Search This Blog

வியாழன், 26 நவம்பர், 2009

பாடத்திட்டத்துக்குள் கதைகள் விடலாமா? (சமச்சீர் கல்வி)

ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிக்குற பழக்கம் இருக்கான்னு கேட்டா, நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா?

அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் இருக்கு. வீட்டுக்கே வர்ற நாளிதழ்களைக்கூட படிக்க முடியலைன்னு ரொம்ப சலிப்பா பேசுவாங்க. இந்த பதிலைக் கேட்டு சார் ரொம்ப பிசி அப்படின்னு  நினைத்தால் நீங்கதான் உ.அ.உ.இ. அர்த்தம் புரியலையா?அதுதான் சார் - உங்களை விட அப்பாவி உலகில் இல்லை.

ஏன் இப்படி சொல்றேன்னா, கால் மணி நேரம் நாளிதழ் படிக்க ஒதுக்க முடியாத நம்ம தலைவர் (நீங்க கட்சித்தலைவர்னு நினைச்சுக்காதீங்க...அவங்களுக்கு படிக்கத்தெரியலைன்னாலும் உதவியாளரை வைத்தாவது நாளிதழ்கள்ல வந்துருக்குற செய்திகளை தெரிஞ்சுக்குவாங்க. ஏன்னா அவர் கட்சியில இருக்காரா இல்லையான்னு அறிவிக்கிற ஆராய்ச்சி மணியே செய்த்திதாள்கள்தான். நான் சொன்னது குடும்பத் தலைவரைப் பற்றி.)  நடு ராத்திரி வரை தொலைக்காட்சியில மூழ்கி இருப்பார்.

அட...பெரியவங்களை விட்டுடுவோங்க. சின்னப் பசங்களை எடுத்துக்குங்க...வீட்டுப்பாடம், பள்ளிப்பாடம் அது இதுன்னு அவங்க தலையில அதிகமான சுமையை ஏற்றி வைக்கிறதால பாடப் புத்தகம் தவிர மற்ற எதையும் வாசிக்க அவங்களை நாம விடுறதே இல்லை.

பாடத்தை அளவுக்கு அதிகமா படிக்க வெச்சு நல்ல வேலைக்கு அனுப்பி வங்கி நிறைய சம்பாதிக்க வைக்கிறதெல்லாம் சரிதான். இப்படி உயர்ந்த நிலையில இருக்குற பலர் சின்ன சின்ன விஷயத்துல கூட ஒரு நேர்மை, அடுத்தவர்களுக்கு துன்பம் தராமை போன்ற குணங்கள் அப்படின்னா என்னன்னே தெரியாம இருக்காங்க.

வாகனங்களை மற்றவர்களுக்கு இடையூறா நிறுத்துறது, அடுத்தவங்க காதைக் கிழிக்கிற அளவுக்கு தடை செய்யப்பட்ட ஒலி அளவுக்கும் அதிகமா ஹாரன் வெச்சுக்குறது, பேராசை காரணமா குறுக்கு வழியில பணம் சம்பாதிக்கும் வழியில ஈடுபடுறது, (லஞ்சமும் இதில் தான் வருகிறது) தனக்கு கீழே அல்லது தன்னிடம் பணிபுரியும் நபர்களுக்கும் குடும்பம் சில பொறுப்புகள் இருக்கும் என்பதை மறந்து பல வகைகளிலும் துன்பம் கொடுப்பது என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம், நமது கல்விமுறை பணம் சம்பாதிக்க உதவும் அளவுக்கு பண்புகளை கற்றுத்தருவதில்லை. கொன்றைவேந்தன், ஆத்திசூடி, உலக நீதி, தெனாலிராமன், மரியாதைராமன், பீர்பால், விக்கிரமாதித்தன் ஆகிய கதைகள் உட்பட பல நூல்கள் சிறு வயதிலேயே அறிமுகம் செய்யப் பட்டால் நிச்சயம் பலன் இருக்கும்.

இவற்றை படிப்பதால் எல்லாரும் மகாத்மாவாகிவிடுவார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அவ்வளவு எளிதில் மற்றவர்களை துன்பப்படுத்துபவர்களாக  மாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த கதைகளை பாடத்திட்டமாக்குகிறேன் என்று வழக்கம் போல் தெனாலிராமனின் சிறுகதை ஒன்றை வரி மாறாமல் எழுதுக அப்படின்னு கேள்வி கேட்டுட்டா அவ்வளவுதான். நம்ம பசங்களுக்கு இந்த கதைகள் மேல வெறுப்பு வர வேற காரணமே தேவையில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒரு ஐந்து கதைகளை பற்றி மாணவர்கள் நினைப்பது என்ன என்று சொந்த நடையில் மனதில் தோன்றுவதை எழுத சொல்லி அதற்கு மதிப்பெண் அளிக்கலாம்.

ஆண்டுத்தேர்வுகளின் மார்க்குகளுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக