Search This Blog

செவ்வாய், 1 டிசம்பர், 2009

பணத்துடன் குடும்பத்தில் நிம்மதியையும் சம்பாதித்து குழந்தைகளையும் நல்வழிப்படுத்த அற்புத வழி - நாணயம் விகடன் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ்


தமிழக மக்களில் பெரும்பாலானோர் இன்று பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றைப் பற்றியும் பொருளாதார விஷயத்தில் சரியான திசையையும் தெரிந்து வைத்திருப்பதற்கு நாணயம் விகடன் ஒரு முக்கிய தூண்டுகோலாக இருந்து வருகிறது.

இது தனது நான்கு ஆண்டு பயணத்தில் பலரையும் பொருளாதார விஷயத்தில் மேம்பட உதவியதுடன் ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் போது இந்த  சிறப்பிதழில் அற்புதமான மற்றொரு திசையையும் காட்டி இருக்கிறது.


ஆனால் மற்ற வாசகர்கள் இதை எப்படி புரிந்து கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. அதனால்தான் இந்த சிறப்பிதழில் வெளிவந்த ஒரு கட்டுரையைப் பற்றி என் பார்வையில் விமர்சனம் செய்திருக்கிறேன்.

மகளிருக்கு மட்டும் என்ற பகுதியில் உங்கள் கணவருக்கு எப்படி உதவலாம் என்று ஒரு சில யோசனைகளை சொல்லி இருக்கிறார்கள். அதில் உள்ள எட்டு ஐடியாக்களும் அற்புதமானவைதான். பெண்கள் இதைப் பின்பற்றத்தொடங்கினால் மேலும் புதுப்புது யோசனைகள் அருவி போலக் கொட்டும்  என்பது உறுதி.

எதனால் இப்படி சொல்கிறேன் என்றால், எந்த ஒரு விஷயத்திலும், பிரச்சனைகளிலும் பெண்களின் பார்வை வித்தியாசமாகவே இருக்கும். அவர்கள் சொல்லும் தீர்வுகள்  நல்ல பலன்களைத் தர வாய்ப்புக்களும்  அதிகமாகவே உண்டு.

ஆனால் பெரும்பாலானவர்கள் இதைப் பற்றி புரிந்து கொள்ளாமல் பெண்களிடம் உனக்கு என்ன தெரியும்...சும்மா இரு என்று எல்லா பொறுப்புகளையும் தன் தலையிலேயே போட்டுக் கொண்டு அவதிப்படுகிறார்கள். இது பண விஷயத்தில் வெற்றியைக் கொடுத்தாலும் குடும்பத்தைக் குழப்பி விட்டுவிடுகிறது.

இதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு - நடுத்தர குடும்பத்துப் பெண்களில் பலருக்கு கியாஸ் தீர்ந்து போய் விட்டால் புது சிலிண்டரை மாற்றக்கூடத் தெரியாத அளவுக்கு ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதுண்டு.

பெண்களும் கணவரின் வியாபாரம், நிறுவனம், மற்ற குடும்பப் பொறுப்பு ஆகியவற்றில் பங்கு எடுத்துக் கொள்ளாததால் என்னென்ன பிரச்ச்னைகள் வரும் என்று நான் இங்கே எழுதவில்லை.

மாறாக, நாணயம் விகடனில் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் (சாம்ர்த்தியம் உள்ளவர்கள் தாங்களாகவே பல விஷயங்களைச் செய்வார்கள்.) குடும்பத்துக்கு எவ்வளவு நன்மைகள் உண்டு என்பதில் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

குறிப்பிட்ட அளவு பணிகளை வீட்டில் உள்ள பெண்களும் பகிர்ந்து கொண்டால் ஆண்களுக்கு மன அழுத்தம் குறையும். வியாபார, நிறுவனங்கள் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை வெளியில் உள்ளவர்களிடம் கூறுவதைவிட மனைவியிடம் சொல்வது பாதுகாப்பானது. உனக்கு என்ன தெரியும் என்று எரிந்து விழுவதற்கு அவசியம் இருக்காது.


வியாபாரம், நிறுவனம் நடத்துபவர்களாக இல்லாமல் வேலைக்கு சென்று வரும் ஆண்களாக இருக்கும் வீடுகளில் மின்சாரம், தொலைபேசி, வரி,வங்கி போன்ற பணிகளை பெண்களே சென்று முடித்து வந்தால் நெடுந்தொடர்களை பார்க்கும் நேரம் குறையும்.



அப்படியே பார்த்தாலும் அதில் உள்ள கற்பனைக் கதாப்பாத்திரம் போலவே கணவர், மாமியார், நாத்தனார் போன்றவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு ஒன்றுமில்லாத பிரச்சனைகளை குடும்பம் சிதையும் அளவுக்கு பெரிதாக்க நேரம் இருக்காது. வேலைக்குப் போகும் ஆண்கள் இந்த விஷயங்களுக்காக அலுவலகத்திற்கு தாமதமாகப் போய் அசடு வழிய வேண்டியதில்லை.

வேலைகளை மனைவியும் பகிர்ந்து கொள்வதால் இருவரும் தனிப்பட்ட வகையில் மனம் விட்டுப் பேச நேரம் இருக்கும். இதற்கு நேரம் ஒதுக்காததுதானே பல குடும்பங்களில் பணம் இருந்தும் நிம்மதி இல்லாததற்குக் காரணம். (வேறு ஒரு பெண்ணோ, ஆணோ இவர்கள் இடையில் புகுவதற்கும் வாய்ப்பு இல்லை.) விதி விளக்குகளைப் பற்றி நான் எழுதவில்லை.



இன்னும் ஒரு சில வேலைகளை மகன், மகள் ஆகியோரிடம் கூட பிரித்துக் கொடுக்கலாம். அதுவும் நல்ல பலன் தரும்.

அச்சச்சோ... பிள்ளைகள் படிப்பு என்னாவது என்று அலறுபவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல குடும்பங்களில் படிப்பைத் தவிர வேறு எந்த பொறுப்பும் இல்லாத பிள்ளைகள், கூடா நட்பால் தீய வழிகளில் சென்றுகொண்டிருப்பதை மறுக்க முடியாது. அப்படி போகாமல் நல்ல விஷயங்களையும் நாட்டு நடப்பையும், குடும்ப பொறுப்பையும் அவர்கள் கற்றுக் கொள்வதால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மைதான்.

ஆனால் ஒரு விஷயம். தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என் மேல நம்பிக்கை இல்லையா என்ற வார்த்தைகளுக்கு இடம் கொடுத்தால் பெரும்பாலும் தீமையில் தான் முடியும்.

இருட்டு, கண்காணிப்பின்மை ஆகியவையே ஒருவரை தவறு செய்யத்தூண்டும் காரணிகள். இதை மனதில் கொண்டு பிள்ளைகளிடமும் பொறுப்பைக் கொடுத்தால் வாழ்வு தடுமாற்றமில்லாமல் இருக்கும்.

அந்தக் கட்டுரையைப் படிக்கும் போது என் மனதில் தோன்றிய விஷயங்கள் இவை. நீங்கள் அதைப் படிக்கும் போது வேறு சில யோசனைகள் தோன்றலாம். அதுதான் சரி. ஆறு பொருளாதார வல்லுனர்கள் இருக்கும் இடத்தில் ஏழு கருத்துக்கள் தோன்றும் என்று சொல்வார்கள்.


நம்மைப் போன்ற ஆட்கள் இருந்தால் பத்து பேருக்கு ஐம்பது கோணத்தில் வழி தெரியாவிட்டால் கவுரவம் என்ன ஆவது?

அதனால விசாலமாவே சிந்திங்க...நேர்மையான வழியில குடும்பம் முன்னேற வழியைக் கண்டுபிடிச்சீங்கன்னா சரி.

நன்றி : நாணயம் விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக