Search This Blog

வியாழன், 14 ஜனவரி, 2010

பத்திரிகை செய்திகளும் - என்னுடைய அனுபவங்களும் - ஒரு ஒற்றுமை - பொங்கல் சிறப்பு பதிவு 2



2008ம் ஆண்டு அக்டோபர் மாத சமயத்தில் சில புலனாய்வு வாரஇதழ்கள் பணம் கொடுத்தால் மொட்டை என்ற உண்மையை எழுதி எச்சரித்திருந்தார்கள். இப்போது அந்த மொட்டை மிகப்பெரிய அளவில் அடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் முற்றும் போடுவார்களா என்றால் நம் மக்கள் அவ்வளவு தெளிவானவர்களா என்ன?

ஒருபிடி மண்ணுன்னாலும் அதை ஜே.பி.ஜே சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்துலதான் வாங்கணும் அப்படின்னு பல பெரியதிரை நட்சத்திரங்கள் விளம்பரத்துல சொன்னதும் இலவச மனை, கார், தங்கநாணயம் அப்படின்னு எல்லாத்துக்கும் மயங்கிட்டாங்க. இப்ப மோசடி வெளியில தெரியவும் மறுபடியும் மயங்கி விழ வேண்டியதுதான்.

அரசு நிலம், அடுத்தவன் நிலம் அப்படின்னு ஊரான் வீட்டு சொத்துக்களைக் காட்டிதான் பொங்கல் வெச்சிருக்காங்க.இந்த சம்பவம் தொடக்கமும் இல்லை. இதோட முடியவும் செய்யாதுன்னுதான் தோணுது.(தகவல் உதவி: ஜூ.வி 17.01.2010)

உலகத்துக்கே நிலம் தந்த வள்ளல் இப்பவும் இருக்குறது வாடகை வீட்டுலதானாம். என்ன சென்டிமெண்ட்டோன்னு கேள்வியை ஒரு பத்திரிகையில எழுப்பியிருக்காங்க.இதுல பெருசா 'சென்'டிமெண்ட்டும் கிடையாது.'மாருதி'மெண்ட்டும் கிடையாது. பினாமி பேருல எல்லா சொத்துக்களையும் வெச்சிகிட்டு நான் பிளாட்பாரம், கையில கறை படாத (பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவியிருப்பாங்களோ) ஒரு ரூபா காசு கூட இல்லாத ஆத்மா நான்னு சொல்லுவாங்க. இந்த வாதத்தை ஏத்துகிட்டு ஆறு மாசமோ ஒரு வருஷமோ தண்டனை கொடுக்க வாய்ப்பு உண்டு 2050ம் வருஷம்.

நான் இதுவரை இந்த மாதிரி சிக்கல் எதுலயுமே மாட்டிக்கலை.உங்கிட்ட பணம் இருந்திருக்காதுன்னுதானே சொல்றீங்க. நிறைய பேர் கடன் வாங்கியும் இந்த மாதிரி ஏமாற்றுப்பேர்வழிகிட்ட மாட்டியிருக்காங்க. நிறைய பேர் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்க நினைத்து தவறான ஏஜண்ட்டிடம் பணத்தை இழக்கும் தவறையும் நான் செய்யலை.நூறு ரூபாய் கொடுத்து படம்பார்க்கச்சென்று இப்புடி போட்டு சாகடிக்கிறாங்களேன்னு புலம்பலை.

இந்த மாதிரி கர்வத்தோட இருந்ததுக்கு ஒருத்தன் எனக்கு வெச்சான் பாருங்க ஆப்பு...எல்லாம் முடிஞ்சதும்தான் சுதாரிச்சேன். அடப்பாவி இப்படியெல்லாம் யோசிக்க எந்த ஊர்ல யாரோட ரூம் போட்டு தங்கியிருந்தடான்னுதான் என்னையே நான் கேட்டுக்க முடிஞ்சது.

2006ம் வருஷத்தோட பிற்பகுதியில சென்னைக்குப் வேலைக்காக போய் இருந்தேன். உணவு ஒத்துக்காம மிக மோசமான அவதியோடதான் வேலைக்குப் போய்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல போய் திருவாரூர்ல என்கூட கல்லூரியில படிச்ச ஒருத்தன்கிட்ட நான் சிக்குவேன்னு எதிர்பார்க்கவே இல்லைங்க.ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துல வேலை வாங்கித்தர்றேன்.அப்படின்னு அவங்க வீட்டுக்கு அப்பப்ப அழைச்சுட்டு போயிடுவான்.

நானும் கட்டிடங்கள்ல எலக்ட்ரிக்கல் வேலை, கேமராமேன் பணின்னு பல வேலைகளையும் பார்த்துகிட்டே இவனையும் நம்பிகிட்டு இருந்தேன்.ஒருபக்கம் பணிச்சுமை,(சொற்ப ஊதியம்தான்) இன்னொரு பக்கம் நண்பனுக்கு (?!) எடுபிடி வேலை.மற்றுமொரு பக்கம் மருத்துவ சிகிச்சை இப்படியெல்லாம் அவதிப்பட்டாலும் அவன் வாங்கித்தர்றேன்னு சொன்ன வேலை மேலதான் என் கவனம் இருந்தது. அதனால எல்லாத்தையும் சகிச்சுகிட்டேன்.

எனக்கு சில மாதங்கள்லயே நம்பிக்கை போயிடுச்சு. ஆனாலும் அவன்கிட்ட எதுவும் சொல்லலை.என் அம்மாவுக்கு கண்ணுல அறுவைசிகிச்சை செய்து லென்ஸ் வைக்கவேண்டிய நேரம்.ஒரு மாசம் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வேறு யாரும் இல்லை.நானே வெளியில போகாம வீட்டுல இருந்து அந்த வேலைகளோட, அம்மா கண்ணுக்கு அந்த ஒரு மாசமும் மிகச்சரியான நேரத்துல மருந்து போடுறதையும் செய்தேன்.

அந்த வில்லங்கம் எங்க வீட்டுக்கும் வந்தான். என் அம்மா கிட்ட "சரவணனோட அக்கவுண்டண்ட் திறமை என்னன்னு எனக்கு தெரியும்.ஆனா அவன் எல்லா வேலையையும் பார்த்து வீணாப்போறதுல எனக்கு இஷ்டம் இல்லை. நான் வேலைக்கு சொல்லியிருக்குற இடத்துல புது கட்டிடம் கட்டுறாங்க. அதனால இப்ப உடனே வேலைக்கு இவனை அனுப்பி அங்க தங்க வைக்க முடியாத சூழ்நிலை.ஒரு வருஷத்துக்கும் மேல எங்களை நம்பிகிட்டே இருந்துட்டான். ஆனா இது எங்க தவறு. அதனால இவன் வேலைக்குப் போறவரைக்கும் பாதி சம்பளமா மூவாயிரம் ரூபாய் தந்துடுறோம்."அப்படின்னு அந்த தொகையை கொடுத்துட்டும் போயிட்டான்.

அம்மாகிட்ட பேசிட்டுப் போனதால என்னால மறுக்கவும் முடியலை. பழையபடி சென்னைக்குப் போய் என்னுடைய தற்காலிக வேலைகளோட அவனுக்கு எடுபிடியாவும் வாழ்க்கையைத்தொடர்ந்தேன். பதினைந்து நாட்களில் ஆர்டர் வந்துவிடும்.அடுத்து ஒரு சில நாள் கழிச்சு கொஞ்சம் கூட பிசுறு இல்லாம ஒரு கதை சொல்லுவான்.

எனக்கு ஓரளவு சந்தேகம் வந்தாலும் அம்மாவுக்கு அடுத்த கண்ணும் ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலையில இருந்ததால வேற நிரந்தர வேலைக்கு முயற்சிக்கலை. திருவாரூர்ல நாங்க வீடுகள் வாடகைக்கு விட்டிருக்குறதால அது தொடர்பான பஞ்சாயத்து, பராமரிப்பு, அரசு அலுவலகம் தொடர்பான வேலைகள் அப்படின்னு எல்லாத்துக்கும் நான் அலைய வேண்டிய சிக்கலான சூழ்நிலை.

சுருக்கமா சொன்னா எதுக்கோ நிற்க நேரமும் இல்லையாம். வேலையும் இல்லையாம் அப்படின்னுங்குற பழமொழிக்கு என் வாழ்க்கை என்னையும் மீறி உதாரணமாயிடுச்சு.

பாதி சம்பளம் வாங்கிக்கலாம்னு சொல்லி அம்மாகிட்ட ஒரு மாசம் பாதி சம்பளம் தந்த அவன் அதுக்கப்புறம் நான் கேட்டப்ப எல்லாம் ரெண்டு நாள்ல தர்றேன். அடுத்த வாரம் பார்க்கலாம் அப்படின்னு சொல்லியே காலம் கடத்துனான். நான் கூட உழைக்காம வர்ற காசு எதுக்கு. வேலை கிடைச்சா போதும்னுதான் நினைச்சேன்.(அவனுக்கு எடுபிடி வேலை செய்ததெல்லாம் ஏமாளி கணக்குதான்)

ஒரு சூழ்நிலையில என்னைய கேட்காம எதோ ஒரு கூட்டுறவு வங்கியில நான் ரெண்டு வருஷம் வேலை செய்ததா போலிச்சான்றிதழ் வாங்கிக்கொடுத்துட்டதா சொன்னான்.

எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு. ஏன் இப்படி பண்ணினேன்னு கேட்டேன்.அதெல்லாம் ஒரு பார்மாலிட்டிதான்னு சொல்லவும் நானும் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன். அடுத்து ரெண்டு நாள்ல, அந்த சான்றிதழைப் பத்தி அந்த பேங்க்ல விசாரிச்சிருக்காங்க. உண்மை தெரிஞ்சுடுச்சு. அதனால உனக்கு தெரிஞ்ச எதாவது  ஒரு இடத்துல இன்னொரு சர்ட்டிபிகேட் வாங்கிட்டு வான்னு சொன்னான்.

ஒண்ணு அவன் எதோ ஒரு பேங்க்ல அனுபவ சான்றிதழ் வாங்கினதா சொன்னது தப்பா இருக்கணும். ஒருவேளை அது உண்மையா இருந்தா பொய் சர்ட்டிபிகேட் கொடுத்த ஆளை அவங்க வேலைக்கு கண்டிப்பா எடுக்க மாட்டாங்க.

இப்பதான் நான் முழுசா தெளிஞ்சேன். இனிமே நான் என் வழியைப் பார்த்துக்குறேன்.அப்படின்னு ஒதுங்குனதும் "ஒரு மாசம் நான் வாங்கிக்கொடுத்த பாதி சம்பளத்தையும் நிறைய நாள் ஹோட்டலுக்கு அழைச்சுட்டு போய் சாப்பாடு வாங்கிக்கொடுத்ததுக்கான ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் நாலாயிரம் ரூபாயை ரெண்டு நாளைக்குள்ள குடுத்துடுன்னான்.

2009ம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி காந்தி நினைவு நாள் அன்னைக்கு இந்த சம்பவம் நடந்துக்சு. நான் உடனே வெள்ளிக்கிழமை சாயந்திரம்னு பார்க்காம இன்னொரு நண்பன் கிட்டதான் உதவி கேட்டேன். அந்த நண்பர் கோயிலுக்கு பூஜை செய்யுற குருக்கள் குடும்பம். சில நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களை ரொம்பவும் கவனமா கடைப்பிடிக்கிறவங்க அவங்க.ஆனாலும் வெள்ளிக்கிழமை, மாலை விளக்கேற்றும் நேரம் என்று பார்க்காமல் எனக்கு பணம் தந்து உதவுனாங்க.

நான் பணத்த அவன் வீட்டுல கொண்டு போய் கொடுத்தப்ப அவன் இல்லை. அவன் அம்மாகிட்ட கொடுத்ததும் அவங்களுக்கு விஷயம் புரியலை. மறுநாள் என்னுடைய இன்னொரு நண்பன்கிட்ட,"சரவணன் பணத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறான்.நான் இப்ப நாலாயிரம் கேட்டா என்கிட்ட மறுபடி வந்து வேலைக்கு சேர்த்துவிட சொல்லுவான்னு எதிர்பார்த்தேன். (எவ்வளவு தன்னம்பிக்கை?)இன்னைக்கு  சனிக்கிழமை பெரும்பாலும் வங்கிகளில் அடகு வைக்குறது கஷ்டம். நேற்று வெள்ளிக்கிழமை, ரொம்ப பேர் கடன் குடுக்க மாட்டாங்க. அப்படின்னு நினைச்சேன். எப்படியோ பணம் கொடுத்துட்டான்." அப்படின்னு சொல்லியிருக்கான்.

அந்த மீடியேட்டருக்கு நான் சொன்ன பதில்,"கவுத்துவிட இவன் ஒருத்தன் இருக்கான். பள்ளத்துல விழாம காப்பாத்த ஆயிரம் நண்பர்கள் இருக்காங்க. அவன் கடனை நான் தீர்த்துட்டேன்.அவனுக்கு எடுபிடி வேலை செய்ததுக்கான கூலியை அவன் தான் தரணும். விபத்துல சிக்கி ஒரு நாள் பூராவும் பேச்சு மூச்சு இல்லாம அவன் கிடந்தப்ப அவன் பக்கத்துல இருந்து அழுத அவனோட அம்மாவுக்கும், பாட்டிக்கும் ஆறுதல் சொன்னதுக்கு கூலியே நிர்ணயிக்க முடியாது. இப்போ என்கிட்ட அவன்தான்  கடன்காரன்." அப்படின்னு சொல்லிட்டேன்.

எப்படியெல்லாம் ஏமாந்துருக்கேன் பாருங்களேன். இதை இவ்வளவு பகிரங்கமா நான் ஒத்துக்க காரணமே, நமக்குத்தெரியாம நம்ம உழைப்பை உறிஞ்சுற அட்டைகளுக்கு உலகத்துல பஞ்சமே இல்லைன்னு நீங்களும் புரிஞ்சுக்கணும்னுதான்.

******

இந்திய தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனா அந்த வீரர்களுக்கு சம்பளபாக்கி. ஒரு தொழிற்சாலை தொழிலாளர்கள் போராடுறமாதிரியான நிலைமைக்கு அவங்களைக் கொண்டு போய் விட்டுட்டாங்க. கலை, விளையாட்டு இதுல எல்லாம் இருக்குறவங்களுக்கு குடும்பம் நடத்த ஆதாரமா கிடைக்கவேண்டிய வருமானம் பற்றிய நிச்சயத்தன்மை இல்லைன்னா அவங்களால அந்த துறையில எப்படி பிரகாசிக்க முடியும்?

இப்ப என்னோட நிலைமையும் அதுதாங்க. கல்லூரியில படிச்சு முடிச்சதும் ஒரு ஆடிட்டரோட அலுவலகத்துலதான் வேலைக்கு சேர்ந்தேன். மேனேஜர்னு சொல்லிட்டாங்க. அந்த அலுவலகத்துல மொத்தமே நான் நான் ஒரு ஆளுதாங்க.(மத்த எல்லாரும் ஒல்லியான்னு கேட்கப்பிடாது.) தலைமை அலுவலகம் வேற ஊர்ல இருக்கு. திருவாரூர் கிளை அலுவலகத்துக்கு நான் தான் ஆல் இன் ஆல். அப்போ சம்பளம் எக்கச்சக்கமா வருமேன்னு கேட்கப்பிடாது.

எழுநூற்றுஐம்பது ரூபாய் சம்பளம் (2003 - ல) ஆடிட்டர் மனசு வெக்கிறபோதுதான் கிடைக்கும்.அப்புறம் அதை உதறிட்டுதான் சென்னைக்கு போனேன்.அங்கயும் நான் போய் சிக்கின இடம் ஒரு கொத்தடிமைகளை வெச்சிருக்குற இடம்.ஆனா மருத்துவமனைன்னு பேரு.

வாங்கின சம்பளம் சாப்பாட்டுக்கே பத்தலை.இதுல முதன்முதல்ல புகலிடம் கொடுத்த என் நண்பரின் அண்ணனுக்கு திருமணம் செய்ய நாள் குறிச்சாங்க. அதுக்கப்புறம் அங்க இருக்குறது எப்படின்னு குழம்பிப்போய் இருந்தேன். அந்த சூழ்நிலையில எங்க ஊருக்குப் பக்கத்துல நூறு வருஷத்துக்கும் மேல இருக்குற ஒரு தொழிற்சாலைக்கு ஆள் அவசியம் வேணும். அப்பதான் நான் வெளிநாடு போகமுடியும்னு ஒரு நண்பர் அழைச்சார்.

நானும் இதுதான் சாக்குன்னு கிளம்பிட்டேன். அந்த நிறுவனத்துல கோடிரூபாயைத்தாண்டி ஆண்டு விற்பனை நடக்கும்.அக்கவுண்டண்ட் என்ற பெயரில் அங்கே வேலை செய்தாலும்  வருமானவரி, விற்பனைவரி, வருங்கால வைப்புநிதி,பொருட்கள் பேக்கிங், பில்லிங், கேஷியர், டெஸ்பாட்ச் என்று எல்லா இடத்திலும் ஆள் வராத நாளில் நான்தான் அந்தப் பணியை முடிக்க வேண்டியது இருக்கும்.

இது மட்டுமின்றி அவர்களின் மிகப்பெரிய பள்ளிக்கூடத்திலும் தினமும் மதிய நேரத்தில் நானேதான் கணக்குகளைப் பராமரிக்கணும். இவ்வளவுக்கும் சேர்த்து நான் வாங்கின சம்பளம் 2004-2005 ல மாசம் ரெண்டாயிரம் ரூபாய். வருஷத்துக்கு 75 ரூபாய் சம்பள உயர்வு.

நான் இந்த நிறுவனத்துல மூவாயிரம் ரூபாய் வாங்கணும்னா பதிமூணு வருஷம் ஆகும். அதுவரை கம்பெனி இருக்கணும், நான் இருக்கணும், இந்த முதலாளி இருக்கணும் - இவ்வளவு ரிஸ்க் இருக்கேன்னு யோசிச்சேன்.

இதுல ரெண்டாயிரமும் ஒரே தவணையா கிடைக்காது. ஆயிரத்து ஐநூறு ரூபா லிஸ்டுல போட்டுடுவாங்க.லீவு நாட்களுக்கு சம்பளம் கட்.  ஆனா நான் போகாத நாட்கள்ல அந்த வேலையை யாரும் முடிச்சிருக்க மாட்டாங்க. மறுநாள் நான் போய்தான் செய்யணும். இது என்ன நியாயம்னு கேட்காதீங்க. இதுதான் அங்க உள்ள நடைமுறை. எனக்கு இதுல எல்லாம் வருத்தம் இல்லை.வரவேண்டிய சம்பளமும் ஒழுங்கான தேதிக்கு வராது.

அந்த நிறுவனத்துல ஒரு கணக்குப்பிள்ளை இருபது வருஷமா வேலை செய்து 1650 ரூபாதான் வாங்குறார். அதனால எனக்கு அவரோட அதிகமா சம்பளம் போடக்கூடாதாம். இன்னொருத்தர் அவரோட ஏழு வயசுல பாட்டில் கழுவ வந்து அறுபத்துஅஞ்சு வயசு வரைக்கும் இங்கேயே வேலை செய்து தினக்கூலி ஐம்பது ரூபாய்தான் வாங்குறார்னு ஒரு அதிர்ச்சித்தகவலையும் சொன்னார். இந்த நிறுவனத்துலயே நீதான் அதிக சம்பளம் வாங்குற என்ற தகவல் வேறு முதலாளியிடமிருந்து.

அவர் நேரடியா தர்றதா சொன்ன ஐநூறு ரூபாயை லஞ்சம் வாங்குறது மாதிரி அட...அதக்கூட சுலபமா வாங்கிடுறாங்களே. வேற எப்படியோ நான் வாங்குறதுக்குள்ள இன்னும் ரெண்டு மாச பாக்கி சேர்ந்துருக்கும். இந்த யோக்கியதையா இருந்தா எப்படிங்க வேலையில கவனம் போகும்.

ஆனா எனக்கு போச்சே. எதுவோ குரைக்கும்போது நாமும் திரும்பி கத்துனா வித்தியாசம்

இல்லாம போயிடும்னு சொல்லுவாங்க. அதனால நானும் வள்ளுவர் வாக்குப்படி அவர் ஒழுங்கா சம்பளம் கொடுக்கலைன்னாலும் வேலையை ரொம்ப சரியா செய்தேன்.

கடைசியா சம்பள பாக்கியாலதான் நான் வேலையை விட்டு ஓடினேன்.

******

இந்த காலங்கள்ல கேமரா, எழுத்து மேல இருந்த தீராத ஆசையால திருமணவிழாக்களைப் படம்பிடிக்க கொஞ்ச நாள் போனேன். அங்கயும் எனக்கு பேசிய பணத்தை ஒழுங்கா கொடுக்கலை. மறுபடியும் ஓடினேன்.

இந்த முறை மீண்டும் சென்னைக்கு.

அங்கயும் ஒரு நிறுவனத்துல பல லட்சரூபா மதிப்புள்ள கேமராவை நம்பி கொடுத்து தனியா அனுப்பினாங்க. ஆனா சம்பளம் சரியா கொடுக்க மட்டும் மனசு இல்லை. கேமராவைக் கொடுத்து அனுப்பக் காரணம், என் மேல உள்ள நம்பிக்கையா இல்ல, இவனால எங்க ஓடிட முடியும்...ஓடினா விட்டுடுவோமான்னு அவங்க மேல உள்ள நம்பிக்கையான்னு தெரியலை.

இந்த சூழ்நிலையிலதான் ஒருத்தன் என் வாழ்க்கையில ரெண்டு வருஷத்தைக் காலி பண்ண என்னை அறியாம நானும் உடந்தையா இருந்திருக்கேன்.

இனிமே இந்த மாதிரி அக்கப்போர் எல்லாம் வேண்டாம்னு ஒரு பிரஸ்ல பிளக்ஸ் டிசைன், பத்திரிகை டிசைன் இதெல்லாம் கத்துகிட்டு பத்திரிகைத்துறையிலயே நுழைஞ்சுடலாம்னு போனேன். இவ்வளவு(?!) படிச்சிருக்கீங்க. மேனேஜரா இருங்கன்னு சொல்லிட்டாய்ங்க. சரின்னு அதுல சின்சியரா உழைக்க ஆரம்பிச்சா அடுத்த ஆப்பு. ஒண்ணரை மாசமாகியும் தினப்படிதான் கிடைச்சது. அதுவும் அந்த தொகையை எல்லாருக்கும் நானே கொடுக்க வேண்டிய பொறுப்புல இருந்ததால ஒழுங்கா கிடைச்சது.

சம்பளம் கேட்டதும், வாங்கிக்கலாம். என்ன பணம் பணம்னு புலம்புறீங்கன்னு அட்வைஸ் வேற. இதுல பெரிய கொடுமை என்னன்னா ஒரு வருஷமா என் நண்பர் ஒருத்தர்கிட்ட சொல்லி என்னைய வேலைக்கு கூப்பிட்டதே அந்த பிரஸ்காரங்கதான்.

******

பிளஸ்டூ பரிட்சையை தனித்தேர்வரா எழுதப் போனப்ப ஒருத்தன் ஒரு வருஷம் பரிட்சை எழுத விடாம பிள்ளையார் சுழி போட்டான். இன்னமும் இந்த சோகம் தொடருது.

பத்து முறை முயற்சி செய்தால் ஒரே ஒரு தடவைதான் வெற்றியா.கவலைப்படாதீர்கள். இதை மாற்றி பத்து தடவை வெற்றி அடைய ஒரு வழி இருக்கிறது.  நூறுமுறை முயற்சித்தால் எப்படியும் பத்துமுறை சக்சஸ்தான்.என்று எதோ ஒரு புத்தகத்தில் படிச்சேன்.

எனக்கு இதைக் காட்டிலும் கூடுதலாக முயற்சி தேவைப்படுது. அதிகமில்லை நண்பர்களே...ஆயிரம் முறை முயற்சித்தால் ஒரு தடவை வெற்றியை நெருங்குறேன். இன்னும் தொடவில்லை. எவ்வளவோ செஞ்சுட்டோம். இதைப் பண்ண மாட்டோமா.

6 கருத்துகள்:

  1. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க உங்க அனுபவங்களை, இவை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும்..

    - பழூர் கார்த்தி

    பதிலளிநீக்கு
  2. @ Anonymous

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க உங்க அனுபவங்களை, இவை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும்..

    - பழூர் கார்த்தி//

    தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. சம்பளம் கேட்டதும், வாங்கிக்கலாம். என்ன பணம் பணம்னு புலம்புறீங்கன்னு அட்வைஸ் வேற. இதுல பெரிய கொடுமை என்னன்னா ஒரு வருஷமா என் நண்பர் ஒருத்தர்கிட்ட சொல்லி என்னைய வேலைக்கு கூப்பிட்டதே அந்த பிரஸ்காரங்கதான்.
    .................என்ன கொடுமை சரண் சார், இது?
    பதிவு வெற்றிகரமா வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  4. @ Chitra

    //பதிவு வெற்றிகரமா வந்திருக்கு.//

    இதுல எழுதுனது எல்லாம் ரொம்ப கொஞ்சம். என்னோட எல்லா அனுபவங்களையும் எழுதுனா மிரள வெக்கிற அளவுக்கு இருக்கும்.எல்லாமும் உண்மைச்சம்பவங்களா இருக்குறதால ரொம்பவும் கவனமா எழுதுறேன். இந்த வயசுக்குள்ளயே இவ்வளவுன்னா, மிச்ச காலத்துக்கு எவ்வளவோ அப்படின்னு சில நேரங்கள்ல எனக்கே சின்ன தடுமாற்றம் வரும்.

    இன்னும் எவ்வளவு போராட்டங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கோன்னு பார்க்கத்தானே போறேன்.

    பதிலளிநீக்கு
  5. என்ன தல செம அடிவாங்கிருக்கீங்களே... ஏன் உங்களுக்கு இந்தமாதிரில்லாம் நடக்குது.

    ஏதாச்சும் ஒரு பீல்டுல steady ஆகப்பாரு...எல்லா இடத்துலயும் காலை வச்சா கேரியர் போயிரும்பா.. நண்பனின் அன்பான அறிவுரை இது... உனக்கு தெரியாததா?

    பதிலளிநீக்கு