Search This Blog

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

விகடன் 16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள் - இந்திரா இ.ஆ.ப


சென்னையின் முன்னணி ஐ.ஏ.எஸ் அகாடமிகளில் சங்கருடையதும் ஒன்று. கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற 96 பேர்களில் 36 பேர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள்.ஒவ்வொரு வருடமும் பல ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ் - களை உருவாக்கும் இவர் நான்கு முறை சிவில் சர்வீஸ் எழுதி தோல்விகளைத் தழுவியவர் என்பதுதான் ஆச்சர்யம்.

கல்லூரியில் வைஷ்ணவி என்ற பெண்ணை ராகிங் செய்ததால் ஒரு வருட காலம் சஸ்பெண்ட் ஆன சங்கருக்கு அதே பெண்ணுடன் காதல். வேலை பார்த்துக்கொண்டே சங்கர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத உதவியிருக்கிறார் வைஷ்ணவி.

தன்னைப் படிக்க வைத்த மனைவியை தற்போது ஐ.ஐ.டி யில் பி.ஹெச்டி., படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

"நான் ஜெயித்திருந்தால் நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ் ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். என் தோல்விகள் என்னும் படிக்கட்டுகளில்தான் இத்தனை வெற்றியாளர்கள்!" - அனுபவத்தின் வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கிறார் சங்கர்!

இது 13.10.2010 தேதியிட்ட ஆனந்த விகடனின் 16ப்ளஸ் எனர்ஜி பக்கங்களில் வெளியான சங்கர் அளித்த பேட்டியில் ஒரு பகுதிதான் இது.

******

நான் பத்தாம்வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு பல வேலைகளுக்கும் போய்க்கொண்டிருந்தபோது முன்பு என்னுடன் படித்த மாணவர்களைப் பார்த்துதான் எனக்கும் படிக்கும் ஆசை வந்தது. ஆனால் அது தீவிரமாவதற்கு வேறு சில காரணங்கள் உண்டு.

அவற்றில் முதன்மையானது 1998ம் ஆண்டு குங்குமம் இதழில் ரமேஷ்பிரபா எழுதி  வெளிவந்த கலெக்டர் கனவுகள் தொடர். சிவில்சர்வீஸ் தேர்வுகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களுடன் ஜெயித்த சில அதிகாரிகளின் பேட்டிகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தன.

சிறந்த அதிகாரியாக பெயர் பெற்ற சி.உமாசங்கர் அப்போது திருவாரூர்மாவட்டத்துக்கு கலெக்டர். கண் முன்னே இவரை உதாரணமாகப் பார்த்தது கூட நான் மீண்டும் படிப்பைத்தொடர உறுதியாக இருந்ததற்கு காரணமாக சொல்லலாம்.

அப்போதுதான் தனித்தேர்வராக நான் பிளஸ்டூ தேர்வு எழுதவேண்டிய நேரத்தில் ஹால்டிக்கட் வராமல் ஓராண்டு வீணாகிப்போனது. உறவினர்களில் சிலர், நீ படிக்கிறது கடவுளுக்கே புடிக்கலை என்று புது விளக்கம் கொடுத்ததும் நீங்க என்ன சொல்றது நான் என்ன கேட்குறது... திருவாரூர் அரசுக்கல்லூரியில் வணிகவியல் பாடத்தில் 100 இடங்களுக்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வரை வரும். பெரும்பாலும் பள்ளியில் படித்து மிக அதிகமார்க் எடுத்தவங்களுக்குதான் பகல்நேரக் கல்லூரியில் இடம் கிடைக்குமாம். நான் சேர்ந்து காட்டுறேன். என்று மனதுக்குள்ளேயே சவால் விட்டு படித்தேன்.

வெயிட்டிங் லிஸ்ட் அது இது என்று இழுபறி ஆகாமல் முதலில் வெளியிட்ட பட்டியலிலேயே இடம் பிடித்து கல்லூரியில் சேர்ந்தேன்.

இதில் சில விஷயங்களை நீங்கள் யோசிக்க வேண்டும். அவர் சொன்னார், இவர் படிக்கிறார் என்று நான் எந்த படிப்பையும் கண்மூடித்தனமாக தேர்வு செய்யவில்லை.சிவில்சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் பட்டம் படிக்க ஆசைப்பட்டாலும் பி.காம் படிப்பைத் தேர்வு செய்ய வேறு சில காரணங்களும் இருந்தன. எனக்கு கணக்குப் பாடத்தில் ஆர்வம் அதிகம். அதனால் பி.காம் படிப்பில்  உள்ள கணக்கு தொடர்பான பாடங்களை விருப்பத்துடன் படிக்கலாம் என்பது என் எண்ணமாக இருந்தது. மளிகைக்கடை என்றாலும் மருத்துவம்,விஞ்ஞானம் என்றாலும் பி.காம் படித்தவருக்கு நிச்சயமாக ஒரு பணியிடமாவது இருக்கும்.- இது குடும்ப பொருளாதார சூழ்நிலையை மனதில் கொண்டு எடுத்த முடிவு.

பிறகு சில காரணங்களால் நான் சிவில்சர்வீஸ் தேர்வுகள் எழுத முயற்சிக்கவே இல்லை. அந்த ஆதங்கம் இப்போதும் என் மனதில் உண்டு. அந்த எண்ணத்துக்கு கற்பனை சாயம் பூசி நான் எழுதிய இந்திரா இ.அ.ப என்ற சிறுகதை 2007ம் ஆண்டு தினமலர் - வாரமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசைப் பெற்றது.

சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குநரின் வாழ்வியல் அனுபவங்களை விகடனில் படித்ததும் என் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிட்டன.

நம்மால் முடிந்த வரை ஒருவருக்கு உதவ வேண்டும். பொருளாதாரரீதியாக உதவ முடியாவிட்டால் ஒருவேளை உணவு அளிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் பசு உண்ண புல்கட்டு கொடுக்கவேண்டும்.இதற்கும் வழியில்லையா, நாலு பேருக்கு நல்ல வார்த்தையாவது சொல்லலாம்.  அதுவும் புண்ணியம்தான்.- என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். இதுதான் நான் எழுதத் தொடங்குவதற்கு முக்கியக் காரணம்.இப்போது என்னால் முடிந்த காரியம் வேறு எதுவும் இல்லை.





3 கருத்துகள்:

  1. சொந்த வாழ்க்கையின் தோல்விகளை தான் வாழும் சமூகத்தின் வெற்றியாக மாற்றக் கூடிய திறன் பெற்றவர்கள் இது போன்ற வெகுசிலர்தான்.

    பாராட்டப்பட வேண்டிய,பின்பற்றப் படவேண்டிய ஒரு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது அவரது வாழ்வு.

    பதிலளிநீக்கு
  2. இதில் சில விஷயங்களை நீங்கள் யோசிக்க வேண்டும். அவர் சொன்னார், இவர் படிக்கிறார் என்று நான் எந்த படிப்பையும் கண்மூடித்தனமாக தேர்வு செய்யவில்லை.சிவில்சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் பட்டம் படிக்க ஆசைப்பட்டாலும் பி.காம் படிப்பைத் தேர்வு செய்ய வேறு சில காரணங்களும் இருந்தன. ...................தெளிவா இருக்கிறீங்க. தெளிவா எழுதுறீங்க. நல்லா இருக்குங்க.

    பதிலளிநீக்கு