Search This Blog

வெள்ளி, 4 டிசம்பர், 2009

விதி மீறலால் விபத்துக்கள் - என்ன தீர்வு? (ஒளிப்படங்கள் - நன்றி : தினமலர்)


1996 மே மாதம் வெளிவந்த படம் "இந்தியன்". அதில் தகுதியற்ற வாகனத்துக்கு அன்பளிப்பு (?!) பெற்றுக் கொண்டு சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். அந்த வாகனம் விபத்தில் சிக்கி நாற்பது குழந்தைகள் பலியாவதாக காட்சி.

இப்படியெல்லாம் நடக்குமா? என்ற பிரமிப்பு விலகாமலேயே நான் அந்த படத்தைப் பார்த்திருக்கிறேன். பிரமிப்புக்கு காரணம்,அப்போது எனக்கு பதினாலு வயது.

இப்போது தொடரும் விபத்துக்களைப் பார்க்கும் போது, தகுதியற்ற வாகனங்களை இயக்குவதில் நாம் பெருமளவு முன்னேறியிருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது.

அதிலும், பல பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்கள் வெறும் மண் குதிரையாக இருப்பது நமது அச்சத்தினை பல மடங்கு அதிகரிக்க வைக்கிறது. பெயர் சொல்ல விரும்பாத ஒருவர், "சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய பள்ளி வேன் ஒன்றில் டீசல் டேங்க் இல்லாமல், பத்து லிட்டர் மண்ணெண்ணெய் கேன் வைத்து வேனை இயக்கி வந்தார்கள்." என்றார்.

"என்ன சார்...இதையெல்லாம் பிடிக்க மாட்டார்களா? "என்று கேட்டேன்.

"அடப்போங்க தம்பி...நிறைய வண்டியில பிரேக்கே இருக்காது. இதென்ன பிரமாதம். உங்களுக்கு உலக அனுபவம் போதலை" அப்படின்னு சொல்லிட்டு அவர் போயிட்டார். ஆனால் என் மனதில் இந்த மாதிரி விபத்துக்களை எப்படி தவிர்ப்பது என்ற யோசனை.



கண்காணிப்பு, கடுமையான தண்டனை - இவை இரண்டும் இல்லை என்றால் எதையும் தடுக்கவே முடியாது என்பது புரிந்தது.

ஒன்றாம் வகுப்பு பிள்ளைகள் கூட வகுப்பில் ஆசிரியை இருக்கும் வரைதான் சத்தம் போடாமல் இருக்கும். இதுதான் மனித இயல்பு. அப்படி இருக்கும் போது சரியான கண்காணிப்பு இல்லை என்றால் வாகன ஓட்டுநர்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடாக நடந்துகொள்வார்கள்?


நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியின் கணக்குப் பிரிவில் வேலை செய்தேன். ஒரு நாள் மதியம் என்னுடைய வாகனம் பழுது என்பதால் போகும் வழியில் இறங்கிக் கொள்ளலாம் என்று பள்ளி வேனில் ஏறிச் சென்றேன்.

அந்த வேனில் பாடல் எதுவும் போடாமல் இருந்ததைப் பார்த்ததும் எனக்கு வியப்பு. ஏன் சந்தேகத்தை ஓட்டுநரிடமே கேட்டதற்கு,"பிள்ளைகள் வாகனத்தில் இருக்கும்போது பாடல் போடக்கூடாது. வாகனம் எடுக்கும் முன்பு பள்ளியில் காத்திருக்கும் நேரத்தில் மட்டும் குறைவான சத்தத்தில் கேட்டுக் கொள்ளலாம். இதை மீறினால் என்னிடம் வழியில் பார்த்து சொல்வதற்கு ஆள் இருக்கிறது" என்று பள்ளி நிர்வாகி சொன்னதை தெரிவித்தார்.

இப்படியும் நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் இவர்களின் எண்ணிக்கை இரண்டு விரல்களுக்குள் அடங்கிவிடும். இதுதான் பிரச்சனை.

 விதிகளை மீறி வாகனம் இயக்குவது முழுவதும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. இதில் எந்த சமரசமும் கூடாது. மது, செல்போன், என்று எல்லா ஒழுங்கீனங்களும் சாலைவிதி மீறலின் கீழேயே வந்துவிடும். வாகன ஓட்டுநர்களிடம் மட்டுமே தவறு இல்லை.


டிசம்பர் 3ந் தேதி வேதாரண்யம் பகுதியில் நடந்த விபத்தில் பதினோரு குழந்தைகள் காப்பாற்றப்பட்டதற்கு முக்கிய காரணம், அந்த விபத்தில் உயிரிழந்த ஆசிரியையும், கிளீனரும்தான் என்பது சிலர் கொடுத்த தகவல். ஆனால் கூட்டம் சேர்ந்ததும் கிளீனர் அங்கிருந்து தப்பித்து ஓடியதாகவும் கூறுகிறார்கள்.

ஒரு தப்பு நடந்துவிட்டது...அந்த நேரத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதை மறந்து இதற்கு காரணம் யார் என்று கருதுகிறார்களோ அவரை நையப் புடைக்கும் போக்கு உணர்ச்சிவசப்பட்ட நேரத்தில் வேண்டுமானால் சரியாகத் தெரியலாம்.

ஆனால் சற்று சிந்தித்துப்பாருங்கள்...கிளீனர் மட்டும் பாதியில் ஓடிப்போகாமல் இருந்திருந்தால் இன்னும் ஐந்து பிள்ளைகளை காப்பாற்றியிருக்கலாமோ என்னவோ?

இந்த விஷயத்தில் கிளீனர் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பு அதற்கு காரணம் இந்த சமூகம்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஓட்டுநர் செல்போனில் பேசிக் கொண்டே வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சாத்தியம் அதிகம். ஆனால் தான் அப்படி செய்வது நிர்வாகத்துக்கு தெரிந்து விடும்...நடவடிக்கை இருக்கும் என்ற சூழ்நிலை இருந்தால் இந்த தவறு நிகழ்ந்திருக்காது.

நிர்வாகம் இவ்வளவு அலட்சியமாக இருக்க காரணம் என்ன?... இப்படி பள்ளி வேன்கள் ஓட்டுபவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம்தான் வழங்கப்படுகிறது. குறைவான பணி நேரத்தை இதற்கு காரணமாக சொல்வார்கள்.

இந்த ஓட்டுநர்களை அலுவலகப் பணிக்கும் பயன்படுத்திக் கொண்டு, கணிசமான ஊதியம் வழங்கி இருந்தால் அவர்கள் ஈடுபாட்டுடன் பணி புரிந்திருப்பார்கள். இதுபோல் பள்ளி - கல்லூரி வாகனம் இயக்குபவர்களுக்கு இது எவ்வளவு முக்கியமான உயிர் காக்கும் பணி என்பதை கவுன்சிலிங் மூலம் புரிய வைப்பதை நிர்வாகங்கள் கட்டாயமாக்க வேண்டும்.


மற்ற தொழிலில் ஒருவர் தவறு செய்தால் அது அவரையும், அவர் குடும்பத்தையும் மட்டுமே பாதிக்கும்.அவர் தன்  தவறுகளையும் திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வாகன ஓட்டுநர்கள் பிழை செய்தால் திருத்தவே வாய்ப்பு இல்லை. அது மட்டுமின்றி, தவறு செய்பவரால் அதற்கு துளியும் சம்மந்தமில்லா அப்பாவி உயிரிழப்பதோடு, எத்தனையோ குடும்பங்களும் பாதிக்கப்படும்.

அதனால் தான் கூறுகிறேன் - கண்காணிப்பு, கடுமையான தண்டனை - இவை இரண்டும் இல்லை என்றால் எதையும் தடுக்கவே முடியாது.

ஒன்றாம் வகுப்பு பிள்ளைகள் கூட வகுப்பில் ஆசிரியை இருக்கும் வரைதான் சத்தம் போடாமல் இருக்கும். இதுதான் மனித இயல்பு. அப்படி இருக்கும் போது சரியான கண்காணிப்பு இல்லை என்றால் வாகன ஓட்டுநர்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடாக நடந்துகொள்வார்கள்?

பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பான வாகனத்தில் செல்வதை உறுதி செய்யும் பொருட்டு நாம் எவ்வளவுதான் பேசினாலும் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது. அதுதான் பொருளாதாரம். அந்த சிக்கல் இருக்கும் வரை பழைய இரும்புக் கடைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் புத்தம் புது வர்ணப் பூச்சுடன் வலம் வந்து குழந்தைகளை பலி வாங்குவது குறைவது கடினம்.

இதற்கு மேம்போக்கான நடவடிக்கைகள் எதுவும் பலன் தரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. பிறகு என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களா?

ஒவ்வொரு குழந்தையும் தன் தாய் தந்தை அழைத்துச் சென்று விடும் தூரத்தில் அரசுப்பள்ளிகள் நிறையவே உண்டு. அவற்றில் தரமான இலவசக் கல்வி சாத்தியமானால் மட்டுமே இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இலவசமாக்க வேண்டியதை எல்லாம் தனியார்மயமாகி மக்களுக்கு தீங்கிழைக்கும் துறைகள் எல்லாம் அரசுமயமாகிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் என்னுடைய எதிர்பார்ப்பை படிக்கும் நீங்கள், "சரியான பைத்தியக்காரன்" என்று சொல்வது என் காதில் விழுகிறது.

நான் இதுக்கெல்லாம் கவலைப்படுறதா இல்லைங்க. ஊதுற சங்கை ஊதிட்டேன். அதுக்கு மேல என்ன செய்ய முடியும்?

(மீண்டும் நன்றி: தினமலருக்கு.-புகைபடங்களைப் பயன்படுத்தியதற்காக.- அவற்றில் லோகோவையும் இணைத்தது  என்னுடைய முயற்சி)

2 கருத்துகள்:

  1. அரசு உரிமம் இல்லாமல் பள்ளிக்கூடம் நடதியுள்ளர்கள் கல்வித்துறை என்ன செய்து கொண்டிருதது? உரிமம் இல்லாத வாகனத்தை பயன் படுதியுள்ளர்கள்.
    பள்ளி வாகனகள் மஞ்சள் வர்ணத்தோடு இருக்கவேண்டும் என்பது விதிமுறை அதை கூட பின்பற்றவில்லை.(படத்தை பார்த்தேன்)
    கல்வித்துறை,RTO
    பள்ளிநிர்வாகம் உடன் தண்டிக்கப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. மனதை உலுக்கும் நிகழ்வு. இந்தியன் என் நினைவுக்கும் வந்து போனார். இந்தியர் இன்னும் அப்படியே:(! இழ்ந்த உயிர்களுக்கு என்ன பதில்? பெற்றவர்களுக்கு எப்படி தர இயலும் ஆறுதல்? பகிர்வுக்கு நன்றி சரண்.

    பதிலளிநீக்கு