Search This Blog

சனி, 23 ஜனவரி, 2010

நானும் ஜெயா டி.வியும் - பரிசு போச்சே

2005ம் ஆண்டு ஜெயா டி.வி யில் டாக்யு அவார்ட்ஸ் என்ற ஒரு நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியில் போட்டிக்கென வந்த இரண்டு குறும்படங்களும் படம் குறித்து தொகுப்பாளர் கோபிநாத்துடைய பேச்சும் சில நேரம் பிரபல இயக்குனர்களின் கருத்தும் இடம்பெறும்.

சில மாதங்கள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பல வாரங்கள் நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களுக்குப்பிறகு சினிமா தொடர்பான ஒரு கேள்வி கேட்டு சரியான பதில் அளித்தவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசும் வழங்கினார்கள்.

நடுவில் ஒரு வாரம் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. அந்த வாரம் தமிழின் முதல் 70 mm திரைப்படம் எது என்ற கேள்விக்கு பலரும்  ராஜராஜசோழன் என்ற விடையை அளித்திருந்தார்கள்.தமிழில்  முதல் சினிமாஸ்கோப் படம்தான்  ராஜராஜ சோழன். முதல் 70 mm படம் மாவீரன். அதனால் அந்த வாரம் யாருக்கும் பரிசு இல்லை.இந்த விடை எனக்குத் தெரிந்தாலும் நிகழ்ச்சியைப் பார்க்காததால் விடையை எழுதி அனுப்ப முடியவில்லை. பரிசு போச்சே என்று ரெண்டு நாள் புலம்பத்தான் முடிந்தது.

அடுத்து ஒரு வாரத்தில் உலகிலேயே அதிக அளவில் ஆவணப்படங்கள் தயாரித்த நிறுவனம் எது என்று கேட்டார்கள். NFDC - National Film Development Corporation என்ற இந்திய நிறுவனம்தான் உலகிலேயே அதிக ஆவணப்படங்களை தயாரித்த நிறுவனம் என்ற விடையை ரொம்பச் சரியா எழுதிட்டோம்ல.

சரியான விடையை எழுதி பரிசு பெறுபவர் "சரவணன் - திருவாரூர்." என்று கோபிநாத் தன் கணீர் குரலில் சொன்னது என்னாலயே நம்பமுடியலை. கல்லூரியில படிக்கும்போது முதல் செமஸ்டர்ல முக்கியமான மூணு பேப்பர்லயும் முதல் மார்க் எடுத்ததும் சந்தேகம் தீராம புரொபசர்கிட்ட பத்து தடவை மார்க்கை திருப்பி திருப்பிக் கேட்ட ஆளாச்சே நானு. ஆனா கோபிநாத் கிட்ட அந்த மாதிரி கேட்க முடியலை.

திரைக்கதை பற்றி அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை பற்றிய புத்தகம், எலிப்பத்தாயம், பி.பத்மராஜனின்(மலையாள இயக்குனர்) பெருவழியம்பலம், மதுரை காமராசர் பல்கலைக்கலையில் பணியாற்றிய பிரபாகர் என்பவரின் சினிமா தயாரிப்பு பற்றிய புத்தகம்,காதல் திரைக்கதை மற்றும் ஒரு புத்தகம் சேர்த்து மொத்தம் ஆறு புத்தகங்களை அனுப்பி வைத்தார்கள். பணம் அனுப்பாம இப்படி புத்தகமா அனுப்பியிருக்காங்களேன்னு எங்க அம்மா என்னையத்தான் திட்டுனாங்க.

பிறகு ஒரு முறை போட்டோகிராபி என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது என்ற கேள்வி கேட்டிருந்தார்கள்.

பெரும்பாலான அறிவியல் சொற்கள் இலத்தீனில் இருந்துதான் ஆங்கிலத்துக்கு இடப்பெயர்ச்சி அடைந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் போட்டோகிராபி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது என்பதுதான் உண்மை.

கிரேக்க மொழியில் போஸ் என்றால் வெளிச்சம் என்று அர்த்தம்.
கிராபோ  என்றால் வரைதல் என்ற பொருள்.அதாவது வெளிச்சத்தில் வரைதல் என்ற அர்த்தத்தில்தான் போஸ்,கிராபோ என்ற வார்த்தைகள் இணைந்து போட்டோகிராபி என்ற சொல் உருவானது.

அந்த வாரத்திற்குரிய வெற்றியாளர் பற்றி அறிவிக்கும்போது யாருமே சரியான விடை எழுதவில்லை என்று கோபிநாத் சொன்னதும் மறுபடியும் பரிசு போச்சே அப்படின்னுதான் நினைச்சேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான அன்னைக்கு ரம்ஜான் பண்டிகைன்னு நினைக்கிறேன். இரவு ஒன்பது மணிக்கு மேல ஆயிடுச்சு.கனமழை பெய்யுது. நான் சரியான விடையை எழுதியிருந்தேன் என்று குறிப்பிட்டு ஒரு பக்கத்தில் கடிதம் எழுதி உடனே ஃபேக்சில் அனுப்பிட்டேன்.நாலு நாளைக்குள் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரிடமிருந்து பதில் வந்திருந்தது.

மழை, பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் நீங்கள் சரியான விடை எழுதிய கடிதம் நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்ட பிறகுதான் எங்களுக்கு கிடைத்தது. அப்படின்னு வருத்தம் தெரிவிச்சு பதில் எழுதியிருந்தாங்க.அடுத்த வாரத்துலேர்ந்து விடை அனுப்பவேண்டிய கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் அதிகரிச்சாங்க.

திரைப்படம் எடுப்பதில் ட்ரீட்மெண்ட் என்ற வார்த்தை எதைக் குறிக்கும் அப்படின்னு அடுத்த வாரக் கேள்வி.

ஒரு கதையை காட்சிகளாகப் பிரித்து படமாக்கும் விதத்தைதான் ட்ரீட்மெண்ட் என்று சொல்வார்கள் என்று சரியான பதில் எழுதியிருந்தேன்.(இது சுருக்கமான பதில்தான்.உண்மையில் இதைத் தொடர்ந்து சற்று நீண்ட பதிலை எலும்புமுறிவு நோயாளிக்குரிய ட்ரீட்மெண்ட் போலவே எழுதியிருந்தேன்.)

சந்திரமௌலியின் எழுத்து வடிவத்தில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் திரும்பிப்பார்க்கிறேன்,இயக்குனர் சுசி.கணேசனின் வாக்கப்பட்டபூமி, கி.ராஜநாராயணன் எழுத்துலகத்தை ஆய்வு செய்து பிரேம்-ரமேஷ் எழுதிய புத்தகம், நீலபத்மநாபனின் கதைகள், வையவனின் கதைகள் ஆகிய புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள்.

இந்த முறை வேறு யாரையும் பரிசுக்குரியவர்களாக ஏற்கனவே தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.மற்ற எல்லா வாரங்களிலும் பரிசு பெற்றவர் பெயர், ஊரை கோபிநாத் சொல்லுவார். இந்த முறை பரிசு பெற்றவர் என்ற அவர் சொன்னதும் ஒலி நின்று என் பெயர் முகவரியுடன் டைட்டில் கார்டு காண்பிக்கப்பட்டது.(ரொம்ப ஆராயுறனா?)

எவ்வளவோ நிகழ்ச்சிகளை தயாரிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் வாரம் இரண்டு நாள் குறும்படத்திற்கென நேரம் ஒதுக்கலாம்.இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர்கள் என்ற நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதை நான் தொடர்ந்து பார்க்கவில்லை. ஆனால் இது பிரபல இயக்குனர்கள் அதிகம் பேசும் நிகழ்ச்சியாக இருப்பது போல்தான் தெரிகிறது. இந்த அறிவுரைகளை சம்மந்தப்பட்ட இயக்குனர்களிடம் தனியாக கூறிவிடலாம். இவர்கள் பேசுவதை விட கூடுதலாக இரண்டு படங்கள் ஒளிபரப்பானால் மக்களிடம் போய் சேரும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.இது தவறாக கூட இருக்கலாம்.நீங்களும் யோசிங்க. தோணுறத எழுதுங்க.


எல்லா முழு நீளப்படங்களின் இடைவேளையின் போது அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் இருக்கும் குறும்படங்களை திரையரங்கில் திரையிடலாம்.பெரிய படங்கள் பார்க்க வர்ற ஆளுங்க கிட்ட இருந்து வசூல் செய்யுற டிக்கட் தொகையில் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் குறும்படங்களுக்கு நல்ல உதவியா இருக்கும். இதுல எதெல்லாம் சாத்தியம்னு செய்து பார்த்தாதான் தெரியும்.

10 கருத்துகள்:

  1. பெரிய படங்கள் பார்க்க வர்ற ஆளுங்க கிட்ட இருந்து வசூல் செய்யுற டிக்கட் தொகையில் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் குறும்படங்களுக்கு நல்ல உதவியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. //இது பிரபல இயக்குனர்கள் அதிகம் பேசும் நிகழ்ச்சியாக இருப்பது போல்தான் தெரிகிறது//

    எனக்கும் இந்த எண்ணம் இருந்து ஆனா கூட 2 திரை படம் போடனும்னு இல்ல. அவங்க advice பண்ணனும்ன தனியா கூப்பிட்டு சொல்லனும் . சாதரணமா ஒரு student யார் முன்னாடி வச்சி திட்டினா எவ்வளோ மனசு கஷ்டப்படும் உலகத்தில் எத்தனையோ மக்கள் காணும் போது அந்த திட்டு அல்லது கடினமான வார்த்தைகளால் வரக்கூடிய விளைவுகள் மன கஷ்டங்களை ஏன் எண்ணுவதில்லை அவர்கள்

    பதிலளிநீக்கு
  3. அட! அடிக்கடி பரிசு வாங்க்றீங்களே!

    பதிலளிநீக்கு
  4. நல்ல யோசனை சொன்னா யாரு கேப்பாங்க.

    பதிலளிநீக்கு
  5. அப்ப மாவீரன் தான் முதல் சினிமாஸ்கோப் படமா?

    பணமா அனுப்பலன்னா என்னா தல நல்லபுத்தகங்கள் தானே அனுப்பிருக்காங்க...

    பதிவு சூப்பர்

    பதிலளிநீக்கு
  6. குறும் படங்களுக்கு வழி செய்ய வேண்டும். உண்மை. ஆனால், பெரிய படங்களுக்கு மத்தியில் அல்ல என்று நினைக்கிறேன்.
    நீங்க யோசிக்கிற வேகத்துக்கு நிச்சயம் வழிகள் இன்னும் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  7. @ நாஞ்சில் பிரதாப்

    //அப்ப மாவீரன் தான் முதல் சினிமாஸ்கோப் படமா?//

    இல்ல நண்பா... முதல் சினிமாஸ்கோப் படம் ராஜராஜ சோழன். முதல் 70 mm படம்தான் மாவீரன்.

    பதிலளிநீக்கு
  8. @ Chitra

    //குறும் படங்களுக்கு வழி செய்ய வேண்டும். உண்மை. ஆனால், பெரிய படங்களுக்கு மத்தியில் அல்ல என்று நினைக்கிறேன்.
    நீங்க யோசிக்கிற வேகத்துக்கு நிச்சயம் வழிகள் இன்னும் தோன்றும்.//

    உண்மைதான். ஆனால் குறும்படங்களுக்கான சந்தையை நாம் முறையாக உருவாக்கவேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. @ அன்புடன் அருணா

    //அட! அடிக்கடி பரிசு வாங்க்றீங்களே!//


    அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க. என் சோம்பேறித்தனத்தால நிறைய வாய்ப்புகளை தவற விட்டதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  10. @தமிழ் உதயம்
    // நல்ல யோசனை சொன்னா யாரு கேப்பாங்க.//

    வறட்டுப் பிடிவாதத்தால பல விஷயங்களை இருட்டடிப்பு செய்யுற அவலம்தான் இன்னைக்கும் நடக்குது.

    பதிலளிநீக்கு