Search This Blog

புதன், 25 நவம்பர், 2009

காலைக் கதிர் (25.11.2009) சமச்சீர் கல்வி எப்படி இருக்க வேண்டும்?


காலைக் கதிர் நாளிதழில் நான் எழுதி அனுப்பிய கருத்து பிரசுரமானது. மனப்பாடம் செய்யும் நேரத்தை குறைக்கலாம் என்பதுதான் இந்த கட்டுரையின் சாரம்சம்.


சமச்சீர் கல்வி முறையில் தேவைப்படும் முக்கிய மாற்றம் என்னவென்றால், தாய்மொழியிலேயே உயர்கல்வி வரை படிக்க வழி செய்வதுதான். தாய்மொழியிலேயே கல்வி கற்றால் உலக அளவில் போட்டியிட முடியாது என்பது நிரூபிக்கப்படாத வாதம்தான். ஏனெனில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் தாய்மொழியிலேயேதான் பயில்கின்றனர். அவர்களுடைய முன்னேற்றம் நாம் அறிந்ததே.

பிற மொழியில் பயிலும்போது, அந்த பாடப் புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை மட்டுமே மனப்பாடம் செய்து தேர்ச்சி அடைவதே நமது மாணவர்களுக்கு பெரும்பாடாகிவிடுகிறது. ஆனால், தாய்மொழியில் படித்தால் எந்த நெருக்கடியும் இல்லாமல் பாடத்திட்டத்தில் உள்ளதையும் தாண்டி, சுயமாக சிந்தித்து, அவரவர்க்கு ஆர்வம் உள்ள துறையில் சாதிக்க முடியும்.

அதற்காக ஆங்கிலம் அறவே வேண்டாம் என்று சொல்லவில்லை. கணிதம், அறிவியல் போல ஆங்கிலமும் மற்றொரு பாடமாகவே இருக்க வேண்டும். அதில் உள்ள இலக்கணங்களை முழுமையாக கற்று, எந்த வழியிலும் அந்த மொழியைப் பயன்படுத்தும் திறனை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமைய வேண்டும்.

இதனால் மாணவர்கள் தன் திறன் முழுவதையும் ஆங்கில வழியில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்வதற்கே செலவிடுவது குறையும். தினமும் அதிகாலையில் இருந்து இரவு வரை பாடப்புத்தகங்களையே முதுகிலும் மூளையிலும் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருக்காது.

மது, புகை, ஈவ்டீசிங், சாலைவிபத்து உள்ளிட்ட தீமைகளுக்கு காரணம், அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிகள் போன்றவற்றை விளக்கும் வகையில் பள்ளிகளில் பொது பாடங்கள் உருவாக்க வழி செய்ய வேண்டும்.

வங்கி, அரசு அலுவலக நடைமுறைகள், சாலை விதிகள் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் செய்முறைப் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

பாடத்திட்டத்தில் சமன்பாடு, அறிவியல் சூத்திரங்கள், இலக்கண விதிகள் போன்ற, மாற்றாமல் படிக்க வேண்டியவை மட்டும் மனதில் சுலபமாக பதியும் வகையில் எளிமையான பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். அவற்றிற்கு விளக்கம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று குறுகிய வட்டம் போட்டுவிடாமல், சொந்த நடையில் அவர்கள் பதிலளிக்க தூண்ட வேண்டும்.

மனப்பாடம் செய்யும் திறன் இல்லாத குழந்தைகள்தான் மதிப்பெண்கள் பெற முடியாமல் மக்குப் பிள்ளைகள் என்ற பெயரை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நிச்சயமாக மற்ற திறன் ஏதோ ஒன்று இருக்கும். அதை வெளிக்கொண்டு வரும் வகையில் பாடத்திட்டம் அமைவது நல்லது.

பள்ளி அளவிலேயே கைத்தொழில், சுயதொழில் என்று ஒருவர் சொந்தக்காலில் நிற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக