Search This Blog

திங்கள், 30 நவம்பர், 2009

வீட்டில் தனியாக இருப்பவர்கள் கொலைகாரர்களிடமிருந்தும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் தப்பிப்பது எப்படி?


குங்குமம் 07.12.2009 இதழில் தனிமையாக இருப்பவர்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் வழிகள் குறித்த கட்டுரை வெளியாகி இருக்கிறது.

முன்பெல்லாம் புறநகர்ப்பகுதிகளில்தான் கொள்ளை அடிப்பதும் அந்த நேரத்தில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் ஆகியவரை கொலை செய்வதும் நடந்துகொண்டிருந்தன. இப்போது இந்த வகை குற்றங்கள் நகரின் நெரிசலான பகுதிகளிலும் நடைபெற்று நம்மை எல்லாம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நேரத்தில் இந்த கட்டுரை பிரமாதமான வழிகாட்டியாக வந்திருக்கிறது.

 அதற்காகவே கட்டுரையை வெளியிட்ட குங்குமம் இதழுக்கு முதலில் நன்றியோடு வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம்.

இது போன்ற சம்பவங்களில் கொள்ளையுடன் கொலையும் நடக்க முக்கிய காரணம் என்ன தெரியுமா? இதற்கான திட்டமிடலுக்கு முக்கிய அச்சாணியாக இருப்பது நமக்கு நன்றாக தெரிந்தவர்கள், உறவினர்கள், நம் வீட்டின் பணியாளர்கள்.

எனவே நாம் எந்த நேரத்திலும் யாரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அதற்காக இருபத்துநாலு மணிநேரமும் இசட் பிரிவு பாதுகாப்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வில்லை. நமக்கு சாத்தியமாகக் கூடிய வழிகளைத்தான் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

நம்முடன் இருக்கும் ஒருவர் உண்மையாகவே தவறான திட்டமிடலுடன் இருந்தாலும் அல்லது வெள்ளையான மனதுடன் பழகினாலும்(?!) அவர்கள் தப்பு செய்ய தூண்டுவதை நம்மை அறியாமல் நாம் செய்துவிடுவதுண்டு.

தப்பு செய்ய வரும்போதே மாட்டிக்கொள்வோம் என்ற வகையிலான பாதுகாப்பை தனியாக வீட்டில் இருப்பவர்கள் ஏற்படுத்திக்கொள்வது மிக அவசியம் என்று அதிகம் செலவில்லாத சில கருவிகளை பரிந்துரைக்கிறார்கள்.

இதை நான் படித்துவிட்டேனே என்று சொல்பவர்களுக்கு ஒரு சபாஷ் மற்றும் 'ஓ' ஹோ.

வார இதழில் இதைப் படிக்காதவர்களுக்கு ஒரு சில வரிகள். வேலை, பள்ளி (அ) கல்லூரிப்படிப்பு அதனால் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் போன்றவற்றைப் படிக்கவே நேரம் இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். பலர் நள்ளிரவு வரை அதாவது ஐந்து மணி நேரம் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை (உருப்படியான நிகழ்ச்சி என்றால் சரி) பார்ப்பது உண்டு தானே. அந்த நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது முதலில் திருடுங்கள்.

நிச்சயம் அது உங்கள் வாழ்க்கைக்கு உரிய நல்ல விஷயம் ஒன்றையாவது உங்களிடம் ஒப்படைக்காமல் போகாது. துரோகம் செய்யாத நல்ல நண்பர்களில் முதலிடம் பெறுவது  நல்ல புத்தகம்தான் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இப்போது வீட்டில் தனியே இருக்கும் முதியவர்கள், பெண்கள் போன்றோரை பல ரூபத்திலும் நெருங்கும் ஆபத்துக்களைக் கண்டறியவும் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்கவும் இருக்கும் சில பாதுகாப்புக் கருவிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

அவை
  • மேக்னடிக் சென்சார்: வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் பொருத்தலாம். வீட்டுக்குள் யாரேனும் அத்து மீறி நுழைந்தால் அலாரம் அடித்து ஊரைக் கூட்டும்.
  • மோஷன் சென்சார்: வீட்டுக்குள் 2 ஜன்னல்கள், 4 கதவுகளுக்கு சேர்த்துப் பொருத்தக் கூடியது. 6 மீட்டர் தூரம், 90 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும். அத்து மீறி யாரேனும் நுழைந்தால், அந்த அசைவை வைத்து அலாரம் எழுப்பும்.
  • கிளாஸ் பிரேக் சென்சார்: கண்ணாடி ஜன்னல், கதவுகளில் பொருத்தலாம். கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய யாராவது முயற்சித்தால் இது அலறும்.
  • வீடியோ டோர் போன்: வெளியே காலிங் பெல் பக்கத்தில் கேமராவும், வீட்டினுள் மானிட்டரும் பொருத்தப்படும். வீட்டுக்குள்ளிருந்தபடியே மானிட்டரில் பார்த்துவிட்டு, தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கலாம்.
  • சிசிடிவி: பெரிய அலுவலகங்களில் உபயோகிக்கிற இது, இப்போது வீடுகளுக்கும் பயன்படுகிறது.


சில ஆயிரம் ரூபாய் செலவில் சாத்தியமாகக்கூடிய பாதுகாப்புக் கருவிகள்தானாம் இவை.

அந்தக் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் கூட சில கிராமங்களில் ஒருவருக்கும் தெரியாமல் அன்னிய நபர் உள்ளே நுழைய முடியாது.

நகர வாழ்க்கையில் இதற்கெல்லாம் சாத்தியம் குறைவுதான். ஆனால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று உதாரணமாக சென்னை வாலஜா சாலையில் உள்ள நாராயணா அரிஹந்த் ஓஷன் டவர்ஸ்  பற்றிய ஒரு அறிமுகம் குங்குமம் இதழில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது நிச்சயம் மற்றவர்களுக்கு வழிகாட்டிதான் என்பதில் சந்தேகமே இல்லை.

மீண்டும் குங்குமம் இதழுக்கு ஒரு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக