Search This Blog

சனி, 19 டிசம்பர், 2009

நில்...கவனி...பயணி...(சிறுகதை)


சற்று சுருக்கி எழுதிய கதை.


மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கு வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்தில் அமர்ந்திருந்த தேன்மொழி சாளரம் வழியே வெளியில் தெரியும் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தாள்.காலையில் வீட்டில் அம்மாவுடன் ஏற்பட்ட சிறு கோபம், பள்ளிக்குச் சென்றதும் எதிர்கொள்ள வேண்டிய  சில சிக்கல்கள் போன்ற எதுவும் இந்த நிமிடங்களில் அவள் மனதுக்குள் இல்லை.

உதகையை நினைவூட்டும்படியான (நிலச்சரிவுக்கு முன்னால்) வானிலை அவளுடைய மற்ற கவலைகளை மறக்கச் செய்து கொண்டிருந்தது.

தேன்மொழி, திருவாரூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருபத்தோரு வயதில் சேவை (ஊதியம் உண்டுங்க) செய்யத்தொடங்கி இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

"அய்யா...ஓட்டுநரே...பின்னால மாட்டுவண்டி வருது...அதுக்கு வழி விடுங்க. நீங்க போற வேகத்துக்கு மாட்டுவண்டி ஏன் தாமதமா போகணும்?" என்று ஒரு பயணியின் குரல் பேருந்தின் இரைச்சலையும் மீறி ஒலித்தது.

அப்போதுதான் தேன்மொழி வெளியில் இருந்த பார்வையை உள்ளே திருப்பினாள்.

"ண்ணா...மழை லேசா தூறிகிட்டே இருக்கு...சாலைகள் எல்லாம் வழுக்குற நேரத்துல இந்த மாதிரி மிதமான வேகம்தான்  நல்லது. நம்ம எல்லாரையும் ஓட்டுநர் நல்லபடியா கொண்டுபோய் ஊர்ல சேர்த்ததும் நன்றி சொல்றதை விட்டுட்டு எப்பவோ படிச்ச நகைச்சுவைத் துணுக்கை வெச்சு இப்படியா அவர் மனசை புண்படுத்துறது..." என்ற குரலைக் கேட்டதும் தேன்மொழி மனதில் பரவசம். அவள் மனம் ஒரு நிலையில் இல்லை.

ஓட்டுநரைக் காட்சிப்பொருளாக்க நினைத்த அந்தப் பயணியே இப்போது மற்றவர்களின் நகைப்புக்குள்ளாகிவிட்டார்.

"ரொம்ப நன்றி தம்பி..." என்று ஓட்டுநர் நெகிழ்ச்சியுடன் சொன்னதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட வாலிபனுக்கு அதிகம் போனால் இருபத்தாறு வயது இருக்கும்.

அட...ஆசிரியைக்கும் அந்த வாலிபனுக்கும் காதலான்னுதானே உங்க மனசுல கேள்வி வந்துருக்கு?

அவசரப்படாதீங்க...தேன்மொழி மனசுல இந்த படபடப்பு அந்த வாலிபனைப் பார்த்த முதல் நாளேவா வந்துடுச்சு? இல்லைங்க. இவள் இந்தப் பேருந்தில்தான் பெரும்பாலும் வருவாள். அவன் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பேரளத்தில் ஏறுவான்.

சில நொடிகள்  இருவரும் ஒரே சமயத்தில் பார்த்துக்கொள்வதும் உண்டு. அப்பவும் ரெண்டும் பேசி அறிமுகம் ஆயிடுச்சுன்னா காதல் தொடங்கிடும்னு பார்த்தா அதுவும் இல்லை. பார்வை ஒன்றே போதுமேன்னு தினசரி பயணம் ஓடிகிட்டு இருந்தது.

சில வாரங்கள் கழித்து தோழியின் திருமணத்திற்காக முதல்நாளே அவள் வீட்டுக்குச் சென்ற தேன்மொழிக்கு அதிர்ச்சி மற்றும் வியப்பு.  மணமகளை அழைக்க வந்த மாப்பிள்ளை குடும்பத்துடன் தொழில்முறை புகைப்படக்கருவியுடன் வந்தது அன்று ஒரு நாள் கோயிலில் படமெடுக்கத் தெரியாது என்ற அதே வாலிபன்தான்.

தோழியின் அண்ணன் சுந்தரமூர்த்தியிடம், "அண்ணா...இவரு தானியங்கி புகைப்படக்கருவியில கூட படமெடுக்கத் தெரியாதுன்னு சொன்னாரு...உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா" என்று அனைவர் முன்பும் கேட்டுவிட்டாள்.

"புகைப்படக்கருவியைத் தந்து ஒரு படம் எடுத்துக்கொடுங்கன்னு கேட்காம, படமெடுக்கத் தெரியுமான்னு கேட்டுருப்பீங்க...அதனால எடுக்கத் தெரியாதுன்னு சொல்லியிருப்பான்." என்று அவர் சொன்னார்

'அடப்பாவி ஒரு நாள் கோயில்ல நடந்ததை அப்பவே எல்லார்கிட்டயும் சொல்லிட்டியா' என்று தேன்மொழியால் மனதுக்குள்தான் திட்ட முடிந்தது.

தொடர்ந்து சுந்தரமூர்த்தி," தேன்மொழி...இது முத்துவேல், நானும் இவனும் கல்லூரி வரைக்கும் ஒண்ணாத்தான் படிச்சோம். ஆனா தனித்தனியாதான் தேர்வு எழுதினோம்.(இவரு நகைச்சுவையா பேச முயற்சி செய்யுறாராம்.) நான் போட்டித் தேர்வுகள் எழுதி வங்கிப்பணியில சேர்ந்துட்டேன். இவன் சொந்தமா தொழில்தான் செய்வேன்னு சாதிச்சும் காட்டிட்டான். இந்த ஊர் தொலைகாட்சிகள்ல வர்ற விளம்பரங்களை அதிகமா தயாரிக்கிறது இவனோட சங்கமம் நிறுவனம்தான்.

அம்மா, அப்பா கிராமத்தை விட்டு வர மறுத்துட்டு அவங்களால முடிந்த அளவு விவசாயம் செய்யுறாங்க. இவனுக்கு வேலைகள் குறைவா இருக்குற நாள்ல பேருந்துல ஏறி அங்க ஓடிடுவான். சில சமயங்கள்ல மிதிவண்டியில சுத்துவான்...ஏண்டான்னு கேட்டா என்னோட பணப்பை இளைக்காது. நாட்டுக்கும் எரிபொருள் சிக்கனம்னு தத்துவம் பேசுவான்.

எதுக்கு இவ்வளவு விபரம் சொல்றேன்னா, தெரியாத ஆளுங்க அவன்கிட்ட ஒரு யோசனை கேட்டா பதில் சொல்வான். ஆனா நீங்களா ஒரு தீர்மானம் செய்த பிறகு அவன்கிட்ட போனா அப்படியே ஆமாம் சாமி போட்டு அனுப்பிடுவான்இதுதான் இவன் குணம்." என்று சொன்னார்.

ஒரு பெண்ணுக்கு ஒரு பையன் மேல நல்ல எண்ணம் வர இவ்வளவு தகவல் போதாதா.

அந்த சம்பவத்துக்குப் பிறகு பார்வை மட்டும் போதாமல் பேருந்துப் பயணம் முத்துவேல் வரும் நாட்களில் என்றென்றும் புன்னகையாகிக்கொண்டிருந்தது. ஆனால் இன்று அவன் பேரளத்தில் ஏறியது கூடத் தெரியாமல் இருந்தவளுக்கு அவன் பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாகப் பேசியதும் மனம் பூரிப்படைந்ததுக்கு வேறு ஒரு அழுத்தமான காரணம் உண்டு.

இந்த ஆடையை அணிந்தால் காதல், திருமணம் கைகூடும்...விலை குறைவு, தரம் அதிகம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே வந்த துணிக்கடை விளம்பரங்களையே பெரும்பாலும் பார்த்து அலுத்துப்போயிருந்த அவளுக்கு முத்துவேல் உருவாக்கியிருந்த புதிய விளம்பரம் அவன் மீதான மதிப்பை அதிகரித்து நேசமாக மாற்றி விட்டது.

புதிய அல்லது சுத்தமான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அது உங்கள் செயலை இன்னும் சிறப்பானதாக்கும் என்ற கோணத்தில் எடுத்திருந்த விளம்பரம் இவளுக்கு மட்டுமல்ல...அதைப் பார்த்த எல்லாருக்குமே மிகவும் பிடித்துவிட்டது.

திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு வந்ததுமே இவள் முத்துவேல் அருகில் சென்று "உங்ககிட்ட தனியா பேசணும்...தனியா பார்த்தாலும் தயக்கமில்லாம பேச முடியுமான்னு தெரியலை..." என்று சொல்லி முடிக்கும் முன்பே இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்தது.

அவன் லேசான புன்னகையுடன்,"காதலை மையப்படுத்தின திரைப்படங்கள்ல இந்தக் காட்சியைத் தொடர்ந்து வழக்கமா வர்ற வசனம்தானே?" என்றதும் தேன்மொழியின் மனதில் தோன்றிய மகிழ்ச்சி அடுத்து எந்த வார்த்தைகளையும் வரவிடாமல் செய்தது.

மவுனமாக புன்னகைத்தாள்.

"சாயந்திரம் கோவிலுக்கு சாமி கும்பிடப்போவோம்" என்று சொல்லிவிட்டு அவன் கடைத்தெரு பக்கம் சென்று விட்டான்.

இவள் மனம் நிறைந்த குதூகலத்துடன் பள்ளிக்குச் சென்றாள்.

தேன்மொழி அன்று மாலை பெரியகோயிலின் தெற்கு கோபுர வாசலில் பூ வாங்கிக்கொண்டிருக்கும்போதே முத்துவேல் வந்துவிட்டான். பிறகு இருவரும் சேர்ந்து உள்ளே நடந்தார்கள்.

"நான் எப்ப சொல்லுவேன்னு எதிர்பார்த்துகிட்டு இருந்தமாதிரி தெரியுது..." - இப்போதும் தேன்மொழிதான் முதலில் பேசினாள்.

"நீங்க அரசு வேலையில இருக்கீங்க... நான் தொழில்தானே செய்யுறேன்னு முதல்ல ஒரு தயக்கம் இருந்தது. அப்புறம் ஒரு யோசனை...கேட்டுருந்தா சம்மதம் சொல்லியிருப்பீங்கிளோன்னு நாளைக்கு வருத்தப்படக்கூடாதுன்னு தீர்மானத்துக்கு வந்துட்டேன் தேன்மொழி." என்று அவன் முதன் முதலில் அவளை பெயர் சொல்லி அழைத்தான். அவளுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் எல்லாரும் அழைத்த பெயர்தான். ஆனால் இப்போது அந்த ஒலி அவளுக்கு மிக அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தது.

"நீங்க சொல்றதுக்குள்ள நான் அவசரப்பட்டுட்டேனா..." என்று தேன்மொழி அவசரமாக கேட்டபோது வெட்கத்தால் அவள் அழகு கூடியதாக முத்துவேலுக்குத் தெரிந்தது.


"நான் உங்ககிட்ட நேரே சொல்லியிருக்க மாட்டேனே...உங்க அப்பாகிட்ட வந்து பேசி உங்க சம்மதம் கேட்டிருப்பேன். ஏன்னா...நாம வாழ்க்கையைத் தீர்மானிக்கிற அளவுக்குத் தெளிவான மனசோட இருக்கோம். ஆனா ஆசிரியைன்னுங்குற புனிதப்பணியில நீங்க இருக்குறதால சமூகம் பள்ளிப்பருவத்துக்காதலா நினைக்க வாய்ப்பு இருக்கு. மற்றவங்களைப் பற்றி கவலைப்படாம நம்ம மனசாட்சி சொல்றபடி செய்ய வேண்டிய சூழ்நிலைகள் எவ்வளவோ இருக்கு. ஆனா இந்த தொடக்கம் அதுல சேராது. நான் சொல்றது சரிதானே..." என்ற முத்துவேல், தேன்மொழியிடமிருந்து பதில் வராமல் போகவும் அவள் முகம் பார்த்து,

"என்னாச்சுங்க...நான் சரியாத்தானே சொன்னேன்?" என்றான்.

"ஆசிரியர் பணியில இருக்குறவங்களும் சாதாரண மனிதர்கள்தான். ஆனா பொறுப்பு அதிகம். எதிர்பாலின ஈர்ப்பையும் காதல் உணர்வையும் பிரிச்சுப் பார்க்குற அளவுக்கு அடுத்த தலைமுறைக்கு இப்போ பக்குவம் இல்லை. அதனால சினிமாக் காதலர்கள் மாதிரி நாம வெளியில சுத்திகிட்டு இருக்க முடியாது. காதலை கல்யாணத்துக்கப்புறம் வெச்சுக்கலாம்...முறைப்படி எங்க வீட்டுல வந்து பேசுங்கன்னுதான் சொல்ல நினைச்சேன். அதுக்கு அவசியம் இல்லாம நீங்களும் அதே எண்ணத்தோட இருக்குறது தெரிஞ்சதும் மகிழ்ச்சியால வார்த்தை வரலைங்க..." என்றாள் தேன்மொழி.


“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்காக எழுதிய சிறுகதை... மேலும் விவரங்களுக்கு இங்கே அமுக்குங்க...

3 கருத்துகள்:

  1. நல்ல கதை படிக்க சுவாரசியமாக இருந்தது..

    வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    http://niroodai.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. super kandipa prize kidaikum antha kovila vachi ivanga ketathu also antha manavigal varatha 2um eduthutinga ipo konjam chinatha iruku. advances wishes

    பதிலளிநீக்கு
  3. //@அன்புடன் மலிக்கா

    நல்ல கதை படிக்க சுவாரசியமாக இருந்தது..

    வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

    //angel கூறியது...

    super kandipa prize kidaikum antha kovila vachi ivanga ketathu also antha manavigal varatha 2um eduthutinga ipo konjam chinatha iruku. advances wishes//


    வருகை தந்ததற்கும் வாழ்த்து சொன்னதற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு