Search This Blog

புதன், 16 டிசம்பர், 2009

பயணிகள் கவனிக்கவும்!


நன்றி : சூரிய கதிர் 16-31 டிசம்பர் 2009
சூரிய கதிர் இதழில் வெளிவந்த கட்டுரை  அப்படியே உங்கள் பார்வைக்கு.


நீங்கள் விமானத்தில் பறந்திருக்கிறீர்களா?

'ஆம்' எனில், நிஜமாகவே நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். இந்தியாவின் ஜனத்தொகையில் நூற்றுக்கு ஒன்றிரண்டு பேர்கூட விமானம் ஏறுவதில்லை. பெரும்பான்மை மக்கள் மேலே பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விடுவதோடு சரி!

இந்த 'மெஜாரிட்டி' பொதுஜனத்துக்கு விமான அனுபவத்தை சாம்பிள் காட்டுவதற்காக, ஒரு நிஜ ஏரோப்ளேனையே கட்டி இழுத்துவந்திருக்கிறார் ஒருவர். பெயர் பகதூர் சந்த் குப்தா.

ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த குப்தா, இன்ஜினீயரிங் படித்தார். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது.

அவ்வளவுதான், குப்தாவின் கிராமம் மொத்தமும் சந்தோஷத்தில் குதித்தது, 'எங்களையும் ஃப்ளைட் பார்க்கக் கூட்டிக்கிட்டுப் போ' என்று உரிமையோடு கெஞ்சியது.

பரிதாபப்பட்ட குப்தா, அவர்களில் சிலரைமட்டும் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார், 'இவங்கல்லாம் என் கிராமத்திலிருந்து வந்திருக்காங்க, ஏரோப்ளேனைப் பார்க்கணும்ன்னு ஆசைப்படறாங்க' என்றார்.

ம்ஹூம், சான்ஸே இல்லை. வெளியிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்தக் கிராமவாசிகளை விரட்டிவிட்டார்கள். ஏக்கத்தோடு திரும்பிச் சென்ற அவர்களுடைய முகங்களைப் பார்க்கப் பார்க்க, குப்தாவுக்கு மிகவும் ஆதங்கமாக இருந்தது, 'என்னோடசிநேகிதங்க, உறவுக்காரங்க, இந்தியாவோட இதயமான கிராமவாசிங்கல்லாம் வாழ்க்கையில எப்பவும் விமானத்தைப் பார்க்கமுடியாதா? என்ன கொடுமை சரவணன்!'

பல வருடங்கள் கழித்து, டெல்லியில் ஒரு பழைய விமானம் விற்பனைக்கு வந்தது. சட்டென்று அதை ஏலம் கேட்டுச் சகாய விலையில் வாங்கிப் போட்டுவிட்டார்.

உடனடியாக, அந்த விமானம் பார்ட்-பார்ட்டாகப் பிரிக்கப்பட்டது, மொத்தத்தையும் தனித்தனியே பொட்டலம் கட்டித் தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார் குப்தா.


நம்மாள்தான் இன்ஜினீயராச்சே, அந்த விமானத்தை மீண்டும் பழையபடி பூட்டினார், சில மாற்றங்கள் செய்தார், பத்திரமாகக் காங்க்ரீட் தூணெல்லாம் அமைத்துத் தன் வீட்டின் பின்பகுதியில் கம்பீரமாக நிறுத்திவிட்டார்.

'குப்தா ஏர்லைன்ஸ்' விமானத்தைக் கிராமவாசிகள் பிரமிப்புடன் பார்த்தார்கள். அதில் ஏறி உட்கார்ந்து வாயைப் பிளந்தார்கள்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த விமானம் எங்கேயும் பறக்காது. எப்போதும் ஒரே இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கும். ஆனாலும், அன்றாடங்காய்ச்சிகளும் மிடில் க்ளாஸ் மாதவன்களும் ஒரு நிஜ விமானத்துக்குள் நுழைந்து பார்ப்பது சாதாரண விஷயமா? குப்தாவின் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் தங்களுடைய வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதுபோல் மகிழ்ந்து போனார்கள்.

இன்றைக்கும், டெல்லி அருகில் உள்ள துவாரகாவில் அந்தப் பறக்காத விமானத்தை நீங்கள் பார்க்கலாம். இருநூறு ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போய் சில மணி நேரங்களுக்கு 'விமானப் பயண'த்தை அனுபவிக்கலாம். ஏழை, எளியவர்களிடம் காசு வாங்குவதில்லை குப்தா.

நிஜ விமானம் போலவே, இங்கேயும் 'போர்டிங் பாஸ்' வாங்கவேண்டும், இரும்புப் படிகளில் ஏறி மேலே சென்றால், சீருடை அணிந்த விமானப் பணிப்பெண்கள் 'நமஸ்தே' சொல்லி வரவேற்பார்கள். உங்களைக் குஷன் இருக்கையில் உட்காரவைத்து சாக்லெட் கொடுப்பார்கள்.

அதன்பிறகு, விமானத்தில் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மைக்கில் அறிவிக்கிறார்கள். சீட் பெல்ட் அணிவது, ஆபத்து நேரத்தில் ஆக்ஸிஜன் முகமூடிகளைப் பொருத்திக்கொள்வது, தண்ணீரில் மிதப்பதற்கான பாதுகாப்பு உடைகளை அணிவது என்று சகலமும் அக்கறையாகச் சொல்லித்தரப்படுகின்றன.

இதையெல்லாம் அறிவிக்கும் நேரத்தில், உடல் ஆரோக்கியம், குடும்பக் கட்டுப்பாடு, எயிட்ஸைத் தடுப்பது போன்ற பொதுநலச் செய்திகளையும் கலந்து பரிமாறுகிறார் குப்தா. மக்களும் ஆர்வமாகக் கேட்கிறார்கள்.

அடுத்து, சாப்பாட்டு நேரம். நிஜ விமானத்தில் வருவதுபோலவே அட்டைப்பெட்டிச் சாப்பாடு, கூல் டிரிங்ஸ். ஒவ்வொருவரும் தங்களுடைய இருக்கையிலேயே தாற்காலிக மேஜை அமைத்துக்கொண்டு ஜாலியாகச் சாப்பிடுகிறார்கள்.

கடைசியாக, விமானத்திலிருந்து கீழே இறங்குவதற்கு ஒரு சூப்பர் சறுக்குமரம் அமைத்திருக்கிறார்கள். அதில் எல்லோரும் சின்னக் குழந்தைகளைப்போல் ஜம்மென்று சறுக்கிக் கீழே வரவேண்டியதுதான்.

குப்தாவின் விமானம் தரையிலிருந்து கால் இஞ்ச்கூட மேலே எழும்பப்போவதில்லை. ஆனால், அதில் ஏறி, இறங்குகிற மக்களின் முகங்களைப் பார்க்கவேண்டுமே, அப்படி ஒரு சந்தோஷம், த்ரில்!

இந்த கட்டுரையை படித்து முடித்தபோது எனக்கே விமானத்தில் ஏறி இறங்கிய பரவசமான அனுபவம் ஏற்பட்டது. அப்படி என்றால் இதை அனுபவித்த ஏழை எளிய மக்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக