Search This Blog

வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஒரு சவரன் தங்க நகையின் விலை நாலாயிரம் ரூபாய் அளவில் இருந்து பத்தாயிரம் வரை திடீரென விலை உயர்ந்த காலகட்ட அனுபவம்


நீங்கள் அடகு வைத்த நகையை மீட்காததுடன், நகைக்கான வட்டியையும் ஒழுங்காக கட்டவில்லை. அதனால் உங்கள் நகையை ஏலத்தில் விட்டுவிட்டோம். எங்களுக்கு உரிய தொகை போக மீதிப்பணம் நூற்றி அறுபது ரூபாயை வந்து பெற்றுச்செல்லவும்...என்று என் நண்பருக்கு அடகுக் கடையில் இருந்து நோட்டீஸ் வந்தது.

தங்கத்தின் விலை சவரனுக்கு நாலாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் வரை கிடுகிடுவென உயர்ந்த காலகட்டம்.

அடகு கடைக்கு நேரே சென்ற நண்பர், எனக்கு தெரியாம நகையை எப்படி ஏலத்தில் விடலாம்.? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு, அடகு கடைக்காரர், ஏலம் விடப்போறோம்னு உங்களுக்கு இரண்டு முறை கடிதம் போட்டோம். அது உங்களுக்கு கிடைக்கலைன்னா, நாங்க பொறுப்பாக முடியாது. வேணும்னா, நூற்றி அறுபது ரூபாயை வாங்கிட்டுப் போங்க. இல்லன்னா, அதுவும் கிடையாது...என்று அலட்சியமாக பேசியிருக்கிறார்.

உடனே நண்பர், சரி...இந்தப் பணத்தையும் நீங்களே வெச்சுக்குங்க. எனக்கும் சட்டம் தெரியும். நகையை எப்படி வாங்கணுமோ, அப்படி வாங்கிக்குறேன். கலெக்டர்கிட்ட நேரே போய் புகார் செய்துட்டு, போலீசோட வர்றேன்...என்று சொன்னதோடு, விறுவிறுவென கடையை விட்டு வெளியே வந்திருக்கிறார்.

அவ்வளவுதான்...அடகுக்கடைக்காரருக்கு முகம் பேயறைந்ததுபோல் ஆகிவிட்டதாம்.

சார்...அங்கெல்லாம் போகாதீங்க. உங்க நகையை இன்னும் ஏலத்துல விடலை. அசலையும், வட்டியையும் கொடுத்து மீட்டுட்டு போங்க!. என்று சொல்லியிருக்கிறார்.

நண்பர் வேறு வகையில் பணம் ஏற்பாடு செய்து, உடனடியாக நகையை மீட்டு விட்டார்.

அவரது நகை, அடகு வைத்தபோது இருந்த மதிப்பை விட ஆறாயிரம் ரூபாய் அதிகரித்து இருந்ததை மறைத்து, பழைய மதிப்புக்கே ஏலம் விட்டதாக பொய் சொல்லி ஏமாற்றப்பார்த்திருக்கிறார்.

நண்பர் தைரியசாலியாக இருந்ததால், அவரது நகை திரும்பவும் கிடைத்தது. விவரம் புரியாத ஆசாமி என்றால் ஆகாத காரியத்துக்கு கொடுத்த லஞ்சம்தான்.

இது போன்ற நிறைய சம்பவங்கள் கேள்விப்பட்டேன். பல இடங்களில் மகளிரும் துணிச்சலாக தங்கள் நகையை மீட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏமாற்ற நினைப்பவர்கள் எந்த அசட்டு தைரியத்தில் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.

மரத்தின் மீது கல்லை விட்டெறிவோம். பழம் கிடைத்தால் எடுத்துக்கலாம். கல்லு வந்தா எஸ்கேப். இதுதான் அவங்க கொள்கையா இருக்குமோ?

1 கருத்து: