Search This Blog

வெள்ளி, 11 டிசம்பர், 2009

தேர்வை நிறுத்த வெடிகுண்டு புரளி


கும்பகோணத்தில் தேர்வு எழுத பயந்த மாணவன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறான். இந்த விஷயத்தில் குற்றவாளி அந்த மாணவன் இல்லை. பெற்றோர்கள் என்று நீங்கள் சொல்லாதீர்கள். அவர்கள் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். முழுக் காரணமும் ஆட்சியாளர்கள்தான்.

அரதப்பழசான கல்விமுறையை வைத்து இளைய சமுதாயத்தின் திறன் முழுவதையும் மனப்பாடம் செய்வதில் மட்டுமே வீணடித்து வரும் தவறு அதிகாரத்தில் இருப்பவர்களால்தானே    நீடிக்கிறது?.  கல்வி என்பது ஒருவனை பண்படுத்துவதாகவே அமைய வேண்டும்.ஆனால் நம் நாட்டில் அதை வெறும் வேலை வாங்கித் தரும் கருவியாக மட்டுமே பார்ப்பதால்தான் இந்த நிலை.

இப்போதைய கல்விமுறையில் என்ன குறைச்சல் என்று சிலர் வாதாடுகிறார்கள். இது அதி புத்திசாலியான மாணவர்கள் மிகப் பெரிய உச்சம் தொட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்க உதவுகிறது.  வேறு சிலர், தன் மனதுக்கு ஒவ்வாத வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வைக்கிறது. இன்னும் பலர் சக மனிதனுக்கு துன்பம் தரும் பாதையில் பயணிக்க விடுகிறது.

எல்லாரும் மருத்துவர் ஆகிவிட்டால் அவருக்கு வாகனம் ஓட்டுவது யார்...அறுவை சிகிச்சை செய்யும்போது உதவுவதற்கும் அந்த உபகரணங்களை செய்வதற்கும் ஆட்கள் வேண்டாமா?


இந்த அடிப்படை உண்மை புரிந்தால் உலகத்தில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை புரிந்துகொண்டிருப்போம். தேர்வுகளில் மதிப்பெண் அதிகமாக பெற முடியாத மாணவர்கள் வேறு வழிகளில் பயணிக்க வழிகாட்டக்கூடிய கல்வி முறையை உருவாக்கியிருப்போம்.
இது போல் பல கேள்விகளுக்கு விடை தேடினால் சமச்சீர் கல்வி எப்படி அமைய வேண்டும் என்பது புரிந்திருக்கும். பள்ளி மாணவன் தேர்வுக்கு பயந்து வெடிகுண்டு மிரட்டல் விடும் அவல நிலை ஏற்பட்டிருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக