Search This Blog

திங்கள், 30 நவம்பர், 2009

இளைய பாரதம் - மலை - புரொஜக்டர் - நண்பர்கள் - ஒரு விளக்கம்.

இளைய பாரதம் வலைப்பூவின் முகப்பில் உங்களை வரவேற்பது இந்த பேனர்தான்.

இதன்  உள்ளடக்கம் பசுமையான மலை, புரொஜக்டர், மூன்று இளைஞர்கள் , வலைப்பூவின் தலைப்பு மற்றும் துணைத்தலைப்பு.

எனக்கு பொழுது போகாத நேரத்தில் மனதில் தோன்றியதை வடிவமைத்து  இங்கே வைத்துவிடவில்லை. நாம் கவனத்தில் வைப்பதுடன் பின்பற்ற வேண்டிய சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் தான் இந்த பேனரை உருவாக்கியிருக்கிறேன்.

இந்த இடம் மருதமலை கோவில் அமைந்துள்ள பகுதி.

ஒரு தாவரம் வளருகிறது என்றால் நிலம், நீர், காற்று, வெப்பம், ஆகாயம் ஆகியவற்றின் பங்களிப்பை தெளிவாக உணரலாம். மனிதன் இல்லை என்றால் தாவரங்கள், விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் மரங்கள் குறைந்ததன் இல்லை இல்லை குறைத்ததன் பலனை நாம் இப்போதே அனுபவிக்கத்தொடங்கிவிட்டோம். மரங்களை அதிகமாக வளர்ப்பதுடன்  மலைகளை சிதைக்காமல் அந்த அழகை அப்படியே விட வேண்டும். இது தாவரங்களையும் இயற்கை வளங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. நம்மையும் வருங்கால சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காக என்ற என்னுடைய எண்ணமே பேனரில் பின்னணியாக உள்ளது.

புரொஜக்டர் : திரைப்படம் கண்டறியப்பட்டு சுமார் நூறு ஆண்டுகளாகி விட்டது. ஆனாலும் மிக சமீப காலம் வரை பிலிம் சுருள் மூலமாக திரையிடும் கருவியின் அடிப்படை தத்துவத்தில் பெரிய மாற்றம் இல்லவே இல்லை. இது அந்த தொழில் நுட்பத்தின் உறுதியைக் காட்டுகிறது.

பிலிம் இல்லாமல் படம் திரையிடும் விஷயமெல்லாம் இன்றைய முன்னேற்றம்தான்.

அந்தக் கருவியின் மூலம் எந்த படத்தைத் திரையிட்டாலும் அதில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே காண்பிக்கும். ஆனால் தவறான விஷயங்கள் அந்த புரொஜக்டர் மூலம் திரையிடப்பட்டால் அதன் பிறகு அந்த திரையரங்கத்திற்கு அஸ்தமனமே...

பிரச்சனைக்குரிய எந்த ஒரு சூழ்நிலையையும் மனிதன் விருப்பு வெறுப்பின்றி அணுக வேண்டும். தவறான பக்கம் சேர்ந்தால் வீழ்ச்சிதான் என்பதை இந்த புரொஜக்டரும் உணர்த்துகிறது.

என்னுடையது  இந்த பார்வை. உங்கள் கோணம் வேறு ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால் ஒரு விஷயத்தை பத்து பேர் பார்த்தால் பதினைந்து கோணங்கள் கிடைக்க வேண்டும். அது மனிதனின் சிந்திக்கும் குணாதிசயத்தைக் காட்டுகிறது. எந்த கோணத்தில் பார்த்தாலும் நியாயமான விஷயத்தின் பக்கமே உங்கள் வாக்கு இருக்க வேண்டும். நியாயமான விஷயத்தை எப்படி தீர்மானிப்பது?...

நீங்கள் எந்த சூழ் நிலையில் இருந்தாலும் எதிராளியின் நிலையில் உங்களை வைத்து சில நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்கள் மனசாட்சி நியாயத்தை சொல்லும்.

(திரையரங்குகள் மூடப்படுவதற்கான காரணங்களை வேறு ஒரு கட்டுரையில் அலசலாம். இந்தக் கட்டுரையின் நோக்கம் அது அல்ல.)

மூன்று இளைஞர்கள் : இந்த உலகில் நீங்கள் வாழ உங்கள் குடும்பமும் உறவினர்களும் மட்டும் ஒத்துழைத்தால் போதாது.

சமூகத்தின் துணையும் வேண்டும். சமூகம் என்பதும் ஒரு வகையில் நண்பர்கள்தான். சிந்தித்துப் பாருங்கள். புரியும். இந்த கோணத்தில் அணுகினால் பல நன்மைகள் உண்டு.

ஆனால் இது இரு வழிப் பாதையாக இருக்க வேண்டும். ஒருவழிப்பாதையாக இருந்தால் பலன் இல்லை. நீங்கள் சாலையில் சரியாக சென்றாலும் எதிரில் வருபவர் விதிகளை மதிக்கவில்லை என்றால் விபத்துதான். ஒருவர் மட்டும் சரியாக இருந்தால் பல நேரங்களில் விபத்துக்களை தவிர்த்துவிடலாம். சில நேரங்களில் பெரிய பாதிப்பு இருக்காது. அவ்வளவுதான்.
 
இனிவரும் காலம் இளைஞர் காலம் என்பது எந்த காலத்துக்கும் பொருந்தும்.


இதுதான் சரியான திசை என்பதை தேர்ந்தெடுக்கும் திறமைதான் ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவை. இதற்கு பத்து வரிகளில் விளக்கம் கூறிவிட என்னால் முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக