Search This Blog

வியாழன், 17 டிசம்பர், 2009

தீதும் நன்றும் பிறர் தர வாரா...போட்டோ ஆல்பத்தால் வந்த சிக்கல்.


இதுவும் திருமண ஒளிப்படத்தொகுப்பு தொடர்பான சிக்கல்தான்.

திருமண போட்டோ ஆல்பத்தைப் பார்த்து வெகுண்டெழுந்து ஒரு தம்பதியர் எங்களைத் தேடி வந்தாங்க. நாங்கள் எதையும் தவறாகவெல்லாம் படம் பிடித்துவிடவில்லை. அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதில்தான் கவனமாக இருப்போம்.

அது புரியாமல் வந்த அவங்க எங்களைத் திட்டி துவைச்சு காயப் போட்டாங்க.அட...வார்த்தைகளாலதாங்க. நாங்களும் அவங்க பேசி முடிக்கட்டும்னு காத்திருந்தோம். நாங்க ஒண்ணும் புத்தரை பின்பற்றி நடக்குற அளவுக்கு ரொம்ப நல்லவய்ங்கன்னு  தப்பான முடிவுக்கு வந்துடாதீங்க. அடுத்து டிவிடியைக் கொடுக்கும்போது மீதி பணத்தை வாங்கியாகணும்ல...அதனால கொஞ்சம் பொறுத்துக்கடான்னு எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிகிட்டு இருந்தோம்.

அவங்களோட முக்கியமான சொந்தக்கார பெண்களில் சிலர் நலுங்கு வெக்கிற போட்டோவுல இல்லையாம். அவங்க எல்லாரும் மணமகளோட அம்மா அப்பாவைத் திட்ட, அவங்களோட பாரத்தை எங்க மேல இறக்கிகிட்டு இருந்தாங்க.

நாங்களும் பெருந்தன்மையோட சுமைதாங்கியா மாறிட்டோம். (வேற வழி?)

அந்த திட்டு மழை ஓய்ந்ததும் எங்களோட தன்னிலை விளக்கத்தை (அரசியல் தலைவர்களோட அறிக்கையைப் படிச்சு இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் வருதுங்க) சொன்னோம்.

அதாவது மணமக்களுக்கு வலப் பக்கம் நின்னு நலுங்கு வெக்கிறது மாதிரியான சம்பிரதாயங்களை செய்தால் பிரச்சனையே இல்லை. இவன் என்ன சொல்றது, நாங்க என்ன கேட்குறதுன்னு நீங்க இடப்பக்கமா வந்து நலுங்கு வெச்சா மத்தவங்க எப்படியோ தெரியாது. நாங்க பெரும்பாலும் அந்த நேரத்துல படம் பிடிக்கிறதை தவிர்த்திடுவோம். (அப்ப பிலிம் இல்லாம வெறும் ஃப்ளாஷை வெச்சுதான் பில்டப்பான்னு யாருப்பா தொழில் ரகசியத்தை வெளில சொல்லி பொழப்ப கெடுக்குறது?)

ஏன்னா நீங்க மணமக்களுக்கு இடப்பக்கம் நின்னு நலுங்கு வெக்கிறதை கொஞ்சம் கற்பனை செஞ்சு பார்த்தா தெரியும். உங்க புடவை லேசா ஒதுங்குனா ரொம்ப ஆபாசமாயிடும். உட்கார்ந்து இருக்குறவங்களுக்கு நீங்க குனிஞ்சு பொட்டு வைக்கும்போது இந்த ஏடாகூட கோணம்தான் அமையும். வீடியோ கேமரான்னா ஜிம்மிஜிப் (?!) எஃபெக்ட்ல பில்டப் கொடுத்து ஒரு சுத்து சுத்தி சமாளிச்சுடுவோம்.

மீறி ஏதாவது பதிவாயிட்டா எடிட்டிங்ல தூக்கிடுவோம். ஸ்டில் கேமராவுல இதெல்லாம் முடியாது. அந்த நொடியில பிரச்சனை இல்லாத கோணம் அமைஞ்சா போட்டோ எடுத்துடுவோம். இல்லன்னா அவ்வளவுதான்.

"ஏன் தம்பி...டக்குன்னு ஒழுங்கா நிக்க சொல்லி படம்பிடிக்க வேண்டியதுதானே. இப்படியா போட்டோவுலயே இல்லாம பண்றது?" - அப்படின்னு அந்தம்மா சொன்னதுலேயே சமாதானமாயிட்டாங்கன்னு புரிஞ்சுடுச்சு. (அப்பாடா...பாக்கி பணம் எப்படியும் கிடைச்சுடும்)

"அட... நீங்க வேற...ஏற்கனவே சில போட்டோகிராபர்கள் செய்யுற தப்பால எங்களுக்கெல்லாம் கெட்ட பேர். அவ்வளவு கூட்டத்துல இந்த மாதிரி ஏதாவது

சொல்லிட்டு கேமராவோட நாங்களும் சட்னியாகுறதுக்கா?

நாசூக்கா, அம்மா...கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து நின்னு பொட்டு வைங்கம்மான்னுதான் சொல்லுவோம். அந்த நேரத்துல நீங்க எங்க பேச்சைக்கேட்டா சீன்ல இருப்பீங்க...இல்லேன்னா இல்லை. அவ்வளவுதான்."அப்படின்னு பேசி சமாதானம் செஞ்சு அனுப்பிட்டோம்.

நாங்க என்ன அரசியல்கூட்டத்துலயா பேசுறோம்?... அர்த்தம் இல்லாம போறதுக்கு... இல்லன்னா ஆசிரியரா...ஏன் எங்க பேச்சைக் கேட்க மாட்டேங்குறீங்க?... நகர்ந்து இந்தப் பக்கம் வாங்கன்னு போட்டோகிராபரோ, வீடியோ கேமராமேனோ சொன்னா கேளுங்கம்மா...

ஆனா ரொம்ப பேர், வீடியோ, போட்டோ எடுக்குறவங்கள கல்யாண மண்டபத்துக்குள்ள அத்துமீறி நுழைஞ்சவங்க மாதிரியே பார்க்குறாங்களே...அது ஏங்க?

2 கருத்துகள்: