சனி, 30 ஜனவரி, 2010

ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா...

இன்னும் மூன்று மாதங்களுக்குள் நூலகத்தில் 50 லட்சம் மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்போவதாக 30.01.2010 தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.இதுவரை பத்து லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் இவர்களால் இரண்டரைகோடி ரூபாய் வைப்புத்தொகை சேர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இது மட்டுமல்ல, உள்ளாட்சித் துறைகளால் வசூல் செய்யப்படும் வரிகளில் அடங்கிய நூலகம் மற்றும் கல்விக்கான தொகையும் உண்டு.இந்தப் பணம் எல்லாம் உருப்படியாக செலவழிக்கப்படுகின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

சென்னை மாநகராட்சியில் மட்டுமே வரியாக வசூலிக்கப்பட்டதில் கல்விக்கான தொகையில் எத்தனையோ மாநகராட்சிப் பள்ளிகளை சீரமைக்கலாம் என்று சொல்கிறார்கள்.ஆனால் அந்த தொகை வேறு பயன்பாட்டுக்கு செலவழிக்கப்பட்டுவருகிறதாம்.

குடிசைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில் சென்னை நகரின் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களை எல்லாம் ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பால் துரத்தி அடித்துவிட்டார்கள். அவ்வளவு தூரம் பிள்ளைகளை படிக்க அனுப்பமுடியாது என்று இந்த அப்பாவிகள் மன்றாடியதற்கு கோர்ட் உத்தரவை மீற முடியாது என்று ஒருவர் சொல்கிறார். சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறிய கட்டிடங்கள் எல்லாம் இதே கோர்ட் உத்தரவை மீறிதான் இவ்வளவு காலமாக இருக்கின்றன. இன்னமும் இருந்து கொண்டே இருக்கும்.சட்டத்தின் பிடியில் சிக்குவதெல்லாம் ஏழைகள்தானே.

இப்படி மாணவர்களை வெளியூருக்கு குடும்பத்துடன் துரத்தி அடித்து விட்டு மாணவர்களே சேரவில்லை என்று நகரின் முக்கியப்பகுதிகளில் இருக்கும் மாநகராட்சிப் பள்ளிகளை எல்லாம் மூடிவிடலாம்.அந்த இடங்களை ஊழல் அரசியல்வாதிக்கு தாரை வார்த்துவிடலாம். அவர்கள் அதை கூறு போட்டு வித்து கறுப்பு பணத்தில் புரளலாம். இந்த உண்மை புரியாமல் ஒருவர் திருட்டு வி.சி.டியால் கறுப்பு பணம் வருகிறது என்று அப்பாவியாக பேசுகிறார்.

மறுபடி நூலக விஷயத்துக்கு வருவோம்.
நூலகம் என்றால் பணம் ஒதுக்கி புத்தகம் வாங்குவதுடன் கடமை முடிந்தது என்று எந்த மடையன் நினைத்திருக்கிறானோ தெரியவில்லை.இன்னும் பல ஊர்களில் நூலகம் வாடகைக் கட்டிடத்தில் என்று இடிந்து விழலாம் என்ற யோசனையில்தான் இருக்கின்றன.

திருவாரூர் மாவட்ட மைய நூலகம் இந்த மாதிரி அவல நிலையில் இருந்து  தப்பித்து 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்(?!) புதிய கட்டிடத்தில்தான் இருக்கிறது.இணைய இணைப்புடன் கணிணிகள், பெரிய இடம் என்று கட்டமைப்புக்கு குறைவே இல்லை.ஆனால் பயன்படுத்தும் வாசகர்கள் எண்ணிக்கையைப்பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

நூலகத்தின் உள்ளே உள்ள குறைகள் என்று சொன்னால் பணியாளர்களைத்தான் என் கைவிரல் சுட்டிக்காட்டுகிறது.காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணிவரை என்றுதான் வேலை நேரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் தினமும் காலை 8.15 முதல் 8.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் திறப்பார்கள். தனியார் கடைகளில் வேலை செய்பவர்கள் காலை ஒன்பது மணிமுதல் இரவு பத்துமணிவரை அவதிப்படுகிறார்கள்.
ஆனால் இங்கே காலை எட்டு முதல் இரண்டு மணிவரை ஒரு ஷிப்டும் மதியம் இரண்டு மணிமுதல் இரவு எட்டு மணிவரை இரண்டாவது ஷிப்டும் செயல்படும். ஆறுமணி நேரம்தான் நிரந்தர ஊழியர்களுக்கு பணி. ஆனால் காலை எட்டு மணிக்கு ஒரு நாளும் திறப்பது கிடையாது. வருகைப்பதிவேட்டில் மட்டும் காலை ஏழரை மணி என்று குறிப்பிட்டு விடுவார்கள். எனக்கு என்னவோ வாசகர்களுக்குதான் ஏழரை என்று தோன்றுகிறது.

பின்ன என்னங்க.காலையில ஒன்பது மணிக்கு வேலைக்கோ பள்ளிக்கூடத்துக்கோ போக நினைக்குறவங்க எட்டு மணிக்கெல்லாம் நூலகம் வந்துட்டு ஒரு அரைமணி நேரம் எதாவது படிச்சுட்டு இல்ல புத்தகம் தேடி எடுத்துட்டு போகலாம்னு வந்து பார்த்தா எட்டரை மணி வரை திறக்க மாட்டாங்க. அப்புறம் அரை வெளியில போக வேண்டிய அவசரத்துல இருக்குறவங்க எப்படி நூலகத்துக்கு வருவாங்க?

அடுத்து வாரஇதழ்கள் பிரச்சனை.திருவாரூர் நூலகத்துக்கு சில வார இதழ்கள் ஒரு கடையிலதான் வாங்கிட்டு வருவாங்க. அது சரியான நேரத்துக்கு நூலகம் வந்து சேராது.ஆளாளுக்கு இது என் வேலை இல்லை, உன் வேலை இல்லைன்னு பல நேரங்கள்ல பதினைந்து நாட்கள் வரை புத்தகங்கள் வந்து சேராது. திருவாரூர் நகரின் மையப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற நூலகத்துக்கு வந்து புத்தகங்கள் இல்லைன்னா அடுத்து போகத்தான் வேணுமான்னு யோசிப்பாங்க.

ஆனா இப்படி இருபது நாள் கழித்து எடுத்துட்டு வர்ற புத்தகத்தை சில ஊழியர்களே வீட்டுக்கு எடுத்துட்டுப்போய்ட்டு மறு நாள் மதியம்தான் கொண்டுவருவாங்க. அதுக்கு இடையில யாராவது கேட்டா, யாரோ வாசகர்தான் திருடியிருப்பாங்க அப்படின்னு சொல்லிட்டா அவங்க வேலை முடிந்தது.

அப்ப அவங்க சின்சியரா வேலையே பார்க்குறது இல்லையான்னுதானே கேட்குறீங்க? ஏன் இல்லை...இரவு எட்டு மணிக்குப் பூட்டுறதுக்காக ஏழரை மணிக்கே வாசகர்களை மறைமுகமா விரட்ட ஆரம்பிச்சுடுவாங்களே.

அடுத்து திருவாரூர் நூலகத்துக்கு போறதுல வயசானவங்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிரச்சனையைப் பத்தி பார்ப்போம்.
நாகப்பட்டணம் போற புறவழிச்சாலையில ஒரு வயலுக்குள்ளதான் நூலகம் அமைந்திருக்கு. அரைமணி நேரம் நூலகத்துல இருக்குறதா இருந்தாலும்  திருவாரூர்ல இருந்து போறவங்க சாப்பாடு எடுத்துட்டுப் போறது நல்லது. ஏன்னா, மேம்பாலத்துல ஏறி இறங்குறதுக்குள்ள சாப்பிட்டது எல்லாம் செரிச்சுடும்.

அடுத்த பிரச்சனை, இது தேசிய நெடுஞ்சாலையா இருக்குறதால கனரக வாகனப் போக்குவரத்தும் மிக அதிகம். ரயில்வே மேம்பாலத்துல ரெண்டு பேருந்து போற அளவுக்குதான் வழி இருக்கு. ஆனா இரண்டு பக்கமும் தலா ஒரு அடி அகலத்துக்கு மண் குவிஞ்சு கிடக்கும். அதுல சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட்டுறது கஷ்டம். அதனால கொஞ்சம் விலகி போகும்போது எதிரும் புதிருமா இரண்டு பேருந்து வந்தா அவ்வளவுதான், அவங்க அடிக்கிற ஹாரன் சவுண்டுல நூலகத்துல எவ்வளவு சத்தம் இருந்தாலும் சைலன்ஸ் தான்.

பெரியவங்களே இந்தப் பாதையில போறது கஷ்டம்.அப்புறம் எப்படி சின்னப்பசங்களை அனுப்புவாங்க?படிக்கிறதுன்னா கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அப்படின்னு நீங்க சொல்றீங்க. ஆனா அதுக்கு உயிரோட இருக்கணுமே அப்படின்னு அவங்க சொல்றாங்க.

நாயகன் படத்துல "நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவுமே தப்பு இல்லை." -இந்த வசனத்தை அரசியல்வாதிங்கதான் ரொம்ப கெட்டியா புடிச்சுகிட்டாங்க.234 பேர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டும் கூடப்போற சட்ட சபைக்கு கொடுக்குற முக்கியத்துவம் ஏழை மாணவர்கள் மேல இல்லை.

கமிஷன் அடிக்கிறதோட அரசியல்வாதி தொடர்புடைய யார் யார் பலனடைவாங்க அப்படின்னு  பார்க்குறதோட சரி.அந்த வேலை மக்களுக்கு உபயோகமா இருக்குமா அப்படின்னு எல்லாம் யோசிக்குறதே இல்லை. திருவாரூர்ல பஸ்ஸ்டாண்ட் நெரிசலான பகுதியில இருக்கு.அதை ஊருக்கு வெளியில கொண்டு போனா மக்களுக்கு நல்லது. ஆனா சில வியாபாரிங்க அப்படி செய்யவிடலை. ஆனா நூலகத்தை பொறம்போக்குல.... ச்சை...புறநகர்ல கட்டிவெச்சுட்டாங்க.
ஐம்பது வரிகளுக்குள்ள இந்த பதிவை எழுதிடலாம்னு நினைச்சேன். முடியலை. எழுத எழுத கோபம்தான் வருது. அதனால இப்ப இதோட நிறுத்திக்குறேன்.

சினிமா தொடர்பான ஒரு சந்தேகம்: சினிமாவைக் கிண்டல் பண்ணி அப்பப்ப படம் வந்திருக்கு. அதோட சில சினிமாக்காரர்களோட கண்டனமும்தான்.இப்ப வந்திருக்குற "தமிழ்ப்படம்"  சினிமாக்காரங்க யாரும் மூச்சு விடலையே. இதுக்குப் பேர்தான் பரமசிவன் கழுத்துல இருந்துகிட்டு பாம்பு கருடன்கிட்ட வாலாட்டுறதோ?

வெள்ளி, 29 ஜனவரி, 2010

கலாம் கனவுக்கு நம்பிக்கையூட்டிய புதிய தலைமுறை இளைஞர்

ஜனவரி 6, 2010 அன்று லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது என்ற செய்தி எல்லா நாளிதழ்களிலும் இடம்பிடிக்கக் காரணமான இளைஞருக்கு இந்த துணிச்சலைத் தந்தது லஞ்சம் கொடுக்காமலேயே நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள சட்டத்தில் வழி இருக்கிறது என்ற வல்லுனரின் விளக்கம் புதிய தலைமுறை இதழில் வெளி வந்த கட்டுரைதானாம்.

ராஜ்குமார் என்ற அந்த இளைஞர் பி.பார்ம் படிக்கும் மாணவர் என்ற செய்தி மேலும் நம்பிக்கை அளிக்கிறது. இவர் ஒருவர் மட்டும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து தவறு செய்யும் அதிகாரியைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் போதாது. எல்லாரும் இதே மன உறுதியுடன் சட்டத்தின் துணையுடன் போராடினால் மாற்றம் நிச்சயம்.

சில வாரங்களுக்கு முன்பு திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க அதிகாலையில் இருந்து நிறைய பேர் காத்துக் கிடக்க, சில பொது மக்கள் காவலாளிகளுக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைய முயற்சித்தபோது தள்ளுமுல்லு ஏற்பட்டு காவல்துறை தடியடி நடத்தும் அளவுக்கு நிலமை மோசமாகிவிட்டிருக்கிறது.

லஞ்சம் கொடுத்து முறைகேடாக உள்ளே நுழைய முயன்றவர்களால் கால்கடுக்க வரிசையில் நின்று தங்கள் உரிமைக்குப் போராடியவர்களுக்கு தடியடி.இந்த மாதிரி கொடுமைக்கும் ஒரு வகையில் மக்களேதான் காரணமாக இருக்கிறார்கள்.மக்கள் திருந்தினால் அதிகாரிகள் தங்கள் கையை லஞ்சத்துக்காக நீட்ட முடியுமா?

சில நாடுகளில் கடமையை மீறுவதற்கு மட்டும்தான் லஞ்சம். இங்கே கடமையை செய்வதற்கே லஞ்சம் என்று இந்தியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அது எத்தனை உண்மை!
உண்மை பேசுவது பெரிய விஷயம் இல்லை.பேசுபவரும் இதே போல் நேர்மையாக இருக்கவேண்டும். அப்போதுதான் பூரண பலன் கிடைக்கும்.

******
இது குறித்து தினமலர் வார இதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது.அதுவும் உங்கள் பார்வைக்கு.வாரமலர்
அறத்திற்கு அழிவுண்டா? (ஆன்மிகம்)
- ஞானானந்தம்
- வைரம் ராஜகோபால்


உண்மையே பேசு; அறமே செய் என்கிறது வேதம். இந்த கலிகாலத்தில் உண்மையே பேசினால் ஊரெல்லாம் எதிரி; உலகெல்லாம் பகை என்று பலர் பயப்படுகின்றனர். உண்மையைப் பேசுகிறவர்கள், உண்மை பேசினால் மட்டும் போதாது; அறவழியில் வாழ்கிறவர் களாகவும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்வு, அறவழியில் இல்லாமல் உண்மை பேசுகிறேன் என்று பிறரைப்பற்றி பேசினால் துன்பம் தான் மிஞ்சும்.

பழைய வைத்திய முறையில் மருந்துகள் கொடுக்கும் போது, மருந்து மட்டும் சாப்பிட்டால் போதாது; பத்திய உணவுகள் சாப்பிட்டு, சில மோசமான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால்தான் மருந்து வேலை செய்யும் என்று சொல்வர். சிலசமயம், பத்தியமற்ற உணவுகள் சாப்பிட்டால் மருந்து விபரீதமாகக் கூட வேலை செய்யும்; அதே மாதிரிதான் உண்மை பேசுவது என்பது மருந்து மாதிரி. அறவழியில் வாழ்வது பத்திய உணவு மாதிரி. இரண்டும் இணைந்து நிகழ வேண்டுமே ஒழிய, உண்மை மட்டும் பேசி அறவழியில் நாம் நடக்கா விட்டால் அடி, உதைதான் கிடைக்கும்.

அறவழியில் நடக்கக் கூட பலர் பயப்படுகின்றனர். அறவழியில் நடந்த ராமர், தருமர் கஷ்டப்பட்டனர். அயோக்கியர்கள் சுகவாழ்வு வாழ்கின்றனர் என்று பலர் புலம்புகின்றனர். இது மாயை; பெரிய பொய். அவர்கட்கு நேர்ந்த சோதனை களைத் துன்பங்களாக கருதுகின்றனர்; ஆனால், அவர்கள் அப்படி இல்லை. நெருப்புக்குக் காகிதம் அஞ்சும்... தங்கம் பயப்படுமா? நீங்கள் அறவழியில் நடந்தால் வரும் அனுபவங்களைத் துன்பம் என்று முத்திரை குத்தாதீர்கள்; அறவழியில் நடப்பவருக்கு ஒருநாளும் துன்பம் வராது. "இன்பமே எந்நாளும்... துன்பம் இல்லை' என்கிறது நாவுக்கரசர் தேவாரம்.

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு திருட்டுப் போய்விட்டது. அரசனுக்குக் கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினான்; பயன் இல்லை."ஒரு மாதத்திற்குள் சிலம்பைக் கொண்டு வந்து தருபவர்கட்கு பெரும் பரிசுத் தொகை...' என்று அறிவித்தான். கூடவே, மக்களை மிரட்ட, அதற்கு பிறகு, அது யாரிடம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்று அறிவித்தான்.

அந்த ஊருக்குத் தம் சீடர்களோடு வந்து கொண்டிருந்தார் துறவி ஒருவர். வழியில் கீழே கிடந்த சிலம்பு இவர் கைக்கு அகப்பட்டது. விசாரித்தபோது, "இது ராஜாவின் சொத்து; அதை உடனே கொண்டு போய் கொடுத்தால் பரிசு உண்டு. குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கொடுத் தால், மரண தண்டனை!' என்று துறவிக்குத் தகவல் கிடைத்தது.

அதை கொடுக்கவில்லை துறவி; வைத்துக் கொண்டார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவே இல்லை. சரியாக எந்த நாளுக்குப் பிறகு, கொடுத்தால் மரண தண்டனை என்று ராஜா அறிவித்தாரோ, அதற்குப் பிறகு, அரசரிடம் சிலம்பைக் கொடுத்தார். "இப்போது உமக்கு மரண தண்டனை நான் விதிக்க வேண்டி இருக்குமே, ஏன் கிடைத்ததும் தரவில்லை?' என்று சீறினான் அரசன்.

"ஒன்று... கிடைத்ததும் ஓடோடி வந்திருந்தால் பரிசுக்கு நான் ஆசைப்பட்டதாக அர்த்தம்; நான் பரிசை விரும்பவில்லை. இரண்டு, மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி கொடுக்காமலேயே வைத்திருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தம்; நான் மரணத்திற்குப் பயப்படுபவன் இல்லை. சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் என்று ஆகிவிடும்; நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை. அதனால், இப்போது கொடுத்து விட்டேன்!' என்றார் துறவி. "இப்போது உமக்கு மரணதண்டனை கிடைக்குமே!' என்றான் அரசன். அவனைப் பார்த்து, "அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம், உன் சட்டத்தை விட மேலானது... விடு வழியை...' என்று கூறியபடி கம்பீரமாக நடந்தார் துறவி. தலை வணங்கி வழிவிட்டான் அரசன்.
அறம் அழிவற்றது.
***

புதன், 27 ஜனவரி, 2010

அன்பாலயம்

அந்த அரசுக்கல்லூரியில் முதல் நாள் வகுப்புகள் அவளுக்கு இன்றுதான் ஆரம்பம். கல்லூரி வளாகத்தில் நுழைந்தபோது அங்கே பெரும்பாலான மாணவிகள் சுரிதாரில்தான் இருந்தார்கள். தாவணி அணிந்து சென்றவர்களில் தான் மட்டும்தான் பளிச்சென்று இருக்கிறோம் என்பதை அவளும் உணர்ந்தாள்.

"இந்த மாதிரி பொண்ணுங்க மாடர்ன் டிரெஸ்சை இறுக்கமா போட்டு வந்தா ஏதேதோ எண்ணங்கள் வரும். ஆனா புத்தம்புது பாவாடை தாவணியை கண்ணியமா உடுத்திட்டு வந்து நமக்கு தப்பான நினைப்பு வராம பிரமிச்சுப்போக வெச்சுட்டாளே..."என்று அந்த மாணவன் சத்தமாகவே சொன்னான்.

நாகரிகமான இந்த கமெண்ட் தேன்மொழிக்கும் பிடித்திருந்தது.

"என் பொண்ணு மூணு வருஷம் கல்லூரியில் படிச்சு முடிச்சதும் கலெக்டராகுறதுக்கும் தொடர்ந்து படிக்கவெப்பேன். அவளுக்கு இருக்குற திறமைக்கு அவ விருப்பப்பட்டா பிற்காலத்துல குடியரசுத்தலைவரா கூட ஆகலாம்.நீ வா கண்ணு...உங்கம்மா கிடக்குறா...கல்யாணம், புள்ளைங்க, குடும்பம்...பொண்ணுன்னா இது மூணும்தான்னு நினைக்குற சராசரிதானே அவ..."என்று மனதுக்குள் இருந்த பாசத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்திய தேன்மொழியின் தந்தையே இன்று முதல்நாள் வகுப்பு என்பதால் கல்லூரியில் தேன்மொழியைக் கொண்டு வந்து விட்டுச்சென்றார்.

"வகுப்புக முடிந்ததும் நம்ம கடை காயின்பாக்ஸ் போனுக்கு தகவல் சொல்லு. நானே வந்து அழைச்சுட்டுப் போறேன்...இன்னைக்கு ஒருநாள் மட்டும்." என்றுதான் மகளிடம் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் வகுப்புகள் தொடங்கிய பத்தாவது நிமிடமே வணிகவியல்துறை அட்டெண்டருடன் மாரிமுத்து வந்து நின்றான். அவன் வெளுத்துப்போன முகத்துடன் வகுப்பறை வாசலிலேயே தயங்கி நிற்க, அட்டெண்டர் உள்ளே நுழைந்து பேராசிரியரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.

"தேன்மொழி யாரும்மா?..."சற்று முன் இருந்த கம்பீரம் பேராசிரியரின் குரலில் இருந்து விடைபெற்றுச் சென்றிருந்தது.

லேசான தயக்கத்துடன் தேன்மொழி எழுந்து நின்றாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று புதிதாய் உடுத்திய பாவாடை தாவணி இவளுக்கு அசவுகர்யமாய் தெரிந்தது.

"இந்தப் பையன் யாருன்னு தெரியுமாம்மா?"

"எங்க கடையில வேலை செய்யுற பையன் சார்."

"நீ வீட்டுக்கு கிளம்பும்மா...உங்க அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலியாம்..."என்று மட்டும்தான் அவர் சொன்னார்.

அப்பாவுக்கு நெஞ்சுவலிதான்...நெஞ்சுவலி மட்டுமேதான் என்று நம்பிக்கொண்டு கிளம்பும் அளவுக்கு தேன்மொழியை சுப்பையன் வளர்க்கவில்லை.

பேராசிரியரின் பரிதாபப்பார்வையே தேன்மொழியின் யூகத்துக்கு எல்லாம் இடமில்லாத வகையில் விஷயத்தைப் புரியவைத்துவிட்டது.

தான் கொண்டுவந்த பையை எடுத்துக்கொண்டு மவுனமாக வெளியேறினாள்.மாரிமுத்துவின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடி காய்ந்து நின்ற கோடு நன்கு தெரிந்தது.தேன்மொழியின் முகத்தைப் பார்த்ததும் அவன் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர்.

யாரோ ஒருவருடைய இருசக்கர வாகனத்தையோ அவன் இரவல் வாங்கியிருந்தான். அதில் அமரும்போது,"அப்பாவுக்கு என்னாச்சு..."என்றான்.

"முதலாளிக்கு நெஞ்சுவலி..."என்ற அவன் வேறு எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினான்.


"அதத்தான் புரொபசரே சொன்னாரே."என்ற தேன்மொழிக்கு மாரிமுத்துவிடமிருந்து பதில் இல்லை.இப்போது அவன் பேச மாட்டான் என்பதை தேன்மொழி உணர்ந்து கொண்டாள்.

திருவாரூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் நாகை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது அந்த அரசுக்கல்லூரி.

மாரிமுத்து, புறவழிச்சாலையிலோ அல்லது மரணப்பாலம் வழியாகவோ கடைத்தெருவுக்குள் செல்லாமல் மூன்றடி அகலமுள்ள சிறு பாலம் வழியாக ஓடம்போக்கி ஆற்றைக் கடந்து திருவாரூருக்குள் நுழைந்தான்.

அவன் மருத்துவமனை எதற்கும் செல்லாமல் ஐயனார்கோயில் தெருவுக்குள் சென்றபோதுதான் தேன்மொழிக்கு விபரீதம் புரிந்தது.

இவர்கள் வீட்டின் அருகே சிறு கும்பலாக மக்கள் கூடியிருந்ததைத் தொலைவிலேயே தேன்மொழி கண்டுகொண்டாள்.வீட்டை நெருங்கும்போதே பெண்களின் ஒப்பாரி சத்தம் அந்தப் பகுதியையே குலுங்க வைத்துக்கொண்டிருந்தது.

வெளியில் நின்ற மக்கள் அனைவரின் பரிதாபப்பார்வையும் இப்போது தேன்மொழியின் மீது.

வண்டியில் இருந்த அவள்,"மாரிமுத்து...இப்பவாச்சும் உண்மையான தகவலை சொல்லக்கூடாதா..."என்றாள்.

"முதலாளி உங்களைக் காலேஜூல இறக்கி விட்டுட்டு திரும்பும்போது பைபாஸ் ரோட்டுல பெட்ரோல் போட்டுட்டு 'பங்க்'கை விட்டு வெளியே வந்திருப்பார் போலிருக்கு...நாகப்பட்டணத்துல இருக்குற எண்ணை கம்பெனிக்கு ஏதோ இரும்பு சாமான் ஏத்திட்டுப் போன லாரியில நீட்டிகிட்டு இருந்த இரும்பு பைப்புல இடிச்சு கீழே விழுந்திருக்காரு.ஸ்பாட்டுலேயே..."என்று மாரிமுத்து பேச்சை நிறுத்திக்கொண்டான்.

இப்போது கண்கள் கலங்க தேன்மொழி வீட்டுக்குள் நுழைந்தாள்.

சுவரோரமாக சுப்பையனின் புகைப்படம். முல்லைப்பூச்சரம் அதில் இருக்க, அதன் முன்னால் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அருகில் இரண்டு வாழைப்பழங்கள் புகைந்து கொண்டிருக்கும் பத்திகளுக்கு ஸ்டாண்டாக மாறியிருந்தன.

உள்ளூரில் இருந்த சில உறவுக்காரப் பெண்கள் வந்து தேன்மொழி மீது சாய்ந்து கொண்டு அழுதார்கள்.

'உயிருள்ள பிணங்கள் செத்துப்போன பிணத்தைச் சுற்றி மர்ந்து அழுகின்றன...'என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது தேன்மொழியின் நினைவில் வந்து நின்றது.

கையில் இருந்த புத்தம்புது பேக்கைப் பார்த்தாள்.

'ஸ்கூலுக்குப் போனப்பதான் ஐம்பது கிலோ புத்தகத்தைத் தூக்க வசதியா அந்தப் பையை வெச்சிருந்த. இனிமே அது உனக்கு வேணாண்டா கண்ணு.'என்ற சுப்பையன், இவளையும் அழைத்துச் சென்று நேற்றுதான் வாங்கித் தந்தார். இன்று பேக் இருக்கிறது. அவர் இல்லை.

தேன்மொழி அதைக் கொண்டு சென்று தந்தையின் புகைப்படத்தின் அருகில் வைத்துவிட்டு அம்மா பக்கத்தில் அமர்ந்தாள்.

இவள் மீது சாய்ந்து அழுத வேதவள்ளி, சட்டென்று மயங்கிச் சரிந்தாள். தண்ணீரை முகத்தில் அடித்து எழுப்பலாம் என்று வந்தவளைத் தடுத்த தேன்மொழி, அம்மாவை மடியில் படுக்க வைத்துக்கொண்டாள்.

இந்த நேரத்திலாவது அம்மாவின் அழுகை சற்று ஓய்ந்து அமைதியாக இருக்கட்டுமே என்ற எண்ணம். இப்போது மற்ற பெண்களின் அழுகை சத்தம் சற்று குறைந்திருந்தது.

ஒருத்தி,"ஏய்...தேனு...வாய்விட்டுக்கதறி அழுடி. சோகத்தை நெஞ்சுக்குள்ளேயே அடக்கி வெச்சிருந்தா உன் மனசு தாங்காதுடி..."என்று இவளை உலுக்கினாள்.

எதுக்காவது அம்மா அடிச்சா கூட,'தேன்மொழி...நீ அழக்கூடாது...அழறதால காரியம் ஆகப்போறது இல்லை.எந்தப் பிரச்சனை...சோகம் வந்தாலும் துணிச்சலான மனசோட இருந்தாதான் சமாளிக்க முடியும்னு சொல்லிக்கொடுத்தீங்கிளே...இப்ப நீங்க இல்லைன்னு தெரிஞ்ச பிறகும் உங்களோட அறிவுரைதானேப்பா என் மனசுல நிக்குது.என்னால எப்படி வாய்விட்டு அழ முடியும்?...'என்று தேன்மொழி மனதுக்குள் அழுதாள்.

"தேன்மொழி...சாவு வீட்டுல இப்படியா அலங்காரத்தோட இருக்குறது?...பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க?...ரூமுக்குள்ள போய் பழைய துணியை உடுத்திட்டு வா..."என்று ஒருத்தி காதோரமாக கிசுகிசுத்தாள்.

அடுத்த நொடியே தேன்மொழியின் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல்,"இந்தக் காலத்து பொண்ணுங்களுக்கு நல்லது, கெட்டது எதையுமே சொல்ல முடியலை...க்கும்..."என்று முணுமுணுத்தபடி நகர்ந்தாள்.

"பிறந்தநாள் அன்னைக்கே கல்லூரிக்கு முதன்முதலா போற பாக்கியம் எத்தனைபேருக்கு கிடைக்கும்...உனக்கு என்ன வேணும்னு சொல்லு." என்று கல்லூரியில் முதல் நாள் வகுப்பு தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டவுடன் சுப்பையன் தன் மகளிடம் கேட்டார்.

"பாவாடை தாவணியில தலைநிறைய மல்லிகைப்பூ வெச்சு பிரகாசமான குத்துவிளக்கு மாதிரி அலங்காரத்துல பார்க்கணும்னு சொல்வீங்கிளே..."என்று தயக்கத்துடன் தேன்மொழி சொன்னாள்.

மஞ்சள் வண்ண ஜாக்கெட், பாவாடை, அரக்கு நிற தாவணி ஆகியவை மூன்றே நாட்களில் தயாரானது.

இன்று காலையில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து முடித்ததும் பிரகாரத்திலேயே அம்மா அப்பா காலடியில் விழுந்து அவர்களின் வாழ்த்துக்களை வாங்கினாள்.

"சகல செல்வ வளமும் பெற்று நூறு வருஷம் வாழணும்மா..."என்று வாழ்த்திய அப்பா,'அவரது ஆயுளையும் தனக்கே கொடுத்துவிட்டுப் போய்விட்டாரோ...பெரும்பாலான நாட்கள் சுரிதாரிலும் இரவு உடையிலுமே இருந்துட்டேன். நீங்க கடைசியா வாங்கிக்கொடுத்த உடையுடனேயே உங்களை வழியனுப்பனும்னு நினைக்குறேன்...மத்தவங்களுக்கு என்ன புரியும்...'என்ற எண்ணங்கள் தேன்மொழியின் மனதில் அலைமோதிக்கொண்டிருந்தன.

தேன்மொழியின் மடியில் படுத்திருந்த வேதவள்ளிக்கு லேசாக நினைவு திரும்பியதும் எழுந்து அமர்ந்தாள்.மகளின் முகம் பார்த்ததும் மீண்டும் அவளுடைய அழுகை.

"பொதுவாகவே நான் சொல்றதைக் கேட்காம உன்னோட பேச்சுக்குதானே அவர் மதிப்பு கொடுப்பாரு...பஸ்ஸ்டாண்டுல கடை வெச்சிருக்கீங்க...நம்ம பொண்ணை அங்க அழைச்சுட்டுப் போகாதீங்க...கண்ட பயலும் ஒரு மாதிரியா பார்ப்பானுங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டாரே.

எனக்கு உடம்பு சரியில்லாம போனா கடையைப் பார்த்துக்க ஒரு வாரிசு வேணாம்...நீ சும்மா இருடின்னு என் வாயை மூடுவாரே...இப்ப ஒரேடியா அவரு கண்ணை மூடிட்டு போயிட்டாரே...தேனு...நான் கூப்பிட்டா வரமாட்டாரு...உங்கப்பாவுக்கு உன் மேலதான பாசம் அதிகம். நீயே கூப்பிட்டேன்..."என்று அழும் வேதவள்ளியைப் பார்த்து சுற்றி இருந்தவர்கள் மீண்டும் அழுதார்கள்.

பிறகு நேரம் ஆக ஆக அழுகுரல் குறைந்து வந்திருந்தவர்களின் பேச்சுக்குரல் அதிகரித்தது.

சுப்பையனின் உடல் வந்தபிறகு அடுத்த சுற்று அழுகை ஆரம்பமாகும். அதுவரை பக்கத்து வீட்டு சண்டை முதல் பாகிஸ்தான் போர் வரை பேசியே மாய்வார்கள். அதுசரி...தங்கள் வேலைகளைப் போட்டுவிட்டு வந்து கடமையே என்று உட்கார்ந்திருப்பவர்கள் அதிகம்.இவர்களை என்ன குற்றம் சொல்ல முடியும்?

சுமார் நான்கு மணிக்குதான் சுப்பையனின் உடல் வரும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு சிலரின் பேச்சு, சுப்பையன் பஸ்ஸ்டாண்ட் நுழைவாயிலில் வைத்திருந்த கடை மீது திரும்பியது.

"கடன் வாங்கி வீட்டைக் கட்டி முடிச்சு ரெண்டு வருஷம் கூட ஆகலை. பஸ்ஸ்டாண்டுல அவன் வெச்சிருந்த கடையைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையிலயும் மாட்டிகிட்டான்.ஏண்டா...இவ்வளவு கடன் வாங்குற...நாளைக்கே பொண்ணுக்கு கல்யாணச் செலவு வந்தா என்னடா பண்ணுவேன்னு கேட்டேன்.

'அவளை இப்பதான் மாமா கல்லூரியில சேர்த்துருக்கேன்.மூணு வருஷப் படிப்புக்கு அரசுக்கல்லூரியில ஒண்ணும் பெரிய செலவாகாது. அடுத்து அவ ஆசைப்படி கலெக்டராயிட்டான்னா எனக்கு என்ன கவலை. அவ்வளவு ஏன்?...இப்பவே நான் கவலைப்படலை...கடையில கடவுள் புண்ணியத்துலயும் வாடிக்கையாளர் ஆதரவுலயும் தினமும் பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாம வியாபாரம் ஆகுது. அப்புறம் என்ன...'என்று நாலு நாளைக்கு முன்னால ரொம்பவும் துணிச்சலாப் பேசிய சுப்பையன் இப்போ இல்லை.என்ன வாழ்க்கை இது?" என்று ஒருவர் உண்மையான வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

"பஸ்ஸ்டாண்டுல ஆம்பளங்க கடை நடத்தவே தடுமாற வேண்டியிருக்கு...இனிமே ஒத்த பொம்பளைப் புள்ள என்ன செய்யும்?...கடையை பொருளோட வித்துட்டா வீட்டுக்கடனையும் அடைச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்.

இன்சூரன்ஸ் பணமெல்லாம் வந்தா அப்படியே டெப்பாசிட் செஞ்சு வட்டியை வாங்கித்தின்னுட்டு அந்தப் புள்ளை கலெக்டருக்குப் படிச்சுடலாம்.நல்லவேளை...ஒரே ஒரு பொம்பளைப்புள்ளையோட போச்சு. அடுத்து ஒண்ணு ரெண்டு இருந்தா தேன்மொழி, மாவட்ட கலெக்டர் என்ன...பில் கலெக்டராக்கூட ஆக முடியாது.

ஐ நூறுக்கும் ஆயிரத்துக்கும் ஏதாவது எஸ்.டி.டி பூத், ஜெராக்ஸ் கடைன்னு கிடந்து கஷ்டப்படவேண்டியதுதான்.

ஆம்பளை இல்லாம தடுமாறுற வீடுன்னு இனிமே கடையைக் கூட அடிமட்ட விலைக்குதான் கேட்பாங்க..."என்று ஒருவர் பேசுவதைக் கேட்கும்போது தேன்மொழிக்கு கோபம் வந்தது. ஆனாலும் அதுதானே உண்மை என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.பெண்களின் ஒப்பாரி சத்தம் இல்லாததால் அந்தப் பெரியவர்கள் பேசியவை அனைத்தும் தேன்மொழிக்கு தெளிவாக கேட்டன.

ஒரு ஆம்பளைப் புள்ள இருந்துருந்தா செத்ததுக்கு அப்புறம் கொள்ளியும் போட்டிருக்கும். பேர் சொல்லும்படியாவும் இருந்துருக்கும். என்று யாராவது சொன்னால் சுப்பையன் அவர்களைக் கடித்து குதறாத குறையாகப் பேசி விரட்டி விடுவார்.

'ஏன்...என் பொண்ணு கொள்ளி வெச்சா என் உடம்பு எரியாதா...உங்க வாயை மூடுறதுக்காக இல்லடா...பல எளிய மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சு அவ ஆசைப்படியே கலெக்டராக்குறதுன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். உங்க வேலையை நீங்க பாருங்க...'என்று ஒருமுறை இவள் கடையில் இருக்கும்போதே ஒருவரிடம் கோபப்பட்டதை நினைத்துப்பார்த்ததும்,"உங்க ஆசையை நிறைவேத்துவம்ப்பா..."என்று தேன்மொழியின் உதடுகள் தன்னிச்சையாக முணுமுணுத்தன.

நாலேகால் மணிக்கு சுப்பையனின் உடலைப் பிரேதப் பரிசோதனை முடிந்து எடுத்து வந்தார்கள்.

சுப்பையனின் காலடியில் கிடந்து வேதவள்ளி கதறிக்கொண்டிருந்தாள்.

"இந்த நல்ல மனுஷன் செத்ததும் ஊரே அழுது புலம்புது. அவரு பெத்த பொண்ணோட கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வருதான்னு பாரு..." என்று ஒப்பாரிகளுக்கு நடுவேயும் சில வசவுகள்.

தேன்மொழியைப் பற்றி கண்ணியமாக கமெண்ட் அடித்தவன் கையிலும் ஒரு மாலை. சுப்பையனின் உடலில் அதைப் போட்டு விட்டு அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுப் போனான். அவனைத் தொடர்ந்து நிறைய கல்லூரி மாணவர்கள், மாணவிகள்.

பத்து நிமிட பந்தத்தில் எதுவும் தெரியாவிட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கும் தோழமை உள்ளங்கள்.

சாவுக்குப் போகாவிட்டால் நம் வீட்டுச் சாவுக்கு அங்கிருந்து யாரும் வராமல் போய்விடுவார்களே என்ற அச்சத்தில் வந்து நிற்பவர்களை விட இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் தேன்மொழியின் மனதில் இருந்தது.

"சுப்பையனின் தம்பி மகன் பொள்ளாச்சியில் இருந்து வரணுமே...வேற யார் கொள்ளி போடுறது..."என்ற சலசலப்பு கூட்டத்தில் தோன்றியது.

அப்போது நான்கு வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் நாற்பது பேர் கண்ணீருடன் வந்து சுப்பையனின் உடலைப்பார்த்து அழுதார்கள்.அவர்கள் பின்னால் எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் தியாகேசன்.

தேன்மொழிக்கு பளீரென தந்தையிடமிருந்தே அறை வாங்கியது போன்ற உணர்வு.

'கடவுளே...இவர்களை எப்படி மறந்தேன்...அப்பா, உங்க ஆசைப்படி கலெக்டராகணும்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு நாளா பெரியவர் தியாகேசன் நடத்துற ஆதரவற்ற குழந்தைகள் இல்லமான அன்பாலயத்தைப் பராமரிக்க பெருமளவு உதவி செய்தது நீங்கதானே...அவங்களைத் தொடர்ந்து பராமரிக்கிறது தானே என்னோட முதல் வேலையா இருக்கணும்...கடையை நானே தொடர்ந்து நடத்துனா இது சாத்தியம்தான்.

தபால் மூலமா பட்டப்படிப்பை முடிச்சுட்டு பிறகு யு.பி.எஸ்.சி தேர்வுக்கு முயற்சி செய்தா சாதிக்க முடியாதா என்ன?...'

சில நிமிடங்களுக்குள் எதிர்காலம் குறித்து முடிவெடுத்த தேன்மொழி, கொள்ளி யார் வைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தவர்களிடம் போய் நின்றாள்.

அவளுடைய மன உறுதியை அவளின் முகத்திலேயே கண்டுகொண்டார்கள்.சுப்பையனின் இறுதிச்சடங்கை தேன்மொழி செய்யத் தயாரானபோது யாருக்கும் எதிர்க்கத் தோன்றவில்லை.
******

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

நாட்டு நடப்பு - பல சந்தோஷங்களும் சில சங்கடங்களும் - 24.01.2010

தினமணி கதிர் 2009ம் ஆண்டு சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு 10000 ரூபாய் பெற்ற "பரட்டச்சி" சிறுகதையை எழுதியவர் ஷாராஜ்.இந்தக் கதையில் சமனற்ற மனநிலையை உடைய பரட்டச்சியையும் யாரோ ஒரு கயவன் கருவுறச்செய்து விடுவான். வீட்டுத்திண்ணையில் இட்லி வியாபாரம் செய்து வரும் ஒரு பெண்தான் இவளுக்கு உணவு கொடுத்துவருவாள்.
பரட்டச்சிக்கு குழந்தை பிறக்கப்போகும் நேரம், குப்பைத்தொட்டியில் யாரோ ஒருவர் பச்சிளம் குழந்தையை வீசிச்சென்றிருப்பார்கள்.தெருவே கூடி நின்று தொண்டு நிறுவனத்துக்கு போன் செய்வோமா அல்லது காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிப்போமா என்று விவாதித்துக்கொண்டு இருப்பார்கள்.

குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் அழுகுரல் திடீரென்று நின்றுவிடும். அந்த நேரத்தில் நிறைமாதமாக அங்கு வந்த பரட்டச்சி குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்தி தன் மார்பில் உயிர்ப்பால் ஊட்ட முயற்சி செய்வாள். பரட்டச்சிக்கு அது நாள் வரை உணவளித்து வந்த இட்லிக்கார அம்மா கூட குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் பசிக்கு என்ன செய்வது என்று யோசிக்காததை நினைத்து அதிருவதை கதையைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

அதிர்ந்தது கதையைப் படித்த நானும்தான்.நாம் என்னதான் சமூக சேவை செய்வதாக கூறிக்கொண்டாலும் நம்மைச் சுற்றி ஒரு மெல்லிய வட்டத்தைத் தாண்டி செல்வது இல்லை, ஏன் அது பற்றி யோசிப்பது கூட இல்லை என்ற உண்மையை உணர்ந்தேன்.

இந்த எழுத்தாளருடன் நான் கைபேசியில் பேசியது உண்டு.அவர் தன்னுடைய கைபேசி எண்ணுடன் எனக்கு கடிதம் எழுதுவதற்கு காரணம், தினமலர்-வாரமலருக்கு நான் எழுதிய கடிதம்தான்.

07.06.2009 தினமலர்-வாரமலரில் அம்ரிதவர்ஷிணி என்ற புனைப்பெயரில் விஷவியூகம் என்ற சிறுகதை பிரசுரமாகியிருந்தது.

தற்கொலை செய்யப்போகும் காதலர்கள், தங்களைக் கொத்த வந்த பாம்பிடமிருந்து ஒரு போராட்டம் நடத்தி தப்பித்தபிறகு மீண்டும் வாழ நினைப்பதுதான் கதை.

சின்னக் குழந்தைகளிடம் இருந்து பொம்மையை வாங்க முயற்சித்தால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் வேறு பல காரணங்களால் அந்த பொம்மையை சிதைக்கவோ, தூக்கி எறியவோ அவர்கள் தயங்குவது இல்லை.

மனிதர்களும் இப்படித்தான்.கடவுள் கொடுத்த உயிரை அற்பக் காரணங்களால் துறக்க நினைப்பார்கள். ஆனால் ஒருவன் கொலை செய்ய வந்தால் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் வழிகள் வலிமையானதாக இருக்கும். இதை அழகாக உணர்த்தியது இந்தக் கதை.


-இதுதான் நான் வாரமலருக்கு எழுதி அனுப்பிய வாசகர் கடிதம். இந்தக் கடிதம் வாரமலரின் "அர்ச்சனை" பகுதியில் பிரசுரமாகவில்லை. ஆனால் இதை சம்மந்தப்பட்ட எழுத்தாளரிடம் தினமலர் நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கிறது.இந்த வரிகள் ஈர்த்ததால்தான் எனக்கு ஷாராஜ் அவர்கள் நேரடியாக கடிதம் எழுதியிருக்கிறார்.

விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 1
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 2
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 3
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 4

இதைப் பற்றி நான் இப்போது சொல்லக் காரணம், எனக்குத் தெரிந்தவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண் பெற்றதற்காக ஆசிரியை திட்டியதைத் தாங்க முடியாமல் ஒரு தூக்கு. மனைவி மாற்றானுடன் இருந்ததைப் பார்த்தததும் விஷம்.குடிக்கு அடிமையானதும் தொழிலை இழந்து வருமானம் தடைபட்டு பைத்தியம் பிடிக்கும் நிலைக்குச் சென்று தூக்கு.

இது போல் எனக்குத் தெரிந்து பிரச்சனையை விடத்தெரியாமல் உயிரை விட்டவர்கள் அனைவருமே 17 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போ மற்ற வயதினர் தற்கொலை செய்யலாம் என்று சொல்வதாக நீங்கள் அர்த்தம் கொள்ளக்கூடாது. நமது முன்னாள் குடியரசுத்தலைவர் முதல் கறை படியாத தலைவர்கள், ஊழலில் ஊறும் அரசியல்வாதிகள் - இவர்களில் யாருமே இளைய தலைமுறையை குறைத்து எடை போடுவதில்லை. நல்ல மரியாதைதான் வைத்திருக்கிறார்கள். பிறகு ஏன் மற்றவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தன்மீது வைக்க தயங்க வேண்டும்?(எதிலும் விதிவிலக்குகள் நிறையவே இருக்கின்றன.அதை எல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய கடமை இளைய தலைமுறைக்கு அதிகமாகவே இருக்கிறது.)

நேற்றும் ஒரு துர்மரணம். தொழிலில் நன்றாக முன்னேறி வந்த அவன் சில காலமாக மதுவுக்கு அடிமையாகி இருந்தான்.நேற்று காலை முதல் அவன் எங்களிடையே இல்லை.

தவறோ சரியோ ஒருவரின் மனம் நினைப்பதை அப்படியே ஒப்புக்கொள்ளும் ஆட்களைத் தவிர மற்றவர்களை அருகில் சேர்க்கவோ, அவர்கள் சொல்வதில் நன்மை தரக்கூடியது இருக்கிறதா என்று நினைக்கவோ இன்று பலரும் தயாராக இல்லை.

என்னுடைய 5 வயதில் இருந்தே அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்திருக்கிறேன்.இதில் எதுவும் பள்ளிக்கூட பாடம் தொடர்பானது அல்ல.ஆனால் ஒரு நாளும் உயிரை விடுவது பற்றி சிந்தித்ததே இல்லை.இன்று பலருக்கும் பள்ளிப்பாடம்தான் மிகப்பெரிய பிரச்சனையாகத் தோன்றுகிறது.

இப்படி தப்பான முடிவு எடுப்பவர்கள் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். போனால் வராதது உயிர், காலம் என்பார்கள்.பல விஷயங்களை இன்று செய்யவில்லை என்றால் நாளை அல்லது நான்கு மாதம் கழித்து கூட செய்து கொள்ளலாம். அப்படி செய்வதற்கு முதலில் உயிருடன் இருக்க வேண்டும்.இதை யோசித்தால் யாருக்கும் தற்கொலை எண்ணம் தோன்றாது.

இன்று நாளிதழில் செய்தி ஒன்று படித்தேன். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறான் ஒரு கயவன். அவன் மீது புகார் அளித்துவிட்டார்கள் என்று அத்துமீறிய பையனின் பெற்றோர் பாதிக்கப்பட்ட பெண்ணையே வந்து திட்டியிருக்கிறார்கள். ஊர் முழுவதும் விஷயம் பரவியதால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தப்பு செய்த பையனைத் தண்டிப்பது இருக்கட்டும். முதலில் அவனுக்குப் பரிந்து பேசிய அவன் பெற்றோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

1998ல் சரிகாஷா மரணம்தான் கடைசி ஈவ்டீசிங் பலியாக இருக்கவேண்டும் என்று இதைத் தடுக்க அதிகாரம் படைத்த அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் தினம் தினம் நடக்கும் பிரச்சனைகளைப் பார்த்தால் பல நேரங்களில் வேதனைப்படுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நம் நாட்டில் உள்ள சட்டங்கள் பிடிக்காத ஆளின் மீது பொய் வழக்குப் போடவும் பிடித்த ஆள் தவறே செய்தாலும் தப்பிக்க வைக்கவும்தான் அதிகமாக உதவி செய்கின்றன.

இன்னும் ஒரு மாத காலத்தில் பள்ளியில் பத்தாம்வகுப்பு, பிளஸ்டூ பொதுத்தேர்வுகள் தொடங்கப்போகின்றன.தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளை விட பெற்றோர்தான் அதிகமாக டென்ஷன் ஆவார்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். தற்கொலை என்பது நிச்சயம் தீர்வு இல்லை. இதை மனதில் நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை அந்த முடிவெடுக்கத் தூண்டி விடாதீர்கள்.

பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டாலும் அதை அச்சமின்றி பெற்றோரிடம் சொல்லி தீர்வு காணும் துணிச்சல் பலருக்கும் இல்லாமல் போவதற்கும் பெரியவர்கள்தான் காரணம்.

நீ ஒழுங்கா போனா அவன் ஏன் தொந்தரவு செய்யுறான்.-இந்த வார்த்தை மிகவும் தவறு.இது மாதிரி பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொன்னாலும் பெரிய தண்டனை கிடைக்காது என்ற துணிச்சல்தான் இப்படிப்பட்ட அத்துமீறல்களுக்குக் காரணம்.ஒரு ஊரில் லோக்கல் தாதாவின் பொண்ணுகிட்ட இப்படிப் போய் வம்பு செய்யுறது ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். அந்த வயசு காரணமா அந்தப் பொண்ணே யாரையாச்சும் பார்த்தால் கூட தெறிச்சு ஓடுறவங்க எண்ணிக்கைதான் அதிகமா இருக்கும்.

******

சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களில் ஒன்று - கல்யாண் ஜூவல்லர்சின் நம்பிக்கை - வாழ்க்கையின் ஆதாரம்.

காதலன், காதலியை அழைத்துச் செல்ல ஆள், வாகனத்துடன் வந்து கோயிலில் காத்திருப்பான். "நம்ம மக ஓடிப்போகப்போறாளாம்" என்று சொல்லும் மனைவியை அடக்கும் தந்தை,"அவ என் பொண்ணு " என்று நம்பிக்கையுடன் சொல்வார்.

அந்த மகளும் காதலனைப் புறக்கணித்து தந்தையிடம் வருவாள். உடனே தந்தை,"அந்தப் பையனை அவங்க அப்பா அம்மாவோட நம்ம வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கச்சொல்லும்மா." என்பார்.

சில நொடிகளில் நெஞ்சை நெகிழவைத்த விளம்பரம்.தந்தை மகளாக இளையதிலகம் பிரபு - சரண்யாமோகன். மிகச்சரியான தேர்வு. அதிலும் தந்தை சம்மதம் கொடுத்ததும் ஆனந்தக் கண்ணீருடன் தந்தையின் தோளில் சரண்யா சாய்ந்து கொள்ளும் காட்சி மிகவும் அற்புதம்.

நம்பிக்கை என்பது இரு தரப்புக்கும் பொதுவான விஷயமாக இருக்கவேண்டும்.ஒருவரிடம் குறைந்தாலும் எதிர்தரப்பின் நம்பிக்கையும் சிதறிவிடும்.

இன்று பல குடும்பங்களில் நடப்பதும் இதுதான்.மகள் அல்லது மகன் தானே தேர்வு செய்த வாழ்க்கைத்துணை என்ற ஒரே காரணத்துக்காக உறவைத்துண்டித்து பல நெகிழ்ச்சியான தருணங்களை இழந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம்.அவர்களே தேர்வு செய்த துணை சரியான நபராக இருக்கும் நிலையில் இதை எதிர்ப்பது அர்த்தம் இல்லாத ஒன்று.ஈகோவால் தாங்கள் தோற்றுவிட்டதாக நினைக்காமல் சரியான விஷயங்களை ஒப்புக்கொண்டால் யாரும் எதையும் இழக்காமல் சந்தோஷங்களை அறுவடை செய்யலாம்.


ஒருவேளை தவறான துணையை தேர்வுசெய்திருந்ததை பெற்றோர் சுட்டிக்காட்டினால் ஈகோ காரணமாக அந்த நபருடனேயே வாழ்க்கையை இணைத்துக்கொண்டு அவதிப்படுவதையும் இளைய தலைமுறை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

எனக்குத்தெரிந்து ஒரு இளம்பெண் தன் தந்தையாலேயே வாழ்வைத்தொலைத்துவிட்டாள்.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ம் ஆண்டு அந்தப் பெண் ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.(ஆண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடக்கடவுளே என்று சொல்ல வைக்கும் செய்தி ஒன்று கட்டுரையின் இறுதியில் இருக்கிறது.)

சாதி, பொருளாதாரம், கல்வி என்று பல வேறுபாடுகளைத் தாண்டி அந்தப் பெண்ணுக்கு  அந்தப் பையன் மீது ஈர்ப்பு வர ஒரே காரணம் இனக்கவர்ச்சி மட்டுமே. இந்த எண்ணத்தை அந்தப் பெண்ணின் மனதில் விதைத்தது அவளுடைய தந்தைதான். இந்தப் பெண்ணின் சித்தி(அவள் தாயாரின் தங்கை) தன் கணவனை விட்டு இவர்கள் வீட்டுக்கே வந்து விட்டாள். தந்தையும் சித்தியும் ஏடாகூடமாக இருந்ததை அவ்வப்போது பார்த்ததோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இந்தப் பெண்ணின் மனதில் "அந்த"ஒரு விஷயம்தான் உலகம் என்று தவறாக எண்ண வைத்துவிட்டது.

விளைவு, ஒரு இளைஞனுடன் திருமணம் (?!) செய்து கொள்ள நினைத்து ஓட்டம். காவல்துறை உதவியுடன் மகளை மீட்டு அழைத்து வந்த அவர் சரியான நிபுணர் மூலமாக ஆலோசனையை வழங்கியிருந்தால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் வீணாகியிருக்காது.

ஆனால் அந்த தந்தை, மகளின் படிப்பை நிறுத்தி வீட்டிலேயே வைத்ததுடன் மச்சினியுடனான லீலைகளை நிறுத்தவே இல்லை. மகளாலும் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மூன்று முறை அதே ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியில் போய் தங்கியிருந்து பிறகு மீட்டுக்கொண்டு வரப்பட்டாள்.

ஒரு வழியாக அந்த ஒருவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது. இந்தப் பெண்ணின் கவனம் வேறு ஒருவன் மீது.சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் புதியவனுடன் அந்தப்பெண் வெளியேற, காவல்துறை மூலம் மீட்பு.(மறுபடியும் முதல்லேருந்தா?)

அவளை இப்போது அழைத்துச்சென்றவன் "யோவ்...உன் பொண்ணுதான் என்னைக் கூப்பிட்டா.அவளைக் கேளுய்யா!"அப்படின்னு சொல்லிட்டான். இன்னும் அந்த தந்தை தன்னால்தான் தன் மகள் இப்படி வழிதவறிப்போனாள் என்று உணரவே இல்லை(அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்)

முதல்முறை 2003ல் வெளியேறியதும் மீட்டு அழைத்து வந்தபோதே முறையாக ஆலோசனை அளித்து, படிப்புதான் முக்கியம். படித்து முடித்ததும் நீ அவனை விரும்பினா, அவன் உன்னை நேசிச்சா கண்டிப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி அவள் கவனத்தை படிப்பு மேல திருப்பியிருக்கலாம்னுதான் நான் நினைக்கிறேன்.

படிப்பை நிறுத்தி வீட்டுல போட்டதும் வேறு எந்த எண்ணமும் அவள் மனசுல வரவே இல்லை.சும்மா இருக்கும் மனம் பேய்களின் கூடாரம் என்ற பழமொழிக்கு வாழும் உதாரணமாக இந்தப் பெண்ணை சொல்லத்தோன்றுகிறது.

இப்போது கல்வியும் இல்லாமல், ஊர் முழுவதும் இவள் பற்றிய உண்மை தெரிந்ததால் திருமணமும் கேள்விக்குறியாகி விட்டது. சமீபத்தில் அவளுடன் வெளியில் சென்றவனும் எதை அந்தப் பெண்ணிடம் எதிர்பார்க்கிறான் என்பது தெரிந்துவிட்டது.

முதலில் இவள் வெளியேறிய 2003ம் ஆண்டை நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னது ஏன் தெரியுமா? இவளுக்கு பதினெட்டு வயது நிறைவடையவே இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறதாம்.

இவ்வளவு சின்ன வயதில் இந்தக் குழந்தையின் வாழ்க்கை இப்படி மோசமாக யார் காரணம்?-நிச்சயமாக அவள் இல்லை.

******

சார்லி சாப்ளின் ஒரு பீரங்கியை தயார் செய்து மிகப்பெரிய வெட்டவெளியில் அதை வெடிக்கச்செய்ய மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்வாராம். ஊரே அவர் வெடிக்கச்செய்யப்போகும் பீரங்கிக் குண்டு சத்தத்திற்கு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது அந்த குண்டு மிக லேசான சத்தத்துடன் வெடித்து பீரங்கிக்குழாயின் காலடியிலேயே விழுமாம்.


இன்னைக்கு நானும் இப்படி ஒரு ஏமாற்றத்தை சந்திச்சேன். இந்த மாசம் 2ம் தேதி பகல் முழுவதும் திருவாரூர்ல மின்தடை. பராமரிப்பு பணின்னு சொன்னாங்க. ஆனா அடுத்த சில நாட்கள்லயே ஒரு டிரான்ஸ்பார்மர் வெடிச்சு சிதறினது.அது ஏன்னு கேட்கக்கூடாது.ஆயில் இல்லைன்னு அரசாங்க ரகசியத்தை நாங்கதான் வெளியில சொல்ல மாட்டோமே.

இன்றும் 24.01.2010 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட்டுன்னு பேப்பர், காரைக்கால் பண்பலை உட்பட பல ஊடகங்கள்லயும் அறிவிப்பு செய்தாங்க. எனக்கும் மற்ற வேலைகள் இருந்ததால இரவுதான் புதிய பதிவு போடணும்னு நினைச்சு காலையில பேப்பரை மட்டும் படிச்சுட்டு வெளியில போயிட்டேன்.

காலையில ஒன்பது மணிக்கு அப்புறமும் மின்சாரம் தொடர்ந்து இருந்துச்சு. 9.59க்கு அப்புறம் பத்து மணியும் ஆச்சுங்க. அப்பவும் பவர் கட் ஆகலை. ஆனா அடுத்து அஞ்சு நிமிஷத்துல போயிடுச்சு. சரின்னு நானும் வெளியில போயிட்டேன்.

சில நண்பர்களை சந்திச்சு பேசிகிட்டு இருந்தா ஒருத்தன் "மாப்பு...கிரிக்கெட் பார்க்கப்போறேன். வைக்காத ஆப்பு"ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டான். என்னடான்னு கேட்டா முக்கால்மணி நேரத்துல மின்சாரம் மறுபடியும் வந்துடுச்சேன்னு அவனும் ஜூட் விட்டுட்டான்.

அடக்கடவுளே...இப்படின்னு தெரிஞ்சுருந்தா பதினோரு மணிக்கெல்லாம் பதிவை ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த முக்கியமான வேலையைப் (தூக்கம்தான்)பார்த்திருக்கலாமே அப்படின்னு புலம்பிட்டு வீட்டுக்கு வந்தேன்.

ரொம்ப மும்முரமா கம்ப்யூட்டர்ல வேலை பார்த்துகிட்டு இருந்தா பொசுக்குன்னு பவரைத் துண்டிப்பாங்க. இப்ப நான் இவ்வளவு ஏற்பாட்டோட வேற வேலையைப் பார்த்தா ஒழுங்கா கொடுத்து வெறுப்பேத்துறாங்க.

மின்சாரவாரியம்:பவரைக் கட் பண்ணினாலும் திட்டுறீங்க...ஒழுங்கா கொடுத்தாலும் சாபம் கொடுக்குறீங்க...வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம்.பழமொழி சரியாத்தான் இருக்கு.
******

சனி, 23 ஜனவரி, 2010

நானும் ஜெயா டி.வியும் - பரிசு போச்சே

2005ம் ஆண்டு ஜெயா டி.வி யில் டாக்யு அவார்ட்ஸ் என்ற ஒரு நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியில் போட்டிக்கென வந்த இரண்டு குறும்படங்களும் படம் குறித்து தொகுப்பாளர் கோபிநாத்துடைய பேச்சும் சில நேரம் பிரபல இயக்குனர்களின் கருத்தும் இடம்பெறும்.

சில மாதங்கள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பல வாரங்கள் நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களுக்குப்பிறகு சினிமா தொடர்பான ஒரு கேள்வி கேட்டு சரியான பதில் அளித்தவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசும் வழங்கினார்கள்.

நடுவில் ஒரு வாரம் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. அந்த வாரம் தமிழின் முதல் 70 mm திரைப்படம் எது என்ற கேள்விக்கு பலரும்  ராஜராஜசோழன் என்ற விடையை அளித்திருந்தார்கள்.தமிழில்  முதல் சினிமாஸ்கோப் படம்தான்  ராஜராஜ சோழன். முதல் 70 mm படம் மாவீரன். அதனால் அந்த வாரம் யாருக்கும் பரிசு இல்லை.இந்த விடை எனக்குத் தெரிந்தாலும் நிகழ்ச்சியைப் பார்க்காததால் விடையை எழுதி அனுப்ப முடியவில்லை. பரிசு போச்சே என்று ரெண்டு நாள் புலம்பத்தான் முடிந்தது.

அடுத்து ஒரு வாரத்தில் உலகிலேயே அதிக அளவில் ஆவணப்படங்கள் தயாரித்த நிறுவனம் எது என்று கேட்டார்கள். NFDC - National Film Development Corporation என்ற இந்திய நிறுவனம்தான் உலகிலேயே அதிக ஆவணப்படங்களை தயாரித்த நிறுவனம் என்ற விடையை ரொம்பச் சரியா எழுதிட்டோம்ல.

சரியான விடையை எழுதி பரிசு பெறுபவர் "சரவணன் - திருவாரூர்." என்று கோபிநாத் தன் கணீர் குரலில் சொன்னது என்னாலயே நம்பமுடியலை. கல்லூரியில படிக்கும்போது முதல் செமஸ்டர்ல முக்கியமான மூணு பேப்பர்லயும் முதல் மார்க் எடுத்ததும் சந்தேகம் தீராம புரொபசர்கிட்ட பத்து தடவை மார்க்கை திருப்பி திருப்பிக் கேட்ட ஆளாச்சே நானு. ஆனா கோபிநாத் கிட்ட அந்த மாதிரி கேட்க முடியலை.

திரைக்கதை பற்றி அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை பற்றிய புத்தகம், எலிப்பத்தாயம், பி.பத்மராஜனின்(மலையாள இயக்குனர்) பெருவழியம்பலம், மதுரை காமராசர் பல்கலைக்கலையில் பணியாற்றிய பிரபாகர் என்பவரின் சினிமா தயாரிப்பு பற்றிய புத்தகம்,காதல் திரைக்கதை மற்றும் ஒரு புத்தகம் சேர்த்து மொத்தம் ஆறு புத்தகங்களை அனுப்பி வைத்தார்கள். பணம் அனுப்பாம இப்படி புத்தகமா அனுப்பியிருக்காங்களேன்னு எங்க அம்மா என்னையத்தான் திட்டுனாங்க.

பிறகு ஒரு முறை போட்டோகிராபி என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது என்ற கேள்வி கேட்டிருந்தார்கள்.

பெரும்பாலான அறிவியல் சொற்கள் இலத்தீனில் இருந்துதான் ஆங்கிலத்துக்கு இடப்பெயர்ச்சி அடைந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் போட்டோகிராபி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது என்பதுதான் உண்மை.

கிரேக்க மொழியில் போஸ் என்றால் வெளிச்சம் என்று அர்த்தம்.
கிராபோ  என்றால் வரைதல் என்ற பொருள்.அதாவது வெளிச்சத்தில் வரைதல் என்ற அர்த்தத்தில்தான் போஸ்,கிராபோ என்ற வார்த்தைகள் இணைந்து போட்டோகிராபி என்ற சொல் உருவானது.

அந்த வாரத்திற்குரிய வெற்றியாளர் பற்றி அறிவிக்கும்போது யாருமே சரியான விடை எழுதவில்லை என்று கோபிநாத் சொன்னதும் மறுபடியும் பரிசு போச்சே அப்படின்னுதான் நினைச்சேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான அன்னைக்கு ரம்ஜான் பண்டிகைன்னு நினைக்கிறேன். இரவு ஒன்பது மணிக்கு மேல ஆயிடுச்சு.கனமழை பெய்யுது. நான் சரியான விடையை எழுதியிருந்தேன் என்று குறிப்பிட்டு ஒரு பக்கத்தில் கடிதம் எழுதி உடனே ஃபேக்சில் அனுப்பிட்டேன்.நாலு நாளைக்குள் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரிடமிருந்து பதில் வந்திருந்தது.

மழை, பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் நீங்கள் சரியான விடை எழுதிய கடிதம் நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்ட பிறகுதான் எங்களுக்கு கிடைத்தது. அப்படின்னு வருத்தம் தெரிவிச்சு பதில் எழுதியிருந்தாங்க.அடுத்த வாரத்துலேர்ந்து விடை அனுப்பவேண்டிய கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் அதிகரிச்சாங்க.

திரைப்படம் எடுப்பதில் ட்ரீட்மெண்ட் என்ற வார்த்தை எதைக் குறிக்கும் அப்படின்னு அடுத்த வாரக் கேள்வி.

ஒரு கதையை காட்சிகளாகப் பிரித்து படமாக்கும் விதத்தைதான் ட்ரீட்மெண்ட் என்று சொல்வார்கள் என்று சரியான பதில் எழுதியிருந்தேன்.(இது சுருக்கமான பதில்தான்.உண்மையில் இதைத் தொடர்ந்து சற்று நீண்ட பதிலை எலும்புமுறிவு நோயாளிக்குரிய ட்ரீட்மெண்ட் போலவே எழுதியிருந்தேன்.)

சந்திரமௌலியின் எழுத்து வடிவத்தில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் திரும்பிப்பார்க்கிறேன்,இயக்குனர் சுசி.கணேசனின் வாக்கப்பட்டபூமி, கி.ராஜநாராயணன் எழுத்துலகத்தை ஆய்வு செய்து பிரேம்-ரமேஷ் எழுதிய புத்தகம், நீலபத்மநாபனின் கதைகள், வையவனின் கதைகள் ஆகிய புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள்.

இந்த முறை வேறு யாரையும் பரிசுக்குரியவர்களாக ஏற்கனவே தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.மற்ற எல்லா வாரங்களிலும் பரிசு பெற்றவர் பெயர், ஊரை கோபிநாத் சொல்லுவார். இந்த முறை பரிசு பெற்றவர் என்ற அவர் சொன்னதும் ஒலி நின்று என் பெயர் முகவரியுடன் டைட்டில் கார்டு காண்பிக்கப்பட்டது.(ரொம்ப ஆராயுறனா?)

எவ்வளவோ நிகழ்ச்சிகளை தயாரிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் வாரம் இரண்டு நாள் குறும்படத்திற்கென நேரம் ஒதுக்கலாம்.இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர்கள் என்ற நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதை நான் தொடர்ந்து பார்க்கவில்லை. ஆனால் இது பிரபல இயக்குனர்கள் அதிகம் பேசும் நிகழ்ச்சியாக இருப்பது போல்தான் தெரிகிறது. இந்த அறிவுரைகளை சம்மந்தப்பட்ட இயக்குனர்களிடம் தனியாக கூறிவிடலாம். இவர்கள் பேசுவதை விட கூடுதலாக இரண்டு படங்கள் ஒளிபரப்பானால் மக்களிடம் போய் சேரும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.இது தவறாக கூட இருக்கலாம்.நீங்களும் யோசிங்க. தோணுறத எழுதுங்க.


எல்லா முழு நீளப்படங்களின் இடைவேளையின் போது அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் இருக்கும் குறும்படங்களை திரையரங்கில் திரையிடலாம்.பெரிய படங்கள் பார்க்க வர்ற ஆளுங்க கிட்ட இருந்து வசூல் செய்யுற டிக்கட் தொகையில் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் குறும்படங்களுக்கு நல்ல உதவியா இருக்கும். இதுல எதெல்லாம் சாத்தியம்னு செய்து பார்த்தாதான் தெரியும்.

வியாழன், 21 ஜனவரி, 2010

தினமலருக்காக ஜெனிலியாவிடம் ஒரு பேட்டி - (ஒரு தமாசான கற்பனை)

பாய்ஸ் படம் வெளிவந்தபோது படத்தின் ஹீரோயின் ஜெனிலியாவிடம் ஒரு நிருபர் நேர்காணல் செய்கிறார்.நிருபர்:
நீங்க படத்துல சித்தார்த்தோட பழைய குப்பைக்கூளங்கள் கிடக்குற ஒரு மோசமான ரூம்ல தங்கியிருந்தீங்க. நிஜ வாழ்க்கையிலயும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்ன செய்வீங்க?

ஜெனிலியா:
அய்யய்யோ...படத்துல ஒரே ஒரு நாள் அப்படி இருந்ததுக்கே அந்த நாத்தம் பத்துநாள் என்னைய விட்டுப் போகலை. ஒரு தினமும் ஒரு பாட்டில் பினாயிலும் ரெண்டு பாக்கெட் பிளீச்சிங் பவுடரும் போட்டு குளிக்க வேண்டியதாயிடுச்சு. மறுபடியுமா? நெவர்.

நிருபர்:
நண்பர்களுக்காக படத்துல பாடுனீங்க. இப்ப யாராவது ஒரு விழாவுல உங்களைப் பாடசொன்னா சம்மதிப்பீங்களா?

ஜெனிலியா:
சார்...நீங்க கழுதைகள் கூட்டமா கூடுறதை பார்க்க ஆசைப்பட்டுதானே இப்படி கேட்குறீங்க?

நிருபர்:
படத்துல சிறையில அவதிப்பட்ட காட்சிகள்ல நடிச்ச அனுபவங்களை சொல்லுங்க.

ஜெனிலியா:
அந்தக் காட்சிகள்ல நடிச்ச பிறகு பல நாள் தூக்கம் வரலை. வாந்திதான் வந்தது. அதனால எனக்கு கிடைச்ச ஒரே பலன், வழக்கமா சாப்பிட்ட ரெண்டேகால் இட்லி ஒண்ணே முக்கால் இட்லியா குறைஞ்சுடுச்சு.

இதேபோல் இன்னும் சில கேள்விகளும் விடைகளும் எழுதியிருந்தேன்.எதுக்குன்னுதானே கேட்குறீங்க? தினமலர் குழுமம் ஒரு தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கிற உத்தேசத்துல ஆட்கள் தேவைன்னு விளம்பரம் செய்திருந்தாங்க. நானும் என்னோட தகுதிகளைக் (?!)குறிப்பிட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தேன்.

திருச்சியில ஒரு ஹோட்டல்லதான் இண்டர்வியூ. முதலில் எழுத்துத்தேர்வு. அந்தக் கேள்வித்தாளைப் பார்த்ததும்தான் பத்திரிகைத்துறையைப் பொறுத்தவரை நம்மைச்சுத்தி நடக்குறத எப்படி வெளிப்படுத்துறோம்னுங்குறது மட்டும்தான் மிகப்பெரிய கல்வித்தகுதின்னு புரிஞ்சது.

பாய்ஸ் படத்துக் கதாநாயகி ஜெனிலியாகிட்ட படு தமாசா கற்பனைப்பேட்டி எடுங்கன்னு ஒரு கேள்வி வந்துருந்துச்சு. மேலே உள்ள கேள்வி பதில் அப்ப நான் கற்பனை செய்து எழுதினதுதான்.

என்னோட விடைத்தாளைப் பார்த்துட்டு,"நீங்க சினிமா கிசுகிசு எழுதுற வேலையை மட்டும்தான் ஒழுங்கா செய்வீங்க போலிருக்கே. ஆனா நாங்க இன்னும் எதிர்பார்க்குறோம்.உங்க தகுதிகளை மேம்படுத்திகிட்டு மறுபடி விண்ணப்பம் செய்ங்க."அப்படின்னு நேருக்குநேராவே சொல்லிட்டாங்க.

வேலை தேடிப்போற பெரும்பாலான இளைஞர்கள் எதிர்பார்க்குறது இதுதான். ஆனா நிறைய இடத்துல எதனால நிராகரிக்கிறோம்னே சொல்றது இல்லை.இன்னும்  பல இடங்கள்ல உடனடியா முடிவைக்கூட சொல்றது இல்லை. பல நாள் இந்த வேலை கிடைச்சுடும்னு நினைச்சு கடைசியா இல்லைன்னு தெரியவரும்போது ஏற்படுற வேதனை இருக்கே...அதை நான் ஆறு வருஷமா அனுபவிக்கிறேன்.

அன்னைக்கு வேலை இல்லைன்னு  உடனடியா சொன்னதும் கூட வந்திருந்த என் நண்பரும் நானும் திருப்தியா போய் ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு சோனா தியேட்டர்ல போய் படம் பார்த்துட்டுதான் ஊருக்குத்திரும்புனோம்.

என்ன படம்னுதானே கேட்குறீங்க.

"பாய்ஸ்"


படமே பார்க்காம எப்படி ஜெனிலியாவை கலாய்க்க முடிஞ்சதுன்னுதானே உங்களுக்கு சந்தேகம்? எல்லாம் பத்திரிகைகள்ல படத்தைப் பத்தி அப்பப்ப வந்த செய்திகள் செய்த உதவிதான்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

ஒரு ரேஸ் பாதை சுரங்கப்பாதையாய் ஆனதே!

திருவாரூரின் பெரிய கோயிலைச்சுற்றி உள்ள நான்கு பிரமாண்டமான வீதிகளிலும் ஆண்டுக்கு இரண்டு முறை மிகப்பெரிய அளவில் கூட்டம் சேரும். உலகத்துக்கு திருவாரூரை அடையாளம் காட்டும் தேர்த்திருவிழாவின்போது மக்கள்வெள்ளத்தால் களைகட்டுவதுபோல் இல்லை என்றாலும் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு காணும்பொங்கல் அன்றும் கூட்டம் சேரும்.

எனக்குத்தெரிந்து இருபது ஆண்டுகளில் சுனாமி ஏற்படுத்திய வடுவால் 2005ம் ஆண்டு மட்டும்தான் விளையாட்டுவிழா அஞ்சலி செலுத்தும் நிகழ்வாகிப்போனது.மற்றபடி கடந்த ஆண்டு வரை விளையாட்டுப்போட்டிகளைக்காண சுற்றி இருக்கும் ஊர்களில் உள்ள மக்கள் அனைவரும் திருவாரூரில் வந்து குவிந்துவிடுவார்கள்.


முப்பது ஏக்கருக்குமேல் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான கோயில் குளமான கமலாலயத்தில் நீச்சல் போட்டியுடன் விளையாட்டுப்பந்தயங்கள் தொடங்கும்.ஓட்டப்பந்தயம்,சைக்கிள், குதிரை வண்டி, மோட்டார்சைக்கிள் உட்பட பல போட்டிகள் நடைபெற்றாலும் மக்கள் அனைவரும் காணவிரும்புவது மோட்டார்சைக்கிள் பந்தயம்தான்.

பொதுக்கூட்டத்தில் பேச வேண்டிய சிறப்புப் பேச்சாளருக்கு மைக்கைக் கொடுக்கும் முன்பு மற்ற எல்லாரும் ஆசைதீர பேசி முடிப்பதைப்போல்தான் இங்கும் நடக்கும்.மோட்டார்சைக்கிள் ரேசுக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து காரணமாக போட்டிகளின் நிறைவாகத்தான் மோட்டார்சைக்கிள்கள் வர்ர்ர்ர்ரூம்.

இதேபோல் கூட்டம் கூடும் இடங்களுக்கே உரிய நாளைய பெருசுகளின் கடைகண் பார்வை, நேற்றைய இளசுகளின் சுட்டெரிக்கும் பார்வை, கேலி, கிண்டல், விசில், அடிதடி எல்லாம் இருக்கும். ஆனால் மோசமான விளைவை ஏற்படுத்தும் அளவுக்கு எதுவும் இருக்காது.

புதை சாக்கடைப்பணிக்காக திருவாரூர் நகர் முழுவதும் சாலைகளில் ஏர்கலப்பை இல்லாமலேயே உழுதுவிட்டதால் இன்னும் இயல்பு நிலைக்கு சாலைகள் திரும்பவில்லை.நடுவில் முதல்வர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்துக்காக தெற்குவீதி முழுவதும் தங்கநாற்கரசாலையைப்போல் போட்டார்கள். அடுத்த மழை வந்ததும்தான் இது ரோடு மாதிரி, ரோடு இல்லைன்னு புரிந்தது.


ரேஸ் பாதை இந்த மாதிரி சுரங்கப்பாதையாக தயாரா நின்னா எப்புடி போட்டிகளை நடத்துவாங்க?


அதான் இப்படி இருக்கவேண்டிய கூட்டம்,

இப்படி ஆயிடுச்சு.

ஒரு மாசத்துக்குள்ள மூணு பேர காவு வாங்கியிருந்தாலும் வழக்கமா கலந்துக்குற அளவுக்கு இந்த ஆண்டும் நீச்சல் போட்டியில வீரர்கள் பங்கேற்றதுதான் ஒரே ஆறுதல். ஓட்டப்பந்தயம் தேரோடுற நாலு வீதியில இருந்து ஷிப்ட் ஆகி குளத்துடைய நாலு கரையையும் சுத்தி உள்ள சாலைக்குப் போயிடுச்சு.


இந்தப் போட்டி ஆரம்பமானப்ப ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா ஃபினிஷிங்க் சரியில்லைங்க. எப்படி இருந்தாலும் நம்பிக்கையோட கலந்துகிட்ட வீரர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்.


இது முழுக்க தனியார் நடத்துற விளையாட்டுப்போட்டி. இனி வர்ற ஆண்டுலயாவது அரசு இன்னும் ஊக்கம் கொடுத்து இந்த விளையாட்டுவிழாவை ஒரு பிரமாண்டமான நிகழ்வா மாத்தணும். சுதந்திரதினம், குடியரசுதினம் ஆகிய ரெண்டு நாட்கள்லயும் திருவாரூர் நகரத்தை விட்டு நாலுகிலோமீட்டர் தள்ளி இருக்குற மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்துல பள்ளி மாணவர்கள் கலந்துக்குற விளையாட்டுவிழா நடத்துறாங்க.


ஆனா அதுக்கு பொதுமக்கள் கூட்டம் குறைவாத்தான் போகுது. ஆனா நகரின் மையப்பகுதியில இந்த பொங்கல் விளையாட்டுவிழா நடக்குறதால கலந்துக்குறதுலயும் சரி, பார்க்க வர்றவங்கள்லயும் சரி பொதுமக்கள்தான் அதிகம்.

புதுசா எதையும் அரசாங்கம் தொடங்குறதுதான் தலைகீழா நின்னு தண்ணி குடிக்கிற மாதிரி இருக்கு. 27 வருஷமா ஆரூரான் விளையாட்டுக்கழகம் நடத்திட்டு வர்ற இந்த போட்டிகளை இன்னும் மெருகேத்தி நிறைய விளையாட்டு வீரர்களைக் கண்டெடுக்கும் களமா ஏன் மாத்தக்கூடாது?

இன்னும் நல்ல முறையில செய்தா உள்ளூர் வணிக நிறுவனங்கள் பொருளாதார ஒத்துழைப்பு கொடுக்க தயாராவே இருக்காங்க.

முதல்வர் பொதுக்கூட்டம் என்றதும் வழவழ சாலை போட்டவங்க, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளை நடத்த சாலையை சீரமைக்கலை. இதைப் பார்த்த ஒரு நண்பர்,"போறபோக்கைப் பார்த்தா, அதிகாரிங்களும் நாம ஜெயிக்கவெச்சவங்களும் தன் மனைவியோட தான் சந்தோஷமா இருக்கவே நம்மகிட்ட லஞ்சம் கேட்பாங்க போலிருக்கே."ன்னு கிரீன் கலர்ல ஒரு கமெண்ட் அடிச்சார்.(அதாங்க பச்சையா பேசினார்.)

இந்த வரிகள் உங்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். ஆனா போற போக்கைப் பார்த்தா இப்படி ஆயிடுமோ?


(ஒளிப்படங்கள் எல்லாம் நண்பரின் சாதாரண மொபைல்போன் கேமராவில் எடுத்தது. அதனால் தரத்தை எதிர்பார்க்காதீர்கள்.)

சனி, 16 ஜனவரி, 2010

தேன்மொழியாள் - பரிசு பெற்ற முத்திரைக்கதை

ஜனவரி 2006 அமுதசுரபி, இலக்கியச்சிந்தனை புத்தகத்தொகுப்பு(வானதி பதிப்பகம்)
*******************
வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை வவுச்சர்களைக் கணிப்பொறி மூலம் தேன்மொழி தயார் செய்துகொண்டிருந்தாள். தொலைபேசிவிட்டுவந்த கணக்குப்பிள்ளை,"தேன்மொழி,உங்கம்மா பேசுறாங்க..."என்று சொல்லிவிட்டு அவர் இருக்கைக்குச் சென்றார்.

முதலாளியின் அறையில் அவர் இல்லை.மேசையின் மீது கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

"என்னம்மா அவசரம்?..."

"மாப்பிள்ளை தம்பி வந்துருக்குடி.முக்கியமான விஷயம்.ஆபீஸ்ல சொல்லிட்டு உடனே வா."

இன்னும் ஒருமணி நேரம்தான் இருக்கு.முக்கியமா சில பில் தயார் செஞ்சு அனுப்பியே ஆகணும்...முடிஞ்சதும் நூலகத்துக்குப் போகாம நேரே வீட்டுக்கு வந்துடுறேன்.அவருக்கு வேற ஏதாவது அவசர வேலை இருந்தா முடிச்சுட்டு ஆறுமணிக்கு மேல வரசொல்லு."

பானுமதி,"முக்கியமா பேசணும்னு வந்து உட்கார்ந்திருக்கார்...அவருகிட்ட எப்படி..."என்று இழுத்தாள்.

தேன்மொழி, "சரிம்மா...நான் ஒருமணி நேரத்துல எப்பவும் போல வேலையை முடிச்சுட்டே வந்துடுறேன்."என்று தொலைபேசி இணைப்பைத்துண்டித்தாள்.

பானுமதி திரும்பவும் வீட்டுக்குள் வந்தபோது அவள் தலை குனிந்திருந்தது.

தணிகாசலம்,"என்ன பானு...நான் போன்ல பேசுனா அவ சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு வந்துடுவேன்னு நீயே போன.இப்ப நீ பேசுனதும் உடனே வர்றேன்னு சொன்னாளா?..."என்று கிண்டலாக கேட்டார்.

"உங்க பொண்ணாச்சே. என்னைக்கு சொன்ன பேச்சைக் கேட்டா?...தம்பி...நீங்க தப்பா நினைக்காதீங்க.ஆபீஸ்ல ஏதோ முக்கியமான வேலையாம்.அதனால எப்பவும் போல ஆறுமணிக்கே கிளம்பி வர்றேன்னு சொல்லிட்டா.உங்களுக்கு வெளியில எதுவும் வேலை இருந்தா போய் முடிச்சுட்டு வந்துடுங்களேன்."

உடனே சண்முகபாண்டியன்,"இல்லத்தே...ஒருமணி நேரம்தானே.டி.வி.பார்த்துகிட்டு இருந்தா நேரம் போறது தெரியாது."என்றான்.

அவன் வந்ததும் நிறுத்திய தொலைக்காட்சியை இப்போது மீண்டும் தணிகாசலம் இயக்கினார்.

"என்ன மாமா...இன்னும் கலர் டி.வி. வாங்காம இருக்கீங்க?"

"இது நல்லாத்தான் இயங்கிகிட்டு இருக்கு மாப்ளே.கருப்பு-வெள்ளை டி.வியால கண்ணுக்கும் அவ்வளவா கெடுதல் இல்லை. பழுதாகுறவரைக்கும் இருந்துட்டுப்போகட்டும்னு விட்டு வெச்சிருக்கோம்."

"சரிமாமா...தேன்மொழி ஆபீஸ்ல லீவு போடுறதெல்லாம் ரொம்பக்கஷ்டமா?"

"அப்படி எல்லாம் கிடையாது. அவ எப்பவுமே ரொம்ப அவசியமா இருந்தாதான் லீவு போடவோ பர்மிஷன் கேட்கவோ செய்வா...அதுக்காக நீங்க அவசியமில்லைன்னு தப்பா எடுத்துக்காதீங்க..."என்று தணிகாசலம் சிரித்தார்.

முந்தானையை இழுத்துப்போர்த்திக்கொண்ட பானுமதி,"இவர் கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்துட்டார்...நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க...நாங்க எப்ப செஞ்ச புண்ணியமோ...நீங்க எங்க குடும்பத்துல சம்மந்தம் பேச வந்துருக்கீங்க."என்றாள்.

சண்முகபாண்டியன் லேசாக நெளிந்துகொண்டு தொலைக்காட்சியில் கவனம் செலுத்தினான்.

***
தரகர் மூலமாக மூன்று மாதங்களுக்குள்ளாகவே எட்டுப்பேர் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனார்கள். கடைசியாக வந்தவன்தான் சண்முகபாண்டியன்.

எல்லாம் வழக்கம்போல்தான் நடந்தது."எனக்குப் பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கும்மா..."என்று சண்முகபாண்டியன் தலையைக்குனிந்து
கொண்டான்.தேன்மொழியின் நிறத்துக்கும் அழகுக்கும் ஆசைப்படாதவர்கள் யார் இருக்க முடியும்? சண்முகபாண்டியன் தலையாட்டிவிட்டு அம்மா பிள்ளையாக உட்கார்ந்துகொண்டான். அவன் தாய் போட்ட பட்டியலில் இருசக்கர வாகனம் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று தணிகாசலம் நினைத்தார்.

"அதெல்லாம் முடியாது...நல்லா யோசிச்சு ஒருவாரத்துக்குள்ள முடிவு சொல்லுங்க.."என்ற அந்த அம்மாள் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினாள்.மாப்பிள்ளையும் பேசாமலேயே தாயைப் பின்தொடர்ந்தான்.

"பையன் நல்லவனாத்தெரியுறான். தலைதீபாவளிக்கு, வண்டி வாங்கித்தர்றோம்னு சொல்லி கல்யாணத்தைப் பேசிமுடிச்சுடலாம்மா..."என்றார் தணிகாசலம்.

"அப்பா...நீங்க என்ன சொந்தத்தொழிலா செய்யுறீங்க...மத்த விஷயத்துக்கு வாங்கப்போற கடனை முடிக்கவே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகும்...அதுவரை வேற பெரிய செலவு வராம இருக்கணும்...எதிர்பாராம செய்ய முடியாமப்போச்சுன்னா ஒவ்வொரு நாளும் என்னால இம்சைப்பட முடியாது. எனக்கு வரதட்சணை குடுத்து கல்யாணம் செஞ்சுக்குறதே புடிக்கலை...இருந்தாலும் உங்க ரெண்டு பேரு சந்தோஷத்துக்காக நான் எதுவும் சொல்லலை. அதனால நம்ம சக்திக்கு தகுந்த மாதிரி இடமாப் பார்ப்போம்." என்று தேன்மொழி உறுதியாகக் கூறினாள்.

***

எங்க வசதிக்கு இந்த இடம் ஒத்துவராதுன்னு சொல்லி அனுப்பிட்டோம். இவர் ஏன் வந்து உட்கார்ந்துருக்கார்? என்று நினைத்தவாறே தேன்மொழி வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள்.

அவனைப் பார்த்து,"வாங்க...ஒரு நிமிஷம்...முகம் கழுவிட்டு வந்துடுறேன்.எதுவும் நினைச்சுக்காதீங்க..." என்று தோள்பையை மேசையில் வைத்துவிட்டு கொல்லைப்பக்கம் சென்றாள்.

முகம் கழுவிக்கொண்டிருந்தபோது பின்னால் பானுமதி வந்து நிற்பதை உணர்ந்தாள்.

"என்னம்மா...காப்பி போட்டுக் குடுத்தியா?"என்று திரும்பாமலேயே கேட்டாள்.

"அதெல்லாம் ஆச்சு...இப்ப அம்பதாயிரம் ரூபா பணம் கொண்டு வந்துருக்கார்...அதைவெச்சு வண்டி வாங்கிக் கொடுத்துட்டு நாம செஞ்ச மாதிரி காட்டிக்கச் சொல்றார்.இந்தக் காலத்துல இப்படி ஒரு வரன் கிடைக்குமா?...நான் சம்மதம்னு சொல்றதுக்குள்ளே உங்கப்பா புகுந்து குழப்பிட்டார்...என் பொண்ணு சம்மதிச்சாத்தான்னு உறுதியா சொல்லிட்டார். நீ ஏதாவது உளறி வெக்காத...இப்படி ஒரு மாப்பிள்ளை இந்த ஜென்மத்துக்கு கிடைக்குறது சிரமம்."

"சரிம்மா...நான் பேசிக்குறேன்..."என்று உள்ளே நுழைந்தாள். முகத்தைத் துடைத்துவிட்டு, நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு எப்போதும்போல் இயல்பாக கூடத்திற்கு வந்தாள்.

மற்றொரு நாற்காலியை தணிகாசலத்திற்குப் பக்கத்தில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

பானுமதி மனதில் எரிச்சல்."கொஞ்ச நேரம் நின்னு பேசினா என்ன?...எல்லாம் அவர் கொடுத்த இடம்"

"ம்...இப்ப விஷயத்தைச் சொல்லுங்க..."-தேன்மொழிதான் கேட்டாள். நேரே அவளைப் பார்த்துப் பேச சண்முகபாண்டியன் தடுமாறினான்.இப்போது தணிகாசலம் எழுந்து சென்று தொலைக்காட்சி இயக்கத்தை நிறுத்தினார்.

"உங்கம்மா சொல்லலியா?"

"அம்மா சொல்றது இருக்கட்டும்...நீங்க சொல்லுங்க..."

"இப்ப அம்பதாயிரம் ரூபா எடுத்துட்டு வந்துருக்கேன். என்னுடைய சேமிப்புல இருந்து எடுத்தது. இதையும் வெச்சுகிட்டு கல்யாணத்தை நல்லபடியா நடத்துங்க. என்னால நீங்க இல்லாம வாழமுடியாது. அம்மா மனசும் நோகக்கூடாது."

இவள் என்ன சொல்லப்போகிறாளோ என்ற தவிப்பு அவன் முகத்தில் நன்றாகத்தெரிந்தது.

தேன்மொழி புன்னகைத்தாள்.

"தயவு பண்ணி நீங்க மன்னிக்கணும்...இந்தப் பணத்தை நாங்க வாங்கிக்க மாட்டோம்...வேற இடத்துல பொண்ணு பாருங்க...எங்க சக்திக்குத் தகுந்த மாதிரி நாங்க பார்த்துக்குறோம்."என்று இரு கரங்களையும் கூப்பினாள்.

பானுமதிக்கும் சண்முகபாண்டியனுக்கும் அதிர்ச்சி. ஆனால் தணிகாசலம் முகம், இதை நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன் என்பது போல் இருந்தது.

"ஏண்டி உனக்கு புத்தி இப்படிப் போகுது? வீடு தேடி இந்த அளவுக்கு இறங்கி வந்து பேசுறவங்களை மதிக்கமாட்டியா?...-பானுமதி கேட்டாள்.

"சார்...நான் வீடு தேடி வர்றவங்களை மட்டுமில்ல...எல்லாரையுமே மதிக்கிறேன்.அதனாலதான் இவ்வளவு பொறுமையா சொல்றேன்."

சண்முகபாண்டியன் வார்த்தைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டான்.

"சரிங்க...என்ன காரணம்னு சொல்லுங்க."

"இல்ல சார்...விளக்கமா சொன்னா உங்க மனசு வேதனைப்படலாம்."

"பரவாயில்லைங்க...நீங்க இல்லைன்னு ஆனப்புறம் எதுக்கு வேதனைப்பட்டு என்ன ஆகப்போகுது?"

"சார்...உங்க அம்மாகிட்ட பேசி வரதட்சணை வேண்டாம்னு சம்மதிக்க வெச்சிருக்கலாம்.ஆனா இத்தனை வருஷம் வளர்த்தவங்களைவிட ஒருநாள் பார்த்த என்மேல உள்ள விருப்பம் உங்களுக்கு முக்கியமாயிடுச்சு. அதனாலதான் உங்க வீட்டுக்குத்தெரியாம பணத்தைக்கொடுத்து எங்களை செலவு செய்யசொல்றீங்க.நாளைக்கு இந்த விஷயம் உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என் கதி?..."என்று நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தாள்.

"அப்படி ஏதாச்சும் ஆனா நாம தனிக்குடித்தனம் போயிடலாம்..."- சண்முகபாண்டியன் அவசரமாக சொன்னான்.

"எனக்காக உங்க பெற்றோரைத் தூக்கி எறியத்தயாராயிட்டீங்க.நாளைக்கு வேற காரணத்துக்காக என்னையும் ஒதுக்கி வைக்க எவ்வளவு நேரம் ஆகும்? அம்மாவா இருந்தாலும் மனைவியா இருந்தாலும் தப்பு செஞ்சா விஷயத்தை எடுத்துச்சொல்லி புரிய வெக்கிறவர்தான் கணவரா வரணும்னு ஆசைப்படுறேன்.பிரச்சனையைத் தீர்க்காம ஒதுங்கிப்போறவங்களை நம்பி எதுவும் செய்ய முடியாது.

நானும் பிற்காலத்துல ஒருசில தவறுகள் செய்யலாம்...சிலநேரம் கோபப்படலாம்...அது எனக்குப் புரியாத நேரத்துல, சுட்டிக்காட்டி அரவணைக்கிற புருஷன்தான் வேணும்.

எல்லாமே தப்புன்னு கொடுமைப்படுத்துறவர் மட்டுமில்ல...எல்லாத்துக்கும் அடங்கிப்போறவரும் ஆபத்துதான்." இவ்வளவு பேசியபிறகும் தேன்மொழியின் முகத்தில் புன்னகை குறையவில்லை.

அழகில் மட்டுமல்லாமல் குணத்திலும் தேவதையான இவளுக்கு ஏற்ற கணவன் தான் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட சண்முகபாண்டியன் மவுனமாக வெளியேறினான்.

கதை நிறைவு பெற்றது.
தேன்மொழியாள் சிறுகதை பக்கம் 1

தேன்மொழியாள் சிறுகதை பக்கம் 4
******
கதையைப்பற்றிய குறிப்பு:

2006 ஜனவரி அமுதசுரபி இதழில் வசுமதிராமசாமி அறக்கட்டளையின் 1000 ரூபாய் பரிசு பெற்ற முத்திரை சிறுகதையாக பிரசுரமானது.

இலக்கியச் சிந்தனை: 1970ம் ஆண்டுமுதல் தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளில் சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்து பரிசு கொடுத்து புத்தகமாகவும் வெளியிட்டு வரும் அமைப்பு.

2006 ஜனவரி மாத சிறுகதையாக தேன்மொழியாள் தேர்வு செய்யப்பட்டது.

"தேன்மொழி கதாபாத்திரம் ஒரு லட்சிய, ஆனால் யதார்த்த கதாபாத்திரமாக உள்ளது. பாத்திரத்தின் இறுதிக்கட்ட உரையே உருவகப்படுத்தப்பட்டு தலைப்பாகத் தந்திருப்பது அழகு! - இது கதையைத் தேர்வு செய்த எழுத்தாளர் பாலுமணிவண்ணன் அவர்கள் சொன்ன வாக்கியம்.

"குடும்பச் சிறையிலிருந்து தற்சார்பும் அதற்கான கல்வியும் பெற்று வெளி உலகில் ஆணுக்குச் சமமாக வேலை செய்யும் தேன்மொழி நாயகி. அமைதியானவள். இவளைக் கல்யாணம் செய்துகொள்ள மாப்பிள்ளை சண்முகமும் அம்மாவும் பார்க்க வருகிறார்கள். சவரன்-வெள்ளி-கல்யாணச்செலவுடன், இருசக்கர வாகனமும் வரதட்சணையாக விதிக்கப்படுகிறது. பெண் வேலை செய்கிறாள் என்று எத்தனை நாட்களுக்குக் கல்யாணமில்லாமல் வைத்துக்கொள்வது? ஆனால், மாப்பிள்ளை நல்லவனாகத் தெரிகிறான். அவன் சேமிப்பில் இருந்து ஐம்பதாயிரம் எடுத்து வந்து தாய்க்குத் தெரியாமல் உதவி - கல்யாணத்தை முடித்துக்கொள்ள விழைகிறான். தேன்மொழிக்குச் சம்மதம் இல்லை.பெற்றோர் அதிர்ச்சியுறுகின்றனர். தேன்மொழி காரணம் சொல்கிறாள்."அம்மாவிடம் பேசி வரதட்சணை வேண்டாம் என்று சம்மதிக்கவைத்திருக்கலாம். ஆனால் இத்தனை வருஷம் வளர்த்தவர்களைவிட, ஒருநாள் பார்த்த என்மேல் உள்ள விருப்பம் முக்கியமாய் விட்டது...பிரச்சனையைத்தீர்க்காமல் ஒத்திப்போட்டு, ஒதுங்கிப் போறவங்களை நம்பி என் வாழ்க்கையை நிர்ணயிப்பது சரியன்று" என்று மறுத்துவிடுகிறாள். வரதட்சணை என்ற சாபக்கேடு, பெண் கல்வி கற்றும், பொருளாதார சுயச்சார்பு பெற்றும் அவள் மணவாழ்வை ஐந்து தலை நாகம் போல் இறுக்குகிறது.தேன்மொழியாள் குணநலமும் நடப்பியல் பிரச்சனைகளைத் தீர்க்க இந்தச் சமுதாயம் மாற வேண்டும் என்ற ஆர்வமும் உடைய பெண்ணாகத் திகழ்வதை ஆசிரியர் காட்டுகிறார். - இது 2006ம் ஆண்டின் 12 மாதச் சிறுகதைகளில் இருந்து சிறந்ததைத் தேர்வு செய்யும்போது எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் தேன்மொழியாள் பற்றிக்கூறியது...

இலக்கியச்சிந்தனை அமைப்பு தேர்வு செய்த 2006ம் ஆண்டின் 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

வானதி பதிப்பகம்
23,தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை - 17

தலைப்பு:அருவி - முதல் பதிப்பு ஏப்ரல் -2007
விலை:40.00

******

தேன்மொழி என்று கதையின் நாயகிக்கு பெயர் இருப்பதைப்பார்த்ததும்  இது மற்றுமொரு காதலோ என்று எண்ணிவிட வேண்டாம்.நான் எழுதிய சிறுகதைகளாகட்டும், துணுக்கு, கோயில்களின் வரலாறாகட்டும் எல்லாமே 2005ம் ஆண்டு மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயம் பற்றிய கட்டுரை பிரசுரமானபிறகுதான் அதிகமாக வெளிவந்தன. அந்த ஆலயத்தில் அம்பாளின் பெயர் தேன்மொழியாள். அவ்வளவுதான் விஷயம்.

வெள்ளி, 15 ஜனவரி, 2010

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...எந்திரன் - அசல் - சில தகவல்கள்.

அசல் படப்பிடிப்பில் உயிரிழந்த நகல் - ஒரு வேதனையான சம்பவம்.

மலேசியாவில் உள்ள டூரிஸ்ட் ஸ்பாட்டான ஈயக்குட்டையில ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கியிருக்காங்க. இதுல அஜீத்துக்கு டூப் போட்டது 

மலேசியாவுல இருந்த சீன நீச்சல் வீரர். லாங் ஷாட், க்ளோசப் - ரெண்டு காட்சிகள்லயும் டேக் ஓ.கே ஆகியிருக்கு. மூணாவது தடவையா லோ ஆங்கிள்ல கேமராவை வெச்சு எடுத்தப்ப குட்டையில் டைவ் அடிச்ச நீச்சல் வீரர் ஷாட் முடிஞ்சதும் தண்ணீரில் போட்ட கயிற்றைப்பிடிக்க முடியாம அப்படியே உள்ள போயிட்டாராம்.

மூணு நாள் கழிச்சுதான்  சடலம் மேல வந்துருக்கு. அஜித், இறந்து போனவரோட இறுதிசடங்குக்கு உதவிசெஞ்சாராம். இது போதுமா?

படப்பிடிப்பு முடியாத நிலையில இது மாதிரியான சம்பவங்கள் நடந்தா அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்னு ஒரு சென்டிமெண்ட் தமிழ்த்திரைப்பட உலகத்துல உண்டு. நீங்க மனவருத்தம் அடையாதீங்க-அப்படின்னு அஜித்தோட நண்பர்கள் அவருக்கு ஆறுதல் சொன்னாங்களாம்.இந்த கொடுமையை எங்க போய் சொல்றது.எவன் செத்தா எனக்கென்ன...என் கல்லாப்பொட்டி நிரம்பினாப் போதும்னு நினைக்குற இந்த மனோபாவத்தை வெச்சுகிட்டு திருட்டு வி.சி.டியப் பத்தி பேசுறாங்க.

அடப்பாவிகளா...நடிகருக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்குறீங்க. அந்த பணத்தை வெச்சு இறந்த நீச்சல் வீரருக்கு உயிர் கொடுக்க முடியுமா? இது மாதிரி படப்பிடிப்புகள்ல ஹீரோக்கள் பேர் வாங்குறதுக்காக நிறையபேர் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்துகிட்டு இருக்காங்க.

ஆங்கிலப்படங்களோட கதையை சுடுற நம்ம ஆளுங்க அவங்களோட திட்டமிடலை மட்டும் திரும்பிக்கூடப்பார்க்குறது இல்லை. நாட்டைக் காப்பாத்த உயிர்த்தியாகம் செய்யுறதுலயாவது ஒரு பெருமை இருந்துச்சு. இந்த மாதிரி ஹீரோக்கள் பேர் வாங்க உயிரிழக்குற ஸ்டண்ட் நடிகர்கள் பற்றி வெளியே தெரியுறதே இல்லை. இனிமேலாச்சும்

எதையும் பிளான் பண்ணி செய்யுங்கப்பா.

ஹீரோ, ஹீரோயினுக்கு ஹோட்டல்ல ரூம் போடுறதுல காட்டுற அக்கறையை ஸ்டண்ட் நடிகர்களோட உயிரைக் காப்பாத்துறதுலயும் காட்டுங்க.

******

எந்திரன்...அடுத்து?
ரஜினி திடீர் முடிவு! - இந்த தலைப்பைப் படிச்சதும் "இவரு ஆரம்பிச்சுட்டாருப்பா"அப்படின்னுதான் நினைச்சேன். ஆனா இந்த தடவை வேற மாதிரி அறிவிப்பு கசிஞ்சிருக்கு.

"யூத்ஃபுல் அன்ட் கல்ர்ஃபுல்லா இந்தப்படம் அமையணும். இந்தப் படத்துக்குப்பிறகு நான் பண்ணும் படங்கள் எல்லாமே என் வயதிற்கேற்ப உள்ள கேரக்டர்கள் பண்ணவே விரும்புறேன்."அப்படின்னு ரஜினி சொல்லிட்டாராம்.

இத...இதத்தான் சார் நாங்க எதிர்ப்பார்க்குறோம். குறிப்பிட்ட வயசைத்தாண்டினதும் அமிதாப் இந்தப் பாதையில ரொம்பச்சரியா பயணம் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. ஆனா நம்ம நடிகர்திலகத்தை தமிழ்சினிமா, கடைசி பதினைந்து ஆண்டுகள் ரொம்ப நல்லபடியா பயன்படுத்திக்காம விட்டுடுச்சு. அதற்குக் காரணம் நம்ம யூத்து(?!) எல்லாரும் அவரு மேல காட்டின அதீத மரியாதைதான்.

அவருக்கு அந்த மதிப்பு கொடுத்தது சரிதான். ஆனா படப்பிடிப்புல அவர்கிட்ட அதிகமா வேலை வாங்கினா அந்த மகாகலைஞன் வருத்தப்பட்டிருப்பாருன்னா நினைக்குறீங்க... இல்ல...கண்டிப்பா சந்தோஷமாத்தான் ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்.

இது அவருக்கு மட்டுமில்லைங்க, ஒவ்வொருத்தர் வீட்டுல உள்ள பெரியவங்களுக்குமே நாம கொடுக்குற மரியாதையைக் காட்டிலும் அவங்களால நமக்கு இன்னும் பிரயோஜனம் இருக்குன்னு ஒரு உணர்வுதான் அவங்களுக்கு முக்கிய தேவை.

அதிகம் பழக்கமில்லாத ஒரு நண்பர் குடும்பத்து திருமணவிழாக்கு நீங்க போறீங்க. அங்க உங்க நடவடிக்கை எப்படி இருக்கும்?

உங்க உறவினர் அல்லது நண்பர் இல்லத்திருமணத்துல கல்யாண ஏற்பாடுகள்ளயும் பங்கெடுத்துக்குறீங்கன்னு வெச்சுகுவோம்.இந்த இடத்துல உங்க நடவடிக்கைகள் எவ்வளவு உற்சாகமா இருக்கும்? இந்த வேறுபாடு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

பெரியவங்களை சும்மா இருக்கவெக்கிறது மரியாதை இல்லை. அவங்களை நல்ல முறையில பயன்படுத்திக்கிறதுதான் உண்மையான மதிப்பு.அதுக்காக ஒரு சில குடும்பங்கள்ல மருமக சீரியல் பார்த்துகிட்டு, மாமியாரை மட்டும் சமையல் செய்யச்சொல்றதோ, கடைசிநாள்ல மாமனாரை மின் கட்டணம் செலுத்த அனுப்புறதோ தப்புங்க.

இனி வரும் காலங்கள்ல ரஜினியோட  வயசுக்குத் தகுந்த கம்பீரமான கேரக்டர் கொடுத்தா அதுவும் மறக்கமுடியாத படங்களா அமையும்.

ரஜினியை என்றும் இளமையா பார்க்க நினைக்கிற ரசிகர்களுக்காக பிளாஷ்பேக்ல ஒரு பதினைந்து நிமிடங்கள் மட்டும் அந்த மாதிரி கெட்அப்ல சில காட்சிகள் வெச்சிடலாம்.

நானே இவ்வளவு யோசிக்கிறப்ப நீங்களும் ஹோம் தியேட்டர விட்டு கொஞ்ச நேரமாச்சும் வெளியில வந்து யோசிங்கப்பா.

******

எந்த ஒரு இடத்திலும் விதிவிலக்குகள் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி தமிழ்த்திரைப்படத்துறையின் முக்கியமான முன்னுதாரணமாக இருப்பது AVM Productions.

எதையும் பிளான் பண்ணியேதான் அவர்கள் செய்வார்கள் என்பதை புத்தகங்களில்தான்

படித்திருந்தேன். நேரில் உணர்ந்த அனுபவம் என்றால் தமிழகத்தையே ஓ போட வைத்த "ஜெமினி" படத்தின் பட பூஜையின்போதே ரிலீஸ் தேதியை அறிவித்தார்கள். நான் கூட ஆச்சர்யப்பட்டேன்.

இதெல்லாம் நடக்குற விஷயமான்னு எனக்கு வந்த சந்தேகம் நிரூபணமானுச்சு. சொன்ன தேதியில அவங்க ஜெமினியை ரிலீஸ் பண்ணலை. ஆமாங்க. ரெண்டு நாள் முன்னாலயே வெளியிட்டுட்டாங்க.

ஆனா அவங்களாலயே ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தோட ரிலீஸ் தேதியை சொல்லமுடியலைன்னுங்குறது விதிவிலக்குதான்.

அப்புறம் ஏ.வி.எம். சரவணனின் எளிமை எல்லாரும் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒண்ணு. ஆனா சின்ன நடிகர்கள் கூட பந்தா பண்றதை என்னால தப்புன்னு சொல்லமுடியலை. அதுக்கு காரணமா மக்கள்தானே இருக்காங்க.

நடிகர், நடிகைகள் பொது இடத்துக்கு வந்தா ரயில் இஞ்சின் பின்னாலயே ஒட்டிகிட்டு இருக்குற பொட்டி மாதிரி கூட்டம் கூடுனா அவங்க இப்படித்தான் தெறிச்சு ஓடுவாங்க.

ஏ.வி.எம் நிறுவனம் தொடர்பா எந்த பத்திரிகையில செய்தி வந்தாலும் சம்மந்தப்பட்ட பத்திரிகைக்கு நன்றி சொல்றது சரவணன் சாருடைய வழக்கமாம். இதைக்கேட்டு நான் ரொம்பவும் வியப்படையலை. ஏவி.மெய்யப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, மனதில் நிற்கும் மனிதர்கள், ஏ.வி.எம் 60 - இந்த புத்தகங்களை எல்லாம் படிச்சு முடிச்சதும் நான் கத்துக்க நிறைய நல்ல விஷயங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு கடிதம் எழுதினேன்.

மூன்று முறையும் அவர் கையெழுத்துடன் பதில் கடிதம் வந்தது. எல்லாரையும் மதிக்கிற இந்த பண்பும் நாம கத்துக்க வேண்டிய ஒண்ணுதான்.

ஏ.வி.எம் ஸ்டுடியோவுல அர்ஜூன் நடிச்ச "வாத்தியார்" படத்தின் எடிட்டிங் வேலை நடந்துகிட்டு இருந்தப்ப பீட்டாகேம் பிளேயர் எடுத்துகிட்டு அங்க போயிருக்கேன்.

******

ராமசாமி மெஸ் - சினிமாத்துறையில் இந்தப் பெயர் மிகவும் பிரபலம். ரஜினி, கமல்,

விக்ரம்,அஜித்,விஜய்  அப்படின்னு தொடங்கி இன்றைய நடிகர், நடிகை வரை இந்த மெஸ் சாப்பாட்டை ரொம்பவும் விரும்பி சாப்பிடுவாங்களாம்.

யார் யாருக்கு பிடிச்சதுன்னு ஒரு லிஸ்ட் போட்டுருக்காங்க. எனக்கு அந்த வெரைட்டிகள் பேர் எல்லாம் தெரியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சி போஸ்ட்புரொடக்ஷன் ஸ்டுடியோவுல வேலை செய்தப்ப பல நாட்கள் ராமசாமி மெஸ்லதான் சாப்பாடு வாங்கிட்டு வருவாங்க. மதிய சாப்பாட்டை (சைவம்தான்)ரொம்ப திருப்தியா சாப்பிட்டுருக்கேன்.

சூரியகதிர் - ஜனவரி 16-31, 2010 இதழில் வெளிவந்த தகவல்களை அடிப்படையா வெச்சுதான் இந்த கட்டுரையை எழுதியிருக்கேன்.