Search This Blog

வியாழன், 26 நவம்பர், 2009

சிமுலேட்டர் வெச்சு கத்துகுடுப்போமா? (சமச்சீர் கல்வி)


சிமுலேட்டர்னா என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னால இது தேவைப்படுற அளவுக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சுக்குவோம். இப்ப நிறையபெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இரு சக்கர மோட்டார் வாகனங்களை வாங்கிக்கொடுக்குறாங்க. இது சரியா?

நாங்க சம்பாதிக்கிறோம். செலவு பண்றோம்...இவனுக்கு ஏன் எரியுதுன்னு உங்க மனசுலயே என்னைய திட்டுறீங்க...புரியுது.
எனக்கு எரியலைங்க... அகால மரணத்தால இறந்தவங்க வீடுகள்ல போய்ப் பாருங்க. அந்த குடும்பத்துல அவதிப்படுறவங்க வயிறு எரியுறது தெரியும்.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வேகம், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், சாலை விதிகள் பற்றி அறியாமை அல்லது மதிக்காமை இவைகள் மட்டுமே எண்பது சதவீதம் விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது. மற்றவரின் தவறும், வாகனக் குறைபாடும் இருபது சதவீத அளவுக்குதான் இருக்கும்.

சைக்கிளோ, மோட்டார் வாகனமோ இவற்றில் எதை இயக்கினாலும் தொண்ணூறு சதவீத பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கு சைகை எதுவும் செய்யாமல் திரும்புவது, யாராவது தெரிந்தவர்களைப் பார்த்தால் அப்படியே நின்று பின்னால் வருபவரை அலறி ஓடச் செய்வது  இதெல்லாம் கை வந்த கலை.( பெரியவர்களும் பல நேரங்களில் இப்படி செய்வது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.)

சாலையைக் கடப்பவர்கள் அல்லது வாகனம்  திடீரென்று எதிர்ப்படுவது போன்ற சிக்கலான சூழ்நிலையில் எப்படி சமயோசிதமாக விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மிக மிக குறைவு. பல நேரங்களில் அவர்கள், பதட்டத்தில் எதிரில் வருபவரையும் சேர்த்து கீழே தள்ளி விடுவார்கள்.

முறையான பயிற்சி இல்லாமல் அதிக சி.சி வாகனங்களை எடுத்து வந்து விபத்து ஏற்படுத்துவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

படிக்கும் வயதில் இந்த பிரச்சனை என்றால் வளர்ந்து நன்றாக சம்பாதிக்கும் போது மது அருந்தி வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி இதை தவறு என்று மனதில் கூட நினைக்க மாட்டேன் என்ற போக்கு எந்த விளைவை ஏற்படுத்தி இருக்கிறது தெரியுமா?

ஒரு மணி நேரத்தில் சாலை விபத்தால் பதிமூன்று பேர் உயிரிழக்கிறார்கள் என்பது பதிவாகும் புள்ளி விபரம் என்றால், உண்மை நிலவரம் என்னவாக இருக்கும். இவற்றில் மதுவின் பங்கு பற்றி அறிய வரும்போது வேதனையாக இருக்கிறது.

இப்போதுள்ள தலைமுறை இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உயிர், பணம் அனைததையும் இழந்துகொண்டிருக்கிறது. இவர்களை மீட்பது இருக்கட்டும். வளரும் மாணவர்களை காக்கும் பொறுப்பு அதைவிட அவசரம், அவசியம்.

மது அருந்துபவருக்குதான் நேரடி பாதிப்பு. ஆனால் அவர் அந்த நிலையில் வாகனம் இயக்கும் போது அப்பாவிகளும் துன்பப்படுகிறார்களே. சாலைவிதிகளை மதிக்காத போதும் ஏறக்குறைய இதே விளைவுதான்.

சாலைவிதிகள் பற்றிய முழு விபரம், இவற்றை மதிக்காததால் ஏற்படும் விபத்துக்கள், விபத்துக்களில் ஒருவர் செய்யும் தவறால் இது எதிலும் சம்மந்தப்படாத நபர் எப்படி பாதிக்கப் படுகிறார், விபத்தில் ஒருவர் மரணமடைந்த பிறகு அல்லது படுகாயமடைந்த பின்பு பொருளாதார ரீதியாகவும் இன்னும் பிற வகைகளிலும் எவ்வளவு தூரம் பாதிப்பு அடைகிறார்கள் - இது போன்ற விஷயங்களை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிப்படியான பொதுப் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்.

இது தொடர்பான குறும்படங்கள் தயாரித்து பள்ளிகளில் திரையிட்டால் நல்ல பலன் இருக்கும். ஏனெனில், ஒரு விஷயம் சிறு வயதிலேயே தவறு என்று அழுத்தமாக பதிந்து விட்டால் அவன் வளர்ந்த பிறகு மோசமான அளவு பாதை மாற மாட்டான்.

ஆளில்லா சாலையில் ஒரு வாரம் ஓட்டிவிட்டு உரிமம் பெற்று விடுகிறார்கள். பிறகு போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் நாலு சக்கர வாகனத்தை  இயக்குவதால் பொதுவாக எல்லாருக்குமே சிரமமாகத்தான் இருக்கும்.

இப்போது சிமுலேட்டர் விஷயத்துக்கு வருகிறேன்.

கிளிக்கூண்டு போன்ற இந்த இயந்திரத்தில் அமர்ந்து கார் ஓட்ட பயிற்சி எடுத்தால் விரைவில் பதற்றம் நீங்கி விடும்., சென்னை அண்ணாசாலையின் சூழலில் கூட இயந்திரத்தின் உள்ளே இருந்து ஓட்டிப் பார்க்கலாமாம்.

சில மணி நேரப் பயிற்சி போதும் என்று சொல்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பு முதல் இந்த செய்முறைப்பயிற்சியையும் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.

யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா... அப்படின்னு இழுக்குற சத்தம் எனக்கு கேட்குதே...

எந்த அருமையான யோசனையும் முதல்ல கேலிக்குரிய, சாத்தியமில்லாத விஷயம் மாதிரிதான் தெரியும். சிரமத்துடன் அதை நடைமுறைப்படுத்தின பிறகு கிடைக்கக்கூடிய பலனைப் பார்த்து இன்னும் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாமோ... அப்படின்னு நினைக்கத் தோணும்.

இதுதாங்க காலம் காலமா இருந்து வர்ற வரலாறு.

1 கருத்து: