Search This Blog

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

நானும் என் எழுத்தும் - சும்மா ஒரு விளம்பரந்தான்...


இந்த தலைப்புல எழுதுற அளவுக்கு நீ பெரிய ஆளாயிட்டியான்னு நிறைய பேர் கேட்குறது என் காதுலயும் விழுதுங்க. என்ன பண்றது? சூழ்நிலை அப்படி.

 அய்யா, அம்மா, அக்கா, அண்ணே...எல்லாரும் கேளுங்களேன்...ஒருத்தனை முன்னேற விடாம தடுக்கணும்னா என்ன செய்யணும்?

காலை வாரி விடணுமா?...அடப்போங்க நீங்க.அந்த அளவுக்கெல்லாம் போய் உங்க எனர்ஜியை ஏன் வீணடிக்கணும்?...வேற என்ன செஞ்சு கவுக்கலாம்னு யோசிக்காதீங்க. ரொம்ப சிம்பிள். அவன் திறமைகளை ஓஹோன்னு புகழுங்க...அது போதும். சம்மந்தப்பட்ட ஆசாமி அவன் செலவுல அவனுக்கே சூனியம் வெச்சுக்குவான்.

இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகளான்னுதானே கேட்டீங்க... நான் ஒருத்தன் இருக்கும்போது இன்னுமா அந்த சந்தேகம்?

நம்மவர் படத்துல ஒரு காட்சி. மதன்பாப் பேச எழுந்திரிக்கும் போது எல்லா மாணவர்களும் அவர் பேசத் தொடங்கும் முன்பே கை தட்டி அவரை உட்கார வைத்துவிடுவார்கள். நான் அந்த அளவுக்கு காமெடி பீஸ் இல்லன்னுதான் தோணுது.

ரொம்ப குழம்பாதீங்க.நானே எல்லாத்தையும் சொல்றேன். எந்த ஒரு விஷயத்திலும் 

தோல்வி அடைந்தவனோட புத்தி அடுத்த முறை அதுல எப்படி வெற்றி அடையுறதுன்னுதான் யோசிக்கும். ஆனா வெற்றி அடைந்தவனுக்குதான் பல பிரச்சனை.

முதலாவதா அந்த வெற்றியோட களிப்புல மூழ்கியாச்சுன்னா அடுத்த இலக்கை தீர்மானிக்கிறதுலேயே ரொம்ப நாள் ஓடிடும். டீசண்ட்டா சொன்னா சோம்பேறித்தனம். முடிஞ்சுதா.


தொடக்கத்துல ரெண்டு வருஷம் நான் எழுதி அனுப்புன கதைகள் எல்லாம் நான் வீட்டுக்கு திரும்புறதுக்குள்ள சமத்தா அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்து சேர்ந்துடும். அத்தனை நாள் எங்க ஊர் சுத்திகிட்டு இருந்தன்னு திட்டாதீங்க.

ஒரு சாயந்திர பேப்பரோட பொங்கல் மலர்ல நம்மளோட


கதை வந்து மகிழ்ச்சி பொங்குனுச்சுங்க. (அதுவரைக்கும் நான் படிச்ச கல்லூரியில ரெண்டு கதையைப் போட்டுட்டாங்கன்னா வேற யாரும் கதை எழுதலைன்னு உண்மையை சொல்லிடுவோமா என்ன?)

அவங்களே அடுத்தடுத்து அஞ்சு கதையைத் தெரியாத்தனமா போட்டுட்டாங்க. பைசாதான் எதுவும் தேறலை. அடப்பாவி...உன் எழுத்தைப் படிச்சுட்டு ஆஸ்பத்திரியில கிடக்குறவங்க குடும்பத்துலேர்ந்து நஷ்டஈடு கேட்காததை நினைச்சு சந்தோஷப்படுவியான்னுதானே சொல்றீங்க... அதுவும் வாஸ்தவந்தேன்.

திடீர்னு 2003ம் ஆண்டு செப்டம்பருல தினமலர் வாரமலரோட டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப்போட்டியில்
நீங்களும் ஒரு வெற்றியாளர்னு கடிதம். வச்சிட்டாங்களா ஆப்பு... அந்தக் கதையை எழுதுறதுக்கு முன்னாலயே அனுப்பின குறுநாவல் மாலைமதியிலயும், தேவி வார இதழ்ல ஒரு பக்க கதையும் வந்துச்சு.அத்தோட சரி. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இந்த மிதப்புலயே நாள் காலி.

மறுபடி 2005ல சில கோவில்களோட வரலாறுகளை எழுதுற முயற்சின்னு நாளைக் கடத்தியாச்சு.



அப்புறம் துணுக்கு, கடிதம்னு பேருக்கு எழுதிகிட்டு இருந்தேன். மறுபடியும் தீவிரமா எழுத முயற்சி செய்தபோது அமுதசுரபியில முத்திரைக் கதை, இலக்கியச் சிந்தனை பரிசு, தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணிவார இதழும் இணைந்து நடத்துன சிறுகதைப் போட்டியில முதல்பரிசு, அப்பப்ப ஒண்ணு ரெண்டு சிறுகதைகள் பிரசுரம்னு 2006ம் வருஷம் குஷியாவே போச்சுங்க.
அதே எஃபெக்டோட 2007ல டி.வி.ஆர்.நினைவு சிறுகதைப் போட்டியில ஆறுதல் பரிசு.

அப்புறம் என்ன?... லஞ்சம் வாங்கி அதிகாரிகள்கிட்ட சிக்கினவன் மறுபடி வேலையில சேர்ந்ததும் அடுத்த நொடியே கையை நீட்டுன கதைதான்.

மறுபடியும் லாங் அலட்சிய இடைவேளை.ஒட்டகம்தான் ஒரு தடவை குடிக்கிற தண்ணீரை பல மாசங்களுக்கு வெச்சு சமாளிக்கும்னு சொல்லுவாங்க. நம்ம புத்தி ஏன் ஒரு தடவை எழுத்தை அச்சுல பார்த்தா ஒரு வருஷத்துக்கு மறுபடி எழுதுறதைப் பற்றி யோசிக்கவே மாட்டெங்குது.


அட தூங்குமூஞ்சி வெளக்கெண்ண...உன்
சோம்பேறித்தனத்தை இவ்வளவு பெரிய கட்டுரையா எழுதி எங்களையும் படுத்தணுமான்னு திட்டாதீங்க. மனுஷன் தோல்வியை விட வெற்றிகிட்டதான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்னு சொல்றதுக்குதாங்க இந்த சுய புராணம்.

ஸ்வீட் சாப்பிட நல்லாத்தான் இருக்கும். அந்த நினைப்புலயே இருந்தா பொழப்பு கெட்டுடுங்க.

புத்தி மதியெல்லாம் போதும். இப்ப என்ன செய்யுறன்னு நீங்க கேட்குறதுக்கு முன்னால நானே சொல்லிடுறேன். புதுசா எழுத முயற்சி செய்யலாம்னு நினைச்சேன். ஒரு பதிப்பகத்துல இருந்து என்கிட்ட வந்து "உங்க எழுத்து தொடர்பான அனுபவங்களை எழுதிக் கொடுங்க... நிறைய எழுத்தாளர்கள்கிட்ட இருந்து இந்த மாதிரி கட்டுரை வாங்கி தொகுப்பு நூல் போடப் போறோம்"ன்னு கேட்டாங்க.

அய்யய்யோ...யாருப்பா அது கல்லு வீசுறது... இந்த விஷயத்துல எல்லாம் நான் பொய்யே சொல்ல மாட்டேங்க...இது நெசமாலுமே நடந்ததுதான்.

கட்டுரையை கொடுத்தது சரி. இங்க எதுக்கு அதை எழுதியிருக்கன்னுதானே கேட்டீங்க...

கரகாட்டக்காரன் படத்துல செந்தில் ஒருத்தருக்கு பத்து ரூபாய் கொடுத்து பாராட்டச்சொல்லுவார். கவுண்டமணி காரணம் கேட்கும்போது "எல்லாம் ஒரு விளம்பரத்துக்காகதான்"ன்னு சொல்லுவார். அந்த மாதிரிதாங்க...இதுவும் ஒரு விளம்பரத்துக்காகதான். அந்த கட்டுரை நூல் வந்ததும் உங்கள்ல எவ்வளவு பேருக்கு படிக்கிற பெரும்பாக்கியம் கிடைக்கும்னு தெரியலையே.அப்பாடா...கரகாட்டக்காரன் படத்து ஸ்டில்லை வெச்சதுக்கு காரணம் சொல்லியாச்சு.

பின் குறிப்பு : என்னுடைய கதைகளை எல்லாம் தொகுப்பாக வெளியிடலாம் என்று அந்த பதிப்பகத்திலேயே கேட்டுருக்காங்க. அட... யாருப்பா அது...அடுத்த கல்லு வர்றதுக்கு முன்னால எஸ்கேப்...

சீரியசா ஒரு விஷயம் : இந்த எழுத்து நடை நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. பதிப்பகத்தை கிண்டல் செய்ய அல்ல...ஏதோ விஷயம் இருப்பதால்தான் புத்தகமாக வெளியிட முன்வந்திருக்கிறார்கள். என்னுடைய எழுத்தை நானே கிண்டல் செய்தால் அது அவர்களின் ரசனையை கேலிகூத்தாக்குவது என்று உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

நானும் என் எழுத்தும் 1
நானும் என் எழுத்தும் 2
நானும் என் எழுத்தும் 3
நானும் என் எழுத்தும் 4
நானும் என் எழுத்தும் 5

3 கருத்துகள்:

  1. நானும் ஒரு எழுத்தாளர் தான். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரே மாதிரியான அனுபவம் தான். நம் வலைத்தளத்திற்கு வந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. @ tamiluthayam

    //நானும் ஒரு எழுத்தாளர் தான். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரே மாதிரியான அனுபவம் தான். நம் வலைத்தளத்திற்கு வந்ததற்கு நன்றி.//

    தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி

    @ ராமலக்ஷ்மி

    //நல்வாழ்த்துக்கள்!//

    தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு