Search This Blog

புதன், 16 டிசம்பர், 2009

மருத்துவர்களில் இரண்டு வகை - கருணை & வெறி


 உயிர் காக்கும் புனிதப் பணியில் இருப்பவர்களிடம் உள்ள குறைகளை எழுதியே தீர வேண்டும் என்ற கட்டாயத்துக்கு நான் வந்திருக்கிறேன்.சமீபத்தில் பத்திரிகைகள் வாயிலாக தெரிந்து கொண்ட செய்தி ஒன்றும்  சற்றுப் பெரிய நகரம் ஒன்றில் நேரடியாகப் பார்த்து அதிர்ச்சியும் கோபமும் கொள்ளச் செய்த சம்பவமும் இதற்கு முக்கியக் காரணம்.


முதலில் நேரில் பார்த்த சம்பவம்:

வேலை விஷயமாக தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள சற்று பெரிய நகரத்திற்குச் சென்றிருந்தேன். உறவினர் வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தம்பதி வாடகைக்கு குடியிருந்தனர். ஒரு சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சையால் குழந்தை பிறந்துள்ளது.  என்னுடைய கோபத்திற்குக் காரணம், அந்த மருத்துவமனையில் அன்று பணியில் இருந்த மருத்துவர், "என்னோட சொந்த கிளினிக்கிற்கு வரமாட்டேன்னு சொல்லிட்டீல்ல...இங்க உனக்கு சுகப்பிரசவம் ஆக விட்டேனா பார்" என்று சவால் விட்டிருக்கிறார். 

சொன்னபடியே, அதிகாலை மூன்று மணிக்கே வலி எடுத்த பிறகு காலை பதினோரு மணிவரை வலி நிற்கவே இல்லையாம். மருத்துவமைக்குச் சென்ற அந்தப் பெண்ணிற்கு எனிமா கொடுக்காமல், ஊசி போடாமல் ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்ல வலுக்கட்டாயமாக தயார் செய்து விட்டாராம். மயக்க மருந்தும் போதிய அளவில் கொடுக்காமல் கர்ப்பிணியை வேதனைப் படுத்தியிருக்கிறார்.   இதுவே அவரது தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் பண வலியைத் தவிர வேறு எந்த வலியும் இல்லாமல் செய்திருப்பார் என்று மருத்துவமனை ஊழியர்களே கிண்டலாக சொல்லியிருக்கிறார்கள். 

எத்தனை லட்சம் கொடுத்து படிச்சுட்டு வந்துச்சோ தெரியலை. பணம் பணம்னு வெறி பிடிச்சுதான் அலையுது என்று சிலர் தங்களால் எதுவும் செய்ய முடியாத ஆதங்கத்துடன் பேசினார்கள். அவ்வளவுதான்.  அந்தப் பெண் சராசரிக்கும் சற்று கூடுதலான உயரத்துடன் நல்ல ஆரோக்கியமாகவேதான் இருந்திருக்கிறார். சுகப் பிரசவம் என்றால் சில தினங்கள் மட்டுமே தாய்மார்களுக்கு சிரமம். அறுவை சிகிச்சை என்றால் ஆயுளுக்கும் சில சிரமங்களை அனுபவிக்கவேண்டும் என்பது தெரிந்தும் சுகப்பிரசவமாக வேண்டியதை வலுக்கட்டாயமாக அறுவைசிகிச்சை அரங்கத்திற்கு கொண்டு செல்லும் இந்த மாதிரி மருத்துவர்களை நாம் வேடிக்கை பார்க்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம். 

இதை சரி செய்ய ஒரு வழியும் தெரியலை.இந்த அழகில் 2020 ல் வல்லரசு என்று பேசுவதைக் கேட்கவே வெட்கமாக உள்ளது. 

 அடுத்து ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட செய்தி:  ஒரு புலனாய்வு இதழில் திருச்சி மருத்துவக்கல்லூரி (?!) மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் அதிக எண்ணிக்கையில் இறப்பதாக கட்டுரை வெளிவந்திருந்தது. ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக வெளியான செய்தி வேதாரண்யம் பள்ளிக்குழந்தைகள் ஒன்பது பேரின் மரணம் அளவுக்கு கூட யாரையும் உலுக்கவில்லை.  இவையெல்லாம் மனிதனால் தடுக்க முடியாத சாவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் முற்றிலும் மனித அலட்சியத்தால் இந்த உயிரிழப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருப்பதுதான் மனதை பதற வைக்கிறது.


இந்த விஷயம் அமைச்சர் கவனத்திற்கு சென்றதும் என்ன நடந்ததோ தெரியாது.  மருத்துவர்களின் கூட்டம் உடனே நடந்திருக்கிறது. இனிமேல் இப்படி தவறு நடப்பதற்கு விடக்கூடாது என்று ஆலோசித்திருப்பதாக நீங்கள் நினைத்தால் 2020 வரை மிகப் பெரிய ஏமாளி என்ற பட்டம் உங்க்ளுக்கே உங்களுக்குதான். வேற யாருக்கும் கிடையாது.  இந்த விஷயம் எப்படி வெளியே தெரிந்தது என்றுதான் சீனியர் ஆபீசர்கள் மற்றவர்களை வறுத்து எடுத்திருக்கிறார்கள். 

இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி இங்கே ஏழைகளுக்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

என்ன ஒரே புலம்பலா இருக்கே என்று கேட்பவர்களுக்கு மட்டுமல்ல...எனக்கும் ஒரே ஆறுதல் அளித்த ஒரு மருத்துவரை நான் சந்தித்தேன். 


உறவினரின் குழந்தைக்கு உடல்நலக் குறைபாடு காரணமாக ஓராண்டு காலம் பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அந்த சிறு குழந்தை அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. பிறகு திருச்சியில் உள்ள மருத்துவர் பரிந்துரை செய்ததன்படி சென்னையில் ஒரு பிரபல மருத்துவரை சந்தித்தோம்.  சிறு நகரங்களில் உள்ள மோசமான மருத்துவர்களிடம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் காரணமாக உறவினருக்கு நம்பிக்கையே இல்லாமல்தான் வந்தார். எனக்கும் நம்பிக்கை சிறிதளவே இருந்தது. ஆனால் எங்கள் எதிர்ப்பார்ப்பு பொய்யானதில் இனம்புரியாத சந்தோஷம். 

ஏற்கனவே சிகிச்சை அளித்த மருத்துவரின் அறிக்கைகளை எல்லாம் படித்த அவர், "உங்க டாக்டர் இந்த நோய் பற்றி எதுவும் தெரியாமதான் சென்னைக்கு அனுப்பிட்டார் போலிருக்கு... பெரிய வியாதியா இருக்குமோன்னு பயந்துடாதீங்க. அவரும் பிரமாதமா சிகிச்சை அளிக்கக்கூடியவர்தான். ரெண்டு சிறந்த மாணவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து படிக்கிற மாதிரிதான் எனக்கு ரெஃபர் பண்ணியிருக்கார்.   நீங்க இந்த பரிசோதனைகளை செய்துகிட்டு வந்துடுங்க. சீக்கிரம் குணமாயிடும். சாயந்திரம் பேசுவோம். என்று அந்த மருத்துவர் சொன்னதிலேயே எங்களுக்கு முழு அளவில் நம்பிக்கை வந்தது.  சென்னையில் அந்தக் குழந்தைக்கு பரிசோதனை செய்த செலவும் மிகக் குறைவான தொகைதான். இது எதுவுமே நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. 

பரிசோதனை முடிவுகளைப் பார்த்த அவர், "இந்த குழந்தைக்கு புரதம் அதிகமா வெளியேறுது. இந்த குறைபாடு பற்றி இன்னும் ஆராய்ச்சிதான் பண்ணிகிட்டு இருக்காங்க. இதுதான் மருந்து. இதைக்கொடுத்தா குணமாயிடும்னு எதையும் சொல்ல முடியாது.   ஆனா கோளாறை ஓரளவு கட்டுப்பாடா வெச்சிருக்குற மருந்துகளைத்

தர்றேன். மூணு மாசம் கொடுத்தா போதும். மருந்தை விட உணவுப் பழக்கவழக்கம் தான் முக்கியம்."என்று சொன்ன அவர் மிக எளிமையான வழிவகைகளைக் கூறினார்.

"வேறு எதுவும் பிரச்சனைன்னா உடனே நீங்க என்னைத் தேடி வர வேண்டாம். திருச்சியில அந்த மருத்துவரையே பாருங்க. அவரும் கெட்டிக்காரர்தான். கடவுள் அனுக்கிரஹத்தாலயும் நீங்க குழந்தைக்கு கொடுக்கும் உணவுகள்ல காட்டப்போற கவனத்தாலயும் இனிமே இந்தப் பிரச்சனை வராதுன்னு நம்புவோம்." - இப்படி பேசினது ஒரு மருத்துவர்தானான்னு எங்களுக்கே சில தினங்கள் வரை பிரமிப்பு விலகலைங்க.   என்ன பண்றது....அது ஒரு கனாக் காலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக