Search This Blog

புதன், 16 டிசம்பர், 2009

விவசாயிகளின் உயிர் நாடியை ஒடுக்க நினைக்கலாமா? - மலரும் வேதனைகள்


(இந்த ஆதங்கம் 2007 ஏப்ரலில்)

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக அரசு நிலம் கையகப்படுத்துவதில் முறையற்ற போக்கினால், மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் பல ஏழை விவசாயிகள் காவலர்களின் துப்பாக்கி குண்டுக்குப் பலியாகிவிட்டார்கள். இதையடுத்து அரசு தன் முடிவைக் கைவிட்டுள்ளது.

நீரைத் தேக்கி வைக்க அணை, சாலை வசதி போன்ற காரணத்துக்காக நிலம் சேகரிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை, இந்தியாவின் ஒரு பெட்டிக்கடையைக்கூட விடாமல் கசக்கிப் பிழியும் வரி, விதிகள் போன்ற எதுவுமே கட்டுப்படுத்தாது என்ற கொள்கையுடன்(?!) அரசு அமைத்து வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு இவ்வளவு சலுகைகளை வழங்கும்போது தரிசு நிலங்களைக் கையகப்படுத்தி புதிதாக போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளைச் செய்து தராமல், ஏழை விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரத்தைக் கையகப்படுத்தி அவர்களையும் நகர்ப்புறக் கூலிகளாக்க, அரசே முயற்சி செய்தால், அப்பாவி மக்களின் கதி என்ன?

அமெரிக்கா தன் நாட்டில் கோடிக்கணக்கில் விவசாயத்துக்கு மானியம் வழங்கிவிட்டு நம் இந்தியாவின் விவசாயிகளை ஒடுக்க நினைக்கலாமா?

இதெல்லாம் ஒருபுறமிருக்க, தீவிரவாதிகளுக்குக் கூட, மரண தண்டனை கூடாது என்று குரல் எழும் நேரத்தில், தங்களின் வாழ்வாதாரத்தைத் தர மறுத்த இந்தியக் குடிமக்கள் கொடூரப் படுகொலை செய்யப்பட்டது என்ன நியாயம்?


இத்தகைய போராட்டங்களை ஒடுக்க, இனியாவது அரசு மயக்க மருந்துகளைக் கொண்ட தோட்டாக்களைப் பயன்படுத்தி, அப்பாவி மக்களின் உயிர் பலியாகாமல் மிச்சம் வைக்கட்டும்.

ஒருசில கொழுத்த பணக்காரர்களை உலக பணக்காரர் பட்டியலில் மேலும் முன்னேற்ற, நந்திகிராம் மக்கள் பலியாக்கப்பட்ட அவலம், இந்தியா மீண்டும் அடிமையாகப்போகிறதா? என்ற கேள்வியையே கேட்க வைக்கிறது.

(இந்த ஆதங்கம் 2007 ஏப்ரலில்- ஆனால் இப்போதும் நிலைமையில் பெரிய மாற்றம் இல்லை என்பது போலத்தான் தெரியுது. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக