச்சுட்டார்.

இது குறித்த விளக்கமான பதிவு விரைவில்...

2 கருத்துகள்:

  1. சரளமா எழுதுறீங்க. எழுத்து நடையும் விஷயங்களை சொல்லும் விதமும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. @ Chitra

    //சரளமா எழுதுறீங்க. எழுத்து நடையும் விஷயங்களை சொல்லும் விதமும் நல்லா இருக்கு.//

    தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு