Search This Blog

செவ்வாய், 8 டிசம்பர், 2009

கிரிக்கெட்டால் நமக்கு ஆப்பா? ஹெல்ப்பா?


கிரிக்கெட்டிற்கு இந்தியாவில்தான் ரசிகர்கள் மிக அதிகம்.ஆனால் இது நிறைய மனிதர்களின் நேரத்தை வீணாக்குகிறது என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.அதைப் பற்றி பிறகு பேசுவோம்.

விளையாட்டு என்பதையும் தாண்டி கிரிக்கெட்டில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே உண்டு.2008 ம் ஆண்டில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த நான்காவது டெஸ்டில் நாம் அறிந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.

இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் கடைசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தும் நேரத்தில் கங்குலியின் வசம் கேப்டன் பொறுப்பைக் கொடுத்து தோனி அழகு பார்த்தார்.ஓய்வு பெற வேண்டிய டெஸ்டில் ரன் எதுவும் அடிக்காமல் மனவருத்தத்தில் இருந்த வீரருக்கு இதை விட கவுரவமும் மகிழ்ச்சியும் வேறு என்ன இருக்க முடியும்?

இதை விட ஒரு சந்தோஷமான விஷயம், வெற்றிக் கோப்பையை அதற்கு முதல் டெஸ்டிலேயே ஓய்வு பெற்ற வீரரான கும்ப்ளேயுடன் சேர்ந்து பெற்றுக்கொண்டதும் நெகிழ்ச்சியான விஷயம்.

நாமும் நம் வீட்டில் பெரியவர்களுக்கு இது போன்ற பெரிய அளவில் இல்லை என்றாலும் சின்ன சின்ன சந்தோஷங்களை அளிக்க முடியும்.எப்படி என்கிறீர்களா?

கோயிலுக்கு நன்கொடை அளிப்பது,நமது ஊழியர்களுக்கு ஊதியம்,போனஸ் வழங்குதல், குழந்தைகளுக்குப் பரிசளித்தல் போன்றவற்றை நம் வீட்டுப் பெரியவர்கள் கையால் செய்தால் இரண்டு நன்மைகள் உண்டு.

முதலாவது, நம் குழந்தைகள், நம்மிடம் வேலை செய்பவர்கள் ஆகியோருக்கு வீட்டுப் பெரியவர்கள் மீது மதிப்பு இருக்கும். இதனால் நமது கவுரவம் குறைந்து விடாது. பெற்றவர்களுக்கு இவ்வளவு மரியாதை தருகிறாரே என்று மதிப்பு ஒருபடி மேலேதான் உயரும்.

 "தான் ஒன்றுக்கும் உபயோகமில்லாதவராக ஆகி விட்டோமோ என்ற மன உளைச்சல்தான் பெரியவர்கள் பல நேரங்களில் பொறுமையிழந்து நடந்து கொள்ளக் காரணம். அவர்கள் வார்த்தையை அப்படியே கேட்டுக் கொள்ள வேண்டும் என்றில்லை. அவர்களிடம் ஆலோசனை கூட கேட்காமல் இருக்கிறோம் என்பதே வேதனைக்கு பல நேரங்களில் காரணமாக இருந்து விடும். இந்த எண்ணம் அவர்களை விழுங்கி விடாமல் இருக்க மேலே நான் சொன்ன யோசனை உதவும். இது இரண்டாவது நன்மை,

அவர்களின் அந்த நேரத்து மன நிறைவு நம்முடைய பல ஆண்டு நிம்மதியான வாழ்க்கைக்கான ஆசீர்வாதம் என்பதை நிச்சயம் உணர்வோம்.


இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் முதலிடம் பிடித்தது இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற போதுதான். இதில் இரண்டாவது டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஸ்ரீசாந்த் சில காலம் முன்பு வரை  பந்து வீச்சை விட மைதானத்தில் அவரின் நடத்தையால்தான் அதிகம் பேசப்பட்டார்.

இப்போது அந்த பிரச்சனையில் சிக்காமல் விளையாட்டில் சாதித்திருக்கிறார்.

இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் கோபத்தை நாம் ஈடுபட்டிருக்கும் துறையில் முயற்சியாக மாற்றிவிட்டால் சாதனைகள் தேடி வரும் என்பதுதான்.

ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க டன் கணக்கில் தாதுக்களையும், மணலையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது இருக்கட்டும். எந்த விஷயத்திலும் நாம் கற்றுக் கொள்ள சிறு செய்தியாவது இருக்காமல் போகாது.
நன்றி : புகைப்படம் தந்து உதவிய இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக