திங்கள், 7 மார்ச், 2016

நடிகர் கலாபவன்மணி - சில நினைவுகள்...

தமிழகமெங்கும் "ஓ" போட்ட ஜெமினி திரைப்படம் மூலம்தான் கலாபவன்மணி தமிழகமெங்கும் தெரிந்த முகமானார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

அந்த படம் தொடர்பாகவும் கலாபவன் மணி பற்றியும் நான் 2009 ஆம் ஆண்டு முதல் ஒ

ரு சில முறை எழுதியவை இங்கே மீள்பதிவாக...


பொதுவாக சிறைத்தண்டனை என்பது தவறிழைத்தவர்கள் தங்கள் தப்பை உணர்ந்து திருந்தச்செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது? இதற்கான சின்ன விளக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெமினி திரைப்படத்தில் இரு வரி வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது.

மிக ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படம் என்று ஒரு சாரரும், இந்த மாதிரியான மசாலா படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ் சினிமாவின் உலகத்தரம் கெட்டுவிடும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இப்போது அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. அந்த படம் தொடர்பாக நான் எழுதிய பழைய பதிவு உங்கள் பார்வைக்கு.
******************************


ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான். அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குங்க. வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு முக்கியக் காரணம்னு விக்ரமே ஒத்துக்குவார். இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் "சரண்" (அவரோட முழுப்பெயர் சரவணன்னு சொல்றாங்க.) - தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்  அப்படிங்குறதுல சின்ன சந்தோஷம்.


முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்பார்.

உடனே தேஜா அந்த ஆளிடம்,"நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.


"ரெண்டாங்கிளாஸ்" என்று சொல்லும் ஆளின் முகத்தில் தெரியும் பூரிப்பை பார்க்க வேண்டுமே.அடா...அடா... வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி,"திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா,அவர் இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு,"நான் என்ன தப்பு பண்ணினேன்...இப்ப திருந்த சொல்ற..."என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியதற்கு சேர்த்து ஒரு ஆப்பு வெச்சாங்க பாருங்க...வெறுத்துப் போயிட்டேன். எதை சொல்றேன்னு புரியலை?

படத்துல காமெடி நடிகர்கள் நடிச்ச காட்சிகள்தான். அந்த மாதிரி மொக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அது கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்த விஷயம் வேற. நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி,"குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான்  சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது...

ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க வெளியில வரும்போது எந்த மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க.சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை.  இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயங்க இது.
*******************************************
சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 12-4-2002 அன்று ரிலீசாகி தமிழகத்தையை ஓ போட வைத்த பெருமைக்குரியது (?...!) ஜெமினி திரைப்படம். சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றம் செய்துவிட்டு சிறைக்குள் சென்றவர்கள் திரும்ப வெளியில் வரும்போது பிரிட்ஜ்-க்குள் வைத்த பொருள் மாதிரி ப்ரெஷ்-ஆக வந்து மறுபடியும் குற்றம் செய்கிறார்கள் என்று வசனம் வரும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியே திருந்த நினைத்தாலும் சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்களை திருந்த விடாது என்ற கருத்து மேலோட்டமாக காட்டப்பட்டிருக்கும். (சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் இந்த காட்சியமைப்புகள் கொடூரமாக இருக்கும். குற்றவாளி திருந்தக்கூடாது என்று நினைக்கும் சாடிஸ்ட் போலீசாக பிரகாஷ்ராஜ்)

ஆனால் ஜெமினி படத்தில் மக்கள் கவனம் பெற்றது என்னவோ ஓபோடு பாடலும் கிரணின் கவர்ச்சியும், கலாபவன்மணியின் மிமிக்ரியும்தான். 1996 ஆம் ஆண்டில் ஏவிஎம்மின் 50ஆண்டு என்று குறிப்பிட்டு மின்சார கனவு படம் தயாரித்து படம் ஊற்றிக்கொண்டுவிட்ட பிறகு சீரியலில் முழுக்கவனம் செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஜெமினி படத்துக்கு பூஜை போட்டபோது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். மிகச் சரியாக திட்டமிட்டு படத்தின் பூஜை நாளிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது ஏவிஎம் மட்டும்தான் என்று அப்போது ஒரே பரபரப்பு.

ஆனால் படம் ஏவிஎம் குறிப்பிட்ட நாளில் ரிலீசாகவில்லை. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 12ஆம் தேதியே ரிலீசாகிவிட்டது. 14ஆம் தேதி ஞாயிறு என்பதால் வெள்ளியன்றே ரிலீஸ் செய்து விடுமுறை நாள் கலெக்சனையும் அள்ளிக்கொண்டார்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் சமயம். ஆனந்தவிகடனில் மாணவர் நிருபர் திட்டத்துக்கு முதல்கட்டப்பரிசீலனையில் தேர்வாகி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு எழுதுவதற்காக 21.04.2002ல் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தேன். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சிவாலயா காம்ப்ளக்சில் ரம்பா தியேட்டரில் ஜெமினி திரையிடப்பட்டிருந்தது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என்பதால் படத்துக்கு போக நேரம் வாய்க்கவில்லை. மாலைக்காட்சிக்கு செல்லலாம் என்றால் இரவு 10 மணிக்கு பஸ் பிடித்து திருவாரூர் வந்து சேர நள்ளிரவு 2 மணி ஆகி விடும். மறுநாள் நான்காவது செமஸ்டர் தேர்வு ஆரம்பம். தியரி பேப்பருக்கெல்லாம் முதல் நாள் இரவுதான் படிப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்ததால் அதற்காக படம் பார்ப்பதை தள்ளி வைத்தாயிற்று.

திருவாரூரில் ஜெமினி படம் ரிலீசாகாததால் பிறகு ஒருநாள் நண்பருடன் தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு வந்தது தனிக்கதை.

இப்படி திட்டமிட்டு பட பூஜையின்போதே தேதியை அறிவித்த ஏவிஎம் நிறுவனம் ரஜியை வைத்து லேட்டஸ்ட்டாக சிவாஜி படத்தை தயாரித்தபோது ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாதது கால சூழ்நிலைதான்.

ஒரு நிறுவனத்தின் தலைமை சரியாக இருந்தால் எல்லா விசயத்தையும் திட்டமிட்டு சக்சஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தலை மட்டும் சரியிருந்தால் போதாது, நிறுவன ஊழியர்கள், சந்தை உட்பட பல காரணிகளும் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று புரிந்துகொண்டேன்.
***********************************************

செவ்வாய், 3 ஜூன், 2014

எட்டு வயது அண்ணனின் உயிரைக் காப்பாற்ற காத்திருக்கும் ஒன்பது மாத மழலைத் தங்கை

திருவாரூரில் வசித்து வரும் கே.சிவக்குமார்-கவிதா தம்பதியரின்மகனான மாஸ்டர் சி.அருண்(8) சிவப்பணுக்கள் குறைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றான். அவனது உயிரைக் காப்பாற்ற ஸ்டெம் செல்மாற்று STEMCELL TRANSPLANATION என்ற சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தனது அண்ணனின் சிகிச்சைக்கு உதவ 9 மாத மழலைத்தங்கை சி.நித்ய ஸ்ரீ காத்திருக்கிறாள் என்பது வெறும்செய்தியல்ல. ஒரு குடும்பத்தின் சோகம்.
 
கே.சிவக்குமார் தனதுசொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் காரியாப் பட்டியிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக வந்து வசித்து வரும் ஊர் திருவாரூர். சிவக்குமார்கவிதாதம்பதியருக்கு மாஸ்டர் அருண் பிறந்த பிறகுசுமார் ஒண்ணரை வயது இருக்கும்போது மிகுந்த சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்தான். மேலும் அவனது உடல் முழுக்க மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியது. அப்போது தொடங்கியதுதான் இந்த குடும்பத்திற்கான துயரமும் சோகமும். மதுரை ராசாசிஅரசு மருத்துவமனை தொடங்கி தரமணி, வேலூர், சென்னை என தங்கள் ஒரே மகனை காப்பாற்ற பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறிஇறங்கி உள்ளனர்.
 
மாஸ்டர் அருணின் பெற்றோர்கள், நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டதால் இந்த நோய் உண்டாகியிருக்கலாம் என னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்எனசிவக்குமார்-கவிதா தம்பதியினர் ஒரு முடிவுக்கு வந்தனர். மாஸ்டர் அருணுக்கு நாளுக்குநாள் உடல் நிலை மோசமாகி அபாயக்கட்டத்திற்கு செல்லும்போது தங்கள் மகனைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்பதால் சிவக்குமார் தனது சொந்த வாகனமான லாரியை விற்றுள்ளார். மேலும் தனது மனைவியின் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களையும் விற்று தொடர்மருத்துவம் பார்த்துள்ளார்.

திருமதிகவிதா சிவக்குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகவும், சிவக்குமார் திருவாரூரில் ஒரு தனியார் பள்ளியில் சொற்ப ஊதியத்தில் ஓட்டுநராகவும் பணிபுரிந்தாலும் கிடைக்கும் வருமானத்தை தங்களது மகனின் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்றே செலவு செய்துள்ளார்கள்.
 
மாஸ்டர் அருணைக் காப் பாற்ற வேண்டும் என்ற ஒரே நினைவுதான் அவர்களிடம் இருந்தது.மாதா மாதம் மருந்து, மாத்திரை, ஊசி மற் றும் ஏ பாசிட்டிவ் வகை (250 மிலி) இரத்தம் ஏற்றுவது என்றே சிகிச்சை தொடர்ந்தது. தொடர்சிகிச்சையின் காரண மாக ஓரளவு உடல்நிலை முன் னேறியிருப்பதைப் போல் தோற்றத்தில் தெரிந்தாலும் அவனுடைய குறைபாடு நீங்க வில்லை. 

சிவப்பணுக்கள் குறைபாட்டின் காரணமாக `ஹீமோ குளோபின் 4 பாயிண்ட் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.இதனிடையே தற்போதுதொடர்ந்து மருத்துவம் பார்த்து வரும் சென்னையைச்சேர்ந்த பெண் குழந்தை மருத்துவர் நீங்கள் ஏன் இன் னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளக்கூடாது என சிவக்குமார் தம்பதியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களோ அடுத்தக்குழந்தையும் இதே குறைபாட்டுடன் பிறந்தால் என்ன செய்வது. மேலும் தங்கள் மகன் அருணுக்கே லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இன்னொரு குழந்தை தேவையில்லை என்று தங்கள்கருத்தை தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அந்த மருத்துவரோ விடாப்பிடியாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள் ளுங்கள். அதன் மூலமாகக் கூட இவனைக் குணப்படுத்த முடியும் என தெரிவித்ததைத் தொடர்ந்து பிறந்தவள்தான் மழலை நித்யஸ்ரீ. தற்போது இந்த மழலைக்கு வயது 9 மாதம் ஆகிறது. இந்த மழலை கருவில் இருந்தபோதே பரிசோதனை செய்து பார்த்ததில் எவ்வித குறைபாடும் இல்லை என்பது தெரிய வந்தது. மருத்துவத்துறையில் இது அற்புதம் எனக் கூறிய மருத்துவர்இந்தக்குழந்தையிடமிருந்தே சிவப்பணுக்களை எடுத்து மாஸ்டர் அருணுக்கு செலுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

பெற்றோர்களின் தொடர் கவனிப்பின் காரணமாகவும், லட்சக்கணக்கில் செலவு செய்த காரணத்தினாலும் எட்டு வயதைஎட்டியுள்ள மாஸ்டர் சி.அருண் தற்போது நான்காம் வகுப்பிற்கு செல்கிறான். ஒரு பக்கம் வைத்தியம், மறு பக்கம் படிப்பு என தனது பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறான். சிறுவன் என்பதால் தனக்குள் என்ன நடக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
 
சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட உள்ளான் மாஸ்டர் அருண். இதற்காக இவனது பெற்றோர்கள் தற்போது சென்னையில் தங்கியுள்ளனர். மாஸ்டர் அருணுக்கு வந்துள்ளநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசின் மருத்துவக்காப்பீட்டு வசதியில்லை. இதனை அரசு நிறுத்திவைத்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இது கொடுமையிலும் கொடுமை. தமிழக அரசின் இந்த நடவடிக் கை உண்மை என்றால் அரசு மறுபரிசீலனை செய்து இது போன்ற நோயாளிகளுக்கு மருத்துவக்காப்பீட்டு வசதி செய்து தரவேண்டும்.தனது எட்டு வயது அண்ணனுக்கு தாம் உதவப் போகிறோம் என்பதுகுறித்து எதுவும் அறியாத ஒன்பது மாதமழலைச் சகோதரி சி.நித்யஸ்ரீ தனது உடலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த காத்திருக்கிறாள்.

இதனை ஒரு செய்தியாக போகிற போக்கில் உங்களால் வாசிக்க முடியவில்லை அல்லவா. உங்களால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என தோன்றுகிறதல்லவா. அப்படியானால் உங்களின் தொடர்புக்கு அலைபேசி எண்கள் 94867 20219, 97892 70178.


Indian Overseas Bank, Code No.2883, Vilamal, Thiruvarur. Account No.1905க்கு கே.சிவக்குமார் என்ற பெயருக்கு காசோலையாகவோ, வரைவோலையாகவோ தங்களால் இயன்ற தொகையை அனுப்புங்கள். வங்கிக் கணக்குக்கும் நேரடியாக அனுப்பி உதவிடுங்கள். வீட்டு முகவரி C38/19, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி-610 104, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம். இயன்ற உதவியை செய்வோம். காலம் தாழ்த்தாமல்..

.-எஸ்.நவமணி. 

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஏன் கலவரம்? - இலக்கியச்சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு

வரும் திங்கள்கிழமை 14.04.2014 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு இலக்கியச்சிந்தனை அமைப்பின் 44வது ஆண்டு நிறைவு விழா சென்னை-4, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமுதசுரபி மாத இதழில் வசுமதி ராமசாமி நினைவு முத்திரை சிறுகதையாக நான் எழுதிய தேன்மொழியாள் சிறுகதையை திரு.பாலுமணிவண்ணன் தேர்வு செய்திருந்தார். அருவி என்ற தலைப்பில் அந்த ஆண்டு சிறுகதைத்தொகுப்பு வெளிவந்தது.

அந்த ஆண்டு முதல் எனக்கு இலக்கியச்சிந்தனையிலிருந்து தொடர்ந்து அழைப்பிதழ் வந்துவிடும். பல்வேறு காரணங்களால் என்னால் ஒரு முறை கூட அந்த விழாவிற்கு செல்ல முடிந்ததில்லை. இந்த ஆண்டும் அப்படித்தான் ஆகும் என்று தோன்றுகிறது.

சென்னையில் வசிக்கும், வாய்ப்பு இருக்கக்கூடிய நபர்கள் சென்று வாருங்கள்.

வெகுஜன வார இதழ்களில் வாரம் மூன்று முதல் ஐந்து சிறுகதைகள் ஒரு தொடர்கதை கூட பிரசுரமான காலம் உண்டு. மாதம் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து அதிலிருந்து ஆண்டின் சிறந்த கதை என்று ஒன்றை தேர்வு செய்த காலம் போய் ஒரு ஆண்டில் வெளிவந்த கதைகளில் 12ஐ தேர்வு செய்யும் கதைப்பஞ்ச காலத்தில் இருப்பதாக இலக்கியச்சிந்தனை நிர்வாகிகள் வருத்தப்பட்டதாக எங்கேயோ படித்ததாக நினைவு.

இது உண்மைதான். தொடர்கதைகளின் இடத்தை தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்கள் பிடித்துக்கொண்டன என்று கூறலாம். நல்ல எண்ணத்தை விதைத்த வகையில் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். புத்தகம் படிக்க செலவழித்த நேரத்தை களவாடி சகிப்புத்தன்மையை அழித்து பிஞ்சு முதல் பெரியவர்கள் வரை அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காரியம்தான் 99.9 சதவீதம் நடந்து வருகிறது.

கற்றலின் கேட்டல் நன்று என்று கூறியிருப்பது தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்களுக்கு பொருந்தாது என்பது என் மனதில் தோன்றிய கருத்து. நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் வரை (2003) வரை எங்கள் வீட்டில் தொ(ல்)லைக்காட்சி கிடையாது. சிறு வயதில் இருந்து பாடப்புத்தகத்தை காட்டிலும் கதைப்புத்தகங்கள் படித்ததுதான் அதிகம். ஆனாலும் நூலகம் அறிமுகமானது 1999 டிசம்பரில்தான். அப்போது முதல் 2003ல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரை நான் வாசித்த புத்தகங்கள் ஏராளம். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகத்தையும் ஒரு வார காலத்துக்குள் வாசித்து முடித்தேன். அது சுகானுபவம்.

அந்த 4 ஆண்டுகளை ஒப்பிட்டால் அதன் பிறகு இந்த 11 ஆண்டில் நான் வாசித்தவை குறைவுதான். அதற்கு காரணம் வேலைப்பளு என்பதைக் காட்டிலும் 200 சதுரடி கொண்ட ஒற்றை அறையை மட்டுமே கொண்டது எங்கள் வீடு என்பதால் புத்தகம் படிக்க இடம் என்பது கிடைக்காமல் போய்விட்டது.

இதெல்லாம் சும்மா... மனசு வைத்தால் மலையைப் புரட்டி விடலாம் என்று கூறும் நண்பர்களுக்கு சில விஷயங்களைக்கூற விரும்புகிறேன். மன உறுதி பற்றி பேசுபவர்கள் எல்லாம் கையில் ஒரு புத்தகத்துடன் தொ(ல்)லைக்காட்சியில் நிகழ்ச்சியின் ஒளி, ஒலியை வைத்துக்கொண்டு அமர்ந்து படியுங்கள். அப்போது தெரிந்து விடும் உங்கள் மன உறுதி. (இதைத் தாண்டிய சத்தத்திலும் மனதை ஒருமுகப்படுத்துவது சிலருக்கு சாத்தியமாகலாம். பெரும்பாலானோருக்கு அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களில் நானும் இருக்கிறேன்.

வீட்டை விட்டு வெளியில் வந்து அமர்ந்து படிக்க வேண்டியதுதானே என்று கேட்பீர்கள். கொசுக்களுக்கு பதில் சொல்ல என் உடலில் வலு இல்லை.

பவர் கட், வேறு ஏரியாவில் பவர் கட்டாகி எங்கள் வீட்டில் கேபிள் டி.வி தெரியாத நிலை என்றால் நிம்மதியாக படிப்பேன். (அந்த நேரத்தில் அம்மா, தாத்தாவுக்கு எதையாவது படித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து எரிச்சல் வருவது வேறு விஷயம்.)

படிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித சங்கடங்கள் இருந்தாலும் ஜோதிடம், ஆன்மீகம், பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரே வாரத்தில் சுவிஸ் பாங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும் அளவுக்கு கொள்ளையடிப்பது ... சாரி... சம்பாதிப்பது எப்படி என்பது போன்ற புத்தகங்கள்தான் அதிக அளவில் விற்பனையாவதாக சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வாசிப்பு அனுபவம் இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் காலத்திலும், இதழ்களில் சிறுகதைகள் பிரசுரமாவது அபூர்வமாகிவிட்ட நேரத்திலும் 44 ஆண்டுகளாக இலக்கியச்சிந்தனையின் பணி தொடர்ந்து கொண்டு இருப்பது பாராட்டத்தக்கது.

இந்த பணி தொடர பல்வேறு நபர்களும் பல விதத்தில் உதவி வருகிறார்கள். அவர்களுக்கு வாசகர் சார்பில் நன்றி.

கல்கி வார இதழில் சிறுகதைப்போட்டி அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்து தினமணி கதிர் - நெய்வேலி புத்தகக்கண்காட்சி சிறுகதைப்போட்டி, தினமலர் வாரமலர் போட்டி என்று வரும் மூன்று நான்கு மாதங்களும் சிறுகதைகளுக்கான போட்டிகள் நடைபெறும். கடைசியாக நான் 2010 ஆண்டு கலந்து கொண்டு ஒரு போட்டியில் 5ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு வாங்கியதுடன் சரி. சொந்த தொழில் செய்ய தொடங்கியதில் இருந்து உருப்படியாக எதையும் எழுதவில்லை. இந்த ஆண்டாவது சோம்பேறித்தனத்தை விட்டு எதையாவது எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.

இலக்கியச்சிந்தனை சார்பில் 2013ம் ஆண்டின் சிறந்த சிறுகதையென கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுத்த பி.சுந்தரராஜன் எழுதிய தினமணி கதிர் 04-08-2013 இதழில் வெளியான ‘ஏன் கலவரம்?’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கதை பிரசுரமானபோதே படித்திருப்பேன். தினமணி இணையதளத்தில் இப்போது காணக்கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.