Search This Blog

வெள்ளி, 1 ஜனவரி, 2010

சாலைப்பாதுகாப்பு வாரம் (01.01.2010 - 07.01.2010) ஒவ்வொரு ஆண்டும் இதே கதைதான்...

ஆனால் சாலையில் பாதுகாப்பு மட்டும் இன்னும் இல்லை.மது, புகை இது போன்ற தீய பழக்கங்களால் அந்த நபரும், அவர் குடும்பத்தாரும் மட்டுமே அதிகமாக பாதிக்கப்படுவார்கள். வீடு இல்லாத கொடுமையால் சாலை ஓரத்தில் படுத்து தூங்கும் மக்கள் மீது குடித்துவிட்டு கார் ஏற்றிக் கொல்லும் பணம் படைத்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

ஏன்? ஒவ்வொரு மனிதர்களுமே சாலைவிதியைக் கடைப்பிடிக்காவிட்டால் அவருக்கு மட்டுமின்றி அவருக்கு சம்மந்தமே இல்லாத, சாலை விதியை முறையாக கடைப்பிடிப்பவர்களும் பலியாகும் கொடுமையும் உண்டு.

இந்த அவலங்களை ஒரே பதிவில் சொன்னால் எழுதும் எனக்கும் சோர்வாகிவிடும். படிக்கும் உங்களுக்கும் தூக்கம் வந்து விடும். எனவே அவ்வப்போது ஒவ்வொரு தகவல்களை சொல்கிறேன்.

இன்று, சாலைப் பாதுகாப்பு வாரத்தில் வாகன முகப்பு விளக்குகளின் மையத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் பண்டிகையைப் பற்றி ஒரு சிந்தனை.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடுவார்கள். அப்போது காவல்துறையினர், போக்குவரத்து அதிகாரிகள், சில வாகனங்களின் முகப்பு விளக்கின் மையத்தில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவர்.

சில நாட்களிலேயே அந்த வாகனங்களின் விளக்குகளில் ஸ்டிக்கர்கள் காணாமல் போய், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களைக் கூசச் செய்து, விபத்துக்களை வரவேற்கத் துவங்கி விடும்.

ஒவ்வொரு வாகனத்தையும் அவ்வப்போது கண்காணித்து அபராதம் விதிப்பது நடக்காத காரியம். ஏனென்றால் காவல் துறையினருக்கு உரிய பணிச் சுமை அப்படி.

முகப்பு விளக்குகளுக்கு கண்ணாடியைத் தயார் செய்யும் போதே, உரிய இடத்தில் கருப்பு வண்ணம் இடம் பெறும் வகையில் தயாரிக்கும்படி சட்டத் திருத்தம் செய்யலாம்.

சாலையில் புதியதாக ஓடத் துவங்கும் எல்லா வாகனங்களின் முகப்பு விளக்குகளிலும், கருப்பு ஸ்டிக்கர் தானாகவே இடம் பெற்றுவிடும்.

சாலை விபத்துக்களைத் தடுக்க இதுவும் ஒரு வழிமுறைதான். இதை நடைமுறைப்படுத்தி, விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்க அரசு முன் வருமா?

வர்றமாதிரி தெரியலையே.

2 கருத்துகள்: